search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தலில் பம்பரம் சின்னத்தில் ம.தி.மு.க போட்டி: துரை வைகோ தகவல்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பாராளுமன்ற தேர்தலில் பம்பரம் சின்னத்தில் ம.தி.மு.க போட்டி: துரை வைகோ தகவல்

    • ஒரு ஆண்டுக்கு மத்திய அரசு 2. 70 லட்சம் கோடி ரூபாயை 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்க வேண்டும்.
    • தமிழக அரசும் தொடர்ந்து கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் பங்கீடு பெறுவதற்கு சட்டரீதியாகவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

    திருச்சி:

    திருச்சியில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வருகை தந்த துரை வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    காவரி நீர் பங்கீட்டில் கர்நாடக அரசு உரிய நீரை வழங்காததால் தமிழகம் முழுவதும் சுமார் 3 லட்சம் ஏக்கர் குறுவை பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி உள்ளது. எனவே மத்திய அரசு உரிய இழப்பீட்டை தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.

    அதேபோல் தமிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்பது நாளுக்கு நாள் பின்னோக்கி சென்று கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை நம்பி 16 கோடி பெண்கள் பதிவு செய்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

    ஒரு ஆண்டுக்கு மத்திய அரசு 2. 70 லட்சம் கோடி ரூபாயை இந்த 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு தொடர்ந்து குறைத்துக் கொண்டே வருகிறது.

    கடந்த ஆண்டு 72 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு நடப்பாண்டில் 21 சதவீத விழுக்காடு குறைவாக 60 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழக அரசும் தொடர்ந்து கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் பங்கீடு பெறுவதற்கு சட்டரீதியாகவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

    இருப்பினும் அவர்கள் நம்முடைய முயற்சிக்கான எந்த பலனையும் வழங்காமல் இருக்கிறார்கள். எனவே உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய அரசு முன்வந்து கர்நாடக அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதேபோல் பயிரிடப்பட்டுள்ள குறுவை கருகிய நிலையில் இழப்பீடு தொகையாக ஏக்கருக்கு 13 ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநில அரசு அதை 20,000 ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறோம்.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் உரிய பேச்சுவார்த்தை நடத்தி கொடுக்கும் சீட்டின் அடிப்படையில் எப்போதும் பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிடுவோம். வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் நாங்கள் ஒரே கொள்கையில் இருக்கிறோம். மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்ற நோக்கத்திற்காக கூட்டணியில் உள்ள அனைவரும் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

    கடந்த 5 ஆண்டுகளில் அ.தி.மு.க சிறுபான்மை மக்களுக்கு எதிராக என்னென்ன செய்தார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். அதனால் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பது சிறுபான்மை மக்களுக்கு நன்றாக தெரியும்.

    இவ்வாறு துரை வைகோ கூறினார்.

    Next Story
    ×