search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uniform Civil Code"

    • தனது கட்சியான திரிணாமுல் காங்கிரஸின் போராட்டம் பாஜகவுக்கு எதிரானது.
    • தயவு செய்து வேறு எந்த கட்சிக்கும் வாக்கு செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    மேற்கு வங்காள மாநிலத்தில் சிஏஏ, என்ஆர்சி மற்றும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    இந்நிகழ்வில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும் அவரது மருமகனுமான அபிஷேக் பானர்ஜியும் அவருடன் ஈத் விழாவில் கலந்துகொண்டார்.

    ரம்ஜான் கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றிய மம்தா பானர்ஜி பேசியதாவது:-

    குடியுரிமை (திருத்தம்) சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் பொது சிவில் சட்டம் ஆகியவற்றை நாங்கள் ஏற்க மாட்டோம். நாம் ஒற்றுமையாக வாழ்ந்தால், யாரும் எங்களுக்கு தீங்கு விளைவிக்க முடியாது.

    தனது கட்சியான திரிணாமுல் காங்கிரஸின் போராட்டம் பாஜகவுக்கு எதிரானது.

    இந்தியா கூட்டணி பற்றி நாங்கள் பின்னர் முடிவு செய்வோம். ஆனால் வங்காளத்தில், தயவு செய்து வேறு எந்த கட்சிக்கும் வாக்கு செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கேரள மாநில சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த 7-ம் தேதி தொடங்கியது.
    • பொது சிவில் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில சட்டசபைக் கூட்டத்தொடர் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. தொடரின் முதல் நாளில் முன்னாள் முதல் மந்திரி உம்மன் சாண்டியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், நேற்றைய தினம் கேரள சட்டசபை கூடியது. அப்போது மத்திய அரசின் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு தீர்மானம் கொண்டு வந்தது.

    இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பேசிய பினராயி விஜயன், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால் இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பற்ற தன்மை வீழ்த்தப்படும். உண்மையான பிரச்சினைகளில் மக்களின் கவனத்தை பா.ஜ.க. திசை திருப்பி வருகிறது என குற்றம் சாட்டினார்.

    கேரள அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து பொது சிவில் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் கேரள சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    • பெரும்பாலான எதிர்க்கட்சிகள் பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
    • பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் இதுகுறித்து இன்னும் தனது நிலைப்பாட்டு தெரிவிக்கவில்லை.

    பிரதமர் நரேந்திர மோடி சென்ற மாதம் மத்திய பிரதேசத்தில் உரையாற்றும்போது, பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினார். அவரது கருத்துக்கு நாடெங்கிலும் எதிர்ப்பும் ஆதரவும் காணப்படுகிறது.

    நாடாளுமன்றத்திற்கான பொது தேர்தல் 2024-ல் வரவிருக்கும் நிலையில் பா.ஜ.க. இதனை தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக அறிவிக்கும் என அரசியல் விமர்சகர்களும், எதிர்க்கட்சியினரும் எதிர்பார்க்கின்றனர். இதனால் பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை மக்களுக்கு விளக்க முயற்சிக்கின்றன.

    பொது சிவில் சட்டம் குறித்த அரசின் ஒரு வரைவு அறிக்கை (draft) வரும் வரையில், அது குறித்து காங்கிரஸ் கருத்து எதுவும் கூறப்போவதில்லை என தகவல்கள் வெளியாகின.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ஒரு உயர்மட்ட ஆலோசனையை இன்று நடத்துகின்றனர்.

    இதில் ப.சிதம்பரம், சல்மான் குர்ஷித், விவேக் தன்கா,மனிஷ் திவாரி, கே.டி.எஸ். துள்சி மற்றும் அபிஷேக் மனு சிங்க்வி உட்பட் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    பொது சிவில் சட்டத்திற்கு முன்மொழிபவர்கள், நாடு முழுவதும் உள்ள அனைத்து மதத்தை சேர்ந்தவர்களுக்கும் திருமணம், பரம்பரை சொத்து, மற்றும் தத்தெடுத்தல் போன்ற சிவில் விஷயங்களில் ஒரே சட்டம் இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

    நாட்டின் சட்ட மற்றும் நீதித்துறையின் 2016 ஜூன் 17 வெளியிட்ட அறிவுறுத்தலின்படி இந்திய சட்ட ஆணையம் இதனை ஆராய்ந்தது.

    பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள், மத அமைப்புகள், அரசியல் கட்சிகள் கருத்து கூறலாம் என இந்திய சட்ட ஆணையம் கடந்த மாதம் 14-ம் தேதி பொது நோட்டீஸ் வெளியிட்டது. கருத்து தெரிவிக்க ஒரு மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மத்திய சட்ட ஆணையத்திற்கு இதுவரை 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இது சம்பந்தமாக சட்ட கமிஷன் அரசுக்கு ஆலோசனைகளை கூறலாமே தவிர அரசாங்கத்தை கட்டாயப்படுத்தி இதனை அமல்படுத்த கூறமுடியாது. இச்சட்டம் கொண்டு வர நாட்டின் சூழ்நிலை சாதகமாக இருக்கிறது என அரசாங்கம் கருதினால், நாடாளுமன்ற ஒப்புதல் பெற்று இதனை கொண்டு வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    பொது தேர்தல் நெருங்கும்போது, இது சம்பந்தமான விவாதங்கள் இன்னும் வலுப்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பொது சிவில் சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
    • இந்தியாவின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் பெரும் தடையாக இருக்கும் என்பதால் பொது சிவில் சட்டத்திற்கான முயற்சியை சட்ட ஆணையம் கைவிட வேண்டும்.

    சென்னை:

    பொது சிவில் சட்டம் தொடர்பாக மத்திய சட்ட ஆணையத்திற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் என்று கூறிவிட்டு, ஒற்றை இந்தியா, ஒற்றை மொழி, ஒற்றை சிவில் சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வருவது இந்தியாவின் அடையாளமான பன்மைத்தன்மையை சிதைத்துவிடும்! இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பொது சிவில் சட்டம் என்பது சிறுபான்மை சமுதாயத்தின் உரிமைகளை பறிப்பதுடன், இந்தியாவின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் பெரும் தடையாக இருக்கும் என்பதால் அதற்கான முயற்சியை சட்ட ஆணையம் கைவிட வேண்டும்.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

    • இந்துக்கள் குழந்தைகளைத் தத்தெடுக்கவும், ஜீவனாம்சம் பெறவும் தனி சட்டங்கள் உண்டு.
    • பல்வேறு மத சமூகங்களுக்கிடையில் ஆழமான பிளவுகளையும் சமூக அமைதியின்மையையும் உருவாக்கும் முயற்சியாகவும் கருதப்படும்.

    சென்னை:

    பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியைக் கைவிடக் கோரி இந்திய சட்ட ஆணையத்தின் தலைவருக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவில் குற்றவியல் சட்டங்களும், தண்டனைச் சட்டங்களும் அனைவருக்கும் பொதுவானவை. ஆனால் உரிமையியல் சட்டங்கள் எனப்படும் சிவில் சட்டங்கள் மட்டும் சாதி, மத, இன ரீதியாக கலாசாரத்திற்கேற்ப மாறுபடும், முஸ்லிம்கள் மட்டுமல்ல, சீக்கியர்கள், ஜெயின்கள் என்று ஒருவர் சார்ந்துள்ள மதத்திற்கேற்ப சிவில் சட்டங்கள் மாறுபடுகின்றன. இந்து மதத்திலும் இந்துக்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தால் வரிச்சலுகைகள் உண்டு. இந்துக்கள் குழந்தைகளைத் தத்தெடுக்கவும், ஜீவனாம்சம் பெறவும் தனி சட்டங்கள் உண்டு. பொது சிவில் சட்டம் தனிநபர் உரிமையான எந்த மதத்தையும் பின்பற்றுதல், வாரிசுரிமை, தத்தெடுத்தல் போன்றவற்றில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 25 வழங்கியுள்ள உரிமைகளைப் பறிப்பதற்கும், பிரிவு-29 வழங்கியுள்ள சிறுபான்மையினருக்கான உரிமைகளைப் பறிப்பதற்குமான முயற்சியாகும்.

    பொது சிவில் சட்டத்தை திணிப்பதற்கான எந்தவொரு முயற்சியும் மத விஷயங்களில் அரசின் முரண்பாடாக கருதப்படலாம், மேலும் பல்வேறு மத சமூகங்களுக்கிடையில் ஆழமான பிளவுகளையும் சமூக அமைதியின்மையையும் உருவாக்கும் முயற்சியாகவும் கருதப்படும். அரசியலமைப்புச் சீர் குலைவை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் பன்முக தன்மைக்கு எதிரான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பொது சிவில் சட்டம் குறித்து ஜூலை 14 வரை கருத்து தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
    • இதற்கான கால அவகாசம் ஜூலை 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் சிவில் சட்டங்கள் உள்ளன. திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு தனி நபர் உரிமைகள் தொடர்பாக அந்தந்த நபர்களின் மதத்திற்கு ஏற்ப சிவில் சட்டங்கள் உள்ளன. தனி நபர் தான் பின்பற்றும் மதத்திற்கு ஏற்றார்போல் சிவில் சட்டங்கள் உள்ளன.

    இதனிடையே, நாட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என பல்வேறு தரப்பு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.

    மத்தியில் ஆளும் பா.ஜ.க. 2019 பாராளுமன்ற தேர்தலின்போது தேர்தல் அறிக்கையில் நாட்டில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது.

    இதற்கிடையே, பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள், மத அமைப்புகள், அரசியல் கட்சிகள் கருத்து கூறலாம் என இந்திய சட்ட ஆணையம் கடந்த மாதம் 14-ம் தேதி பொது நோட்டீஸ் வெளியிட்டது. கருத்து தெரிவிக்க ஒரு மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து, மத்திய சட்ட ஆணையத்திற்கு இதுவரை 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், பொது சிவில் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க இன்றே கடைசி நாளாக இருந்த நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொது சிவில் சட்டம் குறித்து வரும் 28-ம் தேதி வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று மத்திய சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.

    • ஜி.எஸ்.டி இழப்பீடு பறிப்பு. மின்கட்டணத்தை ஏற்றும் உதய் திட்டம்.
    • தமிழ்நாட்டிற்கு கடந்த 9 ஆண்டுகளில் பா.ஜ.க. தந்தது, “நிதியும் இல்லை. திட்டங்களும் இல்லை.

    சென்னை:

    டெல்லியில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 20-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தொடரில் தி.மு.க. எம்.பி.க்கள் என்னென்ன பிரச்சினைகளை பற்றி பேச வேண்டும். சபை நடவடிக்கைகளில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டி இருந்தார்.

    இந்த கூட்டம் காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்தில் பாராளுமன்ற இரு அவைகளின் தி.மு.க. எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொதுச் செயலாளர் துரைமுருகன் பொருளாளர் டி.ஆர்.பாலு முதன்மை செயலாளர், கே.என்.நேரு அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்பட தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தி.மு.க. எம்.பி.க்களின் செயல்பாடுகள் பாராளுமன்றத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக பேசினார்.

    கூட்டத்தில் முக்கிய தீர்மானங்களும் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அவை வருமாறு:-

    கடந்த 9 ஆண்டு கால பா.ஜ.க. அரசால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வேதனைகளை, தமிழ்நாட்டை-தமிழ்நாட்டு மக்களை புறக்கணித்து ஏமாற்றியதை வருகின்ற பாராளுமன்றக் கூட்டத்தொடரில் உரக்கக் குரலெழுப்புவோம்.

    வங்கி கணக்கு ஒவ்வொன்றிலும் "15 லட்சம் ரூபாய் போடுவதற்கு பதில்" ஒவ்வொரு குடும்பத்திலும் விதவிதமான வரி வசூல் நடக்கிறது.

    "மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி பங்களிப்பில் உரிய நிதி வழங்காமல் வஞ்சிப்பது. "பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை குறைப்புக்குப் பதில்" இந்த மூன்றின் விலையையும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்த்தியது.

    "ஆண்டிற்கு 2 கோடி வேலைவாய்ப்பு வழங்குவதற்கு பதில்" ஒட்டுமொத்த இளைஞர்களையும் வேலையில்லா திண்டாட்டத்தில் கொண்டு வந்து விட்டது.

    மணிப்பூர் மாநிலமே பற்றி எரிகிறபோது உலகம் சுற்றி அறிவுரை கூறுவது.

    "அரசியல் சட்ட அமைப்புகளின் தன்னாட்சியை கட்டிக்காப்பதற்கு பதில்" அமலாக்கத்துறை, சிபிஐ, ஒன்றிய விழிப்புணர்வு ஆணையம், தேர்தல் ஆணையம், சட்ட ஆணையம், வருமான வரித்துறை, நீதித்துறை என அனைத்தின் சுதந்திரத்தையும் பறித்து இந்தியாவின் ஜனநாயக அடித்தளத்திற்கே ஆபத்தை உருவாக்கி வருவது.

    "நடுநிலையான கவர்னர்களை நியமிக்க வேண்டும் என்ற சர்க்காரியா ஆணையத்தின் பரிந்துரைக்குப் பதில்", அரசியல் சட்ட பதவிகளில் ஆர்.எஸ்.எஸ் எண்ணம் உள்ளவர்களை கவர்னர்களாக நியமித்து எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் நிர்வாகத்தை முடக்குவது.

    உச்சகட்டமாக, இப்போது பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று தேர்தல் முழக்கத்தில் இறங்கியிருப்பது.

    ஜனநாயக இந்தியா-சமத்துவ இந்தியா-சமூக நீதி இந்தியா-பன்முகத்தன்மையின் பூந்தோட்டமாக இருக்கும் இந்தியா என்பது பா.ஜ.க.வின் வெறுப்பு அரசியலால்-சனாதன அரசியலால்-இன்று எதேச்சாதிகார இந்தியாவாக மாற்ற இன்னொரு முறை வாக்களியுங்கள் என்று விரைவில் பிரதமர் மோடியும்-அவரது சகாக்களும் வரப் போகிறார்கள். ஆனால், முதல் ஐந்து ஆண்டுகளிலும் சரி-இந்த ஐந்து ஆண்டுகளிலும் சரி தமிழ்நாட்டிற்கு பா.ஜ.க. அரசு தந்தது என்ன?

    ஜி.எஸ்.டி இழப்பீடு பறிப்பு. மின்கட்டணத்தை ஏற்றும் உதய் திட்டம். ஒற்றைச் செங்கல்லுடன் எய்ம்ஸ் மருத்துவமனை. தமிழ்நாட்டிற்கும்-தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராகச் செயல்பட ஒரு கவர்னர்.

    சமூகநீதி அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூட நீதிபதிகளை நியமிக்காமல் வஞ்சித்தது.

    என தமிழ்நாட்டிற்கு கடந்த 9 ஆண்டுகளில் பா.ஜ.க. தந்தது, "நிதியும் இல்லை. திட்டங்களும் இல்லை. ஒன்றிய அரசு வேலைவாய்ப்புகளிலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இடமுமில்லை" என்பதுதான்.

    இன்றைக்கு நாட்டில் வெறுப்புவாத அரசியல் பற்றி எரிகிறது. மணிப்பூர் கலவரத்தீ இன்னும் அடங்கவில்லை. தக்காளி, சின்ன வெங்காயம், பருப்பு என அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு விண்ணை முட்டி நிற்கிறது. வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது.

    எம்.எல்.ஏ.-எம்.பி.க்களை விலைக்கு வாங்கும் பா.ஜ.க.வுக்கு இனியொரு முறை மக்கள் வாய்ப்பை கொடுத்தால் இந்தியாவும் தாங்காது-இந்தியாவிற்காக உருவாக்கப்பட்டுள்ள அரசியல் சட்டமும் தாங்காது.

    அரசமைப்புச் சட்டத்தில் உள்ள (சமதர்ம மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு) என்ற சொல்லையேகூட நீக்கி விடும் பேராபத்தில் நாமெல்லாம் இருக்கிறோம்.

    வருகின்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில் பா.ஜ.க. அரசால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள வேதனைகளை, தமிழ்நாட்டை-தமிழ்நாட்டு மக்களை ஒன்பது ஆண்டு காலம் புறக்கணித்து ஏமாற்றியதை, அவசர அவசரமாக கொண்டுவரத் துடிக்கும் பொது சிவில் சட்டம் உள்ளிட்ட மக்கள் விரோத சட்ட மசோதாக்களை, கவர்னர்களின் அத்துமீறல்களை, பா.ஜ.க. ஆட்சியில் ஜனநாயகத்திற்கு-மதச்சார்பின்மைக்கு-சமூக நீதிக்கு-அடிப்படை உரிமைகளுக்கு-மாநில உரிமைகளுக்கு ஏற்பட்டிருக்கும் பேராபத்தை விளக்கிடும் வகையில், தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்றக் கூட்டத்தொடரில் உரக்கக் குரல் எழுப்பி, தமிழ்நாட்டு மக்களுக்காகவும்-இந்தியாவுக்காகவும் செயல்படுவோம்.

    இவ்வாறு கூட்டத்தில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது.

    • பொது சிவில் சட்டம், பல்வேறு மத சமூகங்களிடையே ஆழமான பிளவுகளையும் சமூக அமைதியின்மையையும் உருவாக்கும்.
    • செயற்கையாக ஒரேமாதிரியான பெரும்பான்மை சமூகத்தை உருவாக்குவதற்கான ஒரு முயற்சி என குற்றச்சாட்டு.

    சென்னை:

    பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டுமென்று கோரி, இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் நீதியரசர் ரிதுராஜ் அவஸ்திக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின இன்று கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், பன்முகச் சமூகக் கட்டமைப்பிற்குப் பெயர் பெற்ற இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை (Uniform Civil Code) நடைமுறைப்படுத்துவதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்திட இக்கடிதத்தினை எழுதுவதாகவும், சில சீர்திருத்தங்களின் அவசியத்தைப் தாம் உணரும் அதேவேளையில், பொது சிவில் சட்டம் ஒரு கடுமையான அச்சுறுத்தலை முன்வைக்கிறது என்றும், நமது சமூகத்தின் பல்வேறுபட்ட சமூகக் கட்டமைப்பிற்கு சவால் விடுப்பதாகவும் உள்ளது எனவும் தெரிவித்துள்ள முதலமைச்சர், பொது சிவில் சட்டத்தினை அமல்படுத்துவதை தமிழ்நாடு அரசு உறுதியாக எதிர்ப்பதற்கான காரணங்களைப் பின்வருமாறு பட்டியலிட்டுள்ளார்.

    அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் பாதுகாப்புகள்:

    மதச்சார்பின்மை என்பது இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் முக்கிய பகுதி என்றும், அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 25-ன்படி, "ஒருவர். தான் விரும்பும் மதத்தைப் பின்பற்றுவதற்கும், கடைப்பிடிப்பதற்கும், பரப்புவதற்குமான உரிமையை" உறுதி செய்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், அந்தந்த சமூகங்களின் பெரும்பாலான தனிப்பட்ட சட்டங்களுக்கு மத நடைமுறைகள் அடிப்படையாக உள்ளன என்றும், அத்தகைய தனிப்பட்ட சட்டங்களில் எந்த மாற்றத்தையும், மத சமூகங்களின் ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாது என்றும் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார். ஒரே மதத்தைப் பின்பற்றும் மக்களிடையே கூட, பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும் இடத்திற்கு இடம் மற்றும் வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடும் நிலையில், அவர்களிடையே ஒருமித்த கருத்தை எட்டாமல் அத்தகைய ஒப்புதல் சாத்தியமில்லை எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இதன் காரணமாகவும், மேலும் பல காரணிகளுடன், அரசியலமைப்பின் 44-வது பிரிவில் ஒரு முக்கிய இலக்காகக் குறிப்பிடப்பட்டுள்ள பொது சிவில் சட்டம் மீண்டும் மீண்டும் எதிர்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

    தனது. 31.8.2018 நாளிட்ட அறிக்கையினை விவாதிப்பதற்காக சமீபத்தில் கூடிய இந்தியாவின் 21-வது சட்ட ஆணையமும், பொது சிவில் சட்டம் விரும்பத்தக்கது அல்ல என்று கூறியுள்ளதை நினைவுகூர்ந்துள்ள முதலமைச்சர், அவசர கதியில் பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்துவது அரசியலமைப்பு சட்டநெறிமுறைகளுக்கு முரணாக அமைவதோடு மட்டுமல்லாமல், நாட்டில் வகுப்புவாத ஒற்றுமையின்மைக்கும் குழப்பத்திற்கும் வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார். தனிநபர் சட்டங்கள் சிறுபான்மை சமூகங்களுக்கு சில பாதுகாப்பு மற்றும் உரிமைகளை வழங்குவதாகவும், பொது சிவில் சட்டத்தைச் செயல்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் பழங்குடியினர் உட்பட சிறுபான்மையினரின் தனித்துவமான மத, கலாச்சார அடையாளத்தை அழித்து, செயற்கையாக ஒரேமாதிரியான பெரும்பான்மை சமூகத்தை உருவாக்குவதற்கான ஒரு முயற்சியாகவே கருதுவதாக மேலும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

    கலாச்சாரம் மற்றும் மத பன்முகத்துவம்:

    வேற்றுமையில் ஒற்றுமைக்கும், கலாச்சாரப் பன்முகத்தன்மைக்கும் பெயர் பெற்ற நாடு இந்தியா என்றும், பொது சிவில் சட்டத்தைத் திணிக்க முயற்சிப்பதன் மூலம், இந்த பன்முகத்தன்மை புறக்கணிக்கப்படுவதோடு, நமது நாட்டின் பன்முகக் கட்டமைப்பின் சாராம்சத்தைக் குறைத்து மதிப்பிடுவதற்கு இது வழிவகுக்கும் என கவலை தெரிவித்துள்ள முதலமைச்சர், பழங்குடி சமூகங்கள் உட்பட பல்வேறு சமூகங்களின் தனித்துவமான மரபுகள், நடைமுறைகள் மற்றும் தனிப்பட்ட சட்டங்களை மதித்து பாதுகாப்பது முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.

    ஒவ்வொரு மதக் குழுவுக்கும், அதன் சொந்த விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமையை வழங்கும் பிரிவு 25-ன்கீழ் அரசியலமைப்பால் வழங்கப்பட்ட சுதந்திரத்தை பொது சிவில் சட்டம் மீறுவதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், பிரிவு 29, பல்வேறு மதக் குழுக்கள் தங்கள் தனித்துவமான கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் உரிமையை வழங்குவதாகவும், பொது சிவில் சட்டம் போன்ற ஒரு சட்டத்தைத் திணிக்கும் எந்தவொரு முயற்சியும், மத விவகாரங்களில் அரசின் அத்துமீறலாக கருதப்படும் என்றும், இது எதிர்காலத்தில் தனிமனித சுதந்திரங்கள் மீதான ஆக்கிரமிப்புகளுக்கு கவலைக்குரிய ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கிடும் என்றும் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

    கூட்டாட்சி அமைப்பு:

    இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு மாநிலங்களுக்கு தன்னாட்சியை வழங்குகிறது மற்றும் அவற்றின் தனித்துவமான சமூக-கலாச்சார அடையாளங்களை மதிக்கிறது என்று தெரிவித்துள்ள அவர். தனிநபர் சட்டங்களை மையப்படுத்துவதன் மூலமும், மாநிலங்கள் தங்கள் சொந்த விவகாரங்களை நிர்வகிப்பதற்கான உரிமைகளை அழிப்பதன் மூலமும், பொது சிவில் சட்டம் இந்தக் கோட்பாட்டை மீறுவதாகத் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், மாநிலங்களின் செயலூக்கமான பங்கேற்பு மற்றும் ஒப்புதல் இல்லாமல் தனிநபர் சட்டங்களில் எந்தவொரு சீர்திருத்தமும் நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை பலவீனப்படுத்தும் என்றும், தனிநபர் சட்டங்களில் உள்ள சீரான தன்மை ஒன்றுபட்ட தேசத்தை உருவாக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

    சமூக ஒருங்கிணைப்பு:

    பொது சிவில் சட்டம், பல்வேறு மத சமூகங்களிடையே ஆழமான பிளவுகளையும் சமூக அமைதியின்மையையும் உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்றும், பலவகையான மத, பண்பாட்டு, மொழி வேறுபாடுகள் உள்ள நமது நாட்டில், மத நல்லிணக்கம் என்பது மிகவும் முக்கியமானது என்றும், முரண்பாடுகளை உருவாக்கி பகைமையை வளர்க்கக்கூடிய ஒரே வகையான சிவில் சட்டத்தை திணிப்பதைவிட, மக்களிடையே பரஸ்பர புரிதலையும், மரியாதையையும் மேம்படுத்துவது முக்கியம் என முதலமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    வரலாற்று பின்னணி:

    இந்தியாவில் தனிநபர் சட்டங்கள் பல நூற்றாண்டுகளாக பரிணமித்துள்ளன என்றும், பல்வேறு சமூகங்களின் வரலாற்று, கலாச்சார மற்றும் மத சூழல்களில் ஆழமாக வேரூன்றியுள்ளன என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர், பொது சிவில் சட்டத்திற்கான முன்மொழிவு இந்த வரலாற்று அம்சத்தை அங்கீகரிக்கத் தவறுவதுடன், பல்வேறு மதக் குழுக்களின் மதிப்புகள் மற்றும் நம்பிக்கைகளுடன் ஒத்துப்போகாத ஒரு சட்டத்தைத் திணிக்க முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    சிறுபான்மையினர் உரிமைகள்:

    அரசியலமைப்பின் 29-வது பிரிவின்மூலம், சிறுபான்மையினரின் உரிமைகளை மதித்துப் பாதுகாக்கும் மதச்சார்பற்ற நாடு என்பதில் இந்தியா பெருமை கொள்வதாகவும், அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணை. மாநிலங்களின் பழங்குடிப் பகுதிகள், மாவட்ட மற்றும் வட்டாரக் கவுன்சில்கள் மூலம் தங்கள் பழக்கவழக்கங்களையும் நடைமுறைகளையும் பாதுகாப்பதை உறுதி செய்வதாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், பொது சிவில் சட்டம் இயல்பிலேயே, அத்தகைய பழங்குடி சமூகங்களை அதிக அளவில் பாதிக்கும் மற்றும் அவர்களின் பாரம்பரிய நடைமுறைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் அடையாளங்களைப் பின்பற்றுவதற்கும், பாதுகாப்பதற்கும், அவர்களின் உரிமையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஆற்றலை உள்ளடக்கியதாக பொது சிவில் சட்டம் அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

    சமூக பொருளாதார தாக்கங்கள்:

    நமது சமூகத்தில் நிலவும் சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கருத்தில் கொள்ளாமல், ஒரே மாதிரியான சட்டத்தை அமல்படுத்துவது, பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், வெவ்வேறு சமூகங்கள் வளர்ச்சி, கல்வி மற்றும் விழிப்புணர்வின் வெவ்வேறு நிலைகளைக் கொண்டுள்ளன என்றும், அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரேமாதிரியான அணுகுமுறை தற்போதுள்ள ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கக்கூடும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்,

    இணக்கமான வாழ்வுக்கு முன்னுரிமை:

    எல்லாவற்றிற்கும் மேலாக, நமது மகத்தான தேசத்தின் கட்டமைப்பை உருவாக்கும் பல்வேறு சமூகங்களிடையே இணக்கமான வாழ்வை வளர்ப்பதே நமது முதன்மை குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர், ஒரே மாதிரியான சட்டத்தைத் திணிப்பதற்குப் பதிலாக, மதங்களுக்கிடையிலான உரையாடல்களை வலுப்படுத்துவதிலும், சகிப்புத்தன்மையை ஊக்குவிப்பதிலும், இந்தியாவை வரையறுக்கும் வேற்றுமையில் ஒற்றுமை உணர்வை வளர்ப்பதிலும் கவனம் செலுத்துவோம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். 

    தற்போதைய நிலையில், மாநில அரசுகள், மதத் தலைவர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளுடன் இச்சட்டம் தொடர்பான விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்துள்ள முதலமைச்சர், இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எட்டுவதற்கு முக்கியமானது என இந்திய சட்ட ஆணையத் தலைவரிடம் கோரியுள்ளார்.

    மேற்காணும் கருத்துகளைத் தீவிரமாகப் பரிசீலித்து, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று இந்திய சட்ட ஆணையத் தலைவர் நீதியரசர் ரிதுராஜ் அவஸ்தியை கேட்டுக் கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டங்களில், ஒரேமாதிரியான தன்மையை கொண்டுவர முயற்சிப்பதைவிட, அனைத்து மக்களுக்கும் உரிமைகள் மற்றும் வாய்ப்புகளில் ஒரேமாதிரியான சூழ்நிலையை ஏற்படுத்துவதை நமது நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளதோடு, பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் தன்மை வழிவகுக்காது என்ற அடிப்படைக் கோட்பாட்டை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், நமது நாட்டின் பலம், அதன் பன்முகத்தன்மையில் உள்ளதாகவும், பொது சிவில் சட்டத்தின் மூலம் அதை ஒருமுகப்படுத்த முயற்சிப்பதை விட, நாம் நமது பன்முகத்தன்மையை நிலைநிறுத்திக் கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • மத்திய பிரதேசத்தில் பிரதமர் மோடி உரையாற்றும் போது பொது சிவில் சட்டம் கொண்டு வருவதன் அவசியம் குறித்து பேசினார்.
    • பொது சிவில் சட்டம் இஸ்லாமியர்களுக்கோ பழங்குடி சமூகங்களின் நலன்களுக்கோ எந்த தீங்கும் விளைவிக்காது.

    அகமதாபாத்:

    இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக இந்தியாவின் 22வது சட்ட ஆணையம் கடந்த மாதம் 14ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் பொது சிவில் சட்டம் பற்றிய பெரிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மத அமைப்புகளின் பார்வைகள் மற்றும் யோசனைகளை கோரியிருந்தது. 

    இந்நிலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி, மத்திய பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் போது பொது சிவில் சட்டம் கொண்டு வருவதன் அவசியம் குறித்து பேசினார். இதையடுத்து பொது சிவில் சட்டம் தொடர்பாக பல்வேறு தலைவர்களும் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை கூறி வருகின்றனர்.

    இந்நிலையில், தலித்துகள் மற்றும் பிற தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கான பல்வேறு திட்டங்களையும் அவை செயல்படுத்தப்படும் நிலை குறித்தும் குஜராத் அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாட மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அகமதாபாத் வந்திருந்தார்.

    அப்பொழுது அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:

    பொது சிவில் சட்டம் இஸ்லாமியர்களுக்கோ பழங்குடி சமூகங்களின் நலன்களுக்கோ எந்த தீங்கும் விளைவிக்காது. நமது அரசியலமைப்பின் சிற்பி அம்பேத்கர் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக, 'மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த இது அவசியம்' என்று கூறியிருந்தார்.

    பாஜகவும், அதன் அரசும் அரசியல் சட்டத்தை மாற்றப்போவதாக காங்கிரஸ் பொய்ப்பிரச்சாரம் செய்து வருகிறது. பொது சிவில் சட்டம் உங்களுக்கு எதிரானது அல்ல என்பதை இஸ்லாமியர்களுக்கு நான் கூற விரும்புகிறேன். இதில் அரசியல் செய்வதற்குப் பதிலாக அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இதனை கொண்டு வருவது மிகவும் முக்கியம். பிரதமர் நரேந்திர மோடி இஸ்லாமியர்களின் விரோதியோ அல்லது தலித்களின் விரோதியோ அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்தால், மதச்சார்பின்மைக்கு குந்தகம் ஏற்படும்.
    • சட்டம்- ஒழுங்கு பாதிப்பு, அமைதியின்மை போன்ற பல கேடுகளை இந்திய சமுதாயத்தில் உருவாக்கும் நிலை ஏற்படும்.

    சென்னை:

    இந்திய சட்ட ஆணையத்தின் கருத்துக் கேட்பு கடிதத்திற்கு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பதில் கடிதம் எழுதி உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    பாரதிய ஜனதா கட்சியின் "ஒரு நாடு, ஒரு இனம், ஒரு மொழி, ஒரு பண்பாடு" என்ற கொள்கையின் விளைவாக 'பொது சிவில் சட்டத்தை' அறிமுகப்படுத்தும் முயற்சியை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது.

    இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், மதச் சார்பின்மைக்கு குந்தகம் ஏற்படுத்துவதுடன், சட்டம்-ஒழுங்கு பாதிப்பு, அமைதியின்மை போன்ற பல கேடுகளை இந்திய சமுதாயத்தில் உருவாக்கும் நிலை ஏற்படும்.

    21-வது சட்ட ஆணையம், பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் விரிவான கேள்விகளை முன்வைத்தும், அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டும், அதனடிப்படையில் பொது சிவில் சட்டம் அவசியமானது அல்ல, விரும்பத்தக்கதும் அல்ல என்று முடிவெடுத்தது.

    பொது சிவில் சட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் வலிமையாக எதிர்க்கிறது. காரணம், இந்தச் சட்டம் தனிநபர் உரிமையான எந்த மதத்தையும் பின்பற்றுதல், வாரிசுரிமை, தத்தெடுத்தல் போன்றவற்றில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 25 வழங்கியுள்ள உரிமைகளை பறிப்பதற்கும், பிரிவு-29 வழங்கியுள்ள சிறுபான்மையினருக்கான உரிமைகளைப் பறிப்பதற்குமான முயற்சியாகும்.

    அரசமைப்புச் சட்டப் பிரிவு 44 குறிப்பிடும் பொது சிவில் சட்டம், பொதுவான மதம் சாராத பல்வேறு சமூகச் செயல்களுக்கு, குறிப்பாக இரு நபரிடையே ஒப்பந்தங்கள், சொத்துப் பரிமாற்றத்துக்கான சட்டங்கள், பணப் பரிமாற்ற ஆவணங்கள், கருவிகள் குறித்த சட்டங்களை இயற்றுவதற்கான அதிகாரத்தை வழங்குகிறதே தவிர, மத வழக்கங்களுக்கானதல்ல.

    இந்திய அரசியல் நிர்ணய சபை, இந்தப் பிரிவு 44 குறித்த விவாதத்தை மேற்கொண்டபோது, சென்னை மாகாணத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் போக்கர் பகதூர் கூறும்போது, "இந்தியாவில் பல்வேறு மக்கள் குழுக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கடைபிடித்து வந்த பல்வேறு பழக்க வழக்கங்களை ஒரே அடியில் வீழ்த்திவிட முயற்சிக்கிறீர்கள். இதனால் நீங்கள் அடையவிருக்கும் நன்மை என்ன? அவர்கள் காலங்காலமாகப் பின்பற்றி வந்த பழக்க வழக்கங்களைக் கொன்று அவர்களது மனசாட்சியையும் கொல்வதைத் தவிர வேறு என்ன பயன் ஏற்படும்? இத்தகை கொடுங்கோன்மை மிக்க ஒரு பிரிவு அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறக் கூடாது. இந்து மதத்திலேயே உள்ள பல்வேறு குழுவினர், இந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்க்கும் நிலையில், நான் பேசுவதை காட்டிலும் கடுமையாக அவர்கள் பேசும் நிலையில் இந்தப் பிரிவு அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறக் கூடாது. பெரும்பான்மை மக்கள் இச்சட்டப் பிரிவிவை ஆதரிக்கிறார்கள் என்று நீங்கள் சொன்னாலும், அதுவும் தவறான வாதம்தான்.

    பெரும்பான்மை மக்களின் கடமை, சிறுபான்மை மக்களின் புனிதப் பழக்க வழக்கங்களைப் பாதுகாப்பதுதான். சிறுபான்மை மக்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்துவது ஜனநாயகம் என்று கூற முடியாது. அது மிகப்பெரிய கொடுங்கோன்மை" என்று பேசினார்.

    அந்த எதிர்ப்பு இன்றைக்கும் பொருத்தமானது. பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தனிமனித உரிமைகளை பறிப்பது ஏற்புடையதல்ல. சிறுபான்மை மக்களை பாதிக்கும் ஒன்றாக மட்டும் நான் பார்க்கவில்லை. பெரும்பான்மை இந்து மதத்தைச் சார்ந்த பட்டியலின மலைவாழ் மக்களின் பழக்க வழக்கங்கள், திருமணம் தொடர்பான சடங்கு சம்பிரதாயங்களையும் இந்தச் சட்டம் அழித்துவிடும்.

    எங்களுடைய இன்னொரு ஆலோசனை என்னவெனில், மதங்களுக்கிடையேயான பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன், ஒன்றிய அரசு இந்துமத சாதிகளுக்கிடையே பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றி சாதீய ஏற்றத்தாழ்வை சமன் செய்ய வேண்டும் என்பது.

    ஏற்கனவே, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையை பாதிக்கும் எந்த சட்டத்தையும் ஒன்றிய அரசு நிறைவேற்றக் கூடாது என்பதுதான். இந்த பொது சிவில் சட்டம், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக, அரசமைப்பு சட்டப் பிரிவுகள் 25 மற்றும் 29 ஆகியவற்றை மீறிய சட்டமாக தி.மு.க. பார்க்கிறது.

    பொது சிவில் சட்டம், ஏற்கனவே இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956, பிரிவு-2(2)-ன்படி பட்டியலின மலைவாழ் மக்களின் பழக்க வழக்கங்கள் ஏனைய இந்துமத மக்களின் பழக்க வழக்கங்களிலிருந்து மாறுபட்டது எனினும், அவற்றைத் தடை செய்யக்கூடாது என்று கூறுகிறது.

    மேலும், இந்து மதத்தில் மட்டும்தான் கூட்டுக் குடும்ப முறை நடைமுறையில் உள்ளது. இந்த முறையின் மூலம் வருமானவரித் துறை கூட்டுக் குடும்பத்தையே மொத்தமாக ஒரு வரி செலுத்துபவராக ஏற்றுக் கொண்டுள்ளது.

    அரசமைப்புச் சட்ட அட்டவணை VI-ல் உள்ள படி, அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மிஜோரம் ஆகிய மாநிலங்களுக்கு திருமணம், மணவிலக்கு, சமூகப் பழக்க வழக்கங்கள் ஆகியவை மற்ற மாநிலங்களிலிருந்து வேறுபட்டவை.

    தமிழகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 87 சதவிகிதம், இஸ்லாமியர்கள் 6 சதவிகிதம், கிருத்தவர்கள் 7 சதவிகிதம். இந்த மக்கள் அனைவரும் மதங்களைக் கடந்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். பொது சிவில் சட்டம் இத்தகைய ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் வாய்ப்பு உள்ளது.

    வேற்றுமையில் ஒற்றுமை என்பது உலக நாடுகளே வியந்து பாராட்டும் நாடு, நமது இந்திய நாடு என்பதை ஒன்றிய அரசு மறந்துவிடக்கூடாது.

    எனவே, 22-வது சட்ட ஆணையம் 21-வது சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு, பொது சிவில் சட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தி.மு.க. கூறுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாஜக கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம் என்றார்.
    • வரும் நாட்களில் சில அமைப்புகள் மற்றும் நபர்களை சட்ட ஆணையம் விசாரணைக்கு அழைக்க வாய்ப்புள்ளது.

    அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் வகையில் ஒரே சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. ஆனால், பொது சிவில் சட்டத்தை கொண்டுவர எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

    சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம் என்றார். பொது சிவில் சட்ட விவகாரத்தில் சிலர் தவறான கருத்துகளை பரப்பி, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார். இதையடுத்து பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதம் சூடுபிடித்துள்ளது.

    இது ஒருபுறமிருக்க, பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்களிடமும், அங்கீகரிக்கப்பட்ட மத அமைப்புகளிடமும் இருந்து கருத்துகளையும், யோசனைகளையும் பெற முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி கடந்த மாதம் 14ம் தேதி முதல் சட்ட ஆணையத்திடம் கருத்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர். கருத்து தெரிவிக்க ஜூலை 13ம் தேதி கடைசி நாள் ஆகும்.

    இந்த காலக்கெடு இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், சட்ட ஆணையத்திற்கு இதுவரை கிட்டத்தட்ட 46 லட்சம் கருத்துக்கள் வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கருத்துக்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில், வரும் நாட்களில் சில அமைப்புகள் மற்றும் நபர்களை சட்ட ஆணையம் விசாரணைக்கு அழைக்க வாய்ப்புள்ளது. சிலருக்கு அழைப்புக் கடிதங்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • காவல்துறை அதிகாரிகளுக்கு அதிக மன உளைச்சல் உள்ளது.
    • காவல்துறைக்கு சுதந்திரமாக செயல்பட முழு அதிகாரத்தை வழங்க வேண்டும்.

    நெல்லை:

    பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. இன்று நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொது சிவில் சட்டம் எல்லோருக்கும் வேண்டும். உங்களுக்கு ஒரு சட்டம், எனக்கு ஒரு சட்டம் என்பது ஏற்புடையதாக இருக்காது. பொது சிவில் சட்டம் நாட்டில் கண்டிப்பாக தேவை.

    பா.ஜ.க. தலைவர்கள் எங்களுடன் கூட்டணி குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஓ.பி.எஸ். தெரிவிப்பதாக கூறுகின்றனர்.

    தேர்தல் காலங்களில் எங்களோடு இருந்தவர்களை நாங்கள் நினைத்துப் பார்ப்போம் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சொல்லியுள்ளார். ஆனால் ஓ.பி.எஸ். சொல்வது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியை கலைக்க போவதாக யாரும் இதுவரை சொல்லவில்லை. ஆட்சி கலைப்பது தொடர்பான வார்த்தையை முதலமைச்சர் பயன்படுத்தி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

    காவல்துறை அதிகாரிகளுக்கு அதிக மன உளைச்சல் உள்ளது. அவர்களின் மன உளைச்சலை குறைப்பதற்கு முதலமைச்சர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறைக்கு சுதந்திரமாக செயல்பட முழு அதிகாரத்தை வழங்க வேண்டும்.

    ஆட்சிக்கு வந்தவுடன் முதல் நாளில் இருந்து மகளிர் உதவித்தொகை ரூ. 1000 வழங்கப்படும் என தெரிவித்தார்கள். இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்ற பிறகு அண்ணா பிறந்த நாளில் கொடுக்கப் போகிறோம் என சொல்லி உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு மகளிர் உரிமைத்தொகை கொடுப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மகளிர் உரிமைத்தொகையை அனைத்து மகளிர்க்கும் கொடுக்க வேண்டும்.

    பொது மக்கள் மகளிர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த திட்டம் பெயரளவில் தான் செயல்படுத்தப்படும். பாராளுமன்ற தேர்தல் நிறைவு பெற்றபின் இந்த திட்டம் நிறுத்தப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×