search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க. குடும்ப அரசியல் செய்வதாக மோடி சொன்னது பொருத்தமானது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
    X

    தி.மு.க. குடும்ப அரசியல் செய்வதாக மோடி சொன்னது பொருத்தமானது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

    • தமிழ்நாட்டின் வளர்ச்சியை பார்த்துவிட்டு பிரதமர் பேச வேண்டும்.
    • வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு சரியான பாடம் புகட்ட மக்கள் தயாராகி விட்டனர்.

    சென்னை:

    தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி.வேணு இல்லத் திருமணம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது.

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி மணமக்கள் செ.அஸ்வினி-க.பிரவீன் குமார் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    அமைச்சர் காந்தி ஒரு வேண்டுகோள் வைத்தார். அவருக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் சொல்ல வேண்டி உள்ளது.

    இன்றைக்கு நல்லதைகூட ஜாக்கிரதையாக ஒருமுறைக்கு பலமுறை யோசித்து தான் செய்ய வேண்டி உள்ளது. எதிர்க்கட்சியாக இருந்த போது கூட உடனுக்குடன் எதையும் செய்து விட முடியும். ஆனால் இப்போது அப்படி அல்ல. நாம் ஆட்சியில் இருப்பதால் ஒவ்வொன்றையும் யோசித்து செய்ய வேண்டி உள்ளது.

    இதை புரிந்து கொள்ள வேண்டும். இங்கே கட்சிக்காக ஓயாமல் உழைத்துக் கொண்டிருப்பவர் கும்மிடிப்பூண்டி கி.வேணு தி.மு.க. முப்பெரும் விழாவில் அவருக்கு கலைஞர் விருது வழங்கி கவுரவித்தோம்.

    தலைவர் கட்டளையை அப்படியே ஏற்று செயல்படுத்தும் தூய தொண்டனாக விளங்குபவர் கும்மிடிப்பூண்டி வேணு.

    ஆனால் பிரதமராக இருக்க கூடிய மோடி 2 நாட்களுக்கு முன்பு தி.மு.க. பற்றி ஒரு உரையாற்றி இருக்கிறார்.

    தி.மு.க. குடும்ப அரசியலை நடத்துகிறது. தி.மு.க. வெற்றி பெற்றால் அவர்களது குடும்பம்தான் வளர்ச்சி அடையும் என்று பேசி இருக்கிறார். ஆமாம் தி.மு.க. ஒரு குடும்பம் தான்.

    இவ்வாறு சொன்னதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஆனால் அவர் அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. தி.மு.க. குடும்பம் குடும்பமாக அரசியல் நடத்தி வளர்ச்சி அடைந்து வருவதாக பேசி உள்ளார்.

    நாட்டின் பிரதமராக இருக்கும் மோடிக்கு வரலாறு தெரியவில்லை. பேரறிஞர் அண்ணா கட்சி தொடங்கிய போது தம்பி தம்பி என்று தொண்டர்களை அழைப்பார். கலைஞர் பேசும் போது அனைவரையும் உடன்பிறப்பே என்று அழைத்தார்.

    அது அண்ணனாக இருந்தாலும் தம்பியாக இருந்தாலும் அக்காவாக இருந்தாலும் தங்கையாக இருந்தாலும் அத்தனை பேரையும் உடன்பிறப்பே என்றுதான் அழைப்பார். ஆக இது உள்ளபடியே குடும்ப அரசியல்தான்.

    தி.மு.க. பல்வேறு மாநாடுகளை பல்வேறு மாவட்டங்களில் நடத்தி இருக்கிறோம். அப்படி 3, 4 நாள் மாநாடு நடத்தும் போது குடும்பம், குடும்பமாக வாருங்கள் என்றுதான் கலைஞர் அழைப்பார்.

    அதேபோல்தான் தி.மு.க.வினர் குடும்பம் குடும்பமாக கைக்குழந்தையுடன் வருவார்கள். பந்தலில் கைக்குழந்தைகளை தொட்டிலில் ஆட்டுவார்கள். மாநாடு மட்டுமல்ல போராட்டங்களுக்கும் கூட குடும்பம் குடும்பமாக வந்து பங்கேற்று சிறை செல்வார்கள். இது தி.மு.க.வில் உள்ள வழக்கம்.

    ஆனால் பிரதமர் மோடி பேசும் போது தி.மு.க.வுக்கு வாக்களித்தால் கருணாநிதி குடும்பம் வளர்ச்சி அடையும் என்கிறார். ஆம் கருணாநிதி குடும்பம் என்றால் இந்த தமிழ்நாடுதான்-தமிழர்கள்தான்.

    50 ஆண்டு காலமாக திராவிட ஆட்சிதான் தமிழகத்தில் இருந்திருக்கிறது. எனவே, தமிழ்நாட்டின் வளர்ச்சியை பார்த்துவிட்டு பிரதமர் பேச வேண்டும்.

    இன்று திராவிட மாடல் ஆட்சியாக கலைஞர் வழியில் நின்று ஆட்சி நடத்தி வருகிறோம். இதற்கு முன்பு ஒரு வருடம் மிசாவில் சிறையில் அடைக்கப்பட்ட நேரத்தில் அவர்களை குடும்பத்தினர் சென்று பார்ப்பது வழக்கம்.

    ஆனால் சென்னை சிறையில் அப்போது 2 மாதம் அனுமதியே தரவில்லை. உடனே தலைவர் கலைஞர் அறிக்கை வெளியிட்டார். அனுமதி தராவிட்டால் சிறைவாசலில் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்தார்.

    அதற்கு பிறகுதான் அனுமதி தந்தனர். அப்போது சிறையில் இருந்த எனக்கு தான் முதல் அனுமதி கிடைத்தது. ஆனால் அவர் என்னை உடனே வந்து பார்க்கவில்லை.

    காரணம் என்னை மட்டும் அவர் மகனாக கருதவில்லை. சிறையில் உள்ள அனைவரையும் மகனாக கருதி அனைவரையும் பார்த்து விட்டு என்னை சந்திப்பதாக கூறினார்.

    எனவே தி.மு.க. குடும்பம் என்று பிரதமர் மோடி பொருத்தமாகத்தான் கூறி உள்ளார். இப்போது அவருக்கு ஒரு அச்சம் ஏற்பட்டு உள்ளது.

    கடந்த 23-ந்தேதி பாட்னாவில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான கட்சிகளை ஒன்று திரட்டி ஒரு தேர்தல் வியூகம் அமைக்க முதற்கட்டமாக முயற்சி எடுத்து அந்த கூட்டத்தை நடத்தி அதில் வெற்றியும் கண்டார்.

    அதன் பிறகு ஏற்பட்ட அச்சம்தான் பிரதமர் இறங்கி வந்து இப்போது பேசுவதற்கு காரணம்.

    மணிப்பூர் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்கிறது. அங்கு கடந்த 50 நாட்களாக நடந்து வரும் வன்முறையால் தீப்பற்றி எரிகிறது. 150 பேர் வரை பலியாகி இருப்பார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

    ஆனால் இவ்வளவு கலவரம் நடந்தும் இதுவரை பிரதமர் அந்த பக்கமே போகவில்லை. நீண்ட நாளுக்கு பிறகு அனைத்து கட்சி கூட்டத்தை உள்துறை மந்திரி அமித்ஷா நடத்தி உள்ளார்.

    இப்போது பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று பிரதமர் கூறி வருகிறார். நாட்டில் 2 விதமான சட்டம் இருக்க கூடாது என்று பிரதமர் கூறுகிறார்.

    நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து மத குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க நினைக்கிறார்கள். ஆனால் வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு சரியான பாடம் புகட்ட மக்கள் தயாராகி விட்டனர்.

    நான், தமிழக மக்களை கேட்க விரும்புவது நீங்களும் அதற்கு தயாராக இருக்க வேண்டும். அதில் உறுதியாக இருக்க வேண்டும்.

    தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி கொண்டிருக்கும் அரசு எப்படி தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி உருவாக காரணமாக இருந்தீர்களோ அதேபோல் மத்தியில் ஒரு ஆட்சி உருவாக நீங்கள் தயாராக வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சர் காந்தி, கும்மிடிப்பூண்டி கி.வேணு, மாவட்டச் செயலாளர் கோவிந்த் ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.

    Next Story
    ×