search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    5 மாநில தேர்தல் முடிவுகள் மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளியாக இருக்கும்: துரை வைகோ
    X

    5 மாநில தேர்தல் முடிவுகள் மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளியாக இருக்கும்: துரை வைகோ

    • மணிப்பூர் கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு ஏற்பட்டது.
    • தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஒரு சராசரி அரசியல்வாதி தான். சில சமயங்களில் தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறார்.

    மதுரை:

    மருதுபாண்டியர்கள் 224-வது நினைவு நாளையொட்டி திருப்பத்தூர் செல்வதற்காக ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் நீட் தேர்வை பா.ஜ.க.வைத் தவிர அனைத்து கட்சிகளும் எதிர்க்கிறது. அதில் ம.தி.மு.க.வும் ஒன்று என்பதில் மாற்று கருத்து இல்லை. நீட் தேர்வுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தி.மு.க. கையெழுத்து இயக்கம் துவங்கியுள்ளது. அதற்கு ம.தி.மு.க. சார்பாக முழு ஆதரவு உண்டு.

    தொடர்ந்து தி.மு.க.வுடன் சேர்ந்து அனைவரும் குரல் கொடுத்து வருகிறோம். ஒரு வருடத்திற்கு மேலாகவே சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னர் கையெழுத்துக்காக காத்திருந்தது. பல போராட்டத்திற்கு பிறகு ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளார். கவர்னரால்தான் இந்த ஒரு ஆண்டு கால தாமதம் ஏற்பட்டது. நீட் விலக்கு தமிழ்நாட்டிற்கு வரும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

    மணிப்பூர் கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு ஏற்பட்டது. அதுபோல நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் இருக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.

    நடிகர் விஜய்யும், அவருடைய தந்தையும் உழைப்பால் உயர்ந்தவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அவரும் அரசியல் வருவதற்கு உரிமை உள்ளது. ஆனால் அதை முடிவெடுக்க வேண்டியது மக்கள்தான். அவர்கள் வரக்கூடாது என்று நினைப்பதற்கு வேறு யாருக்கும் உரிமை கிடையாது. அவர்களை எங்கு வைக்க வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

    ஐந்து மாநில தேர்தலை ஒட்டி அந்தந்த மாநிலங்களில் வேலை நடைபெறுகிறது. சட்டமன்றத் தேர்தல் வேறு, பாராளுமன்ற தேர்தல் வேறு. பாராளுமன்றத் தேர்தலை பொருத்தவரை அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்படுகிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பை தி.மு.க., ம.தி.மு.க. என அனைவரும் வலியுறுத்துகிறோம்.

    பீகாரரைப் போல மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுக்கலாம் என்று கூறினாலும், தேசிய ஜனத்தொகையுடன் ஜாதி வாரி கணக்கெடுப்பு சேர்ந்து எடுக்கும்போது பல நன்மைகள் உள்ளது. மத்திய அரசு காலம் தாழ்த்தினால் தமிழக அரசு ஜாதி வாரி கணக்கு எடுப்பை நடத்தும்.

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஒரு சராசரி அரசியல்வாதி தான். சில சமயங்களில் தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறார். அவருக்காக சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு மாதிரி பேசுகிறார், மாற்றுக் கட்சி கைதுக்கு வேறு மாதிரி அறிக்கை கொடுக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×