search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதிமுக"

    பா.ம.க. வருமானம் 55.60 லட்சம் ரூபாயில் இருந்து 1.16 கோடியாகவும், ம.தி.மு.க. வருமானம் 1.5 கோடியில் இருந்து 2.86 கோடியாகவும் அதிகரித்து உள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மாநில அரசியல் கட்சிகளும் ஒவ்வொரு ஆண்டும் வரவு-செலவு கணக்கை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்வது வழக்கம்.

    இதன்படி 2020-2021 ஆண்டிற்கான வரவு-செலவு கணக்கினை கட்சிகள் சமர்பித்தன.

    இதில் 31 பெரிய கட்சிகளின் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்த ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் இது தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

    இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க 2020-2021-ம் ஆண்டில் மொத்தம் 149.95 கோடி நன்கொடை பெற்று மாநில கட்சிகளில் முதலிடத்தை பெற்று உள்ளது. இது நாடு முழுவதிலும் உள்ள மாநில கட்சிகளின் மொத்த வருவாயில் 28 சதவீதம் ஆகும்.

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2019-2020-ல் அக்கட்சியின் வருமானம் 64.90 கோடியாக இருந்தது. இது தற்போது 149.95 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.

    இது கடந்த ஆண்டை விட 131 சதவீதம் கூடுதலாகும். ஆனால் இந்த ஆண்டு வருமானத்தை விட தி.மு.க. அதிக அளவு செலவு செய்துள்ளது.

    தி.மு.க. மொத்தம் ரூ.218.49 கோடி செலவு செய்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சி ரூ.54.70 கோடியும், அ.தி.மு.க. ரூ.42.36 கோடியும் செலவிட்டு உள்ளது.

    தி.மு.க.வுக்கு அடுத்த படியாக ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 108 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி 2-வது இடத்தையும் ஒடிசாவில் உள்ள பிஜு ஜனதாதளம் ரூ.73 கோடி வருமானம் பெற்று 3-வது இடத்தையும் பெற்று உள்ளது.

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 20 சதவீதமும் பிஜூ ஜனதாதளம் கட்சிக்கு 13 சதவீதமும் வருமானம் அதிகரித்து உள்ளது.

    அ.தி.மு.கவுக்கு வருமானம் குறைந்துள்ளது. 2019-2020-ல் 89 கோடியாக இருந்த வருமானம் தற்போது ரூ.34 கோடியாக குறைந்துள்ளது.

    ஆனால் பா.ம.க. வருமானம் 55.60 லட்சம் ரூபாயில் இருந்து 1.16 கோடியாகவும், ம.தி.மு.க. வருமானம் 1.5 கோடியில் இருந்து 2.86 கோடியாகவும் அதிகரித்து உள்ளது.

    இந்த வருமானம் அனைத்தும் நன்கொடைகள் மற்றும் தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    பேரறிவாளன் விடுதலை என்பது காலம் கடத்தி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு. அவரது விடுதலையை காங்கிரஸ் எதிர்ப்பது அந்த கட்சியின் தனிப்பட்ட கொள்கை என துரை வைகோ கூறியுள்ளார்.
    சென்னை:

    பிரதமர் மோடி சென்னை வரும்போதெல்லாம் ‘கோ பேக் மோடி’ கோஷம் டிரெண்டிங் ஆகும். ம.தி.மு.க. ஆவேசமாக இந்த குரலை கையில் எடுக்கும். ஆனால் இந்த முறை அமைதியாக இருந்தது பற்றி ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:-

    கடந்த கால சூழ்நிலை வேறு. அப்போது நீட் எதிர்ப்பு தலைதூக்கி நின்றது. தமிழகத்துக்கு எதிராக பல பிரச்சினைகளும் தலைதூக்கி நின்றன.

    ஆனால் இந்த முறை தமிழக மக்கள் நலனுக்காக 31,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க வந்தார். முழுக்க முழுக்க தமிழக மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தொடங்கி வைக்க வந்தார். இந்த சூழ்நிலையில் ‘கோ பேக் மோடி’ என்பது நியாயமல்ல. முறையல்ல.

    அமித் ஷா, தமிழக மக்களிடம் மோடி மீது அன்பும், ஆதரவும் பெருகி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதே தேர்தல் வரும் போதுதான் பார்க்க வேண்டும்.

    சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது, கொலைகள் அதிகரித்து விட்டது என்பது சரியல்ல. கடந்த ஆட்சியிலும் கொலைகள் நடந்தது. ஆனால் இப்போது குற்றவாளிகளை உடனே பிடிக்கிறார்கள். நடவடிக்கை எடுக்கிறார்கள்.

    பேரறிவாளன் விடுதலை என்பது காலம் கடத்தி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு. அவரது விடுதலையை காங்கிரஸ் எதிர்ப்பது அந்த கட்சியின் தனிப்பட்ட கொள்கை.

    மோடி நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்ததாக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறி இருக்கிறார். அவர் அரசியல் செய்யவில்லை. அண்ணாமலைதான் அவதூறு பரப்புகிறார். அவரது பெயரையே நான் அவதூறு அண்ணாமலை என்றுதான் கூறுவேன்.

    இவ்வாறு அவர்கூறினார்.

    முன்னதாக ம.தி.மு.க. அலுவலகத்தில் தலைமை கழக செயலாளருக்கான அறை திறப்பு விழா நடந்தது. கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்ல கண்ணு திறந்து வைத்தார். அவருக்கு துரைவைகோ ஆளுயரமாலை அணிவித்தார். அதே போல் துரைவைகோவுக்கு ஆளுயர மாலை அணிவித்து நல்லகண்ணு வாழ்த்தினார்.

    கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செவந்தியப்பன் சிவகங்கை மாவட்ட செயலாளராகவும், சண்முக சுந்தரம் விருதுநகர் மாவட்ட செயலாளராகவும், செங்குட்டுவன் திருவள்ளூர் மாவட்ட செயலாளராகவும் இருந்தனர்.
    சென்னை:

    ம.தி.மு.க.வில் இருந்து 3 மாவட்ட செயலாளர்களை நீக்கி பொதுச்செயலாளர் வைகோ அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    புலவர் சே.செவந்தியப்பன், ஆர்.எம்.சண்முகசுந்தரம், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் ஆகியோர் மீதான ஒழுங்கு நடவடிக்கை குறித்து, தலைமைக் கழகம் தாயகத்தில், 11.05.2022 அன்று காலை 11 மணிக்கு, ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடைபெற உள்ளது என்றும், அதில் கலந்து கொண்டு, தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும், 29.04.2022 அன்று அவர்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது.

    கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணைக்கு நேரில் வந்து மூவரும் விளக்கம் அளிக்காமல், 07.05.2022 மற்றும் 09.05.2022 தேதியிட்ட கடிதங்களை கழகப் பொதுச்செயலாளருக்கு அனுப்பி உள்ளனர்.

    அக்கடிதத்திலும், 05.04.2022 மற்றும் 18.04.2022 அன்று, அவர்களுக்கு அனுப்பப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை குறித்த புகார்களுக்கு உரிய விளக்கம் கூறாமல், ஒழுங்கு நடவடிக்கைக் குழு தங்களை விசாரிக்க, தார்மீக உரிமை இல்லை என்று கூறி இருக்கின்றார்கள்.

    ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான மேற்கண்ட மூவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை புகார்கள் மற்றும் அவர்கள் எழுதிய கடிதங்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும், கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஆராய்ந்தது.

    அதன் அடிப்படையில், ஒழுங்கு நடவடிக்கைக் குழு அளித்துள்ள பரிந்துரை மற்றும் கழக சட்டதிட்ட விதி எண் 19, பிரிவு-12 மற்றும் விதி எண் 33, பிரிவு-5 இன் கீழும், புலவர் சே.செவந்தியப்பன், ஆர்.எம். சண்முகசுந்தரம், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் ஆகியோர், ம.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் மற்றும் கழகத்தில் அவர்கள் வகித்து வரும் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகின்றார்கள் என்று, இதன் மூலம் அறிவிக்கப்படுகின்றது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செவந்தியப்பன் சிவகங்கை மாவட்ட செயலாளராகவும், சண்முக சுந்தரம் விருதுநகர் மாவட்ட செயலாளராகவும், செங்குட்டுவன் திருவள்ளூர் மாவட்ட செயலாளராகவும் இருந்தனர்.

    ×