search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "brahmotsavam"

    • பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம்.
    • 6 மணிநேரம் தரிசனம் நிறுத்தப்பட்டது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. இதற்காக 6 மணிநேரம் தரிசனம் நிறுத்தப்பட்டது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 18-ந்தேதி முதல் 26-ந் தேதி வரை பிரம்மோற்சவம் நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதுகுறித்து தேவஸ்தான தலைவர் பூமண கருணாகர் ரெட்டி கூறியதாவது:-

    ஆண்டுக்கு நான்கு முறை ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். உகாதி, ஆனிவார ஆஸ்தானம், பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும். அதன்படி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

    காலை 6 மணி முதல் 11 மணி வரை கோவில் சுத்திகரிப்பு நிகழ்ச்சியை அர்ச்சகர்கள் செய்தனர். ஆனந்த நிலையம் முதல் தங்கவாசல் வரை, கோவிலுக்குள் உள்ள உபகோவில்கள், கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் உள்ளிட்டவை தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. அப்போது சுவாமியின் மூலவிரட்டு முழுவதும் துணியால் மூடப்பட்டிருந்தது.

    சுத்திகரிப்புக்கு பிறகு, நாமகோபு, ஸ்ரீசூரணம், கஸ்தூரி மஞ்சள், கற்பூரம், சந்தனம், குங்குமம், கிச்சிலிக்கட்டா உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கலந்த புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. அதையடுத்து, அர்ச்சகர்கள் சுவாமியின் மூலவிரட்டை மூடியிருந்த துணியை அகற்றி, சிறப்பு பூஜை மற்றும் பிரசாதம் வழங்கினர்.

    ஆழ்வார் திருமஞ்சனத்தை முன்னிட்டு காலை 5 மணி முதல் 11 மணிவரை 6 மணிநேரம் தரிசனம் நிறுத்தப்பட்டிருந்தது. பகல் 11 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 9 நாட்களுக்கு மேல் நடக்கும் உற்சவங்களையே பிரம்மோற்சவம் என்பர்.
    • பிரம்மனே முன் நின்று நடத்துவதாக ஐதீகம்.

    சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆலயங்களை கட்டிய நம் முன்னோர்கள், அந்த ஆலயங்களில் தினமும் எத்தனை தடவை பூஜை செய்ய வேண்டும்? எப்போது பூஜை செய்ய வேண்டும்? வாரத்துக்கு ஒரு தடவை எத்தகைய பூஜை முறைகளை கடைபிடிக்க வேண்டும்? மாதத்துக்கு ஒரு தடவை என்னென்ன வழிபாடுகள் செய்ய வேண்டும் என்று கணித்து நடைமுறைப்படுத்தினார்கள்.

    அது மட்டுமின்றி எந்தெந்த மாதங்களில் விழாக்கள் நடத்த வேண்டும் என்ற பழக்கத்தையும் ஏற்படுத்தினார்கள். இந்த விழாக்கள் எல்லாம் பக்தர்களை ஆலயத்துடன் நெருங்க வைக்கும் இயல்பு கொண்டவை. அதோடு இந்த விழாக்கள் ஒவ்வொன்றும் இறைவன் மீதுள்ள ஆத்மார்த்தமான பக்தியை மக்கள் மனதில் ஆழப்பதிந்து விட செய்து விட்டவையாகும்.

    இந்த விழாக்களில் முதன்மையானது உற்சவங்களில் ஒன்றான பிரம்மோற்சவம் ஆகும்.

    தமிழ்நாட்டில் உள்ள பழமையான ஆலயங்கள் ஒவ்வொன்றிலும் ஆண்டுக்கு ஒரு தடவை மிக விமரிசையாக பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. இந்த விழா அந்தந்த ஆலய தல வரலாற்றுடன் தொடர்புடையதாகவும் இருக்கும்.

    பொதுவாக உற்சவங்கள் என்பது இந்த உலகில் உள்ள உயர்வான படைப்புகளின் விருத்திக்காகவே நடத்தப்படுவதாக கூறப்படுவதுண்டு. எனவே உற்சவங்கள் ஒவ்வொரு ஆலயத்திலும் தவறாமல் நடத்தப்பட வேண்டும் என்று ஆகம விதிகளில் கூறப்பட்டுள்ளது. இந்த உற்சவங்கள் ஒவ்வொன்றும் ஆலய வழிபாட்டின் சூட்சுமத்தை பொதிந்து வைத்துள்ளது.

    ஆகையால் சக்தி வாய்ந்த ஆலயங்களில் முறைப்படி பிரம்மோற்சவம் நடத்தப்படா விட்டால் அது ஆட்சியாளர்களுக்கும், பொது மக்களுக்கும் தீய விளைவுகளை கொடுத்து விடும் என்று ஞானோத்திர ஆகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பிரம்மோற்சவம் நடத்தப்படாவிட்டால் அந்த பகுதி மக்களுக்கு கிரகபீடை, நோய்கள், ஆயுள் குறைவு போன்றவை ஏற்படும் என்றும் அந்த ஆகமத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

    நம் முன்னோர்கள் ஆலயங்களில் நடக்கும் உற்சவங்களை ஆறு வகையாக பிரித்துள்ளனர் அவை வருமாறு:-

    1. பைத்ருகம் எனும் உற்சவம், 12 நாட்கள் நடைபெறும்.

    2. சவுக்கியம் எனும் உற்சவம், 9 நாட்கள் நடைபெறும்

    3. ஸ்ரீகரம் என்ற உற்சவம், 7 நாட்கள் நடைபெறும்.

    4. பார்த்திவம் எனப்படும் உற்சவம், 5 நாட்கள் நடைபெறும்.

    5. சாத்வீகம் எனும் உற்சவம் 3 நாட்கள் நடைபெறும்.

    6. சைவம் என்ற உற்சவம் ஒரே ஒரு நாள் மட்டுமே நடக்கும்.

    9 நாட்களுக்கு மேல் நடக்கும் உற்சவங்களையே பிரம்மோற்சவம் என்று சொல்வார்கள். மிகப்பெரிதாக இருப்பதை `பிரம்மா' என்பார்கள். எனவே நீண்ட நாட்கள் நடக்கும் உற்சவத்தை பிரம்மோற்சவம் என்கிறார்கள்.

    பிரம்மோற்சவத்துக்கு இன்னொரு அர்த்தமும் உண்டு. அதாவது திருப்பதி உள்ளிட்ட சில தலங்களில் உற்சவத்தை பிரம்மனே முன் நின்று நடத்துவதாக ஐதீகம் உண்டு. பிரம்மன் நடத்தும் உற்சவம் என்பதால் அதற்கு பிரம்மோற்சவம் என்ற பெயர் ஏற்பட்டதாக சொல்வார்கள்.

    இவை தவிர 5 வகை சிருஷ்டி தொழிலை குறிக்கும் உற்சவத்துக்கும் பிரம்மோற்சவம் என்று பெயராகும். இதை `பஞ்ச கிருத்யம்' என்றும் சொல்வார்கள்.

    உற்சவ காலத்தில் மேற்கொள்ளபடும் ம்ருதசங்கரஹனம், அங்குரார்ப்பனம், கல்யாணம், த்வஜாரோஹனம், ரட்சாபந்தனம் ஆகிய ஐந்தும்தான் பஞ்ச கிருத்யங்கள் என்று கூறப்படுகின்றன.

    பிரம்மோற்சவ கொண்டாட்டம் ஆலயத்துக்கு ஆலயம் மாறுபடும். திருப்பதியில் ஒரு காலத்தில் புரட்டாசியில் ஒன்றும், மார்கழியில் ஒன்றும் என 2 தடவை பிரம்மோற்சவம் நடத்தப்பட்டன.

    திருப்பதி ஆலயத்தின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள ஒரு கல்வெட்டில் 1551-ம் ஆண்டு 11 தடவை பிரம்மோற்சவம் நடத்தப்பட்டதாக பொறிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் பழமை, வருவாய் மற்றும் மரபுகளை பொருத்தே பிரம்மோற்சவ கொண்டாட்டங்கள் அமையும்.

    பிரம்மோற்சவங்கள் ஆலயத்துக்கு ஆலயம் வித்தியாசப்பட்டாலும் வார உற்சவம், மாத உற்சவம், பட்ச உற்சவம் என்ற விதமாகவே நடத்தப்படும்.

    சிவனுக்கு ஒருநாள் உற்சவமே உகந்ததாகும். கிராமத்தின் நன்மைக்காக 3 நாள் உற்சவத்தை நடத்தினார்கள்.

    பூதங்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ள 5 நாட்கள் உற்சவம் நடத்தப்பட்டது. அம்பாளுக்கு உகந்தது 7 நாட்கள் உற்சவமாகும். உலக நன்மைக்காக 9 நாட்கள் உற்சவம் நடத்தப்படுகிறது.

    ஆனால் தற்போது பெரும்பாலான சைவ தலங்களிலும், வைணவ ஆலயங்களிலும் 9 அல்லது 10 நாட்களாக பிரம்மோற்சவ விழா நடத்தப்படுகிறது. இந்த நாட்களில் ஆலயத்தில் இருக்கும் உற்சவ மூர்த்தி காலையும், மாலையும் வீதியுலா வருவார். இதன் மூலம் ஆலயத்துக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பவர்கள் உற்சவரை வழிபட்டு பலன் பெறுவார்கள்.

    இறைவனே தம் வீட்டு வாசல் வரை வந்து விடுவதால் பிரம்மோற்சவ நாட்களில் பக்தர்களிடம் மகிழ்ச்சி பொங்கி வழியும். உற்சவரை வரவேற்று இறையருள் பெறுவார்கள்.

    சைவ ஆலயங்களில் பிரம்மோற்சவ விழாவின் தொடக்கமாக புற்றுமண் எடுத்து முளையிடும் நிகழ்ச்சி நடைபெறும். இது சிருஷ்டி தொழிலை குறிக்கும்.

    அடுத்தது கொடி ஏற்றம். அதில் ஈசனுக்குரிய ரிஷபக்கொடி ஏற்றப்படும்.

    இரண்டாம் நாள் சூரிய, சந்திர பிரபைகளில் உற்சவர் எழுந்தருள்வார். இறைவன் சூரிய, சந்திரர்கள் மூலம் உலகத்துக்கு தனது கருணை ஒளியைப் பரப்புகிறான் என்பதை இந்த நடைமுறை உணர்த்தும்.

    மூன்றாம் நாள் அதிகார நந்தி, பூதவாகனம். இது இறைவனின் அழித்தல் தொழிலை குறிக்கும். 4-ம் நாள் நாக வாகனம், 5-ம் நாள் ரிஷப வாகனம், 6-ம் நாள் யானை வாகனம், 7-ம் நாள் திருக்கல்யாணம், 8-ம் நாள் கயிலாய வாகனம், 9-ம் நாள் பிட்சாடனர் திருவீதியுலா நடைபெறும். பிறகு கொடி இறக்கப்பட்டு, பிரம்மோற்சவம் நிறைவு பெறும்.

    வைணவத் தலங்களிலும் பிரம்மோற்சவத்தின்போது காலை, மாலை இரு நேரமும் உற்சவ மூர்த்தி பல வகை வாகனங்களில், விசேஷ அலங்காரத்துடன் உலா வருவார். கொடியேற்றம் நடந்த பிறகு 2-ம் நாள் காலையில் சின்ன சேஷ வாகனம், இரவில் அன்ன வாகனத்தில் உற்சவர் வீதியுலா வருவார்.

    3-ம் நாள் காலையில் சிம்ம வாகனம், மாலையில் முத்துப் பல்லக்கு சேவை, 4-ம் நாள் காலையில் கல்ப விருட்ச வாகனம், இரவில் சர்வ பூபால வாகனத்தில் உற்சவ மூர்த்தி உலா வருவார்.

    ஐந்தாம் நாள் காலை உற்சவர் மோகினி அலங்காரத்தில் வீதி உலா வருவார். அன்றிரவு கருட சேவை நடைபெறும். பிரம்மோற்சவத்தின் மிக முக்கியமான தினமாக இந்த சேவை நடைபெறும். லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கருட சேவையை தரிசனம் செய்வார்கள். இந்த வழிபாடு பிறவிப் பிணியை நீக்கவல்லது.

    6-ம் நாள் காலையில் அனுமன் வாகனம், இரவில் கஜ வாகனம், 7-ம் நாள் காலை சூரிய பிரபை, இரவு சந்திர பிரபை உற்சவம் நடைபெறும். 8-ம் நாள் தேரோட்டம் நடத்துவார்கள்.

    பிரம்மோற்சவ நாட்களில் தினமும் மாலை ஊஞ்சல் சேவை நடைபெறும். இந்த ஊஞ்சல் சேவையை காண்பவர்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் கோடான கோடி இன்பம் பெருகும்.

    பிரம்மோற்சவ நாட்களில் கலசங்கள் நிறுவப்படுதல், ஹோமம் செய்தல் ஆகியவையும் நடத்தப்படும். சில தலங்களில் பெரிய புஷ்கரணி இருக்கும். பிரம்மோற்சவ நாட்களில் அங்கு தெப்ப உற்சவம் நடத்துவார்கள்.

    அதுபோல பிரம்மோற்சவ தேரோட்டம் பிரமாண்டமாக நடைபெறும். தேரோட்டத்தின் போது ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சாதி வித்தியாசம் பார்க்காமல் தேர் இழுப்பார்கள். இப்படி மக்களை மனதால் ஒருங்கிணைக்க செய்யும் விழாவாகவும், இறை உணர்வில் மனதை மூழ்க செய்யும் விழாவாகவும் பிரம்மோற்சவம் அமையும்.

    அது மட்டுமின்றி பக்தர்களின் மனதை பக்குவப்படுத்தும் ஆற்றல் பிரம்மோற்சவத்துக்கு உண்டு. பிரம்மோற்சவத்துக்கு உள்ள மகத்துவம், சிறப்பும் ஆலயத்தில் நடக்கும் கும்பாபிஷேகத்துக்கும் உண்டு.

    • முப்புரம் எரிக்கப்படும் காட்சியை பார்த்தால் முக்தி பலன் கிடைக்குமாம்.
    • திருநாவுக்கரசரின் குரு பூஜை ஆண்டு தோறும் சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் நடைபெறும்.

    ஒவ்வொரு தலத்துக்கும் ஒரு புராண நிகழ்வு வரலாறு இருக்கும். அந்த வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் ஆண்டு தோறும் குறிப்பிட்ட நாளில், அந்த புராண சம்பவம் மீண்டும் ஒரு தடவை நிகழ்த்தி காட்டப்படும். அந்த வகையில் திருவதிகை தலத்தில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ நாளில் சிவபெருமான், திரிபுரத்தை எரித்ததை நடத்துகிறார்கள்.

    இந்த ஆண்டு முப்புரம் எரித்து, சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று அதி காலை 5.30 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்யப்படும். பிறகு திரிபுர சம்ஹாரமூர்த்திக்கான திருத்தேர் புறப்படும். ஏராளமானவர்கள் திருத்தேர் வடம் பிடித்து இழுப்பார்கள்.

    அன்றிரவு 7 மணிக்கு திரிபுர சம்ஹாரமூர்த்தியை அலங்கரித்து தேரில் எழுந்தருள செய்வார்கள். இதற்கிடையே மேளவாத்தியம் முழுங்க வாணவேடிக்கையோடு சரநாராயண பெருமாள் கோவிலில் இருந்து சரம்கொண்டு வரப்படும்.

    அந்த சரத்தை பெற்று சிவபெருமான் புன்னகை செய்வார். முப்புரம் அழியும். இதை மக்களுக்காக நேரில் காட்ட 3 அரசுர்கள் போன்று 3 பொம்மைகள் செய்யப்படும்.

    அந்த பொம்மைகளை ஒவ்வொன்றாக திரிபுரசம்ஹார மூர்த்தி கையில் இருந்து செல்லும் அம்பு தாக்கி அழிக்கும். திருச்செந்தூர் தலத்தில் சூரனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்யும் போது புகை விட்டபடி பட்டாசு விடப்படும். அது போன்ற இத்தலத்திலும் சம்ஹார மூர்த்தியிடம் இருந்து பட்டாசு சென்று மூன்று அசுரர்களையும் அழிக்கும்.

    இந்த முப்புரமெரித்த காட்சியைக்காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவதிகையில் திரள்வார்கள். முப்புரம் எரிக்கப்படும் காட்சியை பார்த்தால் முக்தி பலன் கிடைக்குமாம்.

    அது மட்டுமல்ல இந்த பிறவியில் எந்த எதிரிகளாலும் நமக்கு துன்பம் வராதாம். அசுரன் எனும் எதிரியை சிவபெருமான் அழிப்பதால், முப்புரமெரித்த காட்சியைக் கண்டால் எதிரிகள் தொல்லை நீங்கும் என்பது ஐதீகம்.

    திருநாவுக்கரசரின் குரு பூஜை ஆண்டு தோறும் சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் நடைபெறும். திருவதிகை தலத்தில் திருநாவுக்கரசருக்கான பூஜை மிக,மிக சிறப்பாக நடத்தப்படுகிறது.

    ஒவ்வொரு மாதமும் சதயம் நட்சத்திரம் தினத்தன்று திருநாவுக்கரசருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப் படுகின்றன. மேலும் இத்தலத்தில் திருநாவுக்கரசர் நீண்ட நாட்கள் வாழ்ந்ததால், அவரது வரலாற்றை நினைவு கூறும் வகையில் சித்திரை மாதம் 10 நாட்கள் உற்சவம் நடைபெறும்.

    ஒவ்வொரு நாளும் திருநாவுக்கரசரின் வரலாற்று நிகழ்ச்சிகள் நடத்தப்படும் இந்த 10 நாட்களும் திருநாவுக்கரசரை வழிபட்டால் பெரும் பேறுகள் கிடைக்கும்.

    இத்தலத்தில் தான் தெப்ப உற்சவத்தின் போது ஈசனுக்கு பதில் சிவனடியாரான திருநாவுக்கரசர் தெப்பத்தில் சென்று வருவார்கள்.தமிழ் நாட்டில் வேறு எந்த தலத்திலும் இந்த அற்புதத்தை காணமுடியாது.

    • பவித்திர உற்சவம்-10 நாட்கள் திருவிழா
    • சித்தி - புத்தி விநாயகருக்கு கல்யாண உற்சவம்

    மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதூர்தி விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஜனவரி முதல் தேதி ஆங்கில புத்தாண்டு அன்று பக்தர்கள் அதிகமாக வந்து வழிபடுகிறார்கள்.

    பிரமோற்சவம்-ஆவணி மாதம் 25 நாட்கள் திருவிழா, பவித்திர உற்சவம்-10 நாட்கள் திருவிழா

    மாதந்தோறும் சங்கடகர சதூர்த்தி தினத்தில் மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.

    திருக்கல்யாணம்

    பக்தர்கள் நேர்த்தி கடனாக சித்தி - புத்தி விநாயகருக்கு கல்யாண உற்சவம் நடத்தி வைக்கிறார்கள். இந்த கோவிலில்தான் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. வெள்ளித்தேர் இழுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துகிறார்கள்.

    தங்க கோபுரம்

    மணக்குள விநாயகர் கோவிலில் தங்க கோபுரம் உள்ளது. அகில இந்திய அளவில் விநாயகருக்கு கோபுரம் முழுவதும் தங்கத்தால் வேயப்பட்டிருப்பது இங்கு மட்டும்தான். பக்தர்கள் செலுத்திய 10 கிலோ தங்கத்தால் இந்த தங்க கோபுரம் உருவாக்கப்பட்டுள்ளது.

    மணக்குள விநாயகர் கோவிலில் பள்ளி அறை

    விநாயகர் கோவிலில் எங்கும் பள்ளி அறை இருபதில்லை. ஆனால் புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் பள்ளியறை உள்ளது. தினமும் இரவு நைவேத்தியம் முடிந்தவுடன் பள்ளி அறைக்கு விநாயகர் செல்கிறார். இதன் அடையாளமாக பாதம் மட்டும் இருக்கும் உற்சவ விக்ரம் அங்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு விநாயகரோடு அவரது தாயார் சக்தி தேவியார் உடன் இருக்கிறார்.

    சிறப்பு

    மணக்குள விநாயகரை பாரதியார், அரவிந்தர், அன்னை ஆகியோர் வழிபட்டார்கள். இந்த கோவிலில் தினம் தோறும் 3 வேளையும் பிரசாதம் செய்து பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். அன்னதானம் வழங்கப்படுகிறது. சிவ தலங்களில் இருக்கும் நடராஜரைபோல் இங்கு நர்த்தன விநாயகர் உள்ளார்.

    இந்த கோவில் புதுவை புதிய பஸ்நிலையத்திலிருந்து 4 கிலோ மீட்டர் தூரத்திலும் புதுவை ரெயில் நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்து உள்ளது.

    பக்தர்களின் பிரார்த்தனை

    திருமண வரம், குழந்தை வரம் கேட்டு பக்தர்கள் வந்து இங்கு வழிபடுகின்றனர். திருமணம் கூடி வந்ததும் திருமண பத்திரிக்கையை வைத்து வழிபட்டு செல்கின்றனர். குழந்தை பிறந்தவுடன் குழந்தையுடன் வந்து வழிபடுகிறார்கள். புது தொழில் தொடங்குவோர்.

    புது கணக்கு தொடங்குவோர் வந்து வணங்கி செல்கிறார்கள். புதுவையை விட்டு வெளியூர் செல்வோர் மணக்குள விநாயகரை வந்து வழிபட்டு செல்கிறார்கள். பக்தர்கள் நேர்த்தி கடனாக காணிக்கை செலுத்துகின்றனர். விநாயகருக்கு அமெரிக்க வைரத்தாலே கவசம் செய்து கொடுத்துள்ளனர்.

    • 29-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
    • 2-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.

    மானாமதுரையில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற வீரஅழகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சுவாமிக்கு 11 வகையான திரவிய பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே உள்ள மண்டபத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து அர்ச்சகர் கோபி தலைமையிலான அர்ச்சகர்கள் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

    தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மூலவர் சுந்தரராஜ பெருமாள் மற்றும் சவுந்தரவல்லி தாயாருக்கு காப்பு கட்டப்பட்டது. செட்டிகுளம் பகுதியில் கவுன்சிலர் லதாமணி, ராஜேந்திரன், முருகன் ஆகியோர் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட மண்டகப்படியில் சுவாமிகள் எழுந்தருளினர்.

    இதில் செட்டிகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா நடைபெறும் 10 நாட்களும் சுவாமி பல்வேறு அலங்காரத்தில் மண்டகப்படிகளுக்கு எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் சிகர நிகழ்வாக 29-ந் தேதி இரவு திருக்கல்யாணம், ஆகஸ்டு 1-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

    2-ந் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும், 4-ந் தேதி உற்சவ சாந்தியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணிமதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் கோவில் தேவஸ்தான அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • இன்று மாலைபராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது.
    • இன்று இரவு அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழாவும் நடைபெறும்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ஆடிப்பூர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று காலை 6.15 மணிக்கு கடக லக்னத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க அம்மன் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

    இதனை முன்னிட்டு பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

    இன்று மாலை வளைகாப்பு மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது.

    இதனை தொடர்ந்து இரவு அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழாவும் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இன்று முதல் 10 நாட்களுக்கு காலை மற்றும் மாலையில் பராசக்தி அம்மன் மாடவீதி உலா நடைபெறும்

    10-வது நாள் கோவிலில் புனித தீர்த்தவாரி நடைபெறும்.

    ஆடிப்பூர கொடியேற்று விழாவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள் உள்ளிட்ட ஏராளமானமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விடுமுறை தினம் என்பதால் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் கோவிலில் குவிந்திருந்தனர்.

    • பூரம் நடத்திரம் அமையும் நாளன்று தீமிதி விழா நடக்கிறது .
    • 23-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை தினமும் வீதி உலா நடக்கிறது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரம் பிரமோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு ஆடிப்பூரம் பிரமோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதையொட்டி, நாளை அதிகாலை 5.45 மணி முதல் 6.45 மணிக்குள், உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரில் உள்ள தங்க கொடிமரத்தில் ஆடிப்பூரம் பிரமோற்சவ கொடியேற்றம் நடைபெறும்.

    அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழா உள்ளிட்ட முக்கிய விழாக்கள் கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம்.

    அதில், உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரில் உள்ள கொடி மரத்தில், கொடியேற்றத்துடன் தொடங்கும் விழா ஆடிப்பூர பிரமோற்சவம் நடைபெறுவது தனிச்சிறப்பாகும்.

    விழாவை முன்னிட்டு, நாளை மாலை பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவமும், காமதேனு வாகனத்தில் அம்மன் திரு வீதியுலாவும் நடைபெறும். மேலும், ஆடிப்பூரம் பிரமோற்சவ விழாவின்போது, பூரம் நடத்திரம் அமையும் நாளன்று தீமிதி விழா நடை பெறுகிறது.

    அதன்படி, முதல் நாளன்றே பூரம் நட்சத்திரம் அமைவதால், நாளை இரவு 11 மணியளவில் அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழாவும் நடைபெற உள்ளது. சிவன் கோவில்களில் தீமிதி விழா நடைபெறும் சிறப்பும் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

    அதைத்தொடர்ந்து, வருகிற 23-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை தினமும் காலை மற்றும் இரவில், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் மாட வீதியில் உலா வந்து அருள்பாலிக்கின்றனர்.

    • சித்ரா பவுர்ணமி அன்று திருவிளக்கு பூஜை
    • வைகாசியில் ஸ்ரீ அம்பாளுக்கு பிரம்மோற்சவம்

    காளிகாம்பாள் கோவிலில் ஒவ்வொரு மாதமும் விழாக் காலங்களே.

    சித்திரையில் சித்ரா பவுர்ணமி அன்று திருவிளக்கு பூஜை நடைபெறுகின்றது.

    வைகாசியில் ஸ்ரீ அம்பாளுக்கு பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. பிரம்மோற்சவத்தின் முந்தைய நாள் மூஞ்சுறு வாகனத்தில் ஸ்ரீ விநாயகபெருமான் வீதி உலா நடைபெற்று, இத்திருக்கோவிலின் அருகிலுள்ள அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று புதுமண் கொண்டு வந்து மறுநாள் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் ஆரம்பமாகிறது.

    முதல் நாள் இரவு அம்பாள் வீதி உலாவும், 2-ம் நாள் இரவு காமதேனு வாகனத்திலும், மூன்றாம் நாள் காலை பூதகி வாகனத்திலும், நான்காம் நாள் இரவு ரிஷப வாகனத்திலும், ஐந்தாம் நாள் இரவு சிம்ம வாகனத்திலும், ஆறாம் நாள் இரவு யானை வாகனத்திலும், ஏழாம் நாள் காலை தேரோட்டமும், எட்டாம் நாள் இரவு குதிரை வாகனத்திலும், ஒன்பதாம் நாள் இரவு கிண்ணித் தேர் என வழங்கும் ஸ்ரீ சக்ர ரதாரோஹனத்தில் ஸ்ரீ அம்பாள் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

    பத்தாம் நாள் காலை ஸ்ரீ நடராஜர் உற்சவமும், பின்பு தீர்த்தவாரி உற்சவமும், அன்று இரவு விசாகத்தை முன்னிட்டு ஆறுமுக சாமி உற்சவமும், கொடி இறக்கமும் நடைபெறுகின்றது. அடுத்து பந்தம்பறி உற்சவமும், அதற்கு மறுநாள் ஸ்ரீ உற்சவமூர்த்தி ஸ்ரீ அம்பாளுக்கும் மற்றுமுள்ள உற்சவ மூர்த்திகளுக்கு சாந்தி அபிஷேகம் நடைபெறுகின்றது.

    பிரம்மோற்சவத்தினை முன்னிட்டு அலங்கார ஸ்ரீ நடராஜர் மண்டபத்திற்கு வருகை புரிந்த உற்சவமூர்த்தி அம்பாள் அமாவாசை அன்று தன் ஆஸ்தானத்திற்கு செல்லும் ஆஸ்தான பிரவேச உற்சவமும் நடைபெறும். அதற்கு மறுநாள் அம்பாளின் விஸ்வரூப தரிசனமும் நடைபெறுகின்றது.

    ஆனி மாதம் ஸ்ரீ அம்பாளுக்கு வசந்த உற்சவமும் ஆடியில் ஒன்பது வெள்ளிக்கிழமைகளில் இரவு வெள்ளி தொட்டிலில் ஊஞ்சல் உற்சவமும் பத்து ஞாயிற்றுக்கிழமைகள் பகல் 11 மணியளவில் முறையே 108 குடம் பாலபிஷேகம், 108 குடம் இளநீர் அபிஷேகம், 108 குடம் தயிர் அபிஷேகம், 108 குடம் மஞ்சள் அபிஷேகம், 108 குடம் சந்தன அபிஷேகம், 108 குடம் விபூதி அபிஷேகம், 108 குடம் பன்னீர் அபிஷேகம், 108 குடும் பஞ்சாமிர்த அபிஷேகம், 108 பூக்கூடையால் புஷ்பாஞ்சலியும் நடைபெறுகின்றது.

    மேலும் ஆடி மாதத்தில் ஆடிக் கிருத்திகையில் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு விசேஷ அபிஷேகமும, மயில் வாகனத்தில் ஸ்ரீ முருகப்பெருமான் வீதி உலாவும் நடைபெறுகின்றது. ஆடிப்பூரத்தன்று ஸ்ரீ அம்பாளுக்கு விசேஷ அபிஷேகமும் சந்தன காப்பு அலங்காரமும் நடைபெறுகின்றது. ஆவணியில் விநாயகர் சதுர்த்தி உற்சவம் நடைபெறுகின்றது. புரட்டாசியில் பத்து நாட்கள் சாரதா நவராத்திரி விழா நடைபெறுகின்றது.

    நவராத்திரியில் முதல் மூன்று தினங்கள் துன்பங்களை நீக்கும் துர்க்கா பரமேஸ்வரியாகவும், இரண்டாவது மூன்று நாட்களில் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ மகாலட்சுமியாகவும், கடைசி மூன்று நாட்களில் ஞானபாக்கியத்தைத் தரும் ஸ்ரீ சரஸ்வதியாகவும் அருள்பாளிக்கிறாள்.

    இந்த நவராத்திரியின் ஏழாம் நாளன்று ஸ்ரீ அம்பாளுக்கு நவவர்ண பூஜை நடைபெறுகின்றது. மேலும் இந்த நவராத்திரி தினங்களில் குழந்தைகளை அம்பாளாக பாவித்து பூஜை செய்வது சிறப்பு அம்சமாகும். மேலும் இந்த நவராத்திரி தினங்களில் மாலையில் இன்னிசை, சொற்பொழிவு, நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    ஐப்பசி பவுர்ணமியில் அருள்மிகு கமடேஸ்வரர் அருள்மிகு அருணாச்சலேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது. ஸ்ரீ முருகப் பெருமானுக்கு கந்த சஷ்டி உற்சவமும், லட்சார்ச்சனையும், சூரசம்ஹார உற்சவமும் நடைபெறுகின்றது.

    சூரசம்ஹாரத்தின் மறுநாள் ஸ்ரீ முருகப் பெருமான் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று மயில் வாகனத்தில் ஸ்ரீ முருகப்பெருமான் வீதி உலாவும் நடைபெறுகின்றன. ஸ்ரீ முருகப் பெருமான் திருக்கல்யாண உற்சவத்தின் போது பெண்களுக்கு மஞ்சள் குங்குமத்துடன் திருமாங்கல்ய சரடுகள் வழங்கப்படுகின்றன.

    கார்த்திகை மாதத்தில் சோம வாரங்களில் ஸ்ரீ அம்பாளுக்கு விசேஷ அபிஷேகமும் இரவு வெள்ளித் தொட்டியில் ஸ்ரீ அம்பாள் அலங்காரத்துடன் கோவில் வெளி பிரகாரத்தில் வலம் வருவாள்.

    கார்த்திகை தீபத்தன்று ஒன்பது பெரிய அகலில் தீபமேற்றி அம்பாள் எதிரில் மஹா தீபாராதனை நடைபெற்று ஒவ்வொரு சன்னதியில் மேற்படி அகல் தீபம் ஏற்றப்பட்டு ராஜகோபுரத்தில் மகாதீபம் ஏற்றப்படும். பின்பு, அலங்காரம் செய்யப்பட்ட அம்பாள் கோவிலில் வெளியில் வந்து நிற்க சொக்கப்பனை கொளுத்தப்படும்.

    சிறப்பு வாய்ந்த மார்கழி மாதம் முழுவதும் தினசரி விடியற்காலை 4.30 மணியளவில் கோவில் திறக்கப்படுகிறது. சிறுவர், சிறுமியர் உள்பட பக்தர்கள் அனைவரும் விடியற்காலையில் எழுந்து பக்தி பரவசத்துடன் திருக்கோவிலுக்கு வருகை தந்து கூட்டு வழிபாடு நடத்துவது சிறப்பு அம்சமாகும்.

    மார்கழி மாதத்தில் ஸ்ரீ மாணிக்கவாசகர் உற்சவமும் பத்து நாட்கள் நடைபெறுகின்றது. பத்தாம் நாள் ஸ்ரீ நடராஜருக்கு விசேஷ அபிஷேகமும் ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகின்றது.

    தை மாதத்தில் பொங்கல் திருநாள் மாலையில் ஸ்ரீ அம்பாளுக்கு புஷ்பாஞ்சலி விழாவும், தை மாதம் வெள்ளிக்கிழமை மாலையில் அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவமும் தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை மாலையில் ஸ்ரீ அம்பாளுக்கு மகுடாபிஷேகமும் நடைபெறுகின்றது. அருகிலுள்ள அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோவிலுக்கு ஸ்ரீ அம்பாள் தெப்ப உற்சவத்திற்காக எழுந்தருளுவார்.

    மாசி மாதம் மாசி மகத்தன்று ஸ்ரீ அம்பாள் சென்னை கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்று மாசி மக உற்சவம் நடைபெறுகின்றது. மாசி கிருத்திகையன்று ஸ்ரீ முருகபெருமானுக்கு விசேஷ அபிஷேகமும், இரவு மயில் வாகனத்தில் ஸ்ரீ முருகபெருமான் வீதி உலாவும் நடைபெறுகின்றது.

    பங்குனி மாதத்தில் ஸ்ரீ அம்பாளுக்கு வசந்த நவராத்திரி விழாவும் குங்கும லட்சார்ச்சனை விழாவும் நடைபெறுகின்றது.

    ஆகஸ்டு மாதம் 15-ம் நாள் சுதந்திர தினத்தன்று இத்திருக்கோவிலில் சிறப்பு வழிபாடுகளும், சமபந்தி உணவு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. பொதுவாக இத்திருக்கோவிலில் நாள் தோறும் மூன்று கால பூஜைகள் நடைபெறுகின்றன.

    • சூல ரூபத்திற்கு அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.
    • சாமிக்கும் தீபாராதனை நடைபெற்றது.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    இந்த கோவிலில் விடுமுறை நாட்கள், விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வதற்காக வரும் பக்தர்களால் கோவிலில் கூட்டம் அலைமோதும்.

    இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆனி பிரம்மோற்சவமும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான ஆனி பிரம்மோற்சவம் கடந்த 8-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் காலையும், மாலையும் மாட வீதியில் சந்திரசேகர் மற்றும் விநாயகர் உற்சவ உலா நடைபெற்றது.

    இந்த நிலையில் ஆனி பிரம்மோற்சவ நிறைவு நாளான நேற்று மதியம் 12 மணியளவில் திருவண்ணாமலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவிலில் சாமி சன்னதியில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுடன் சந்திரசேகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பின்னர் கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதியில் வலம் வந்து அய்யங்குளத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அப்போது அங்கு சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சூல ரூபத்திற்கு அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மங்கல வாத்தியங்களுடன் வேத மந்திரங்கள் முழங்க சூலத்திற்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்தனர். பின்னர் சாமிக்கும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அய்யங்குளத்தில் தூர் வாரும் பணி நடைபெற்று வருவதால் தீர்த்தவாரி நிகழ்ச்சியானது குளத்தின் கரையில் பாத்திரத்தில் புனித நீர் எடுக்கப்பட்டு அதன் மூலம் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • இன்று முதல் 10 நாட்களுக்கு சிறப்பு பூஜைகள், சாமி வீதி உலா நடைபெறும்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் ஆண்டுக்கு 4 முறை கொடியேற்றம் நடைபெறுகிறது.

    சூரியன் தெற்கு திசையை நோக்கி நகரும் காலமான ஆடிமாதத்தை வரவேற்கும் விதமாக ஆனி பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது.

    ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் இன்று காலை நடந்தது. இதனையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து முதலில் விநாயகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மன் சிறப்பு அலங்காரத்தினால் அலங்கரிக்கப்பட்டு தங்கக் கொடிமரம் அருகில் எழுந்தருளினர்.

    சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பூரட்டாதி நட்சத்திரம் மிதுன லக்னத்தில் இன்று காலை 6 மணிக்கு ஆனி மாத பிரம்மோற்சவ கொடியேற்றப்பட்டது.

    ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடந்த காட்சி.

    ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடந்த காட்சி.

    அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன் திருக்கோவில் இணை ஆணையர் ஜோதி அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் மற்றும் ராஜாராம், கோமதி குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

    இதைத்தொடர்ந்து விநாயகர் உண்ணா மலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மனும் அலங்கார ரூபத்தில் பவனி வந்து காட்சி அளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஆனி பிரமோற்சவ விழாவை முன்னிட்டு இன்று முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் சாமி வீதி உலா நடைபெறும் என தெரிவித்தனர்.

    • பிரம்மோற்சவம் நாளை தொடங்கி ஜூலை 7-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
    • இன்று மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராயச்சோட்டி அன்னமயா மாவட்டம் தாளப்பாக்கம் நகரில் உள்ள சென்னகேசவசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஜூலை) 7-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி இன்று (புதன்கிழமை) மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது.

    பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை காலை கொடியேற்றம், அன்று இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா, ஜூலை மாதம் 3-ந்தேதி இரவு கருட வாகன வீதிஉலா, 4-ந்தேதி மாலை திருக்கல்யாண உற்சவம், 5-ந்தேதி தேரோட்டம், 7-ந்தேதி சக்கர ஸ்நானம் நடக்கிறது. இத்துடன் பிரம்மோற்சவ விழா முடிகிறது.

    பிரம்மோற்சவ விழா நாட்களில் வாகன வீதி உலாவுக்கு முன்னால் பக்தி பஜனை, கோலாட்டம் போன்ற கலாசார நிகழ்ச்சிகளை நடத்த தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. அதைத்தொடர்ந்து ஜூலை 8-ந்தேதி மாலை புஷ்ப யாகம் நடத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 29-ந்தேதி கருட சேவை நடக்கிறது.
    • 3-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    பூந்தமல்லி அடுத்த திருமழிசையில் உள்ள ஜெகந்நாத பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆனி மாத பிரம்மோற்சவ திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து மாலை சுவாமி தங்க தோளுக்கினியன் வாகனத்தில் திருவீதி புறப்பாடும் நடைபெறுகிறது.

    விழாவையொட்டி தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை வருகிற 29-ந்தேதி காலையிலும், அடுத்த மாதம் (ஜூலை) 3-ந்தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜூலை 5-ந் தேதி காலை தீர்த்தவாரி நடைபெற்று மாலையில் கொடியிறக்கத்துடன் திரு விழா நிறைவு பெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    ×