search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bandh"

    ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து சேலம், நாமக்கல் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. #SterliteProtest #ThoothukudiFiring #DMKBandh
    சேலம்:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    அதன்படி சேலம் மாநகரில் செவ்வாய்ப்பேட்டை, லீ பாஜார், பால் மார்க்கெட், புதிய பஸ் நிலையம் வீரபாண்டியார் நகர், கோட்டை உள்பட பல பகுதிகளில் முழுவதுமாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    லீ பஜாரில் இன்று கடைகள் திறக்கப்படாது என அங்குள்ள சங்க அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதி ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    கடைவீதி, முதல் அக்ரஹாரம், புதிய பஸ் நிலையம், ஜங்சன், பழைய பஸ் நிலையம், அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை, திருச்சி மெயின் ரோடு, 4 ரோடு, சாரதா கல்லூரி ரோடு உள்பட பல பகுதிகளில் ஓட்டல்கள், டீ கடைகள், துணி கடைகள் திறக்கப்பட்டிருந்தன. மக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சேலம் திருமணிமுத்தாறு, வ.உ.சி. மார்க்கெட், உழவர் சந்தைகள் திறக்கப்பட்டிருந்தாலும் பொது மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்கின. கிராமப்புற பஸ்கள் குறைவாக இயக்கப்பட்டன. பஸ் நிலையம் மற்றும் பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.

    பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்பட மக்கள் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பழைய பஸ் நிலையத்தில் வஜ்ரா வாகனம் தயாராக நிறுத்தப்பட்டிருந்தது.

    ஓமலூர் நகர பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன. அரசு பஸ்கள் ஒடின. தனியார் பஸ்கள் இயங்கவில்லை. பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது.

    மேட்டூர் பஸ் நிலைய பகுதியில் 70 சதவீத கடைகள் திறந்திருந்தன. ரெயில் நிலைய பகுதியில் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடினாலும் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.

    எடப்பாடி பஸ் நிலையம் உள்பட நகர பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. காலை 6 மணிக்கு மேல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடின. சிறிய கிராமங்களுக்கு பஸ்கள் செல்லவில்லை. இதனால் அந்த கிராம மக்கள் தவித்தனர்.

    வாழப்பாடியில் பஸ் நிலையம் உள்பட அனைத்து பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடின. பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.

    ஆத்தூரில் சில கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல இயங்கின.

    நாமக்கல் நகரில் இன்று பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. ஒரு சில கடைகள் மட்டுமே அடைக்கப்பட்டு இருந்தன. உழவர் சந்தை இன்று காலை திறந்திருந்து.

    பரமத்திவேலூர் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 250 பஸ்களும் இன்று காலையில் வழக்கம் போல் நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து இயங்கின. பஸ் நிலையத்தில் இருந்து சேலம், துறையூர், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட வெளியூர் பகுதிகளுக்கு பஸ்கள் சென்றன.

    உள்ளூர் பகுதிகளான வளையப்பட்டி, பெரியப்பட்டி, நல்லிப்பாளையம், முதலிப்பாளையம், வள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நகர பேருந்துகள் இயங்கின. அதுபோல் ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் பாலம் சாலை, திருச்செங்கோடு சாலை, சங்ககிரி சாலையில் பேக்கரி, ஓட்டல்கள் என பாதி கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

    பாதி கடைகள் திறக்கப்பட்டு இருந்தது. மொபைல் கடை, ரீசார்ஜ் கடை, டீக்கடை, ஓட்டல்கள் பெரும்பாலானவை திறக்கப்பட்டு இருந்தது.

    பள்ளிப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து வழக்கம் போல் ஈரோடு, சங்ககிரி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயங்கின. அதுபோல் தனியார் பஸ்களும் பள்ளிப்பாளையத்தில் இருந்து ஈரோடுக்கு இயங்கியது.

    திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், 4 ரதவீதி, கடைவீதி, சங்ககிரி சாலை மற்றும் சேலம் சாலைகளில் கடைகள் மூடப்பட்டு இருந்தது. 50 சதவீத கடைகள் திறந்திருந்தன.

    புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தினச்சரி மார்க்கெட் வழக்கம் போல் இயங்கியது. திருச்செங்கோடு புதிய பஸ் நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு, நாமக்கல், ராசிபுரம், சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளியூர் பஸ்களும், உள்ளூர் பஸ்களும் புறப்பட்டு சென்றன.

    ராசிபுரம் பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ராசிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயங்கின. #SterliteProtest #ThoothukudiFiring #DMKBandh
    புதுவையில் பஸ்கள் முற்றிலும் ஓடாததால் வெளியூர்களில் இருந்து வந்த பயணிகள் பஸ் நிலையத்திலேயே முடங்கி இருக்கிறார்கள். மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், இதற்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தி.மு.க. சார்பில் தமிழ்நாட்டில் இன்று முழு அடைப்பு நடத்தப்பட்டது.

    அதே போல் புதுவையிலும் முழு அடைப்பு நடத்தப்படும் என்று தி.மு.க.வினர் அறிவித்து இருந்தனர். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட தோழமை கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர். இன்று காலை 6 மணிக்கு முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது.

    அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. புதுவையில் கடைகள் நிறைந்து காணப்படும் நேரு வீதி, காந்தி வீதி, அண்ணா சாலை, மி‌ஷன் வீதி, சின்ன சுப்புராயப் பிள்ளை வீதி, பாரதி வீதி, காமராஜர் சாலை, மறைமலை அடிகள் சாலை, எஸ்.பி. பட்டேல் சாலை, புஸ்சி வீதி, கடலூர் சாலை, விழுப்புரம் சாலை, வழுதாவூர் சாலை என அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    அதேபோல் பெரிய மார்க்கெட், முத்தியால் பேட்டை மார்க்கெட், சின்னக்கடை மார்க்கெட், முதலியார் பேட்டை மார்க்கெட் ஆகியவையும் மூடப்பட்டு இருந்தன.

    ஒரு சில இடங்களில் மட்டும் பெட்டிக்கடைகள் திறந்து இருந்தன. அனைத்து கடைகளையும் மூடும்படி வற்புறுத்தி தி.மு.க.வினர் மோட்டார் சைக்கிளில் வீதி, வீதியாக சென்றனர். இதனால் திறந்து இருந்த ஒன்றிரண்டு சிறு, சிறு கடைகளும் மூடப்பட்டன.

    காமராஜர் சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் செயல்பட்டு வந்தது. இதை பார்த்த தி.மு.க.வினர் பெட்ரோல் பங்க் அலுவலக கண்ணாடி மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன. இதன் பிறகு அந்த பெட்ரோல் பங்க் மூடப்பட்டது.

    இதே போல் அனைத்து பகுதிகளிலும் பெட்ரோல் பங்க்குகளும் மூடப்பட்டன.

    புதுவையில் இன்று முற்றிலும் பஸ்கள் ஓடவில்லை. வெளியூர்களில் இருந்து வரும் தமிழக அரசு பஸ்கள் நேற்று இரவே நிறுத்தப்பட்டன.

    சென்னையில் இருந்து புதுவை வழியாக கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் போன்ற ஊர்களுக்கு தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படும். இன்று அவையும் நிறுத்தப்பட்டன. தமிழக அரசு பஸ்கள் எதுவுமே புதுவைக்கு வரவில்லை.

    அதே போல் புதுவையில் அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை. தனியார் பஸ்களும் முற்றிலும் நிறுத்தப்பட்டன.

    பஸ்கள் முற்றிலும் ஓடாததால் வெளியூர்களில் இருந்து வந்த பயணிகள் பஸ் நிலையத்திலேயே முடங்கி இருக்கிறார்கள்.

    ஆட்டோ, டெம்போ உள்ளிட்ட வாகனங்களும் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்ல முடியாம் மிகவும் சிரமப்பட்டனர். முழு அடைப்பையொட்டி அனைத்து பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    முழு அடைப்பினால் புதுவையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு இருந்தது.
    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. #ThoothukudiFiring #SterliteProtest #DMKBandh
    புதுச்சேரி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பலர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மாநிலம் முழுவதும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

    அவ்வகையில், தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் இன்று தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதேபோல் புதுச்சேரியிலும் முழு அடைப்பு  போராட்டம் நடைபெற்று வருகிறது.



    முழு அடைப்பு போராட்டத்தில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் மற்றும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளதால், பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. முழு அடைப்பு காரணமாக அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் இயங்கவில்லை. தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன.  #ThoothukudiFiring #SterliteProtest #DMKBandh
    ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. #SterliteProtest #ThoothukudiFiring #DMKBandh
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பலர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மாநிலம் முழுவதும் போராட்டங்களும் நடைபெற்றன.



    துப்பாக்கி சூட்டை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. வணிகர் சங்கத்தினர் நேற்று கடை அடைப்புப் போராட்டம் நடத்தினார்கள். தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில்,  நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, திராவிட கழகம் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.

    இப்போராட்டம் காரணமாக, தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை. தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்கவில்லை. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. தமிழக - கேரள எல்லையான களியக்காவிளையில் கேரள பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் 4-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதேபோல் புதுச்சேரியிலும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் பேருந்துகள், ரெயில்கள் வழக்கம்போல் ஓடும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முழு அடைப்பு போராட்டத்தையொட்டி பேருந்து நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #SterliteProtest #ThoothukudiFiring #DMKBandh

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நாளை புதுவையில் நடைபெறும் முழு அடைப்புக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பதாக நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நீர் வளத்தையும், நில வளத்தையும் சூறையாடும் ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று தூத்துக்குடி பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

    கடந்த 100 நாட்களாக ஒட்டுமொத்த மக்களும் மாசு ஏற்படுத்தி உயிர் பலி வாங்கி கொண்டிருக்கும் அபாயமிக்க ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இவர்களின் நியாயமான போராட்டத்திற்கு தீர்வு காணாமல் தமிழக அரசும், மத்திய அரசும் மெத்தன போக்கோடு செயல்பட்டு போராட்டத்தை நீர்த்துப்போக செய்யும் வேளையில் ஈடுபட்டு உள்ளது.

    இதன் விளைவாக ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வண்ணம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடும் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாமல் காவல்துறை மூலமாக கண் மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

    மிருக வெறிபிடித்து 13 அப்பாவி மக்களை கொலை வெறியோடு கொன்று குவித்துள்ளனர். இதுபோன்ற காட்டு மிராண்டித்தனமான மாபாதக செயலை புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது.

    உண்மையாக போராடும் மக்கள் சக்தி ஒன்று திரண்டால் மக்கள் விரோத ஆட்சிகள் தூக்கி எறியப்படும் என்பதை தமிழகம் மற்றும் மத்திய அரசு நினைவில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    மேலும் நாளை புதுவையில் நடைபெறும் முழு அடைப்புக்கு ஆதரவு அளிப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து புதுவையிலும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. அறிவித்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை லப்போர்த் வீதியில் உள்ள புதுவை தெற்கு மாநில தி.மு.க. அலுவலகத்தில் அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு புதுவை தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி. சிவக்குமார் முன்னிலை வகித்தார்.

    இதில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகி அபிஷேகம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ராஜாங்கம், முன்னாள் செயலாளர் பெருமாள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய தமிழக காவல்துறையில் காட்டுமிராண்டித்தனத்தையும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசையும், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசையும் வன்மையாக கண்டிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்தனர். இந்த நிலையில் நாளை தமிழகத்தில் தி.மு.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

    இதையடுத்து புதுவையிலும் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. அறிவித்துள்ளது.

    நாளை அனைத்துக்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் பஸ்கள், ரெயில்கள் வழக்கம்போல் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #sterliteprotest
    சென்னை:

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது துப்பாக்கி சூடு நடந்தது. இதில் பலர் உயிர் இழந்தனர்.

    இதற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்தனர். துப்பாக்கி சூட்டுக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் நேற்று நடந்தது.

    இன்றும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதையொட்டி, அனைத்து மாவட்டங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்துள்ளது.

    துப்பாக்கி சூட்டை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. வணிகர் சங்கத்தினர் இன்று கடை அடைப்புப் போராட்டம் நடத்தினார்கள்.

    நாளை தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, திராவிட கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறுகின்றன.



    நாளை பஸ்கள், ரெயில்கள் வழக்கம்போல் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    போலீஸ் பாதுகாப்புடன் பஸ்களை இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயுதப்படை போலீசாரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.  #sterliteprotest

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகத்தில் மே 25-ம் தேதி முழு கடையடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க. அழைப்பு விடுத்துள்ளது. #SterliteProtest #ThoothukudiPoliceFiring #Stalin
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று மக்கள் பெருமளவில் திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    இதற்கிடையே, இன்றும் தூத்துக்குடியில் சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மேலும் வன்முறை பரவாமல் தடுக்கவும், வதந்திகள் பரவாமல் தடுக்கவும் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளதாக தமிழக உள்துறை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகத்தில் மே 25-ம் தேதி முழு கடையடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க. அழைப்பு விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை கண்டித்து அனைத்துக் கட்சிகள் சார்பில் மே 25-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தை வணிகர்களும், இளைஞர்களும் ஜனநாயக வழியில் நடத்திட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. #SterliteProtest #ThoothukudiPoliceFiring #Stalin
    ×