search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையிலும் நாளை முழு அடைப்பு - தி.மு.க. அறிவிப்பு
    X

    புதுவையிலும் நாளை முழு அடைப்பு - தி.மு.க. அறிவிப்பு

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து புதுவையிலும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. அறிவித்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை லப்போர்த் வீதியில் உள்ள புதுவை தெற்கு மாநில தி.மு.க. அலுவலகத்தில் அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு புதுவை தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி. சிவக்குமார் முன்னிலை வகித்தார்.

    இதில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகி அபிஷேகம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ராஜாங்கம், முன்னாள் செயலாளர் பெருமாள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய தமிழக காவல்துறையில் காட்டுமிராண்டித்தனத்தையும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசையும், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசையும் வன்மையாக கண்டிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்தனர். இந்த நிலையில் நாளை தமிழகத்தில் தி.மு.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

    இதையடுத்து புதுவையிலும் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. அறிவித்துள்ளது.

    Next Story
    ×