search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்
    X

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்

    ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. #SterliteProtest #ThoothukudiFiring #DMKBandh
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பலர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மாநிலம் முழுவதும் போராட்டங்களும் நடைபெற்றன.



    துப்பாக்கி சூட்டை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. வணிகர் சங்கத்தினர் நேற்று கடை அடைப்புப் போராட்டம் நடத்தினார்கள். தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில்,  நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, திராவிட கழகம் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.

    இப்போராட்டம் காரணமாக, தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை. தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்கவில்லை. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. தமிழக - கேரள எல்லையான களியக்காவிளையில் கேரள பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் 4-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதேபோல் புதுச்சேரியிலும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் பேருந்துகள், ரெயில்கள் வழக்கம்போல் ஓடும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முழு அடைப்பு போராட்டத்தையொட்டி பேருந்து நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #SterliteProtest #ThoothukudiFiring #DMKBandh

    Next Story
    ×