search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police firing"

    தேர்தலில் வாக்களிக்க பொதுமக்கள் திரண்டு வந்ததால், அவர்களை கலைக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #LokSabhaEelctions2019 #Arcot
    அரக்கோணம்:

    பாராளுமன்ற தேர்தலின் இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இன்று தேர்தல் நடந்தது.

    இந்நிலையில், அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட ஆற்காடு அருகே வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்தில் பொதுமக்கள் திரண்டு வந்ததால், அவர்களை கலைக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட ஆற்காடு அருகே ராசாத்திபுரம் கீழ்விஷாரத்தில் என்ற பகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    திடீரென வாக்குச்சாவடி பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது #LokSabhaEelctions2019 #Arcot 
    தமிழக அரசு காவல் துறையை தங்கள் இஷ்டத்துக்கு பயன் படுத்தி வருகிறது என்று டிடிவி தினகரன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #TTVDhinakaran #Thoothukudishooting

    ஆலந்தூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது கண்டு கொள்ளாத அரசு துப்பாக்கிசூடு நடத்தி 13 பேரை படுகொலை செய்தது. மக்களை பற்றி இந்த அரசுக்கு கவலை இல்லை.

    படுகொலை நடந்த பிறகு அரசாணை போட்டு ஆலையை மூடுவோம் என்றனர். பின்னர் நிரந்தரமாக மூடுவோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

    அதேபோல் தான் சேலத்தில் 8 வழி பசுமை சாலையை அமைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அங்கிருக்கும் மக்கள் விவசாய நிலம் பாதிக்கப்படுகிறது. பசுமை வழிச் சாலை வேண்டாம் என்று சொல்கிறார்கள்.

    சென்னை - பெங்களூர் சாலையில் அதிக போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை 8 வழிச் சாலையாக அரசு மாற்றினால் பரவாயில்லை. அதைவிட்டுவிட்டு போக்குவரத்தே இல்லாத சேலத்தில் சாலை அமைக்கிறார்கள்.

    மற்றொரு தூத்துக்குடி போல சேலம் மாற வேண்டும் என்று முதல்வர் விரும்புகிறாரா? அவர் நினைப்பது நடக்காது. அதற்குள் இந்த அரசாங்கத்துக்கு முடிவு வரும்.

     


    சட்டசபையில் டாஸ்மாக் பற்றி நான் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதில் கொடுக்கிறார். அதற்கு விளக்கம் தர நான் எழுந்த போது அவர் உங்களையும் பற்றி சொல்லவில்லை என்று சபாநாயகர் சொன்னதால் நான் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தேன்.

    பின்பு சபாநாயகருக்கு கடிதம் எழுதினேன். அதில் உறுப்பினர் உரிமையை நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும். பேசுவதற்கு வாய்ப்பு தர வேண்டும் என்று கூறி இருந்தேன். சட்டசபையில் எதிர்க்கட்சியினர் பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

    எஸ்.வி.சேகரை ஏன் கைது செய்யவில்லை என்று முதல்-அமைச்சரிடம் தான் கேட்க வேண்டும். மத்திய அரசின் ஆதரவு இருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று மாநில அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது.

    காவல் துறையை தங்கள் இஷ்டத்துக்கு அரசு பயன் படுத்தி வருகிறது. அரசை கண்டு காவல்துறை பயப்படுகிறது. மக்கள் இதை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #Thoothukudishooting

    தூத்துக்குடி படுகொலையை நியாயப்படுத்த அரசு ஊழியர்களை மிரட்டி வாக்குமூலம் வாங்குவதாக பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.#sterliteprotest #ThoothukudiFiring

    சென்னை:

    பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக வரலாற்றில் இது வரை இல்லாத வகையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவி பொது மக்கள் 13 பேரை சுட்டுக் கொன்ற தமிழகக் காவல்துறை, அதை நியாயப்படுத்த மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்களை கட்டாயப்படுத்தி போலி வாக்குமூலம் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. காவல் துறையின் இந்த சட்டவிரோத செயல் கண்டிக்கத்தக்கது ஆகும்.

    தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று காலை பணிக்கு வந்த பணியாளர்களின் மேசைகளில் காவல்துறை சார்பில் ஒரு படிவம் வைக்கப்பட்டிருந்தது. அதில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய பேரணியின் போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் என்ன நடந்தது? போராட்டக்காரர்களால் ஆட்சியர் அலுவலகப் பணியாளர்களுக்கு எத்தகைய காயங்கள் ஏற்பட்டன.

    பொதுச்சொத்துக்கள் எந்தெந்த வகையில் சேதப்படுத்தப்பட்டன என்பன உள்ளிட்ட விவரங்களை ஒவ்வொரு பணியாளரும் அவர்களின் பெயர், முகவரி, பதவி உள்ளிட்ட விவரங்களுடன் தெரிவிக்க வேண்டும் என்று கோரப் பட்டிருந்தாக செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கோரப்பட்டிருந்த விவரங்களை காவல்துறையினர் விரும்பும் வகையில் நிரப்பித் தரும்படி ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். மேலதிகாரிகளின் அனுமதியின்றி இத்தகைய விவரங்கள் கோரப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த வருவாய்த்துறை ஊழியர்கள், உடனடியாக தங்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தைக் கூட்டி, படிவத்தை நிரப்பித் தருவதில்லை என்று தீர்மானித்தனர் அதன்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் படிவத்தை நிரப்பித்தர மறுத்து விட்டனர்.

     


    தூத்துக்குடியில் அப்பாவி பொது மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்துவதற்கு எந்த காரணமும் இல்லை. அதனால் தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பணியாளர்களை போராட்டக்காரர்கள் தாக்கினார்கள். பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தினார்கள் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக போலியான ஆதாரங்களை ஏற்படுத்தும் முயற்சியில் காவல் துறையும், தமிழக அரசும் ஈடுபட்டுள்ளன.

    அதன் ஒரு கட்டமாகவே ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் தாக்கப்பட்டதாக அவர்களிடமிருந்தே பொய்யான வாக்குமூலத்தை கட்டாயப்படுத்தி மிரட்டி வாங்க காவல்துறை துடிக்கிறது. அதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் உடன்படாததால் பெரும் சதி முறியடிக்கப்பட்டுள்ளது.

    ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கிச் சூடு உள்ளூர் காவல்துறை நிலையில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. எங்கிருந்தோ தமிழக ஆட்சியாளர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தான் உள்ளூர் காவல்துறை மூலம் செயல்படுத்தப்பட்டது. அந்த துப்பாக்கிச்சூட்டுக்கு துணை வட்டாட்சியர்கள் தான் ஆணையிட்டதாக ஒரு நாடகத்தை தமிழக அரசு அரங்கேற்றியது.

    ஆனால், சம்பவ இடத்திலேயே இல்லாத துணை வட்டாட்சியர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆணையிட்டதாக போலியான ஆவணங்கள் தயாரித்து, அதுவும் அம்பலமானது. அதனால் வேறு வழியின்றி இப்படி நாடகத்தை அரங்கேற்ற அரசு முயல்கிறது. செய்த குற்றத்தை மறைக்க அரசே போலி ஆவணங்களை தயாரிப்பது அருவருக்கத்தக்கது.

    சட்டப் பேரவையில் பேசுவதே விசாரணையை பாதிக்கும் எனும் போது, விசாரணையுடன் சம்பந்தமில்லாத உள்ளூர் காவல் துறை ஆட்சியர் அலுவலக ஊழியர்களை மிரட்டி வாக்குமூலம் பெறுவது விசாரணையை பாதிக்காதா? என்பதை முதல்- அமைச்சர் விளக்க வேண்டும். இதன் பின்னணியிலுள்ள சக்திகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை மேற் கொள்ளப்பட வேண்டும்.

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து நடை பெற்றுவரும் நிகழ்வுகள் அனைத்துமே, இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதைத் தான் உறுதி செய்கின்றன. எனவே, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த நீதி விசாரணைக்கு பணியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகளை அமர்த்த வேண்டும். அதேபோல், இதுகுறித்த குற்ற வழக்கின் விசாரணையை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #sterliteprotest #ThoothukudiFiring

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று சீதாராம் யெச்சூரி வலியுறுத்தினார். #SitaramYechury #sitaramyechury #thoothukudiincident
    தூத்துக்குடி:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று தூத்துக்குடி வந்தார். அவர், அங்கு கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்தேன். காயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் பார்த்தேன். துப்பாக்கி சூடு என்பது முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட பயங்கரம் என்று தெரிகிறது. வன்முறையில் ஈடுபட்டவர்களை சுட்டோம் என்று போலீசார் கூறுவதை நம்ப முடியவில்லை.



    அதுபோன்று வன்முறை நடந்து இருந்தால், போலீசார் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்பு கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை படிப்படியாக பின்பற்றி இருப்பார்கள். ஆனால் இங்கு நேரடியாக துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். துப்பாக்கி குண்டு பெரும்பாலும் வயிற்றிலும், அதற்கு மேலேயும் பட்டு உள்ளது. இது கலவரத்தை கட்டுப்படுத்தும் முறை அல்ல. போராட்டக்காரர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடந்ததாக தெரிகிறது.

    துப்பாக்கி சூடு சம்பவம் நடக்கும் போது, கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் அங்கு இல்லாதது வினோதமானது. இதனால் கீழ்நிலை அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டு உள்ளார்கள். இதுகுறித்து பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும். அல்லது ஐகோர்ட்டு கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

    தூத்துக்குடியில் போலீசார் தொடர்ந்து குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் ஒருவித பதற்றமான சூழல் உள்ளது. ஆகையால் உடனடியாக போலீசை குறைக்க வேண்டும். பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

    வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடியில் ஆலையால் பாதிக்கப்பட்ட விவசாயம், நிலத்தடி நீர், மக்களுக்கான பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஆலையை மூட உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவு சட்டரீதியாக நிலைத்து நிற்காது. அதனை சரிசெய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு சீதாராம் யெச்சூரி கூறினார்.

    மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் சம்பத், மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    முன்னதாக துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  #SitaramYechury #sitaramyechury #thoothukudiincident 
    போலீசாரின் எப்.ஐ.ஆரில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி புகார் அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரி கோபால், நான் எந்த புகாரும் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார். #ThoothukudiShooting

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூட்டை தொடர்ந்து வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. கலெக்டர் அலுவலகம் சூறையாடப்பட்டது. தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் போலீஸ் வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது.

    இந்த சம்பவங்கள் குறித்து தூத்துக்குடி வடபாகம், சிப்காட், தென்பாகம் போலீசார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பதில் திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலர் கோபால் புகார் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    தற்போது திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலராக கண்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். கோபால் ஸ்ரீவைகுண்டம் வட்ட வழங்கல் அலுவலராக பணியில் உள்ளார்.

    துப்பாக்கி சூடு விவகாரத்தில் போலீசார் தவறுதலாக தனது பெயரை பயன்படுத்தியதாக ஸ்ரீவைகுண்டம் வட்ட வழங்கல் அலுவலர் கோபால், உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார்.

     


    அதில், ‘துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த 22-ந்தேதி நான் தூத்துக்குடி சப்-கலெக்டர் உத்தரவின் பேரில் நிர்வாக நடுவராக 3-வது மைல் பகுதியில் பணியில் இருந்தேன். அந்த பகுதியில் எவ்வித பிரச்சினையும் இல்லை. இது தொடர்பாக நான் எதுவும் புகார் அளிக்கவும். ஆனால் நான் முன்பு பணிபுரிந்த திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலர் பதவியை குறிப்பிட்டு தென்பாகம் போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதனால் நானும், எனது குடும்பத்தாரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம். எனவே இதுபற்றி உண்மை தன்மையை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.

    இந்த கடிதம் காவல்துறை வட்டாரத்திலும், அதிகாரிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வட்ட வழங்கல் அலுவலர் கோபாலுக்கு ஆதரவாக தூத்துக்குடி மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க செயலாளர் செந்தூர்ராஜன், மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் நேற்று மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ந்தேதி போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட அசம்பாவிதம் தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலர் கோபால் என்பவர் புகார் அளித்ததாகவும், அதன்பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து உள்ளன.

    கோபால் தற்போது ஸ்ரீவைகுண்டத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் அவர் புகார் அளிக்கவில்லை என மறுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் வருவாய்த்துறை அலுவலர்களை இது போன்ற பொய்யான புகார் அளிக்க வற்புறுத்துவதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தென்பாகம் போலீசார் முதல் தகவல் அறிக்கையில் பொய்யான பெயரை குறிப்பிட்டிருப்பதாக அதிகாரிகள் குற்றம் சாட்டியிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #ThoothukudiShooting

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான மாணவி ஸ்னோலின் உடல் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. #Thoothukudifiring

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22-ந்தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பேரணியாக சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

    100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள். பலியானவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தன. இதில் சண்முகம் (38), செல்வசேகர் (42), கார்த்திக் (20), கந்தையா (58), காளியப்பன் (22), ஸ்னோலின் (17), தமிழரசன் (42) ஆகிய 7 பேரின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.

    இந்த நிலையில் 7 பேரின் உடல்களையும் டெல்லி எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மர் அல்லது திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தலைமையில் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் அம்பிகா பிரசாத் பத்ரா தலைமையில், தூத்துக்குடியை சேர்ந்த மருத்துவர்கள் மனோகரன், சுடலைமுத்து ஆகியோர் அடங்கிய குழுவினர், நீதித்துறை நடுவர்கள் முன்னிலையில் உடல்கள் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து முதல் கட்டமாக மறு பிரேத பரிசோதனை முடிந்த சண்முகம், கார்த்திக், செல்வ சேகர் ஆகிய 3 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.தொடர்ந்து காளியப்பன், கந்தையா ஆகியோரின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

    நேற்று தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த தமிழக செய்தி மற்றும் விளம்பரதுறை அமைச்சர் கடம்பூர் ராஜூ துப்பாக்கி சூட்டில் பலியாகி மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட தமிழரசன் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து அவர்கள் தமிழரசனின் உடலை பெற்றுக்கொண்டனர்.


    இதையடுத்து தமிழரசனின் உடல் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. மாணவி ஸ்னோலின் உடலை பெற உறவினர்கள் தொடர்ந்து மறுத்து வந்தனர். அவர்களிடம் மாவட்ட நிர்வாகம் சார்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது மாணவி ஸ்னோலின் உடலை பெற அவர்களது உறவினர்கள் சம்மதித்தனர். இதைத்தொடர்ந்து ஸ்னோலினின் தாய் வனிதாவிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

    பிரேத பரிசோதனை செய்யப்படாத அந்தோணி செல்வராஜ், கிளாஸ்டன், ஜான்சி, மணிராஜ், ரஞ்சித்குமார், ஜெயராமன் ஆகிய 6 பேரின் உடல்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

    ஐகோர்ட்டு உத்தரவுப்படி வருகிற 6-ந்தேதிக்கு பிறகு இவர்களது உடல் பிரேத பரிசோதனை செய்யப் படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Thoothukudifiring

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சீத்தாராம் யெச்சூரி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். #Thoothukudifiring #SitaramYechury

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்களையும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி இன்று தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி திரேஸ்புரத்தில் துப்பாக்கி சூட்டில் பலியான ஜான்சியின் வீட்டிற்கு அவர் சென்றார். அங்கு ஜான்சியின் குடும்பத்தினரை அவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் அவர் அரசு மருத்துவமனைக்கு சென்றார்.

    அங்கு காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை தனித்தனியாக சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். அப்போது அமைதியாக போராட்டம் நடத்திய எங்கள் மீது போலீசார் அத்துமீறி துப்பாக்கியால் சுட்டனர் என சரமாரியாக புகார் கூறினர். அவர்களிடம் விவரங்களை கேட்ட சீத்தாராம் யெச்சூரி இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக தெரிவித்தார். #Thoothukudifiring #SitaramYechury

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணைய குழுவினரின் விசாரணை இன்று 2-வது நாளாக நடைபெற்றது. #ThoothukudiShooting

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22-ந் தேதி நடந்த பேரணியின்போது கலவரம் வெடித்தது. இதைக் கட்டுப்படுத்த காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    துப்பாக்கி சூடு குறித்து மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்களான ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சித்தரஞ்சன் மோகன்தாஸ், ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயசந்திரன், சத்தியபிரியா, பாலகிருஷ்ண பிரபு மற்றும் மாநில மனித உரிமை ஆணைய உதவி பதிவாளர் வாசுதேவன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.

    கலவரத்தின்போது சேதப்படுத்தப்பட்ட தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம், தீ வைத்து எரிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கூடம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்பு, இறந்தவர்களின் வீடுகள், திரேஸ்புரம் பகுதி ஆகியவற்றை ஆய்வு செய்தனர். காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரிடமும் விசாரணை நடத்தினர்.

    மேலும் துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிர் இழந்த கார்த்திக், சண்முகம் ஆகியோர்களின் வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து, விருந்தினர் மாளிகையில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.


    பின்னர், நேற்று மாலை அவர்கள் சென்னை புறப்பட்டுச் சென்றனர். பின்னர் மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி ஜெயச்சந்திரன் கூறுகையில், “எங்களது விசாரணை அறிக்கையை ஓரிரு நாளில் மனித உரிமை ஆணைய தலைவரிடம் சமர்ப்பிப்போம்” என்றனர்.

    இதனிடையே துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக தேசிய மனித உரிமை ஆணைய குழு நேற்று மாலை தூத்துக்குடிக்கு வந்தது. இந்த குழுவில் தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினரும், மூத்த போலீஸ் சூப்பிரண்டுமான புபுல் பிரிட்டோ பிரசாத் தலைமையில், உறுப்பினர்கள் ரஜ்வீர்சிங், நிதின்குமார், அருண் தியாகி, லால் பகர் ஆகியோர் இடம் பெற்றிருந்த‌னர்.

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ், நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.


    அப்போது அவர்கள், துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த விவரங்களை கேட்டறிந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் கலவரத்தின்போது ஜன்னல், கதவுகள் கல்வீசி தாக்கி உடைக்கப்பட்டு இருந்ததையும், இருசக்கர வாகனங்கள், கார்கள் தீவைத்து எரிக்கப்பட்டு சேதமடைந்து கிடப்பதையும் பார்வையிட்டனர். தொடர்ந்து அவர்கள் கலவரம் நடந்த ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் தீவைக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட்டனர்.

    தேசிய குழுவினரின் விசாரணை இன்று 2-வது நாளாக நடைபெற்றது. இன்று துப்பாக்கி சூடு தொடர்பான‌ பல்வேறு வீடியோ பதிவு காட்சி பதிவுகளையும் பார்வையிட்டனர். பின்பு பேரணி புறப்பட்டு தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் மற்றும் மடத்தூர் பகுதிகளையும் அவர்கள் பார்வையிட்டனர். இந்த குழுவினர் வருகிற 7-ந் தேதி வரை பல்வேறு தரப்பினரையும் சந்தித்து விசாரணை நடத்த உள்ளனர். துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினரிடமும், காயமடைந்தவர்களிடமும் அவர்கள் விசாரணை நடத்த உள்ளனர்.

    இதனிடையே துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நாளை(திங்கட்கிழமை) தூத்துக்குடிக்கு வருகிறார். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக தூத்துக்குடி பழைய விருந்தினர் மாளிகையில் முகாம் அலுவலகத்திலும் விசாரணை ஆணையம் செயல்பட இருக்கிறது.

    இங்கு நீதிபதி அருணா ஜெகதீசனிடம் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அவரவருக்கு தெரிந்த தகவல்களை சத்திய பிரமான உறுதிமொழி பத்திரவடிவில் விசாரணை ஆணையத்தில் தலைமை அலுவலகம், முகாம் அலுவலகத்தில் நேரிலோ, தபால் மூலமோ வருகிற 22-ந் தேதி வரை வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. #ThoothukudiShooting

    தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்களை தடுக்கும் நக்சல்கள் ஊடுருவலை அரசு ஒடுக்க வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார். #ThoothukudiShooting

    திருச்சி:

    திருச்சியில் இன்று பா. ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-

    காவிரி மேலாண்மை வாரியம் அமைப்போம் என்று கடந்த 40 வருடங்களாக காங்கிரசும், தி.மு.க.வும் கூறி வந்தனர். ஆனால் இன்று பா.ஜனதா அரசு 50 நாளில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்துள்ளது.

    பிரதமர் மோடி கடந்த 4 ஆண்டுகளில் ஏராளமான வளர்ச்சி திட்டங்களை செய்துள்ளார். வெளிமாநிலங்களில் தான் முன்பு வளர்ச்சி திட்டங்கள் வரும் போது நக்சல்கள் ஊடுருவி தடுப்பார்கள்.

     


    இப்போது தமிழகத்திலும் அது நடைபெற்று வருகிறது. எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது நக்சல்கள் ஊடுருவலை தடுத்தார். ஸ்டெர்லைட் போராட்டத்தில் தமிழக அரசு நக்சல்கள் ஊடுருவலை தடுப்பதில் தோல்வியடைந்து விட்டது.

    ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தீயசக்திகள் வன்முறையில் ஈடுபட்டது போல ஸ்டெர்லைட் போராட்டத்திலும் நடத்தினார்கள்.

    இந்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் ரஜினி காந்த் கூறிய கருத்து வரவேற்கத்தக்கது. இதில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன், ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி ஆகியோர் இரட்டை வேடம் போடுகிறார்கள்.

    தை பிறந்தால் வழி பிறக்கும். ஸ்டெர்லைட் திறந்தால் வாழ்வு செழிக்கும் என கொடி பிடித்து அதை திறக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர் தான் பாலபாரதி. ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை மூட முதலில் உண்ணாவிரதம் இருந்தது தற்போதைய மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் தான்.

    ஆனால் ஸ்டெர்லைட் ஆலைக்காக போராடியவர்கள் இன்று இரட்டை வேடம் போடுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThoothukudiShooting

    தூத்துக்குடியில் கலவரத்தில் ஈடுபட்ட வெளிமாவட்ட சமூக விரோதிகளை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். #ThoothukudiShooting

    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த 22-ந்தேதி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் உள்பட 5 இடங்களில் போலீசாருக்கும், ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களுக்கும் இடையே மிகப் பெரிய மோதல் நிகழ்ந்தது.

    தீவைப்பு, கல்வீச்சு, வாகனங்கள் உடைப்பு போன்றவை கட்டுக்கடங்காமல் போனதால் போலீசார் 4 இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதில் 13 பேர் பலியானார்கள். சுமார் 140 பேர் காயம் அடைந்தனர்.

    இந்த வன்முறையில் சுமார் 100 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. 4 நாட்கள் தூத்துக்குடி நகரமே முடங்கிப் போனது.

    கலவரம்- தீவைப்பு தொடர்பாக தூத்துக்குடியில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 177 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தூத்துக்குடி கலவரத்துக்கு காரணம் யார் என்பது பற்றிய சர்ச்சை எழுந்துள்ளது.

     


    இதுபற்றி விசாரிக்க கோரி சுமார் 40 வழக்குகள் கோர்ட்டுகளில் தொடரப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தியது ஏன் என்பதற்கு தமிழக அரசிடம் ஐகோர்ட்டு விளக்கம் கேட்டுள்ளது. மனித உரிமை ஆணையங்களும் விசாரணையை தொடங்கி உள்ளன.

    கலவரத்துக்கு வித்திட்டது யார் என்பது பற்றி தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் தூத்துக்குடி கலவரத்துக்கு சமூக விரோதிகளே காரணம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், பா.ஜனதா தலைவர்களும் கூறி வருகின்றனர். நடிகர் ரஜினியும் இதே கருத்தை வெளியிட்டதால் கலவரத்தின் பின்னணியில் சமூக விரோதிகள் இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

    இதற்கிடையே போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வெளி மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்குள் ஊடுருவிய ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் சதி செய்து திட்டமிட்டு வன்முறையை நடத்தி விட்டு சென்று விட்டனர் என்று தெரிய வந்துள்ளது.

    அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்ளும் வகையில் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், தூத்துக்குடியில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் வன்முறை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    வெளி மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த அவர்கள் யார்-யார் என்ற விபரத்தை போலீசார் சேகரித்துள்ளனர். தூத்துக்குடியில் அவர்கள் தங்கி இருக்க உதவி செய்தவர்கள் பற்றியும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து கலவரத்தை நடத்திய அந்த வெளி மாவட்டக்காரர்களை வேட்டையாடும் அதிரடி நடவடிக்கையை தனிப்படை போலீசார் தொடங்கியுள்ளனர்.

    இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

     


    தூத்துக்குடியில் 5 இடங்களில் வன்முறை நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தோம். அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி. டி.வி. கேமிராக்களில் பதிவான காட்சிகள் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான வன்முறை காட்சிகளையும் பல தடவை ஆய்வு செய்தோம். அப்போது சில இளைஞர்கள் மட்டும் தீ வைத்து வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருப்பது தெரிந்தது. அந்த இளைஞர்கள் யார்-யார் என்பதையும் கண்டுபிடித்து விட்டோம்.

    அவர்களில் ஒருவர் கூட தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக கடலூர், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    வன்முறை நடந்த சமயத்தில் சிலர் அந்த பகுதியில் இருந்தபடி தீ வைப்புகளை தங்கள் செல்போனில் படம் பிடித்து மற்றவர்களுக்கு பகிர்ந்து கொண்டனர். சமூக வலைத்தளங்களில் அந்த காட்சிகள் பரவியது. அதில் உள்ள சமூக விரோதிகளை அடையாளம் காணும் முயற்சி நடந்து வருகிறது.

    வெளி மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடி மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கிராம மக்களிடம் ஊடுருவி மூளைச் சலவை செய்த வெளி மாவட்ட சமூக விரோதிகள் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைஒட்டியுள்ள கிராமங்களுக்குள் வர முயற்சி செய்கிறார்கள். எனவே வெளிமாவட்ட சமூக விரோதிகளிடம் இருந்து அப்பாபி கிராம மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளோம்.

    சமூக விரோதிகளால் இனி தூத்துக்குடியிலும் அருகில் உள்ள கிராமங்களிலும் சட்டம்-ஒழுங்கு கெட்டு விடக்கூடாது என்பதற்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறாம். இதற்காக வீடு, வீடாக சென்று ஆய்வுப் பணியை தொடங்கி உள்ளோம். ஒவ்வொரு வீட்டிலும் இருப்பவர்களை ஆதார், ரேசன் கார்டுகள் மூலம் பரிசோதித்து வருகிறோம். இதன் மூலம் சமூக விரோதிகளை விரட்டி வருகிறோம்.

    இவ்வாறு அந்த போலீஸ் உயர் அதிகாரி கூறினார். #ThoothukudiShooting

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார். #ThoothukudiShooting

    கோவை:

    மத்திய அரசின் 4 ஆண்டு கால சாதனை விளக்க கருத்தரங்கு கோவையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

    இதில் மத்திய தகவல் ஒலிபரப்பு, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை மந்திரி ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் பங்கேற்று பேசினார்.

    புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்ற நோக்கத்துடன் மத்திய பாரதிய ஜனதா அரசு செயல்பட்டு வருகிறது.

    48 ஆண்டில் செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகளை மத்திய மோடி அரசு வெறும் 48 மாதத்தில் செய்து முடித்துள்ளது. உலகில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் ஏழை மக்களின் அரசாங்கமாக மத்திய மோடி அரசு செயல்படுகிறது.

    இந்தியாவில் 31 கோடி மக்களுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டு சேமிப்பு பழக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் வீடு, கழிப்பிட வசதி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மத்திய அரசு வளர்ச்சி கண்டுள்ளது. இது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்திய அளவில் கல்வி, வளர்ச்சி, பெண்கள் மேம்பாடு, மருத்துவம், தொலை தொடர்பு, தொழில் நுட்பம், வேலை வாய்ப்பு, விளையாட்டு உள்ளிட்ட எல்லா துறைகளிலும் நாடு நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. போக்கு வரத்து துறையிலும் நல்ல வளர்ச்சி கண்டுள்ளோம்.

    பொருளாதார மேம்பாடு நல்ல முன்னேற்ற பாதையில் செல்கிறது. பணமில்லா வங்கி பரிவர்த்தனை, கருப்பு பணம் ஒழிப்பு போன்றவற்றில் உலகளவில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது.

    தொழில் துறையில் கடந்த 25 ஆண்டு காலம் இல்லாத வகையில் தற்போது நல்ல வளர்ச்சி கண்டுள்ளோம். இது வரவேற்கதக்கது. உலக அளவில் வளர்ச்சியின் உந்து சக்தியாக இந்தியா செயல்படுகிறது.


    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இது பற்றிய அனைத்து தகவல்களும் பிரதமர் மோடிக்கு தெரியப்படுத்தப்பட்டது. அவர் நடந்த சம்பவம் முழுவதையும் கேட்டறிந்து வேதனை அடைந்தார்.

    தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

    கடந்த 4 ஆண்டுகளில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றிய பின்னரும் இடைத் தேர்தல்களில் பாரதிய ஜனதா தோல்வி அடைந்ததை கருத்தில் கொள்ளாமல் மக்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து தான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதையும் மேம்படுத்தும் வகையில் தான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

    ஆண்டு தோறும் தேசிய அளவில் ஆயிரம் பள்ளி மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 5 லட்சம் செலவு செய்து அவர்களை ஒலிம்பிக் போட்டிக்கு செல்வதேற்கேற்ற வகையில் விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்ட்டு வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThoothukudiShooting

    தூத்துக்குடியில் வீடு வீடாக சென்று இளைஞர்களை கைது செய்வது மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தும் என்று மார்க்.கம்யூ செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். #ThoothukudiFiring #SterliteProtest

    சென்னை:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிடடுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென அப்பகுதி மக்கள் பல மாதமாக போராடி வந்த நிலையில், தமிழக அரசு துப்பாக்கி சூடு நடத்தி 13 பேர் உயிரை பறித்தது. நூற்றுக்கணக்கானோர் தடியடி மற்றும் குண்டு காயங்களால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில், தமிழக அரசு தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பி வருவதாகவும், மக்கள் அன்றாட பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறிக் கொள்கிறது. மறுபுறத்தில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களைப் பழி வாங்கும் நோக்கத்தோடு, அப்பாவி பொது மக்களையும், இளைஞர்களையும் இரவோடு இரவாக வீடு வீடாகச் சென்று மிரட்டியும், பயமுறுத்தியும், கைது செய்து வருகிறது.


    தமிழக அரசின் இந்த பழிவாங்கும் நடவடிக்கையால் தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்புவதற்கு மாறாக மீண்டும் பதட்ட நிலை உருவாக்கப்படுகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

    கைது படலத்தை உடனடியாக நிறுத்திட வேண்டும். தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்ப தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும், தமிழக அரசும் உரிய கவனம் செலுத்த வேண்டுமென மார்க்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வற்புறுத்துகிறது.

    தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மே 26-ந் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட போது அவரது உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையை மார்க்.கம்யூ வன்மையாக கண்டிக்கிறது.

    பழிவாங்கும் நோக்கில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ThoothukudiFiring #SterliteProtest

    ×