என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்பாக்கிச் சூடு"

    • சிறுவர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் போலீசாரை வெட்ட முயன்றுள்ளனர்.
    • சிறுவர்கள் 2 பேரும் அந்த வீட்டின் கதவை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தி திறக்க முயன்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி சமத்துவபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 2 பேர் மீது பாப்பாக்குடி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இவர்கள் சமீபத்தில் சாதி மோதலை உண்டாக்கும் வகையிலான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதாக 2 சிறுவர்களும் கைது செய்யப்பட்ட நிலையில் அதன்பின்னர் ஜாமினில் வெளியே வந்து வெளியூருக்கு சென்றுவிட்டனர்.

    அவர்களை சிறிது காலம் வெளியூரில் இருக்கும்படி போலீசார் அறிவுறுத்தி இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் 2 பேரும் நேற்று முன்தினம் நள்ளிரவு ஊருக்கு வந்துள்ளனர்.

    அப்போது முக்கூடலில் பானி பூரி கடை நடத்தி வரும் பாப்பாக்குடி சமத்துவபுரம் இந்திரா காலனியை சேர்ந்த சக்திகுமார்(வயது 22) என்பவரிடம் பானிபூரி வாங்கிவிட்டு சென்றுள்ளனர்.

    இதனிடையே அவர்கள் வீட்டுக்குள் செல்வதற்குள் போலீசார் அங்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பானிபூரி கடைக்காரரான சக்திகுமார் தான் தங்கள் வருகையை போலீசாருக்கு தெரிவித்துள்ளார் என்று 2 சிறுவர்களும் கருதி உள்ளனர். இதனால் நேற்று இரவு முக்கூடல் அருகே உள்ள ரஸ்தாவூருக்கு 2 சிறுவர்களும் மதுபோதையில் சென்று உள்ளனர்.

    சமீபகாலமாக ரஸ்தாவூரில் வசித்து வரும் சக்திகுமாரிடம் சென்று பேச வேண்டும் என்று கூறி ஊருக்கு சற்று தொலைவில் உள்ள குளத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு வைத்து தங்களை போலீசில் எப்படி மாட்டிவிடலாம் என்று கூறி சக்திகுமாரை காலில் வெட்டியுள்ளனர். காயம் அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடி வரவே அப்போது இரவு நேர ரோந்து போலீசார் அங்கு வந்து உள்ளனர்.

    தகவல் அறிந்து 2 சிறுவர்களையும் பிடிக்க முயன்றனர். அப்போது சிறுவர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் போலீசாரை வெட்ட முயன்றுள்ளனர். இதனால் 2 போலீசாரும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சிக்கவே, அதில் ரஞ்சித் என்ற காவலருக்கு காலில் காயம் ஏற்பட்டது. தகவல் கிடைக்கப்பெற்று துப்பாக்கியுடன் பாப்பாக்குடி சப்-இன்ஸ்பெக்டர் முருகன் அங்கு விரைந்து சென்றார்.

    அவர் 2 சிறுவர்களையும் பிடிக்க முயன்றார். அப்போது அவரையும் அந்த சிறுவர்கள் அரிவாளால் வெட்ட முயன்றனர். உடனே சப்-இன்ஸ்பெக்டர் முருகன் அங்கிருந்து தப்பி ஓடி அருகில் இருந்த ஒரு பெண்ணின் வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

    ஆனாலும் அந்த சிறுவர்கள் 2 பேரும் அந்த வீட்டின் கதவை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தி திறக்க முயன்றனர். இதனால் அசாதாரண சூழல் அங்கு நிலவியதால் தற்காப்பு நடவடிக்கையாக துப்பாக்கியால் அந்த சிறுவர்களை நோக்கி சப்-இன்ஸ்பெக்டர் முருகன் சுட்டார். அதில் ஒரு சிறுவனுக்கு நெஞ்சு பகுதி வழியாக குண்டு துளைத்து சென்றது. மற்றொரு சிறுவன் துப்பாக்கி குண்டு படாமல் தப்பித்து விட்டான்.

    இந்த சம்பவங்கள் குறித்து அறிந்த கூடுதல் காவல் படையினர் அங்கு காயத்துடன் இருந்த சக்திகுமார், மார்பு பகுதியல் குண்டு பாய்ந்து காயமடைந்த சிறுவன், காயம் அடைந்த காவலர் ரஞ்சித் உள்ளிட்டோரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதில் குண்டு காயம் பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுவன் மீது பெட்ரோல் குண்டு வீசியது உள்பட 4 வழக்குகளும், தப்பி ஓடிய சிறுவன் மீது கொலை, பெட்ரோல் குண்டு வீசியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் நிலுவையில் இருக்கிறது.

    இதையடுத்து தப்பி ஓடிய சிறுவனை இரவோடு இரவாக போலீசார் கைது செய்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் இருக்கும் வார்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த பகுதியிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில், டி.எஸ்.பி.க்கள் சதீஸ்குமார், சத்தியராஜ் ஆகியோர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • இந்தியாவும், பாகிஸ்தானும் அறிவித்தபடி வாகா எல்லை மூடப்பட்டது.
    • இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவுகிறது.

    காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றுள்ளது.

    இந்த தாக்குதலை அரங்கேற்றிய பயங்கரவாதிகள், அவர்களுக்கு பின்னால் இருப்பவர்களை தேடி கண்டுபிடித்து வேட்டையாடுவோம் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்து உள்ளார்.

    மறுபுறம் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்து உள்ளது. அந்தவகையில் இரு நாட்டு எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து பாகிஸ்தானும் சிம்லா ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தான் வான் பரப்பு மூடல், வாகா எல்லை மூடல் என்ற அடாவடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

    இந்தியாவும், பாகிஸ்தானும் அறிவித்தபடி வாகா எல்லை மூடப்பட்டது. அங்கு ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என்று வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். மேலும் இந்தியர்கள் பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற அறிவிப்பை பாகிஸ்தானும் வெளியிட்டுள்ளது.

    இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவுகிறது.

    இந்த நிலையில், எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் சண்டையை ஆரம்பித்தது. ஜம்மு காஷ்மீரின் பந்திபோராவில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது.

    எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் சில இடங்களில் சண்டை நடைபெற்று வருவதால் பதற்றம் நிலவுகிறது.

    • துப்பாக்கிச் சூட்டில் 40 பேர் காயமடைந்ததாக ஈரான் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
    • துப்பாக்கி சூடு நடத்திய இருவர் கைது, ஒருவன் தப்பியோட்டம்.

    தெக்ரான்:

    ஈரானில் ஹிஜாப் பிரச்சினை காரணமாக கடந்த மாதம் 17-ந்தேதி போலீஸ் விசாரணையின்போது மாஷா அமினி என்ற 22 வயது இளம் பெண் உயிரிழந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நாடு முழுவதும் ஈரானிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தின் 40வது நாளான நேற்று அந்நாட்டின் இரண்டாவது புனிதத் தலமான ஷா செராக் மசூதிக்குள் புகுந்து மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    இதில் 15 பேர் கொல்லப்பட்டதாகவும், 40 பேர் காயமடைந்துள்ளதாவும், அரசுத் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்குப் பிறகு துப்பாக்கி ஏந்திய இருவர் கைது செய்யப்பட்டதாகவும் ஒருவன் தப்பியோடி விட்டதாகவும், ஈரான் நீதித்துறை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த தாக்குதலில் வெளிநாட்டினருக்கு தொடர்பு இருக்கலாம் என்று, ஈரானிய செய்தி இணையதளம் கூறியுள்ளது. இந்நிலையில் திட்டமிட்டு தாக்குதலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கடும் பதிலடியை திரும்ப பெறுவார்கள் என்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி குறிப்பிட்டுள்ளார்.

    • இந்தியர்கள் சிலரின் உதவியுடன் வங்காள தேசத்தை சேர்ந்த இருவர் கால்நடை தலைகளை கடத்த முயன்றது தெரியவந்தது.
    • எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

    இந்தியா வங்காளதேச எல்லையான மேற்கு வங்கத்தில் சந்தேகத்திற்கு இடமாக சிலர் நடமாடுவதை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கவனித்தனர். அப்போது சிலர் இந்தியர்கள் சிலரின் உதவியுடன் வங்காள தேசத்தை சேர்ந்த இருவர் கால்நடை தலைகளை கடத்த முயன்றது தெரியவந்தது.

    இதையடுத்து, அவர்களை ஊர் திரும்பும்படி எல்லை காவல் படையினர் எச்சரித்தனர். ஆனால், கடத்தல்காரர்கள் உயர் பீம் டார்ச் லைட்களை அடித்து எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மீது அடித்தும், மூங்கில் கம்பு மற்றும் கற்களை வீசியும் தாக்கியும் உள்ளனர்.

    இதையடுத்து எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

    • அரசு மற்றும் தனியார் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
    • துப்பாக்கியால் சுட்டவரை அடையாளம் காண்பது கடினமாக இருந்ததாக தகவல்

    எஸ்பிரிடோ சாண்டோ

    பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள எஸ்பிரிடோ சாண்டோ மாகாணத்தில் பள்ளிகளுக்குள் அடுத்தடுத்து புகுந்து மர்மநபர் ஒருவர், தானியங்கி துப்பாக்கி மூலம் அங்கிருந்தவர்களை நோக்கி சுட்டார். ஒரு அரசுப் பள்ளி மற்றும் ஒரு தனியார் பள்ளியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

    குண்டு துளைக்காத சட்டை அணிந்து முகத்தை மூடியவாறு அந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்துவது கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. இந்த கொடூர தாக்குதலில் 2 ஆசிரியர்கள், ஒரு மாணவர் உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    துப்பாக்கிச் சூடு நடத்தியவரை போலீசார் கைது செய்தார்கள் என்பது குறித்த தகவல் உடனடியாகத் வெளியாகவில்லை. அந்த நபரை அடையாளம் காண்பது கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது. பிரேசில் சமூக ஊடகங்களில் சூப்பாக்கிச் சூடு குறித்த வீடியோ வெளியான நிலையில், நிலைமையை கண்காணித்து வருவதாகவும், குற்றவாளியை கண்டறிய அதிகாரிகளை அனுப்பி உள்ளதாகவும் எஸ்பிரிட்டோ சாண்டோ மாகாண ஆளுநர் ரெனாடோ தெரிவித்துள்ளார்

    • கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் சீக்கிய இளம்பெண் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார்.
    • தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார், இது திட்டமிட்ட படுகொலை என சந்தேகிக்கின்றனர்.

    ஒன்டாரியோ:

    கனடாவில் ஒன்டாரியோ மாகாணத்தில் மிஸ்சிசாவ்கா நகரில் பவன்பிரீத் கவுர் (21) என்ற சீக்கிய இளம்பெண் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் கவுர் படுகாயம் அடைந்துள்ளார்.

    தகவலறிந்து சம்பவ பகுதிக்கு போலீசார் சென்றனர். பிராம்ப்டன் பகுதியைச் சேர்ந்த அவரை படுகாயங்களுடன் கண்ட போலீசார், உயிர் காக்கும் சிகிச்சைகளை அளித்துள்ளனர். எனினும், அதில் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார், இது திட்டமிட்ட படுகொலை என சந்தேகிக்கின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய வம்சாவளியான 18 வயது கொண்ட மேஹக்பிரீத் சேத்தி என்பவரை உயர்நிலை பள்ளி ஒன்றில் வாகன நிறுத்துமிடத்தில் வைத்து கத்தியால் குத்தி படுகொலை செய்தது நினைவிருக்கலாம்.

    • பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியதாக புகார்.
    • பாகிஸ்தான் எல்லைப் படையினரும் ஆப்கானிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தனர்.

    இஸ்லாமாபாத்:

    ஆப்கானிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையினர், பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி வந்து பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சாமன் மாவட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவ ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆப்கானிஸ்தான் படைகள் பொதுமக்கள் மீது பீரங்கி உள்பட கனரக ஆயுதங்கள் மூலம் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இதில் குறைந்தது ஆறு பாகிஸ்தானியர்கள் உயிரிழந்ததாகவும்,17 பேர் காயமடைந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆப்கான் படைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைப் படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து பலுசிஸ்தானின் மாகாணத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமையின் தீவிரம் குறித்து காபூலில் உள்ள ஆப்கானிஸ்தான் அதிகாரிகளை தொடர்பு கொண்ட பாகிஸ்தான் அதிகாரிகள் எச்சரித்ததுடன், மீண்டும் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி உள்ளனர். 

    • கனடாவின் ஆல்பர்டா மாகாணத்தில் சீக்கிய இளைஞர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
    • விசாரணை நடத்திய போலீசார் இது படுகொலை என சந்தேகிக்கின்றனர்.

    ஒன்டாரியோ:

    கனடாவின் ஆல்பர்டா மாகாணத்தில் சன்ராஜ் சிங் (24) என்ற சீக்கிய இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூடு காயங்களால் இறந்து கிடந்தார். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவரது மரணத்திற்கு கொலையே காரணம் என போலீசார் சந்தேகிக்கின்றனர், கனடாவில் இந்த மாதத்தில் இது போன்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும்.

    டிசம்பர் 3-ம் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பதிலளித்த ​​எட்மண்டன் நகர் காவல் துறையினரால் சன்ராஜ் சிங் கண்டுபிடிக்கப்பட்டார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கடந்த வாரம் இந்திய வம்சாவளியான 21 வயது கொண்ட பவன்பிரீத் கவுர் என்ற சீக்கிய இளம்பெண் சுட்டுக் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.

    ஒரே மாதத்தில் சீக்கியர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடந்துள்ள சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • நாச வேலையில் ஈடுபடுவதற்காக அவன் வந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
    • தக்க சமயத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் அவனை சுட்டுக்கொன்றதால் நாசவேலை சதி முறியடிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு படையினர் இன்று காலை 8 மணி அளவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது பாகிஸ்தானை சேர்ந்த ஒருவன் ஆயுதங்களுடன் இந்திய எல்லையில் ஊடுருவ முயன்றான். இதனை பார்த்த பாதுகாப்பு படையினர் அவனை சுட்டுக்கொன்றனர்.

    அவன் யார்? எதற்காக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றான் என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. நாச வேலையில் ஈடுபடுவதற்காக அவன் வந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தக்க சமயத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் அவனை சுட்டுக்கொன்றதால் நாசவேலை சதி முறியடிக்கப்பட்டது.

    • கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • கொலையில் வினோத், மேலூர் மாரி, விஜயராகவன், மார்க்கெட் சூர்யா ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    மதுரை:

    மதுரை மாட்டுத்தாவணி உலகநேரி கன்னிமாரியம்மன் கோவில் தெரு செங்குந்தர் நகரை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் டோரா பாலா என்கிற பாலமுருகன்(வயது29). இவர் மீது கே.புதூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

    உலகநேரி பகுதியில் ரவுடியாக உலாவந்த பாலமுருகன் கடந்த 22-ந்தேதி இரவு படுகொலை செய்யப்பட்டார். உத்தங்குடி வளர்நகர் பகுதியில் உள்ள முட்புதரில் கிடந்த அவரது உடலை மாட்டுத்தாவணி போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குபதிந்து கொலையாளிகள் யார்? என்று விசாரணை நடத்தினர். அப்போது உலகநேரி அருகே உள்ள அம்பலக்காரன்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் வினோத்(25), ஜெகதீஷ்வரன் உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து ரவுடி பால முருகனை கொன்றது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில் ஜெகதீஷ்வரன் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினா்.

    அப்போது வினோத்தின் தாய் பற்றி தவறாக பேசியதால் பீர்பாட்டிலால் குத்தி பாலமுருகனை கொன்று முட்புதரில் வீசி சென்றதாக தெரிவித்தார். இந்த கொலையில் வினோத், மேலூர் மாரி, விஜயராகவன், மார்க்கெட் சூர்யா ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து தலைமறைவாகிய வினோத் உள்ளிட்ட 4பேரையும் கடந்த 23-ந்தேதி முதல் போலீசார் தேடி வந்தனர். வினோத் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரும் அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்தது போலீசாரின் விசாரணையில் தெரிந்தது.

    இந்நிலையில் வண்டியூர் சோதனைச் சாவடியை அடுத்த பாண்டியன் கோட்டை கல்குவாரியில் ரவுடி வினோத் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாட்டுத்தாவணி இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டர்கள் வெள்ளைச்சாமி, ராஜூ, ஏட்டு சரவணன் மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.

    போலீசாரை பார்த்ததும் வினோத் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் போலீசார் அவரை சுற்றிவளைத்தனர். இதையடுத்து தன்னிடம் இருந்த அரிவாளை காட்டி போலீசாரை மிரட்டியுள்ளார். மேலும் போலீசார் மீது அரிவாளை வீசினார்.

    அதில் போலீஸ் ஏட்டு சரவணன் வெட்டுக்காயமடைந்தார். இதையடுத்து வினோத் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அப்போது இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியால் வினோத்தை சுட்டார்.

    இதில் வினோத்தின் வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனால் அவரால் மேற்கொண்டு ஓட முடியாமல் சுருண்டு விழுந்தார். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த வினோத்தை போலீசார் அங்கிருந்து மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரிவாள் வெட்டு காயமடைந்த போலீஸ் ஏட்டு சரவணனும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தேவாலயத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் கூட்டத்தின் மீது சரமாரியா துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.
    • ஜெஹோவாவின் சாட்சி மையம் என்பது அகிம்சையைப் பிரசங்கிக்கும் ஒரு அமெரிக்க கிறிஸ்தவ இயக்கம்.

    ஜெர்மனியின் ஹாம்பர்க் பகுதியில் உள்ள தேவாலயத்தில் ஜெஹோவாவின் சாட்சி மையத்தின் வாராந்திர பைபிள் படிப்பு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, தேவாலயத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் கூட்டத்தின் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதில், 7 பேர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    இதனால், ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் மிக ஆபத்துக்கான எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தேவாலயத்தில் ஒரு மதக் கூட்டம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால், குடியிருப்பு வாசிகளை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர்.

    ஜெஹோவாவின் சாட்சி மையம் என்பது அகிம்சையைப் பிரசங்கிக்கும் ஒரு அமெரிக்க கிறிஸ்தவ இயக்கம் ஆகும். உயிரிழந்தவர்களில் துப்பாக்கி சூடு நடத்தியவர்களில் ஒருவர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
    • தாதியா மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    மத்தியப் பிரதேசம் மாநிலம் தாதியா மாவட்டத்தில் டாங்கி மற்றும் பால் சமூகத்தினருக்கு இடையே நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது.

    அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதை அடுத்து அங்கு துப்பாக்கிச் சண்டை நடந்தது.

    இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×