search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துப்பாக்கி சூட்டில் பலியான மாணவி ஸ்னோலின் உடல் உறவினர்களிடம் இன்று ஒப்படைப்பு
    X

    துப்பாக்கி சூட்டில் பலியான மாணவி ஸ்னோலின் உடல் உறவினர்களிடம் இன்று ஒப்படைப்பு

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான மாணவி ஸ்னோலின் உடல் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. #Thoothukudifiring

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22-ந்தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பேரணியாக சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

    100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள். பலியானவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தன. இதில் சண்முகம் (38), செல்வசேகர் (42), கார்த்திக் (20), கந்தையா (58), காளியப்பன் (22), ஸ்னோலின் (17), தமிழரசன் (42) ஆகிய 7 பேரின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.

    இந்த நிலையில் 7 பேரின் உடல்களையும் டெல்லி எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மர் அல்லது திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தலைமையில் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் அம்பிகா பிரசாத் பத்ரா தலைமையில், தூத்துக்குடியை சேர்ந்த மருத்துவர்கள் மனோகரன், சுடலைமுத்து ஆகியோர் அடங்கிய குழுவினர், நீதித்துறை நடுவர்கள் முன்னிலையில் உடல்கள் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து முதல் கட்டமாக மறு பிரேத பரிசோதனை முடிந்த சண்முகம், கார்த்திக், செல்வ சேகர் ஆகிய 3 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.தொடர்ந்து காளியப்பன், கந்தையா ஆகியோரின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

    நேற்று தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த தமிழக செய்தி மற்றும் விளம்பரதுறை அமைச்சர் கடம்பூர் ராஜூ துப்பாக்கி சூட்டில் பலியாகி மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட தமிழரசன் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து அவர்கள் தமிழரசனின் உடலை பெற்றுக்கொண்டனர்.


    இதையடுத்து தமிழரசனின் உடல் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. மாணவி ஸ்னோலின் உடலை பெற உறவினர்கள் தொடர்ந்து மறுத்து வந்தனர். அவர்களிடம் மாவட்ட நிர்வாகம் சார்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது மாணவி ஸ்னோலின் உடலை பெற அவர்களது உறவினர்கள் சம்மதித்தனர். இதைத்தொடர்ந்து ஸ்னோலினின் தாய் வனிதாவிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

    பிரேத பரிசோதனை செய்யப்படாத அந்தோணி செல்வராஜ், கிளாஸ்டன், ஜான்சி, மணிராஜ், ரஞ்சித்குமார், ஜெயராமன் ஆகிய 6 பேரின் உடல்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

    ஐகோர்ட்டு உத்தரவுப்படி வருகிற 6-ந்தேதிக்கு பிறகு இவர்களது உடல் பிரேத பரிசோதனை செய்யப் படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Thoothukudifiring

    Next Story
    ×