search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துப்பாக்கி சூடு - தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் 2-வது நாளாக விசாரணை
    X

    துப்பாக்கி சூடு - தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் 2-வது நாளாக விசாரணை

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணைய குழுவினரின் விசாரணை இன்று 2-வது நாளாக நடைபெற்றது. #ThoothukudiShooting

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22-ந் தேதி நடந்த பேரணியின்போது கலவரம் வெடித்தது. இதைக் கட்டுப்படுத்த காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    துப்பாக்கி சூடு குறித்து மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்களான ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சித்தரஞ்சன் மோகன்தாஸ், ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயசந்திரன், சத்தியபிரியா, பாலகிருஷ்ண பிரபு மற்றும் மாநில மனித உரிமை ஆணைய உதவி பதிவாளர் வாசுதேவன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.

    கலவரத்தின்போது சேதப்படுத்தப்பட்ட தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம், தீ வைத்து எரிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கூடம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்பு, இறந்தவர்களின் வீடுகள், திரேஸ்புரம் பகுதி ஆகியவற்றை ஆய்வு செய்தனர். காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரிடமும் விசாரணை நடத்தினர்.

    மேலும் துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிர் இழந்த கார்த்திக், சண்முகம் ஆகியோர்களின் வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து, விருந்தினர் மாளிகையில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.


    பின்னர், நேற்று மாலை அவர்கள் சென்னை புறப்பட்டுச் சென்றனர். பின்னர் மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி ஜெயச்சந்திரன் கூறுகையில், “எங்களது விசாரணை அறிக்கையை ஓரிரு நாளில் மனித உரிமை ஆணைய தலைவரிடம் சமர்ப்பிப்போம்” என்றனர்.

    இதனிடையே துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக தேசிய மனித உரிமை ஆணைய குழு நேற்று மாலை தூத்துக்குடிக்கு வந்தது. இந்த குழுவில் தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினரும், மூத்த போலீஸ் சூப்பிரண்டுமான புபுல் பிரிட்டோ பிரசாத் தலைமையில், உறுப்பினர்கள் ரஜ்வீர்சிங், நிதின்குமார், அருண் தியாகி, லால் பகர் ஆகியோர் இடம் பெற்றிருந்த‌னர்.

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ், நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.


    அப்போது அவர்கள், துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த விவரங்களை கேட்டறிந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் கலவரத்தின்போது ஜன்னல், கதவுகள் கல்வீசி தாக்கி உடைக்கப்பட்டு இருந்ததையும், இருசக்கர வாகனங்கள், கார்கள் தீவைத்து எரிக்கப்பட்டு சேதமடைந்து கிடப்பதையும் பார்வையிட்டனர். தொடர்ந்து அவர்கள் கலவரம் நடந்த ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் தீவைக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட்டனர்.

    தேசிய குழுவினரின் விசாரணை இன்று 2-வது நாளாக நடைபெற்றது. இன்று துப்பாக்கி சூடு தொடர்பான‌ பல்வேறு வீடியோ பதிவு காட்சி பதிவுகளையும் பார்வையிட்டனர். பின்பு பேரணி புறப்பட்டு தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் மற்றும் மடத்தூர் பகுதிகளையும் அவர்கள் பார்வையிட்டனர். இந்த குழுவினர் வருகிற 7-ந் தேதி வரை பல்வேறு தரப்பினரையும் சந்தித்து விசாரணை நடத்த உள்ளனர். துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினரிடமும், காயமடைந்தவர்களிடமும் அவர்கள் விசாரணை நடத்த உள்ளனர்.

    இதனிடையே துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நாளை(திங்கட்கிழமை) தூத்துக்குடிக்கு வருகிறார். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக தூத்துக்குடி பழைய விருந்தினர் மாளிகையில் முகாம் அலுவலகத்திலும் விசாரணை ஆணையம் செயல்பட இருக்கிறது.

    இங்கு நீதிபதி அருணா ஜெகதீசனிடம் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அவரவருக்கு தெரிந்த தகவல்களை சத்திய பிரமான உறுதிமொழி பத்திரவடிவில் விசாரணை ஆணையத்தில் தலைமை அலுவலகம், முகாம் அலுவலகத்தில் நேரிலோ, தபால் மூலமோ வருகிற 22-ந் தேதி வரை வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. #ThoothukudiShooting

    Next Story
    ×