search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tuticorin firing"

    • தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.
    • இந்த அறிக்கை மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    சென்னை:

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையின்மீது, தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    தூத்துக்குடியில் கடந்த ஆட்சிக் காலத்தில் 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடந்த போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, அந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது. அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன.

    நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையின்மீது, தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தவறான தகவல்களை சில ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசால் நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின்மீது, பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன:

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்தினர்களுக்கு ஏற்கனவே வழங்கிய நிதியோடு, கூடுதலாக, தலா ரூ. 5 லட்சம் வீதம், 65 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டது.

    காவல்துறையினரால் போராட்டத்தில் ஈடுபட்டு, கைதுசெய்யப்பட்ட 93 நபர்களுக்கு ரூ.1 லட்சம் வீதம் நிவாரணத் தொகையாக ரூ. 93 லட்சம் வழங்கப்பட்டது. மேற்காணும் நிகழ்வு தொடர்பாக போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட வழக்குகளைத் தவிர 38 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

    இப்போராட்டத்தில் கலந்துகொண்ட பரத்ராஜ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இறந்ததால், அவரின் தாயாருக்கு நிவாரணத் தொகையாக ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டு, அவர்கள்மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பின்னர் திரும்பப்பெறப்பட்ட 38 வழக்குகளில், சம்பந்தப்பட்ட நபர்களின் உயர் கல்விக்காகவும், வேலை வாய்ப்பிற்காகவும் "தடையில்லாச் சான்றிதழ்" வழங்குவதற்கு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

    ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் 17 காவல்துறை அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சைலேஷ்குமார் யாதவ், இ.கா.ப., கபில்குமார் சி. சரத்கர், இ.கா.ப. ஆகிய இந்திய காவல்பணி அலுவலர்கள், மகேந்திரன், லிங்கத்திருமாறன் ஆகிய காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 2 ஆய்வாளர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இதுதவிர, ஒரு காவல்துறை ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் ஒருவர் மீது குற்ற வழக்கு பதிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெருந்தண்டனை குற்றப்பிரிவின் கீழ், ஒரு உதவி ஆய்வாளர், 2 இரண்டாம் நிலைக் காவலர், ஒரு முதல் நிலைக் காவலர் மற்றும் ஒரு காவலர் ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 முதல் நிலைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கையின் பரிந்துரையின் அடிப்படையில், அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மீதும் துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கை நியாயமாகவும் பாரபட்சமின்றியும் விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. #tuticorinfiring #cbi #supremecourt
    புதுடெல்லி:

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது 13 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முதலில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில் பின்னர் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஐகோர்ட் மதுரை கிளை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டதையடுத்து, சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று ஸ்டெர்லைட் தொடர்பான வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்  13 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கை சி.பி.ஐ. நியாயமாகவும் பாரபட்சமின்றியும் விசாரணை நடத்த அறிவுறுத்தியது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பாக சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தலாம், விசாரணை தன்னிச்சையானதாக இருக்க வேண்டும் என கூறி உள்ளது. #tuticorinfiring #cbi #supremecourt
    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இருந்த 277 ஊழியர்களை பத்திரமாக மீட்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்று சென்னை ஐகோர்ட்டில் டி.ஜி.பி. விளக்கம் அளித்துள்ளார். #SterileProtest #ThoothukudFiring
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது கடந்த மே 22 மற்றும் 23-ந் தேதிகளில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

    இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில், ஜிம்ராஜ் மில்டன், பார்வேந்தன், பாவேந்தன், நடிகர் சீமான், வக்கீல் சூர்யபிரகாசம், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    இந்த வழக்குகள் எல்லாம் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில், கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ‘இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது?’ என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    இந்த நிலையில், இந்த வழக்குகள் எல்லாம் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணைக்கு எடுத்தவுடன், ‘துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் உத்தரவிட கூடாது? என்று நீதிபதிகள் மீண்டும் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த அரசு பிளடர் டி.என்.ராஜகோபாலன், ‘இதுதொடர்பாக விரிவான பதில்மனுவையும், வீடியோ ஆதாரங்களையும் தாக்கல் செய்கிறேன். தற்போது சி.பி.சி.ஐ.டி., விசாரணை சரியான கோணத்தில் நடந்து வருகிறது. அதனால் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை’ என்று வாதிட்டார்.

    இதையடுத்து, ‘துப்பாக்கிச் சூடு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் சங்கர சுப்பு, ‘தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளையில் ஏற்கனவே 12 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அந்த வழக்குகளை எல்லாம் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றி, ஒரே இடத்தில் மொத்தமாக விசாரிக்க வேண்டும். அல்லது சென்னை ஐகோர்ட்டில் உள்ள வழக்குகளை மதுரை கிளைக்கு மாற்ற வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு அரசு பிளடர் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘வக்கீல்கள் சிலர் மதுரை கிளையில் உள்ள வழக்குகளை அங்கே தான் விசாரிக்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, சென்னை ஐகோர்ட்டில் உள்ள வழக்குகள் இங்கு விசாரிக்கப்படும். இந்த வழக்குகள் மதுரைக்கு மாற்றப்படாது. அதேபோல, அங்குள்ள வழக்குகளும் சென்னைக்கு மாற்றப்படாது’ என்று தெளிவுபட கூறினார்கள்.

    இதையடுத்து வக்கீல் சங்கரசுப்பு, ‘தூத்துக்குடியில் அதிகாலையில் ஒவ்வொரு வீடாக போலீசார் சென்று அங்குள்ள இளைஞர்களை பிடித்து சென்று அடித்து துன்புறுத்துகின்றனர். தூத்துக்குடி கலவரம் தொடர்பாக ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்கின்றனர். இது தவிர, உள்ளூர் போலீசார், ஒரு சைக்கிள் சேதப்படுத்தப்பட்டது. ஒரு மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டது என்று ஒவ்வொரு சேதப் பொருட்களுக்கும் ஒரு வழக்கு என்று பதிவு செய்து, பலரை கைது செய்கின்றனர். ஒரு இளைஞர் 70 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாரின் இந்த செயலுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறினார்.

    இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், ‘வழக்குகளுக்கோ, வழக்கு விசாரணைக்கோ தடை எதுவும் விதிக்க முடியாது. வேண்டும் என்றால், தன் மீது பதிவான வழக்குகளை ரத்து செய்யவேண்டும் என்று ஐகோர்ட்டில் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்குகளை ரத்து செய்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம். அதேநேரம் போலீசார் மட்டுமல்ல, அத்துமீறலில் யார் ஈடுபட்டாலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறி இந்த வழக்கு விசாரணையை வருகிற 9-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    முன்னதாக, நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் தொடர்ந்த வழக்கு, தமிழக டி.ஜி.பி. சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    மே 22-ந் தேதி பனிமயமாதா கோவில் முன்பு திரண்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கூட்டத்தை களைக்க எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.

    ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள குடியிருப்புக்கு சிலர் தீ வைத்தனர். இதனால் 150 குடும்பத்தினரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது.

    அதேபோல மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்த 277 ஊழியர்களை பத்திரமாக உயிருடன் மீட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏராளமான தனியார் மற்றும் அரசு சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது.

    தூத்துக்குடி அப்போதைய போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரனுக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

    இதுதொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். எனவே இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட தேவையில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காரணமான கலெக்டர், அதிகாரிகளை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். #sitaramyechury #thoothukudiincident

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேர் குடும்பங்களை சந்தித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து நலம் விசாரித்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உரிய விதிகளை பின் பற்றாமல் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற போது மாவட்ட கலெக்டர் அங்கு இல்லை. அப்படியென்றால் துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி கொடுத்தது யார்? ஸ்டெர்லைட் ஆலையால் நிலம், நீர், பெருமளவு மாசு பட்டு உள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு காரணமான கலெக்டர், அதிகாரிகளை சஸ்பெண்டு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #sitaramyechury #thoothukudiincident

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் அவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து நடவடிக்க எடுக்க வேண்டும் என இல.கணேசன் கூறினார். #ilaganesan #tuticorinfiring

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் ராஜாக்க மங்கலத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் எம்.பி. கலந்து கொண்டார். அதன்பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் தான் அந்த போராட்டம் துப்பாக்கி சூட்டில் முடிவடைந்தது. அந்த போராட்டத்தில் கலந்துகொண்ட சமூகவிரோதிகள் யார்? என்பதையும், அவர்களை தூண்டிவிட்டவர்களையும் கண்டுபிடிக்க வேண்டும்.

    சமூகவிரோதிகளை தூண்டி விட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது அனுதாபம் காட்ட வேண்டும். மேலும் இந்த போராட்டத்துக்கு தொடர்பு இல்லாதவர்களும் இதில் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உரிய இழப்பீடும், மறுவாழ்வும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் பாரதீய ஜனதா வெற்றி பெறுவதற்கான திட்டம் பற்றி தேசிய தலைவர் அமித்ஷா ஆலோசனைகள் வழங்கி உள்ளார். அவரது ஆலோசனைப்படி அதற்கான திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது.

    தற்போது அது தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள பாரதீய ஜனதா கட்சியின் 42 அமைப்பு மாவட்டங்களில் தற்போது மாவட்ட செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு தேர்தலை நோக்கிய பயணத்திட்டம் பற்றி விளக்கப்பட்டு வருகிறது.

    மத்திய அரசின் சாதனை திட்டங்களை தமிழக மக்களிடம் பாரதீய ஜனதா கொண்டு செல்லும். அதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிக்கு வியூகம் வகுத்து செயல்படமுடியும். விலை மதிக்கமுடியாத ராஜராஜ சோழன் சிலை மீட்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகளை பாராட்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #ilaganesan #tuticorinfiring

    தூத்துக்குடி கலவரத்தில் ஈடுபட்டது சமூகவிரோதிகள் என்று கருத்து தெரிவித்த ரஜினிக்கு கண்டனம் தெரிவித்து அவரது உருவபடத்தை எரித்த பெண் உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    நாகர்கோவில்:

    தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்தவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் அவர் கூறுகையில் சமூகவிரோத சக்திகளே தூத்துக்குடி கலவரத்திற்கு முக்கிய காரணம் என்றும், தொடர்ந்து போராட்டம் நடத்தினால் தமிழகம் சுடு காடாகிவிடும் என்றும் கூறினார். அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

    இதேபோல் குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு (விடுதலை) கட்சி சார்பிலும் நடிகர் ரஜினிகாந்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் திடீரென்று நடிகர் ரஜினிகாந்தின் உருவபடத்திற்கு தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தீயை அணைத்தனர்.

    மேலும் வடசேரி போலீசார் நடிகர் ரஜினிகாந்தின் உருவபடத்தை எரித்த மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து, மணவை கண்ணன், சுசீலா உள்பட 9 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    தூத்துக்குடி கலவரத்துக்கு சமூக விரோதிகள் தான் காரணம் என்று ரஜினி கூறியுள்ளார். அவர் யாரை சமூக விரோதி என்று கூறினார் என்பதை அவர் விளக்க வேண்டும் என திருமாவளவன் கேட்டுள்ளார்.

    பீளமேடு:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது-

    தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறி பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி வழங்கி உள்ளார்.

    அவரது மனித நேயம் பாராட்டத்தக்கது. தூத்துக்குடி கலவரத்துக்கு சமூக விரோதிகளே காரணம் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்ட மன்றத்தில் கூறினார்.

    இதே கருத்தை தான் ரஜினிகாந்தும் எதிரொலித்துள்ளார். பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., மதவாத சக்திகள் இதே கருத்தை தான் சொல்கின்றன. அதே கருத்தை ரஜினியும் கூறி உள்ளார். அவரது கருத்து வேதனை அளிக்கிறது.

    திரைப்படத்தில் ரஜினியை இயக்குவது போல் அரசியலிலும் ரஜினியை யாராவது இயக்குகிறார்களா? என தோன்றுகிறது.

    ரஜினி யாரை சமூக விரோதிகள் என கூறினார் என அவர் முதலில் விளக்க வேண்டும். 13 பேர் உயிர் இழப்புக்கு காரணமான சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும். ஏன் கைது செய்யவில்லை?

    போராடும் மக்களை சமூக விரோதிகள் என கொச்சைப்படுத்துவது கண்டனத்துக்கு உரியது. தமிழ்நாடு சுடுகாடு போல் ஆகும் என ரஜினி கூறி உள்ளார்.

    அவரது திரைப்படத்தில் போராடுவது போல் காட்சி வைத்து கொண்டு நிஜ வாழ்க்கையில் போராட கூடாது என்பது மாறுபட்ட கருத்து ஆகும். ரஜினியின் குரல் கார்ப்பரேட் குரலாக உள்ளது.

    துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை சட்டப்பூர்வமாக்க வேண்டும். இதற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும்.

    சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்த போது கலவரம் ஏற்பட்டு தலித்துகள் 2 பேர் பலியாகி உள்ளனர். 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். தமிழ் நாட்டில் மாநில உரிமைக்காக போராடும் நிலையில் அதனை பற்றி கவலைப்படாமல் தலித் மீது தொடர் தாக்குதல் நடத்தி உள்ளனர். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தி.மு.க.வினர் போட்டி சட்ட மன்ற கூட்டம் நடத்தியது போராட்டத்தின் ஒரு வடிவம். பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவது மாநில அரசின் கையில் இல்லை. மத்திய அரசின் கையில் தான் உள்ளது. இதில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன் மத்திய, மாநில அரசுக்கு எதிராக பல போராட்டங்கள் நடத்தி வருகிறார். அவரை ஒடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் மீது பல வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது சுசி கலையரசன், சித்தார்த், இலக்கியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து வருகிற 29-ந் தேதி வீரபாண்டியன்பட்டினத்தில் இருந்து திருச்செந்தூர் வரை மவுன ஊர்வலம் நடத்தப்பட உள்ளது என மீனவர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

    தூத்துக்குடி, மே. 27-

    தூத்துக்குடி மாவட்ட அனைத்து பரதர் மீனவர் கூட்டமைப்பு கூட்டம் தூத்துக்குடி திரேஸ்புரம் தோமையார் ஆலய வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டமைப்பு தலைவர் டெப்பா சந்திரன் தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். அமைதியாக போராடிய அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலையும், துப்பாக்கி சூட்டையும் வன்மையாக கண்டிக்கிறோம். துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மற்றும் அதிகாரிகளை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும்.கடந்த 22-ந் தேதி நடந்த கலவரத்தின்போது போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும். கலவரத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நஷ்டஈடும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தரமான அரசு பணியும் வழங்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு உரிய நிவாரணமும், மேல் சிகிச்சையும் அரசு சார்பில் வழங்க வேண்டும்.

    தூத்துக்குடி மாநகரத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள போலீசாரை உடனே திரும்ப பெற வேண்டும். தூத்துக்குடி நகர் பகுதியில் இரவு நேரத்தில் மின்சாரத்தை துண்டித்து விட்டு, வீடு புகுந்து அத்துமீறி அப்பாவி இளைஞர்களை போலீசார் கைது செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பல்வேறு மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து கூட்டமைப்பு தலைவர் டெப்பா சந்திரன் கூறுகையில், ‘துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து வருகிற 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வீரபாண்டியன்பட்டினத்தில் இருந்து திருச்செந்தூர் வரை மவுன ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளோம்’ என்றார். *** தூத்துக்குடி, மே. 27-

    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் கூட்டப்புளியைச் சேர்ந்த பாதிரியார் லியோ ஜெயசீலன் (வயது 70) என்பவர் காயம் அடைந்தார். அவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அவர் கூறியதாவது:-

    நான் கடந்த 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்களோடு கலந்து கொண்டு அந்த ஆலைக்கு எதிராக மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு புறப்பட்டேன். மில்லர்புரம் பகுதியில் எனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு மக்களோடு நடந்து சென்றேன்.

    கலெக்டர் அலுவலகத்தில் சென்றபோது போலீசார் தடியடி நடத்துவார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தி விட்டனர். இது மிகவும் துயரமானது. நான் துப்பாக்கியால் சுடப்பட்ட போது, மக்கள் நன்மைக்காக போராடுகிறோம். இப்படி துப்பாக்கியால் சுடுகிறார்களே! என்று வேதனை அடைந்தேன். காயம் அடைந்த என்னை பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். இந்த ஸ்டெர்லைட் ஆலை மக்களை விட்டு அகன்று செல்ல வேண்டும். ஆலை மூடப்பட வேண்டும். இந்த அரசு தங்களின் பதவிகளை தக்க வைப்பதற்காக இதுபோன்ற பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. அரசு ஆதரவு இருப்பதால், இந்த ஆலையை நடத்தியே தீருவேன் என்று ஆலை உரிமையாளர்கள் கூறுகிறார்கள். விவசாயத்தை அழித்து, 13 பேர் சாவுக்கு காரணமான இந்த ஆலையை நாங்கள் நடத்த விடமாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார். * * * ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் பாதிரியார் லியோ ஜெயசீலன்.

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் வெளி மாவட்ட போலீசாரை குறைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம் என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். #tuticorinfiring #sandeepnanduri

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மற்ற பகுதிகளில் 95 சதவீதம் இயல்பு நிலை திரும்பியுள்ளது. மக்கள் அன்றாட பணிக்கு திரும்பியுள்ளனர். அத்யாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    வெளி மாவட்ட போலீசாரை குறைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். தற்போது 144 தடை உத்தரவு தேவை இல்லை என்பதால் நீட்டிக்கப்படவில்லை. சூழலை கண்காணித்து வருகிறோம்.

    தேவைப்பட்டால் மீண்டும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேரில் 7 பேரின் உடல் பரிசோதனை முடிவடைந்துள்ளது. எஞ்சிய 6 பேரின் பிரேத பரிசோதனை நடக்க ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் கூறியுள்ளார்.

    இதையடுத்து தண்ணீர் மற்றும் மின்சார வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இவை இல்லாமல் ஆலை இயங்க முடியாது. எனவே பொதுமக்கள் அரசின் உறுதியை ஏற்று முழுவதுமாக இயல்பு நிலை திரும்ப ஒத்துழைக்க வேண்டும்.

    தற்போதைய சூழ்நிலையை அரசு கண்காணித்து வருகிறது. இணையதள சேவை வழங்குவது குறித்து அரசு முடிவெடுக்கும். துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #tuticorinfiring #sandeepnanduri 

    தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கோவை:

    தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரியும் கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தக்கு மாநகர் மாவட்ட தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் எஸ். கவிதா, சரவணகுமார் மற்றும் வீனஸ்மணி, கே.பி.எஸ். மணி, மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கலந்து கொண்டவர்கள் துப்பாக்கி சூட்டை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரியும், மத்திய, மாநில அரசை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் உமாபதி, துளசிராஜ், குருசாமி, சவுந்திரகுமார், இஸ்மத், கருணாகரன், குறிச்சி வசந்த், கு.பே. துரை, வக்கீல் கருப்பசாமி, கோவை போஸ், லாலிரோடு செல்வம், ராமநாகராஜ், ஆனந்தன், உமாமகேஸ்வரி, திலகவதி, ராமசாமி, காட்டூர் சோமு, எம்.எஸ். பார்த்தீபன், ஜனார்த்தனன், இஸ்மாயில், ரகுமத்துல்லா உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து செய்துங்கநல்லூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து செய்துங்கநல்லூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் அப்பாக்குட்டி தலைமை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் குணேஷ்வரி முன்னிலை வகித்தார்.

    இதில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியான மாணவி ஸ்னோலின் உட்பட 11 பேருக்கு அஞ்சலி செலுத்தியும், மத்திய- மாநில அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா பகுதி தலைவர் அப்துல் காதர், மாவட்ட தலைவர் அப்பாஸ், மார்க்சிஸ்ட் கம்னியூஸ்டு ஒன்றிய குழு உறுப்பினர் மணி, கொம்பையா, ஞானமுத்து, சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
    அரியலூர்:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள்சார் பில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி  தமிழகம்  முழுவதும் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், திருமானூர், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர், உடையார்பாளையம், மீன் சுருட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 4500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் 80 சதவீதத்திற்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. டீக்கடைகள், மெடிக்கல் கடைகள், பெட்டிக்கடைகள், பால் பூத்துகள் ஆகியவை மட்டும் திறந்து இருந்தன. ஆட்டோக்கள், பஸ்கள், வாடகை கார்கள் வழக்கம் போல் ஓடின.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி, கறம்பக்குடி,  கந்தர்வக்கோட்டை, விராலிமலை ஆகிய ஊர்களில் குறைந்த அளவிலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    புதுக்கோட்டையில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ்  நிலையம், அண்ணா சிலை, பிருந்தாவனம், மேல ராஜ வீதி, கீழராஜ வீதி, டி.வி.எஸ்., திலகர் திடல் ஆகிய பகுதிகளில்  உள்ள பெரிய கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சில சிறிய கடைகள்  மட்டும்  திறந்து உள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடியது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், நான்கு ரோடு பகுதி, வடக்கு மாதவி சாலை, பெரம்பலூர் மதர்ஷா சாலை, எளம்பலூர் சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் பல கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் ஓடியது. 

    கரூர் மாவட்டத்தில் கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, அரவக்குறிச்சி ஆகிய ஊர்களில் குறைந்த அளவிலான  கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தவித பாதிப்பும் இல்லை. கரூரில் ஜவகர் பஜார், கோவை சாலை, மேற்கு பிரதட்சணம் சாலை, காமாட்சியம்மன் கோவில் தெரு, செங்குந்தபுரம், பழைய திண்டுக்கல் சாலை ஆகிய இடங்களில்  செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள், டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்கள் இன்று வழக்கம்போல் திறந்திருந்தன. அனைத்து பஸ்கள், ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. 

    இந்த  முழுஅடைப்பு போராட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், திராவிடர் கழகம், ம.தி.மு.க., மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய  யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்றன.
    ×