search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் நாளை நடைபெறும் முழு அடைப்புக்கு காங்கிரஸ் ஆதரவு: நமச்சிவாயம் அறிவிப்பு
    X

    புதுவையில் நாளை நடைபெறும் முழு அடைப்புக்கு காங்கிரஸ் ஆதரவு: நமச்சிவாயம் அறிவிப்பு

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நாளை புதுவையில் நடைபெறும் முழு அடைப்புக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பதாக நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நீர் வளத்தையும், நில வளத்தையும் சூறையாடும் ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று தூத்துக்குடி பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

    கடந்த 100 நாட்களாக ஒட்டுமொத்த மக்களும் மாசு ஏற்படுத்தி உயிர் பலி வாங்கி கொண்டிருக்கும் அபாயமிக்க ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இவர்களின் நியாயமான போராட்டத்திற்கு தீர்வு காணாமல் தமிழக அரசும், மத்திய அரசும் மெத்தன போக்கோடு செயல்பட்டு போராட்டத்தை நீர்த்துப்போக செய்யும் வேளையில் ஈடுபட்டு உள்ளது.

    இதன் விளைவாக ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வண்ணம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடும் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாமல் காவல்துறை மூலமாக கண் மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

    மிருக வெறிபிடித்து 13 அப்பாவி மக்களை கொலை வெறியோடு கொன்று குவித்துள்ளனர். இதுபோன்ற காட்டு மிராண்டித்தனமான மாபாதக செயலை புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது.

    உண்மையாக போராடும் மக்கள் சக்தி ஒன்று திரண்டால் மக்கள் விரோத ஆட்சிகள் தூக்கி எறியப்படும் என்பதை தமிழகம் மற்றும் மத்திய அரசு நினைவில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    மேலும் நாளை புதுவையில் நடைபெறும் முழு அடைப்புக்கு ஆதரவு அளிப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.

    Next Story
    ×