search icon
என் மலர்tooltip icon

    தென்காசி

    • நகை, ரூ.2,500 மற்றும் செல்போன் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் புதுத் தெருவை சேர்ந்தவர் காஜா மைதீன்.

    கடந்த வாரம் 13-ந்தேதி இரவு வீட்டை பூட்டிவிட்டு வெளியே மின்மீட்டர் பெட்டிக்குள் சாவியை வைத்துவிட்டு கணவன்-மனைவி 2 பேரும் பள்ளிவாசலுக்கு இரவு தொழுகைக்கு சென்றார்.

    தொழுகை முடிந்த பிறகு இரவு வீட்டுக்கு வந்த போது, 10 பவுன் நகை, ரூ.2,500 மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான செல்போன் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

    இதுதொடர்பாக புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி, சுதாகர் உள்ளிட்ட தனிப்படை போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில் திருட்டில் ஈடுபட்டது கடையநல்லூர் அருகே திரிகூடபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த தீன் முகமது பாதுஷா (வயது 20) என்பது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அந்த வாலிபரிடம் இருந்த அனை த்து பொருள்களையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

    • கணேஷ் குமாரும், முத்துக்குமாரும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
    • விபத்து குறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியங்குடி:

    விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் குமார் (வயது 42). இவர் வியாபார நிமித்தமாக தனக்கு சொந்தமான மினி லோடு வேனில் கேரள மாநிலத்திற்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். வேனை தளவாய்புரம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார்(32) என்பவர் ஓட்டி வந்தார்.

    லோடு வேன் இன்று அதிகாலையில் புளியங்குடி எல்.ஐ.சி. அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே சங்கரன்கோவில் பகுதியில் இருந்து கனிமவளம் ஏற்றிக்கொண்டு கனரக லாரி ஒன்று வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கனிமவள லாரியும், லோடு வேனும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.

    இந்த பயங்கர விபத்தில் லோடு வேனின் முன்பக்க கேபின் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் கணேஷ் குமாரும், முத்துக்குமாரும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    தகவல் அறிந்த புளியங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியிருந்த 2 பேரையும் மீட்டனர். ஆனால் எனினும் பலத்த காயமடைந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். கணேஷ்குமார் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    அவரை போலீசார் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெல்லையில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
    • காரை ஓட்டிவந்த விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வேலாயுதபுரத்தை சேர்ந்த ஆறுமுகச்சாமி என்பவரிடம் விசாரித்தனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாபு தலைமையிலான குழுவினர் இன்று காலையில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அவர்கள் நெல்லை-சங்கரன்கோவில் சாலையில் சின்னகோவிலான்குளம் அருகே வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது, நெல்லையில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 500 பணம் இருந்தது.

    இதுகுறித்து காரை ஓட்டிவந்த விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வேலாயுதபுரத்தை சேர்ந்த ஆறுமுகச்சாமி என்பவரிடம் விசாரித்தனர். ஆனால் அவரிடம் முறையாக ஆவணம் எதுவும் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து உதவி தேர்தல் அதிகாரியிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

    • கடந்த முறை பாராளுமன்ற தேர்தலின்போது இந்த தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் 3-வது இடம் பிடித்தார்.
    • தென்காசி தனி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கலாமா என கட்சி தலைமை யோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜனதா ஆகிய பிரதான கட்சிகள் தனித்தனியாக கூட்டணி அமைத்து வருகின்றன.

    இதில் பா.ஜனதா தனது தலைமையில் 3-வது கூட்டணி அமைத்து இந்த முறை தமிழகத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்ற களப்பணியை தீவிரமாக செய்து வருகிறது. இந்த தேர்தலில் பா.ஜனதாவின் கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளது. அவர்களுடன் தொகுதி பங்கீடுக்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.


    இதில் த.ம.மு.க. நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் தனது கட்சிக்கு 2 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா எம்.பி. பதவியும் வழங்கவேண்டும் என்று கேட்டதாகவும், அவ்வாறு கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை எனில் ஒரு தொகுதியை கண்டிப்பாக கேட்டு பெற திட்டமிட்டி ருப்பதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு ஒரு சீட்டுக்கு பா.ஜனதா சம்மதம் தெரிவிக்கும்பட்சத்தில் தென்மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் த.ம.மு.க. போட்டியிடும். அந்த சீட் தென்காசி தொகுதியாக இருக்கும் என்று அக்கட்சி நிர்வாகிகள் பலரும் பேசி வருகின்றனர்.

    தென்காசி தொகுதி ஜான்பாண்டியனின் கட்சிக்கு ஒதுக்கப்படும்போது, அவர் தனது மகளான வினோலின் நிவேதாவை களமிறக்க வாய்ப்பு இருப்பதாக பரவலாக பேச்சுகள் அடிபடுகின்றன. ஏற்கனவே அவர் சில மாதங்களாக தென்காசியை மையமாக கொண்டு பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார் என்பதால் அந்த தொகுதிக்கு அவர் அதிகமாக முனைப்பு காட்டுவதாகவே தெரிகிறது.


    இதுஒருபுறம் இருக்க பா.ஜனதாவுக்கு ஆதரவாக பேசி வந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, திடீரென அ.தி.மு.க. பக்கம் தாவி உள்ளார். அவர் பா.ஜனதா கூட்டணியில் சேர்ந்து தென்காசி தனி தொகுதியை கேட்டு பெற்று போட்டியிட திட்டமிட்டிருந்த நிலையில் அந்த தொகுதி தனக்கு கிடைக்காது என்பதை தெரிந்து கொண்டுள்ளார். இதனால் அந்த தொகுதியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் அவர் சேர்ந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அந்த கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிடுவதற்கு முனைப்பு காட்டுவதாகவும் தெரிகிறது.

    அதே நேரத்தில் தென்காசி தொகுதியில் இந்த முறை பா.ஜனதா வேட்பாளரே நேரடியாக தாமரை சின்னத்தில் களம் காணவேண்டும் என்பது அக்கட்சி தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த மாவட்டத்தை குறிவைத்து கடந்த 2 ஆண்டுகளாக அக்கட்சியின் ஸ்டார்ட் அப் பிரிவு மாநில நிர்வாகி விஸ்வை ஆனந்தன் வேலை செய்து வருகிறார். அவர் போட்டியிடும்பட்சத்தில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என அவர்கள் நம்புகின்றனர்.

    கடந்த 1998-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சுமார் ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் தோற்றது என்பதால், கூட்டணிகளுக்கு இந்த தொகுதியை ஒதுக்க வேண்டாம் எனவும் அக்கட்சியினர் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.


    கடந்த முறை பாராளுமன்ற தேர்தலின்போது இந்த தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் 3-வது இடம் பிடித்தார். தற்போது பா.ஜனதா கூட்டணியில் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் இணைந்துள்ளதால் அக்கட்சியின் நிர்வாகிகளும் தென்காசி தொகுதியை பெற விரும்புகிறார்கள் என்று பேசப்படுகிறது.

    இந்த தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக தி.மு.க.வை சேர்ந்தவர் இருந்து வருகிறார். இதனால் இந்த முறையும் தி.மு.க.வுக்கே தென்காசியை ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியினர் தலைமையிடம் கேட்டு வருகின்றனர். தொண்டர்களின் கோரிக்கையை தி.மு.க. நிறைவேற்றும் என்று அவர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

    அதேநேரத்தில் இந்த தொகுதியில் இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியும் அதிக முறை வெற்றி பெற்றுள்ளதால், அவர்களும் தி.மு.க. கூட்டணியில் தென்காசியை ஒதுக்க கேட்டு வருகின்றனர்.

    ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை வழங்கப்பட்ட தொகுதிகளில் சிலவற்றில் தி.மு.க. நேரடியாக களம் காண திட்டமிட்டுள்ளதால், அவர்களுக்கு போட்டியிடுவதற்கான தொகுதி குறையாமல் இருக்க தென்காசி தனி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கலாமா என கட்சி தலைமை யோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    • ஆத்திரம் அடைந்த சிறுவன் சுபாவேணியை வெட்டிக்கொலை செய்தான்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள செட்டிக்குறிச்சியை சேர்ந்தவர் மாரியப்பன். கூலி தொழிலாளி. இவருக்கு 3 மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது மூத்த மகள் சுபா வேணி(வயது 21). இவருக்கு அய்யனார்குளத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவருடன் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் சுபா வேணிக்கும், அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுபா வேணி கணவரை பிரிந்து கடந்த 6 மாதமாக தாய் வீடான செட்டிக்குறிச்சியில் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

    கணவரை பிரிந்து அக்காள் தங்கள் வீட்டில் வசித்து வருவது, சுபாவேணி அடிக்கடி செல்போனில் நீண்ட நேரம் பேசுவது அவரது சகோதரனான 16 வயது சிறுவனுக்கு பிடிக்கவில்லை.

    இதுகுறித்து அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், தோட்டத்தில் வைத்து அவர்களுக்குள் தகராறு முற்றியது.

    இதில் ஆத்திரம் அடைந்த சிறுவன் சுபாவேணியை வெட்டிக்கொலை செய்தான். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.

    • தனக்கு சொந்தமான தோட்டத்தில் தென்னை, மா உள்ளிட்ட மரங்களை அதிகளவில் வளர்த்து வருகிறார்.
    • தென்னங் கன்றை ஒரு கூடையில் எடுத்து திப்பணம்பட்டியில் இயங்கி வரும் அரசு பள்ளி மாணவர்களிடையே நேரில் சென்று காண்பித்து வருகிறார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்-மீனாட்சிபுரம் சி எஸ்.ஐ.சர்ச் தெருவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் தானியேல்(வயது 80). இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் தென்னை, மா உள்ளிட்ட மரங்களை அதிகளவில் வளர்த்து வருகிறார். தனது தோட்டத்தில் பதியம் வைத்து புதிதாக வளர்க்கப்படும் மரக்கன்று களை தனது காலி விளை நிலங்களில் ஊன்றி வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பதியம் வைத்து தென்னங்கன்றுகள் வளர்த்தபோது அதில் ஒரு தேங்காயில் இருந்து இரு தென்னங்கன்றுகள் முளைவிட்டு வந்ததை கண்டு ஆச்சரியமடைந்தார். ஏனெனில் ஒரு தேங்காயில் இருந்து ஒரு தென்னை கன்று தான் எப்பொழுதும் முளைக்கும். ஆனால் இதில் 2 தென்னங்கன்றுகள் முளைத் துள்ளது. தற்பொழுது ஓய்வு பெற்ற ஆசிரியர் தானியேல் வளர்ந்த அந்த தென்னங் கன்றை ஒரு கூடையில் எடுத்து திப்பணம்பட்டியில் இயங்கி வரும் அரசு பள்ளி மாணவர்களிடையே நேரில் சென்று காண்பித்து வருகிறார்.

    மேலும் பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் அரசு பள்ளி மாணவர்களுக்கும் அதிசயமாக வளர்ந்துள்ள தென்னங்கன்றுகளை தொடர்ந்து காண்பிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

    தானியேல் தான் செல்லும் இடங்களுக்கு கையிலேயே அந்த தென்னங்கன்றை எடுத்துச் செல்வதால் பொதுமக்களும் அதனை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

    • கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக நீர் நிலைகளிலும் தண்ணீரின் அளவு கணிசமாக குறைய தொடங்கி உள்ளது.
    • அனைத்து அருவிகளும் வறண்டு காணப்படுவதால் சுற்றுலா பயணிகளின் வரத்துகள் இன்றி அருவி கரையானது வெறிச்சோடி காணப்படுகிறது.

    தென்காசி:

    தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

    இதனால் பொதுமக்கள் பலரும் குளிப்பதற்காக நீர் நிலைகளை அதிகம் நாடி வருகின்றனர். இந்நிலையில் கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக நீர் நிலைகளிலும் தண்ணீரின் அளவு கணிசமாக குறைய தொடங்கி உள்ளது.

    இந்நிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தளமான குற்றால அருவிகளும் தற்போது சுட்டெரிக்கும் வெயிலால் தண்ணீர் வரத்து குறைந்து அருவிகள் வறண்டு காணப்படுகின்றன.

    இதேபோல் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளும் வறண்டு காணப்படுவதால் சுற்றுலா பயணிகளின் வரத்துகள் இன்றி அருவி கரையானது வெறிச்சோடி காணப்படுகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கும் பொழுது குற்றால சீசன் தொடங்கும்.

    • மீட்டர் பெட்டியில் வைத்து சென்ற சாவியை கொண்டு வீட்டை திறந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
    • சி.சி.டி.வி. கேமரா காட்சிப் பதிவுகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் புது தெருவை சேர்ந்தவர் காஜாமைதீன். ரமலான் நோன்பை முன்னிட்டு நேற்று இரவு காஜாமைதீன் வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் வெளியே உள்ள மின்மீட்டர் பெட்டிக்குள் சாவியை வைத்துவிட்டு மனைவியுடன் அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு இரவு தொழுகைக்காக சென்றார்.

    பின்னர் தொழுகை முடிந்து அவர்கள் வீட்டிற்கு வந்தனர். வீடு திறக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோவில் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் நகை மற்றும் ஒரு செல்போன், ரூ.2500 ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும். பீரோவில் 2 பெட்டிகளில் நகைகள் வைத்துள்ளனர். அதில் ஒரு பெட்டியில் இருந்த 9 பவுன் நகையை கொள்ளையர்கள் எடுத்து சென்ற நிலையில் மற்றொரு பெட்டியில் இருந்த நகைகளை கொள்ளையர்கள் விட்டு சென்றிருந்தனர். இது குறித்து காஜாமைதீன் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது மீட்டர் பெட்டியில் வைத்து சென்ற சாவியை கொண்டு வீட்டை திறந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர்.

    தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிப் பதிவுகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை போன வீடு அதிக அளவு மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். எனவே கொள்ளையில் ஈடுபட்டது யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் தாக்கியதால் தான் முருகன் இருந்ததாக கூறி சம்பவத்திற்கு காரணமான 3 போலீசார் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்.
    • சங்கரன்கோவில் நகரில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு புதூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 37) வேன் டிரைவர்.

    இவருக்கு மீனா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். முருகன் கடந்த 8-ந் தேதி சிவராத்திரி அன்று அச்சம்பட்டி கிராமத்தில் இருந்து ஆட்களை ஏற்றிக்கொண்டு சங்கரன்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். பழைய பஸ் நிலையம் அருகே முன்னாள் சென்ற வாகனத்தில் வேன் மோதிய சம்பவத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    அப்போது அங்கு வந்த போலீசார் போக்குவரத்து நெருக்கடிக்கு காரணமாக இருந்ததாக கூறி முருகனை தாக்கியதாக கூறப்படுகிறது.

    பின்னர் வேனை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முருகன் மர்மமான முறையில் இறந்துள்ளார். தொடர்ந்து அவரது உடலை நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் போலீசார் தாக்கியதால் தான் முருகன் இருந்ததாக கூறி சம்பவத்திற்கு காரணமான 3 போலீசார் மீது கொலை வழக்கு பதிய வேண்டும். உயிர் இழந்த முருகனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 6-வது நாளாக அவரின் உடலை வாங்க மறுத்து பல்வேறு கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் சங்கரன்கோவில் தேரடி திடலில் இன்று ஆப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் சங்கரன்கோவில் நகரில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பிற்காக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் சங்கரன்கோவில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    • புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய் காந்தி தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • போலீசார் சோதனை செய்தபோது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது.

    அந்த தகவலின் அடிப்படையில் அவரது உத்தரவின் பேரில் புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய் காந்தி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த தளவாய்புரம் பகுதியை சேர்ந்த காசித் துரை தலைவனார் (வயது 23), தூத்துக்குடியை சேர்ந்த முத்து கல்யாணி(22), கீழப்புதூரை சேர்ந்த லட்சுமணகுமார் (26), ராம்குமார்(27), சிந்தாமணிப்பேரி புதூரை சேர்ந்த கலைச்செல்வன்(19) மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதனால் அவர்களை போலீசார் சோதனை செய்தபோது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. தொடர்ந்து அவர்களிடம் இருந்த சுமார் 7½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறுவன் உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று Good Touch Bad Touch குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • அப்போது 4 சிறுமிகள், தலைமை ஆசிரியரிடம் சென்று, வீட்டின் அருகே விளையாடும் போது, ஒருவர் Bad Touch செய்ததாக கூறியுள்ளனர்.

    தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் காட்டுராஜா என்பவர் தனது வீட்டின் அருகே விளையாடும் 9 வயது சிறுமிகள் 3 பேர் மற்றும் 8 வயது சிறுமி ஆகியோருக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து, அவரது வீட்டின் உள்ளே அழைத்துச் சென்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதை அடுத்து போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    புளியங்குடியில் உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று Good Touch Bad Touch குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில் தலைமை ஆசிரியர், பள்ளி குழந்தைகளிடம் உங்களது உடலில் உங்களது வீட்டு நபர்களை தவிர யாராவது உங்கள் உடலில் கை வைத்தால் பள்ளியிலோ, அல்லது வீட்டில் உள்ள பெற்றோர்களிடமோ உடனே தகவல் சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    அப்போது 4 சிறுமிகள், தலைமை ஆசிரியரிடம் சென்று, வீட்டின் அருகே விளையாடும் போது, ஒருவர் Bad Touch செய்ததாக கூறியுள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோரிடம் பள்ளியின் தலைமை ஆசிரியர் தகவல் கூறியுள்ளார். பின்னர் இதுகுறித்து நான்கு குழந்தைகளின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் டாஸ்மாக் ஊழியரான காட்டு ராஜாவை (48) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பெண் ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை அளித்து வருகின்றனர்.
    • வெடி மருந்து வெடித்ததில் அருகில் இருந்து வீடுகளின் மேற்கூரைகளும் சேதமடைந்தன.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் கொக்குளம் பகுதியில் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த வெடி மருந்து திடீரென வெடித்ததில் சதீஸ்வரன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    படுகாயமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வீட்டில் பட்டாசு தயாரிக்க வைத்திருந்த வெடி மருந்து வெடித்ததில் வீடு தரைமட்டமானது.

    அதேபோல வெடி மருந்து வெடித்ததில் அருகில் இருந்த வீடுகளின் மேற்கூரைகளும் சேதமடைந்தன.

    வீட்டில் வைத்திருந்த பட்டாசு வெடி மருந்து வெடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    ×