search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம் மோசடி"

    • தலைமறைவாக உள்ள உரிமையாளர் ராபர்ட் என்கின்ற ராஜனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
    • சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் போச்சம்பள்ளி போலீஸ் நிலையம் முன்பு குவிக்கப்பட்டனர்.

    மத்தூர்:

    போச்சம்பள்ளியில் தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் நடத்தி பொருட்கள் கொடுக்காமல் ஏமற்றியதாக தனியார் பைனான்ஸின் மேலாளரை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வாக்கடை கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் ராபர்ட் என்கின்ற ராஜன் மற்றும் அவரது சகோதரி வனிதா ஆகியோர் தனியார் பைனான்ஸ், தனியார் சிட்பண்ட்ஸ், தனியார் டிராவல்ஸ், தனியார் சிறு சேமிப்பு திட்டம், தனியார் தீபாவளி சிறுசேமிப்பு திட்டம், தனியார் சூப்பர் மார்கெட் என பல்வேறு நிறுவனங்களை போச்சம்பள்ளி தலைமையிடமாக கொண்டு நடத்தி வந்தனர்.

    தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் கடந்த ஆண்டு சீட்டு நடத்தினார். அதில் நம்ப முடியாத வாக்குறுதிகளை அளித்து விளம்பரப்படுத்தினார். மாதம் ரூ.300 என ஒரு வருடத்திற்கு ரூ.3600 கட்டினால் சுமார் ரூ.9000 மதிப்புள்ள வீட்டு மளிகை பொருட்கள் வழங்கப்படும் என விளம்பரப்படுத்தியிருந்தார். இதனை நம்பிய பொது மக்கள், இந்த ஆண்டு மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவடங்களில் இருந்தும் மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து இந்த திட்டத்தில் பொது மக்கள் சேர்ந்தனர். பலர் ஏஜென்டுகளாக மாறி தங்களது கிராமத்தில் உள்ள நண்பர்கள், உறவினர்கள் என அனைவரையும் இந்த திட்டத்தில் இணைத்தனர்.

    இதனால் நிறுவனத்திற்கு சுமார் ரூ.9 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டிய நிலையில், தற்போது தீபாவளி வந்தும் பொருட்களை கொடுக்காமல் ஏமாற்றி வந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக பொதுமக்களுக்கு பதில் அளித்து வந்தனர்.

    தினமும் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் 100-க்கும் மேற்பட்டோர் பைனான்ஸ் நிறுவனம் முன்பு காத்திருந்து சென்ற நிலையில், பணத்தை ஏதாவது ஒரு வகையில் திருப்பி கொடுப்பார்கள் என எதிர்பாத்திருந்த பொது மக்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொது மக்கள் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

    அதன்பேரில் இன்று தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் மேலாளர் வனிதாவை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள உரிமையாளர் ராபர்ட் என்கின்ற ராஜனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் வனிதா கைது செய்யப்பட்ட சம்பவம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெரிய வரவே, போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.

    அதிகளவில் திரண்ட பொதுமக்களை கட்டுப் படுத்த பர்கூர் சரகத்திற்கு உட்பட்ட பாரூர், நாகரசம்பட்டி, பர்கூர், பர்கூர் மகளிர், போச்சம் பள்ளி ஆகிய போலீஸ் நிலையங்களில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் போச்சம்பள்ளி போலீஸ் நிலையம் முன்பு குவிக்கப்பட்டனர்.

    பின்னர் கைது செய்யப்பட்ட வனிதாவை போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் ஒப்படைக்க அழைத்து செல்ல முயன்றபோது போலீஸ் வாகனத்தை தடுத்தனர். வாகனம் சென்ற பின்னர் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட பொது மக்கள் போலீஸ் நிலையம் முன்பு போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பணத்தை பெற்றுத்தர போலீஸ் நடவடிக்கை எடுக்காமல், மேலாளர் வனிதாவுக்கு பாதுகாப்பு அளித்து வருவதாக குற்றம் சாட்டினர். அப்போது அங்கிருந்த பர்கூர் டி.எஸ்.பி. மனோகரன், அவர்களிடம் சமாதான பேச்சுவாரத்தை நடத்தி, பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவராக மனுக்களை அளிக்க கேட்டார். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டு, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து வனிதாவை போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மகளிர் சிறையில் அடைத்தனர்.

    இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • விசாரணைக்கு ஆஜராகாமல் ஆர்.கே.சுரேஷ் துபாய்க்கு சென்றுவிட்டார்.
    • மனுதாரர் ஆர்.கே.சுரேஷ் வருகிற 12-ந்தேதி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்.

    சென்னை:

    வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக கூறி, ஏராளமானோரிடம் இருந்து, 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக, ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த மோசடி வழக்கில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பா.ஜனதா மாநில ஓ.பி.சி., பிரிவு துணைத்தலைவரான ஆர்.கே.சுரேசுக்கு தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பினர்.

    ஆனால், விசாரணைக்கு ஆஜராகாமல் ஆர்.கே.சுரேஷ், துபாய்க்கு சென்றுவிட்டார். இதனால், அவரை தேடப்படும் நபராக அறிவித்து `லுக் அவுட்' நோட்டீசை போலீசார் பிறப்பித்தனர்.

    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஆர்.கே.சுரேஷ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது. ஆர்.கே.சுரேஷ் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வருகிற 10-ந்தேதி அவர் நாடு திரும்புவதாக கூறப்பட்டு இருந்தது.

    போலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் பாபு முத்து மீரான், "இந்த மோசடி வழக்கில் இருந்து குற்றவாளிகளை காப்பாற்றுவதாகவும், இதற்காக சில முக்கிய நபர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று ரூசோ என்பவர் மூலம் ஆர்.கே.சுரேஷ் ரூ.12½ கோடியை பெற்றுள்ளார். இது போலீசாருக்கு தெரியவந்தவுடன் வெளிநாடு தப்பிச்சென்றுள்ளார்'' என்று கூறினார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் ஆர்.கே.சுரேஷ் வருகிற 12-ந்தேதி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை ஆர்.கே.சுரேசை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், இந்த ஐகோர்ட்டின் முன் அனுமதியை போலீசார் பெற வேண்டும். இந்த வழக்கு விசாரணையை 18-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்'' என்று உத்தரவிட்டார்.

    • உடனடியாக லிங்கில் வங்கி கணக்கின் விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
    • புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்குன்றம்:

    புழல் பகுதியை சேர்ந்தவர் அப்துல்லத்தீப். இவரது செல்போனுக்கு குறுந்தகவலுடன் ஒரு லிங்கும் வந்தது. அந்த குறுந்தகவலில், உங்களது வங்கி கணக்கு முடக்கப்பட்டு உள்ளது. உடனடியாக லிங்கில் வங்கி கணக்கின் விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதனை உண்மை என்று நம்பிய அப்துல்லத்தீப் தனது வங்கி கணக்கின் விபரங்களை குறிப்பிட்ட லிங்கில் பதிவு செய்தார்.

    சிறிது நேரத்தில் அவரது வங்கி வணக்கில் இருந்த ரூ.44 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. மர்ம நபர்கள் நூதன முறையில் வங்கியில் இருந்து பணத்தை சுருட்டி இருப்பது தெரியவந்தது.

    இதுபோல் புழலை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் மர்ம கும்பல் வங்கி கணக்கு விபரம், பான் எண் விபரங்களை பதிவு செய்யக்கூறி குறுந்தகவல் மற்றும் லிங்க் அனுப்பி ரூ.10 ஆயிரத்தை சுருட்டினர். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போலீசார் கூறும்போது, செல்போனுக்கு தெரியாத நபர்களிடம் இருந்து வரும் குறுந்தகவல், லிங்கை கிளிக் செய்யாமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இணையதள முகவரி சரியாக இருந்தால் மட்டுமே பதில் அளிக்க வேண்டும். இல்லை எனில் வங்கிக்கு நேரில் சென்று தங்களது சந்தேகங்கள் குறித்து கேட்டால் பணம் இழப்பை தவிர்க்கலாம் என்றனர்.

    • ரேணுகா, சிபாமலீஸ்வரி மற்றும் அவர்களுக்கு ஏஜெண்டாக செயல்பட்ட ரெஜி ஞான பிரகாசம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    • மோசடிக்கு பயன்படுத்திய 5 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் போலி பணி நியமன ஆணைகள், விண்ணப்ப படிவங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

    சென்னை:

    சென்னை மாதவரத்தை சேர்ந்த பழனி என்பவரிடம் அதே பகுதியை சேர்ந்த ரேணுகா, அவரது மகள் சிபாமலீஸ்வரி ஆகியோர் அறிமுகமானார்கள்.

    அப்போது அவரிடம் தங்களுக்கு மத்திய-மாநில அரசு துறைகளில் உயர் அதிகாரிகளை தெரியும் என்று கூறியுள்ளனர். 'ஸ்டேட் பேங்க் ஆப் இண்டியா'வில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சத்து 37 ஆயிரம் பணத்தை ஏமாற்றி வாங்கி உள்ளனர். பின்னர் இந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் இருவரும் ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ரேணுகா, சிபாமலீஸ்வரி இருவரும் மத்திய அரசு நிறுவனங்களான பாஸ்போர்ட் அலுவலகம், குடியுரிமை பாதுகாப்பு அலுவலகம், சுங்கத்துறை அலுவலகம் மற்றும் பல்வேறு வங்கிகள் அலுவலகங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி 100-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.4½ கோடிக்கு மேல் மோசடியாக பணத்தை வாங்கி ஏமாற்றியிருப்பது தெரியவந்தது.

    இதன்பேரில் ரேணுகா, சிபாமலீஸ்வரி மற்றும் அவர்களுக்கு ஏஜெண்டாக செயல்பட்ட ரெஜி ஞான பிரகாசம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் அரசு அதிகாரிகள் போல நடித்து நட்சத்திர ஓட்டல்களில் வைத்து நேர்முக தேர்வுகளை நடத்தி இருப்பது அம்பலமாகி உள்ளது.

    இதையடுத்து கைதான 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மோசடிக்கு பயன்படுத்திய 5 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் போலி பணி நியமன ஆணைகள், விண்ணப்ப படிவங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் உதவி கமிஷனர் சுரேந்திரன், இன்ஸ்பெக்டர் கலாராணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், சிட்டிபாபு காவலர் இளங்கோவன் உள்ளிட்டோர் சிறப்பாக துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். அவர்களை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டினார்.

    இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, "அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகளின் பெயரை சொல்லி ஏமாற்றுபவர்களிடம் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்" என்று தெரிவித்து உள்ளார்.

    • பாசுரங்கன் சி.பி.ஐ. கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
    • 3-வது முறையாக அவர்கள் இருவரையும் கொச்சியில் உள்ள தங்களின் அலுவலகத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கண்டாலா சர்வீஸ் கூட்டுறவு வங்கியில் ரூ100 கோடிக்கு மேல் கடன் மோசடி நடந்ததை கேரள கூட்டுறவுத்துறை கண்டறிந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்தனர்.

    கூட்டுறவு வங்கியில் நடந்த இந்த மோசடி குறித்து குற்றப்பிரிவு போலீசார் மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் இந்த மோசடியில் ஏராளமானோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

    அது தொடர்பாக கூட்டுறவு வங்கியின் முன்னாள் செயலர்கள் மற்றும் வசூல் ஏஜெண்டுகளின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த மோசடியில் அந்த கூட்டுறவு வங்கியின் தலைவராக இருந்த சி.பி.ஐ. கட்சியின் முன்னாள் தலைவரான பாசுரங்கனுக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.

    அவர் கண்டலா சர்வீஸ் கூட்டுறவு வங்கியில் தனது நிலத்தை அடகு வைத்து ரூ3.20கோடிக்கு மேல் கடன் பெற்றுள்ளதும், அவரது மகன் அகில்ஜித் 8 முறைக்கு மேல் ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாக கடன் வாங்கியுள்ளதும், அவர்கள் இருவரும் அந்த பணத்தை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததும் தெரிய வந்தது.

    மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து பாசுரங்கன் சி.பி.ஐ. கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் பாசுரங்கன் மற்றம் அவரது மகன் ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டது. அவர்கள் இருவரிடமு அமலாக்கத்துறையினர் ஏற்கனவே 2 முறை விசாரணை நடத்தியிருந்தனர்.

    இந்நிலையில், 3-வது முறையாக அவர்கள் இருவரையும் கொச்சியில் உள்ள தங்களின் அலுவலகத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினர். 10 மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் இருவரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து பாசுரங்கன் மற்றும் அவரது மகன் அகில்ஜித் ஆகிய இருவரையும் அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். இருவரும் கொடுத்துள்ள வாக்குமூலத்திலும் முரண்பாடுகள் இருப்பதாலும், ஆகவே அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

    • இன்ஸ்பெக்டர் முத்து தலைமையிலான போலீசார் நேற்று களக்காட்டில் உள்ள நிதி நிறுவனத்தில் நேரடி விசாரணை மேற்கொண்டனர்.
    • மற்றொரு அடகு கடை நடத்தி வரும் கணவன்-மனைவி உள்பட மேலும் 3 பேரும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    களக்காடு:

    கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு நிதி நிறுவனத்தின் கிளை நெல்லை மாவட்டம் களக்காடு அண்ணா சாலையில் உள்ளது. இங்கு மேலாளர் மற்றும் நிதி நிறுவன ஊழியர்களாக களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    சமீபத்தில் இந்த நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த அதிகாரிகள், களக்காடு கிளையில் கணக்கு விபரங்கள் மற்றும் நகை இருப்பு குறித்த ஆய்வு பணியை மேற்கொண்டனர். அப்போது அங்கு வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை லாக்கரில் இருந்து எடுத்து அதே போல் போலியாக நகைகளை தயாரித்து உள்ளே வைத்துவிட்டு ஒரிஜினல் தங்க நகைகளை நிதிநிறுவன ஊழியர்கள் எடுத்து கொண்டதும், அதனை வேறு ஒரு அடகு கடை நடத்திவரும் நபரின் மூலமாக விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் இவ்வாறாக சுமார் ரூ.7 1/4 கோடி வரையில் முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தலைமை அலுவலக அதிகாரிகள், நெல்லை சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அவரது உத்தரவின்பேரில் நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தனுசியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இன்ஸ்பெக்டர் முத்து தலைமையிலான போலீசார் நேற்று களக்காட்டில் உள்ள நிதி நிறுவனத்தில் நேரடி விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் அந்த நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் 2 ஊழியர்கள் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு தெரிந்த மற்றொரு அடகு கடை நடத்தி வரும் கணவன்-மனைவி உள்பட மேலும் 3 பேரும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் தொடர்புடைய 5 பேரையும் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து நேற்று நள்ளிரவு வரையிலும் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், இன்றும் 2-வது நாளாக அவர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே அவர்கள் தெரிவித்த தகவலின்பேரில் முக்கிய நபர் ஒருவரை போலீசார் பிடித்து வந்து நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்கு அழைத்து சென்றபோது அந்த நபர் தப்பி ஓடி விட்டதாகவும், அவரை போலீசார் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • விளையாட்டு ஒதுக்கீட்டில் ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக கூறி ஏராளமானோரிடம் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார்.
    • மோசடி வழக்கில் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கால்பந்து வீரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர்கோடு ஹோஹ் துர்க்கை பகுதியை சேர்ந்தவர் குளத்திங்கல் ஷானு. கால்பந்து வீரரான இவர் கொச்சியில் தங்கியிருந்து தனியார் கிளப் போட்டிகளில் விளையாடி வந்துள்ளார்.

    அதனை பயன்படுத்தி பிரபல கால்பந்து லீக் அணியுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக காட்டிக்கொண்ட அவர், விளையாட்டு ஒதுக்கீட்டில் ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக கூறி ஏராளமானோரிடம் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார்.

    இது தொடர்பாக கொட்டாரக்கரையை சேர்ந்த ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த 2015-ம் ஆண்டு எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிந்தனர். அதன்பேரில் நடத்திய விசாரணையில் வேலை வாங்கித் தருவதாக 300-க்கும் மேற்பட்டவர்களிடம் ஷானு கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரிய வந்தது.

    கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கஜக்கூட்டம், பூஜப்புரா, கன்னியாபுரம், கொட்டாரக்கரை, கோட்ட யம் கிழக்கு, எர்ணாகுளம் சென்ட்ரல், மானந்தவாடி. ஹோஸ்துர்க், வெள்ளரிக் குண்டு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    பல்வேறு வழக்குகள் பதியப்பட்டதால் அவர் தலைமறைவானார். அவரை பிடிக்க பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதனால் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் ஷானு மும்பையில் பதுங்கியிருப்பதாக கேரள போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் மும்பை சென்றனர். அங்கு புறநகர் பகுதியில் சட்டவிரோதமாக நடன பார் நடத்திய ஷானுவை கைது செய்தனர்.

    பின்பு அவரை விசாரணைக்காக கேரளா அழைத்து வந்தனர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மோசடி வழக்கில் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கால்பந்து வீரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள ஓம் சாந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் ராம்கி (வயது 30). இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் திருமணம் நடந்து விவகாரத்து ஆன நிலையில் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இரண்டாவது திருமணம் செய்ய ஆன்லைனில் மணமகள் தேடி பதிவு செய்துள்ளார். இதனை அறிந்த நேதர்லாந்தில் நர்சாக பணிபுரியும் ஒரு பெண் இவரிடம் தொடர்பு கொண்டு ரூ. 1000 மில்லியன் யூரோ பணம் தருவதாக பொய் வாக்குறுதி அளித்தார். அதற்காக நாணய மாற்று கட்டணங்களை செலுத்த ரூ.6 லட்சம் பணத்தை வங்கி கணக்கிற்கு அனுப்ப சொன்னார். அதன்படி இதனை நம்பி சுந்தர் ராம்கி ரூ.6 லட்சத்தை பணத்தை அவருடய வங்கி கணக்கில் செலுத்தினார். பின்னர் அந்த பெண்ணை தொடர்பு கொண்டபோது செல்போன் சுட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில் இருந்தது. தொடர்ந்து முயன்றும் தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுந்தர் ராம்கி கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

    அதேபோல் ஓசூர் அருகே உள்ள பாகலூர் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் கிஷோர். இவரது மனைவிபூர்ணிமா. இவரது செல்போனில் வாட்ஸ்அப்பில் பகுதி நேர வேலை இருப்பதாக கூறி ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் கூகுள் வரைபட பணி மூலம் சிறிய முதலீட்டில் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இதனை நம்பி மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு ரூ.11,20,156 வங்கி கணக்கின் மூலம் அனுப்பினார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பூர்ணிமா கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

    அதே போன்று கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னக்கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 28). இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு வாட்ஸ்அப் மூலம் பகுதிநேர வேலையில் நல்ல வருமானம் இருப்பதாக குறுஞ்செய்தி வந்தது. இதனை நம்பி மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு ரூ.5,37,000 பணத்தை அனுப்பினார். பின்னர் அவரை தொடர்பு கொண்டபோது அவரிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • பழைய தங்கத்தை கொடுத்தால் ஒரு வருடம் கழித்து புது ஆபரணங்கள் செய்கூலி சேதாரம் இல்லாமல் வாங்கிக் கொள்ளலாம் என்றும் ஆசை வார்த்தைகளை கூறினர்.
    • குமார் தனது மனைவியின் 248.21 கிராம் எடையுள்ள பழைய தங்க நகைகளை கொடுத்துள்ளார்.

    தருமபுரி:

    தருமபுரி அடுத்த அன்னசாகரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 40). இவர் அந்தப் பகுதியில் வாகனங்களுக்கு பட்டை வேலை செய்யும் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.

    சேலம் சீல்நாயக்கன் பட்டியில் தலைமை இடமாக கொண்டு நகை கடை நடத்தி வரும் சபரி சங்கர், என்பவர் தருமபுரியில் பி.ஆர். சுந்தரம் ஐயர் தெரு அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகில் தங்க நகை கடை நடத்தி வருகிறார்.

    அந்த கடையில் கடந்த 4 வருடத்திற்கு முன்பு குமாரின் மனைவி பிரமிளா, 3 பவுன் தங்க செயின் எடுத்து உள்ளனர். அப்போது அந்த கடையில் வேலை செய்யும் தாரமங்கலத்தைச் சேர்ந்த விஜயராஜ், சேலத்தைச் சேர்ந்த முரளி, விஜய், பிரகாஷ் ஆகியோர் கடந்த 2 வருடத்திற்கு முன்பு குமாரிடம் தங்களது கடையின் கிளைகள் சேலம், தருமபுரி உட்பட 11 இடங்களில் கிளைகள் இருப்பதாகவும், மேலும் தருமபுரி சுந்தரம் ஐயர் தெருவில் உள்ள கடையில் நீங்கள் முதலீடு செய்தால் நிறைய வட்டி கிடைக்கும் என்றும் உங்கள் பணத்தை முதலீடு செய்தால் அதற்கு 3 சதவீதம் மாத மாதம் வட்டி தருவதாகவும், பழைய தங்கத்தை கொடுத்தால் ஒரு வருடம் கழித்து புது ஆபரணங்கள் செய்கூலி சேதாரம் இல்லாமல் வாங்கிக் கொள்ளலாம் என்றும் ஆசை வார்த்தைகளை கூறினர். அதை நம்பி குமார் தனது மனைவியின் 248.21 கிராம் எடையுள்ள பழைய தங்க நகைகளை கொடுத்துள்ளார்.

    ரூ.12 லட்சம் ரூபாய் பலதரப்பட்ட தேதிகளில் செலுத்தி அதற்கும் ரசீது பெற்றுள்ள நிலையில் அதற்கு உண்டான வட்டி பணத்திற்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்தனர்.

    மேலும், நகை சேமிப்பு திட்ட திட்டத்தில் ஒர்க் ஷாப் கடையில் வேலை செய்யும் தொழிலாளிகள் அஜித் குமார், சிவக்குமார், ஆகியோர்களின் பெயரிலும், மனைவி பிரமிளா பெயரில் அட்சய பாத்திரம் நகை சேமிப்பு திட்டத்தின் கீழ் மாதம் ரூ.10,000-ம் வீதம் 2 சீட்டுகள் கட்டும் விதமாக பணத்தை கட்டி வந்ததாகவும் தான் முதலீடு செய்த பணத்திற்கு உண்டான வட்டி பணத்தை சீட்டில் செலுத்தியது போக மீதமுள்ள பணத்தை தன்னுடைய தாய் செல்வி வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 76 ஆயிரம் செலுத்தி உள்ளனர்.

    முதலீடு செய்த பணத்திற்கான முதிர்வு காலம் முடிந்த பிறகு பணத்தையும் நகையையும் திருப்பி தருவதாக நகைக்கடையில் வேலை செய்து வரும் விஜய், முரளி, சின்னத்தம்பி, மற்றும் பிரகாஷ் ஆகியோர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து கேட்பதற்காக கடந்த 12-ந் தேதி குமார் கடைக்கு சென்று பார்த்தபோது அந்த கடை ஏற்கனவே பூட்டப்பட்ட நிலையில் முதலீடு செய்தவர்கள் நிறைய பேர் கடைக்கு முன்பு கூடியிருந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தகுமார் கடையின் மேலாளருக்கு போன் செய்து கேட்டபோது கடை திறக்கப்படும் என கூறியுள்ளார். ஆனால் கடை இன்று வரை திறக்கவில்லை தான் ஏமாற்றப்பட்டதாக தெரியவந்தது.

    இதுகுறித்து குமார் தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம், நகை கடையில் முதலீடு செய்ததில் ரூ.28 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை ஏமாற்றி மோசடி செய்த கடையின் உரிமையாளர் சபரி சங்கர், மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கடையின் நிர்வாக அதிகாரி முரளி ஆகியோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தருமபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் செல்லவேல் புகார் அளித்தார்.
    • சசிரேகா, சதீஷ் மற்றும் வெங்கடாஜலபதி ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்தவர் செல்லவேல் (48). இவர் பேரூர் தி.மு.க. செயலாளராகவும், டவுன் பஞ்சாயத்து கவுன்சிலராகவும் உள்ளார். இவருக்கு ராசிபுரம் நகராட்சி 12-வது வார்டு சுயேட்சை கவுன்சிலராக இருக்கும் சசிரேகா, இவரது கணவர் சதீஷ், மாமனார் வெங்கடாஜலபதி ஆகியோர் 2020-ல் அறிமுகமாகினர்.

    அப்போது சதீஷ் தான் ஏரியல் டிரோபோடிக்ஸ் என்ற பெயரில் சீன பொருட்களின் மொத்த வியாபாரம், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் ஆகியவற்றை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து சுற்றுலாவிற்கு பயன்படுத்தி வருவதாக செல்லவேலிடம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தொழிலில் முதலீடு செய்தால் பாதி விலையில் கார்களை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார்.

    இதை நம்பிய செல்லவேல் கடந்த 2020 டிசம்பர் மாதம் 29-ந்தேதி புதிய சொகுசு காரை வாங்கி தரும்படி சதீஷ், அவரது மனைவி சசிரேகாவிடம் நாமக்கல்லில் ரூ.17.70 லட்சத்தை கொடுத்துள்ளார். மேலும் நேரடியாகவும், வங்கி கணக்கு மூலமும் பல கட்டங்களாக ரூ.2 கோடியே 49 லட்சத்து 40 ஆயிரம் வரை கொடுத்துள்ளார்.

    ஆனால் அவர்கள் கூறியபடி காரை பாதி விலையில் வாங்கி தரவில்லை. இதுகுறித்து செல்லவேல் கேட்டபோது தட்டிக்கழித்து வந்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து செல்லவேல் கேட்டு வந்த நிலையில் ரூ.2.50 கோடிக்கு 3 காசோலைகளை அவர்கள் வழங்கினர். அதில் ரூ.1 கோடிக்கான காசோலையை கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ந் தேதி செல்லவேல் அவரது வங்கி கணக்கில் வரவு வைக்க தாக்கல் செய்தார். ஆனால் 3 நாட்களில் வங்கி கணக்கில் பணம் இல்லை என திரும்பியது.

    இதைதொடர்ந்து சசிரேகா, சதீஷ் மற்றும் வெங்கடாஜலபதி ஆகியோர் பற்றி செல்லவேல் விசாரித்தபோது அவர்கள் போலி ஆவணங்களை பயன்படுத்தி பலரிடம் மோசடி செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் செல்லவேல் புகார் அளித்தார். அதில் தன்னை ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்து பணத்தை வாங்கிய சதீஷ், சசிரேகா மற்றும் வெங்கடாஜலபதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று ராசிபுரம் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்று வெளியே வந்த கவுன்சிலர் சசிரேகாவை நாமக்கல் குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவரிடம் பகல் 11.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை தொடர்ந்து 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதன்பின்னர் அவரை திருப்பி அனுப்பினர்.

    செல்லவேல் அளித்த புகார் தொடர்பாக பலமுறை சம்மன் அனுப்பியும், நேரில் சென்று அழைத்தும் சசிரேகா உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துள்ளனர். மோசடி தொடர்பாக இதுவரை எந்த ஆவணமும் கிடைக்காத நிலையில் வருகிற 20-ந் தேதி கணவர் சதீஷூடன் சசிரேகா ஆஜராக வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் சசிரேகா, சதீஷ் மற்றும் வெங்கடாஜலபதி ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவும் செய்துள்ளனர்.

    • தீபாவளி சீட்டு மற்றும் தங்க நகை திட்டங்களை அறிவித்து மோசடி செய்து ஏமாற்றிய உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.
    • கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களையும் அவர்களது செல்போன் எண்களை வைத்து தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி மற்றும் அம்மாபேட்டை சிங்கமெத்தை பகுதியில் வீராணம் அருகே உள்ள வலசையூர் பகுதியை சேர்ந்த ஒருவர் நகை கடை நடத்தி வருகிறார்.

    இந்த கடையில் தீபாவளி சீட்டு நடத்தியும், மேலும்தங்க நகை சேமிப்பு திட்டம் மற்றும் தங்க நகை முதலீடு போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வாடிக்கையாளர்களிடம் லட்சகணக்கில் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கடை உரிமையாளர் திடீரென தலைமறைவானார். உரிமையாளர் கடையை திறக்க வராததால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சம்பளம் வரும் என எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் ஏமாற்றம் அடைந்ததால் இதுகுறித்து நேற்று மாலை அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தனர்.

    இதனிடையே சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள கடை பூட்டிய நிலையில் இருப்பதால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் கடை முன்பு இன்று காலை முதலே திரண்டனர். பின்னர் தீபாவளி சீட்டு மற்றும் தங்க நகை திட்டங்களை அறிவித்து மோசடி செய்து ஏமாற்றிய உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர். சிலர் கடை மீது கல்வீசி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    இதையடுத்து அன்னதானப்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு வரும் வாடிக்கையாளர்களையும் அவர்கள் சமரசப்படுத்தி வருகிறார்கள்.

    கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களையும் அவர்களது செல்போன் எண்களை வைத்து தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த கடையின் உரிமையாளர் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கவர்ச்சி திட்டங்கள் மூலம் பல கோடி வசூல் செய்து பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திலும் முதலீட்டாளர்கள் புகார் தெரிவித்து உள்ளதால் போலீசார் சபரிசங்கரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • மும்பையில் இருந்து தாய்லாந்திற்கு தடை செய்யப்பட்ட மருத்துவ பொருட்கள் அடங்கிய பார்சலை அனுப்பி இருக்கிறீர்கள் என கூறி உள்ளார்.
    • சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள முத்தம்பட்டியை சேர்ந்த 29 வயதான சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது செல்போனுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 23-ந் தேதி ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் நீங்கள் மும்பையில் இருந்து தாய்லாந்திற்கு தடை செய்யப்பட்ட மருத்துவ பொருட்கள் அடங்கிய பார்சலை அனுப்பி இருக்கிறீர்கள் என கூறி உள்ளார்.

    அதற்கு அவர் நான் எந்த பார்சலும் அனுப்பவில்லை என தெரிவித்தார். மறுமுனையில் பேசியவர் நாங்கள் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி, உங்கள் பெயரில் தான் பார்சல் சென்றுள்ளது. அதனால் வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.27 லட்சம் பணம் தர வேண்டும் என மிரட்டினார்.

    இதனால் பயந்து போன சாப்ட்வேர் என்ஜினீயர் 3 தவணைகளாக ரூ.8 லட்சத்து 29 ஆயிரத்து 348-ஐ அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு ஆன்லைனில் அனுப்பினார். தொடர்ந்து கூடுதல் பணம் கேட்டு அந்த கும்பல் மிரட்டியது.

    இதனால் சந்தேகம் அடைந்த சாப்ட்வேர் என்ஜினீயர் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது உத்தரபிரதேசத்தை சேர்ந்த மோசடி கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது.

    இதையடுத்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×