search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒர்க் ஷாப் ஊழியரிடம் ரூ.28.66 லட்சம் மோசடி செய்த நகை கடை உரிமையாளர் மீது வழக்கு: போலீசார் விசாரணை
    X

    ஒர்க் ஷாப் ஊழியரிடம் ரூ.28.66 லட்சம் மோசடி செய்த நகை கடை உரிமையாளர் மீது வழக்கு: போலீசார் விசாரணை

    • பழைய தங்கத்தை கொடுத்தால் ஒரு வருடம் கழித்து புது ஆபரணங்கள் செய்கூலி சேதாரம் இல்லாமல் வாங்கிக் கொள்ளலாம் என்றும் ஆசை வார்த்தைகளை கூறினர்.
    • குமார் தனது மனைவியின் 248.21 கிராம் எடையுள்ள பழைய தங்க நகைகளை கொடுத்துள்ளார்.

    தருமபுரி:

    தருமபுரி அடுத்த அன்னசாகரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 40). இவர் அந்தப் பகுதியில் வாகனங்களுக்கு பட்டை வேலை செய்யும் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.

    சேலம் சீல்நாயக்கன் பட்டியில் தலைமை இடமாக கொண்டு நகை கடை நடத்தி வரும் சபரி சங்கர், என்பவர் தருமபுரியில் பி.ஆர். சுந்தரம் ஐயர் தெரு அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகில் தங்க நகை கடை நடத்தி வருகிறார்.

    அந்த கடையில் கடந்த 4 வருடத்திற்கு முன்பு குமாரின் மனைவி பிரமிளா, 3 பவுன் தங்க செயின் எடுத்து உள்ளனர். அப்போது அந்த கடையில் வேலை செய்யும் தாரமங்கலத்தைச் சேர்ந்த விஜயராஜ், சேலத்தைச் சேர்ந்த முரளி, விஜய், பிரகாஷ் ஆகியோர் கடந்த 2 வருடத்திற்கு முன்பு குமாரிடம் தங்களது கடையின் கிளைகள் சேலம், தருமபுரி உட்பட 11 இடங்களில் கிளைகள் இருப்பதாகவும், மேலும் தருமபுரி சுந்தரம் ஐயர் தெருவில் உள்ள கடையில் நீங்கள் முதலீடு செய்தால் நிறைய வட்டி கிடைக்கும் என்றும் உங்கள் பணத்தை முதலீடு செய்தால் அதற்கு 3 சதவீதம் மாத மாதம் வட்டி தருவதாகவும், பழைய தங்கத்தை கொடுத்தால் ஒரு வருடம் கழித்து புது ஆபரணங்கள் செய்கூலி சேதாரம் இல்லாமல் வாங்கிக் கொள்ளலாம் என்றும் ஆசை வார்த்தைகளை கூறினர். அதை நம்பி குமார் தனது மனைவியின் 248.21 கிராம் எடையுள்ள பழைய தங்க நகைகளை கொடுத்துள்ளார்.

    ரூ.12 லட்சம் ரூபாய் பலதரப்பட்ட தேதிகளில் செலுத்தி அதற்கும் ரசீது பெற்றுள்ள நிலையில் அதற்கு உண்டான வட்டி பணத்திற்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்தனர்.

    மேலும், நகை சேமிப்பு திட்ட திட்டத்தில் ஒர்க் ஷாப் கடையில் வேலை செய்யும் தொழிலாளிகள் அஜித் குமார், சிவக்குமார், ஆகியோர்களின் பெயரிலும், மனைவி பிரமிளா பெயரில் அட்சய பாத்திரம் நகை சேமிப்பு திட்டத்தின் கீழ் மாதம் ரூ.10,000-ம் வீதம் 2 சீட்டுகள் கட்டும் விதமாக பணத்தை கட்டி வந்ததாகவும் தான் முதலீடு செய்த பணத்திற்கு உண்டான வட்டி பணத்தை சீட்டில் செலுத்தியது போக மீதமுள்ள பணத்தை தன்னுடைய தாய் செல்வி வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 76 ஆயிரம் செலுத்தி உள்ளனர்.

    முதலீடு செய்த பணத்திற்கான முதிர்வு காலம் முடிந்த பிறகு பணத்தையும் நகையையும் திருப்பி தருவதாக நகைக்கடையில் வேலை செய்து வரும் விஜய், முரளி, சின்னத்தம்பி, மற்றும் பிரகாஷ் ஆகியோர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து கேட்பதற்காக கடந்த 12-ந் தேதி குமார் கடைக்கு சென்று பார்த்தபோது அந்த கடை ஏற்கனவே பூட்டப்பட்ட நிலையில் முதலீடு செய்தவர்கள் நிறைய பேர் கடைக்கு முன்பு கூடியிருந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தகுமார் கடையின் மேலாளருக்கு போன் செய்து கேட்டபோது கடை திறக்கப்படும் என கூறியுள்ளார். ஆனால் கடை இன்று வரை திறக்கவில்லை தான் ஏமாற்றப்பட்டதாக தெரியவந்தது.

    இதுகுறித்து குமார் தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம், நகை கடையில் முதலீடு செய்ததில் ரூ.28 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை ஏமாற்றி மோசடி செய்த கடையின் உரிமையாளர் சபரி சங்கர், மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கடையின் நிர்வாக அதிகாரி முரளி ஆகியோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தருமபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×