search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தி.மு.க. செயலாளரிடம் ரூ.2.50 கோடி மோசடி: பெண் கவுன்சிலரிடம் போலீசார் 5 மணி நேரம் விசாரணை
    X

    தி.மு.க. செயலாளரிடம் ரூ.2.50 கோடி மோசடி: பெண் கவுன்சிலரிடம் போலீசார் 5 மணி நேரம் விசாரணை

    • நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் செல்லவேல் புகார் அளித்தார்.
    • சசிரேகா, சதீஷ் மற்றும் வெங்கடாஜலபதி ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்தவர் செல்லவேல் (48). இவர் பேரூர் தி.மு.க. செயலாளராகவும், டவுன் பஞ்சாயத்து கவுன்சிலராகவும் உள்ளார். இவருக்கு ராசிபுரம் நகராட்சி 12-வது வார்டு சுயேட்சை கவுன்சிலராக இருக்கும் சசிரேகா, இவரது கணவர் சதீஷ், மாமனார் வெங்கடாஜலபதி ஆகியோர் 2020-ல் அறிமுகமாகினர்.

    அப்போது சதீஷ் தான் ஏரியல் டிரோபோடிக்ஸ் என்ற பெயரில் சீன பொருட்களின் மொத்த வியாபாரம், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் ஆகியவற்றை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து சுற்றுலாவிற்கு பயன்படுத்தி வருவதாக செல்லவேலிடம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தொழிலில் முதலீடு செய்தால் பாதி விலையில் கார்களை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார்.

    இதை நம்பிய செல்லவேல் கடந்த 2020 டிசம்பர் மாதம் 29-ந்தேதி புதிய சொகுசு காரை வாங்கி தரும்படி சதீஷ், அவரது மனைவி சசிரேகாவிடம் நாமக்கல்லில் ரூ.17.70 லட்சத்தை கொடுத்துள்ளார். மேலும் நேரடியாகவும், வங்கி கணக்கு மூலமும் பல கட்டங்களாக ரூ.2 கோடியே 49 லட்சத்து 40 ஆயிரம் வரை கொடுத்துள்ளார்.

    ஆனால் அவர்கள் கூறியபடி காரை பாதி விலையில் வாங்கி தரவில்லை. இதுகுறித்து செல்லவேல் கேட்டபோது தட்டிக்கழித்து வந்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து செல்லவேல் கேட்டு வந்த நிலையில் ரூ.2.50 கோடிக்கு 3 காசோலைகளை அவர்கள் வழங்கினர். அதில் ரூ.1 கோடிக்கான காசோலையை கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ந் தேதி செல்லவேல் அவரது வங்கி கணக்கில் வரவு வைக்க தாக்கல் செய்தார். ஆனால் 3 நாட்களில் வங்கி கணக்கில் பணம் இல்லை என திரும்பியது.

    இதைதொடர்ந்து சசிரேகா, சதீஷ் மற்றும் வெங்கடாஜலபதி ஆகியோர் பற்றி செல்லவேல் விசாரித்தபோது அவர்கள் போலி ஆவணங்களை பயன்படுத்தி பலரிடம் மோசடி செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் செல்லவேல் புகார் அளித்தார். அதில் தன்னை ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்து பணத்தை வாங்கிய சதீஷ், சசிரேகா மற்றும் வெங்கடாஜலபதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று ராசிபுரம் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்று வெளியே வந்த கவுன்சிலர் சசிரேகாவை நாமக்கல் குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவரிடம் பகல் 11.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை தொடர்ந்து 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதன்பின்னர் அவரை திருப்பி அனுப்பினர்.

    செல்லவேல் அளித்த புகார் தொடர்பாக பலமுறை சம்மன் அனுப்பியும், நேரில் சென்று அழைத்தும் சசிரேகா உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துள்ளனர். மோசடி தொடர்பாக இதுவரை எந்த ஆவணமும் கிடைக்காத நிலையில் வருகிற 20-ந் தேதி கணவர் சதீஷூடன் சசிரேகா ஆஜராக வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் சசிரேகா, சதீஷ் மற்றும் வெங்கடாஜலபதி ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவும் செய்துள்ளனர்.

    Next Story
    ×