search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம் மோசடி"

    • சந்தேகம் அடைந்த வித்யாபதி தான் கட்டிய பணத்தை திருப்பி கொடுக்குமாறு அவர்களிடம் கேட்டார்.
    • வித்யாபதி தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார்

    தஞ்சாவூா்:

    தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தை சேர்ந்தவர் சடகோபன் (வயது 48). இவர் அதே பகுதியில் அரிசி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயா (42).

    இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 3 ஆண்டுகள் ஏலச்சீட்டு நடத்தினர். அதில் கும்பகோணம் பாரதி நகரை சேர்ந்த தொழிலதிபர் வித்யாபதி சேர்ந்து பணம் கட்டி வந்தார். இதேப்போல் திருநாகேஸ்வரத்தை சேர்ந்த மேலும் பலரும் சேர்ந்து பணம் கட்டினர். இந்நிலையில் ஏலச்சீட்டு முடிவடைந்த பின்னரும் பலருக்கு பணத்தை திருப்பி கொடுக்காமல் சடகோபன், விஜயா காலதாமதம் செய்து வந்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த வித்யாபதி தான் கட்டிய பணத்தை திருப்பி கொடுக்குமாறு அவர்களிடம் கேட்டார். பலமுறை முறையிட்டும் பணம் கிடைக்கவில்லை. இதையடுத்து வித்யாபதி தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் திருநாகேஸ்வரத்தை சேர்ந்த சடகோபன், விஜயா தம்பதியினர் ஏலச்சீட்டு நடத்தி தன்னிடம் ரூ.29 லட்சத்து 29 ஆயிரம் மோசடி செய்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் சுலோச்சனா வழக்குபதிவு செய்து சடகோபன், விஜயா ஆகிய 2 பேரையும் கைது செய்தார். பின்னர், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சடகோபனை புதுக்கோட்டை கிளை சிறையிலும், விஜயாவை திருச்சி மகளிர் சிறையிலும் அடைத்தார்.

    • மோசடி நபர்கள் செல்போன் எண்ணை எப்படியோ தெரிந்து கொண்டு சம்பந்தப்பட்டவர்களை, செல்போனில் வீடியோ அழைப்பு, ஸ்கைப் செயலியில் அழைக்கின்றனர்.
    • போலீசார் யாரும் இப்படி செய்யமாட்டார்கள். பயத்தை ஏற்படுத்தி பணத்தை ஏமாற்றி பறித்து மோசடி செய்வதே இந்த கும்பலின் நோக்கம்.

    கோவை:

    தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட தற்போதைய காலகட்டத்தில் செல்போன் மூலம் பண பரிமாற்றம் போன்ற பல்வேறு செயல்களை மேற்கொண்டு வருகிறோம்.

    ஆன்லைன் பணபரிமாற்றமானது முன்பைக் காட்டிலும் தற்போது அதிகமாகவே காணப்படுகிறது. அதற்கு ஏற்ப தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நடக்கும் சைபர் கிரைம் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.

    இதன் மூலம் பல வகைகளில் மோசடிகள் செய்து வந்தாலும், தற்போது போலீஸ் அதிகாரிகள் எனக்கூறி மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    இது தொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

    கோவை மாநகரில் பொருளாதார குற்றங்கள் அதிகளவில் நடைபெறுவதை போலவே அண்மைக் காலமாக ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்றி பலரிடம் ஒரு கும்பல் பணம் பறித்து வருவது தெரியவந்துள்ளது.

    அதன்படி மோசடி நபர்கள் செல்போன் எண்ணை எப்படியோ தெரிந்து கொண்டு சம்பந்தப்பட்டவர்களை, செல்போனில் வீடியோ அழைப்பு, ஸ்கைப் செயலியில் அழைக்கின்றனர்.

    அப்போது தங்களை போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் அல்லது சி.பி.ஐ அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி கொள்ளும் மர்மநபர்கள் உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து ஒரு பார்சல் வந்திருப்பதாக கூறுவார்கள்.

    அந்த பார்சலில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் இருப்பதாகவும், இது தொடர்பாக உங்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டிருப்பதாகவும் கூறி போலி ஆவணத்தை காட்டுவார்கள்.

    போலீஸ் நிலையத்தில் இருந்து பேசுவதைப் போல தெரிய வேண்டும் என்பதற்காக போலியாக போலீஸ் நிலைய பின்னணியை உருவாக்கி போலீஸ் உயர் அதிகாரிகளை போல உடையணிந்து பேசுகிறார்கள்.

    போதைப் பொருள் கடத்தியதுடன், உங்களுக்கு சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும், உங்கள் மீது நடவடிக்கை எடுக்க போவதாகவும் அச்சுறுத்தி பணம் பறித்து வருகின்றனர்.

    போலீசார் யாரும் இப்படி செய்யமாட்டார்கள். பயத்தை ஏற்படுத்தி பணத்தை ஏமாற்றி பறித்து மோசடி செய்வதே இந்த கும்பலின் நோக்கம். கோவை மாநகரில் கடந்த 6 மாதங்களில் மட்டும் இதுபோல 52 புகார்கள் பதிவாகி உள்ளன. முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் என பலரையும் மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்துள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறும்போது, இந்த கும்பல் வடமாநிலங்களில் இருந்து செயல்பட்டு வருவதாகவும், இவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் வடமாநிலத்திற்கு செல்ல உள்ளனர்.

    மேலும் இந்த கும்பலின் மோசடியில் சிக்காமல் இருப்பது குறித்து போலீஸ் துறையின் சோஷியல் மீடியா செல் மூலம் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    • பார்சலில் கடத்தல் பொருட்கள் இருப்பதால் உங்களுக்கு வாட்ஸ் அப் மூலமாகவே வாரண்டை அனுப்பி கைது செய்ய முடியும் என்று மிரட்டல் விடுக்கிறார்கள்.
    • வெளிநாடுகளில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் மிகப்பெரிய ‘நெட்வொர்க்’ அமைத்து மோசடியை அரங்கேற்றி வருகிறார்கள்.

    சென்னை:

    செல்போன்கள் மூலமாக இன்று இருந்த இடத்தில் இருந்தே எல்லா வேலைகளையும் செய்துவிட முடிகிறது. அதே நேரத்தில் செல்போன் வழியாக பல்வேறு இழப்புகளையும் சந்திக்க நேரிடுகிறது.

    செல்போனில் தொடர்பு கொண்டு பேசும் நபர்கள் சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கி கணக்கில் இருந்து விதவிதமான வழிகளில் பணத்தை உருவிக் கொண்டிருக்கிறார்கள்.

    உங்களது ஏ.டி.எம். கார்டு செயல் இழந்துவிட்டது. அதனை சரிசெய்ய வேண்டும் என்று பேசி வங்கி கணக்கு விவரங்களை கேட்டு பணத்தை சுருட்டி வந்த மோசடி பேர்வழிகள் நாளுக்கு நாள் புதுப்புது வழிகளில் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை வாரிச் சுருட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இதுபோன்ற மோசடிக்காரர்கள் வெளிநாடுகளில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் மிகப்பெரிய 'நெட்வொர்க்' அமைத்து மோசடியை அரங்கேற்றி வருகிறார்கள். இதனால் அவர்களை பிடிப்பது என்பது சவாலாகவே இருந்து வருகிறது.

    இந்நிலையில் இந்த ஆன்லைன் மோசடி கும்பல் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து தற்போது புதிதாக நூதன முறையில் பலரை ஏமாற்றி பணத்தை அபகரிக்க தொடங்கி உள்ளனர்.

    உங்களது முகவரிக்கு தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பார்சலில் வந்துள்ளது. நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம். போதை பொருள் தடுப்பு பிரிவில் இருந்து பேசுகிறோம் என்று மோசடி ஆசாமி ஒருவன் முதலில் போனில் பேசுகிறார். பின்னர் பேசும் நபர் போலீஸ் அதிகாரி என்று கூறுகிறார்.

    இதனால் எதிர்முனையில் பேசிக் கொண்டிருக்கும் அப்பாவி மக்கள் அரண்டு விடுகிறார்கள். இதுபோன்று சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் 62 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.

    தொழில் அதிபரின் செல்போனுக்கு அறிமுகம் இல்லாத புதிய நம்பரில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் மும்பை துணை கமிஷனர் பேசுவதாக கூறியுள்ளார். உங்களது பெயரில் மும்பையில் உங்களது பெயரில் மும்பையில் இருந்து தாய்லாந்துக்கு கூரியர் மூலமாக பார்சல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் 5 பாஸ்போர்ட்டுகள் 3 கிரெடிட் கார்டுகள் மற்றும் போதை பொருட்கள் உள்ளன என்றும் இதனால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்றும் அந்த நபர் எச்சரித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சென்னை தொழில் அதிபர், நான் சென்னையில் இருக்கிறேன். எனது பெயரை யாரோ தவறாக பயன்படுத்தி உள்ளனர். எனக்கும், அந்த பார்சலுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார்.

    இருப்பினும் மோசடி ஆசாமி போனில் மிரட்டி, நாங்கள் சொல்லும் வங்கி கணக்குக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் பயந்து போன சென்னை தொழில் அதிபர் ரூ.62 லட்சத்து 99 ஆயிரம் பணத்தை அனுப்பி உள்ளார்.

    இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டல் விடுத்த மோசடி கும்பல் பின்னர் தொடர்பை துண்டித்துவிட்டது. முன்னதாக தொழில் அதிபர் திரும்ப திரும்ப தொடர்பு கொண்டு பேச முற்பட்டுள்ளார். ஆனால் அதற்கு பயன் கிடைக்கவில்லை.

    இந்த மோசடி தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீஸ் துணை கமிஷனர் கீதாஞ்சலி கூறியதாவது:-

    இதுபோன்ற சைபர் கிரைம் மோசடி பேர்வழிகள் அதிக சம்பளம் வாங்கும் நபர்களை கண்காணித்து அவர்களிடமிருந்து பணத்தை பறிக்கிறார்கள்.

    பார்சலில் கடத்தல் பொருட்கள் இருப்பதால் உங்களுக்கு வாட்ஸ் அப் மூலமாகவே வாரண்டை அனுப்பி கைது செய்ய முடியும் என்று மிரட்டல் விடுக்கிறார்கள். இந்த யோசனைகள் 'ஸ்கைப்' செயலி மூலமாக அரங்கேற்றப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    இந்த மோசடி பேர்வழிகள் ஆரம்பத்தில் பணத்தை கேட்பது இல்லை. வங்கி கணக்குகள் மற்றும் அதன் உள்ளே நுழையக்கூடிய வழிகளை மிரட்டி கேட்டுப் பெற்று வருகிறார்கள். இதன் பிறகே வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்கிறார்கள் அல்லது மிரட்டி பணத்தை பரி மாற்றம் செய்ய சொல்கிறார்கள். தாய்லாந்து மற்றும் ஹாங்காங் பகுதியில் இருந்தே இந்த மோசடிகள் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

    எனவே இதுபோன்ற நபர்களிடம் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

    ஆன்லைன் மூலமாக பணத்தை இழந்துவிட்டால் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண்ணை 1930-ல் உடனடியாக புகார் செய்தால் அந்த பணம் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதுபோன்ற சைபர் கிரைம் மோசடி பேர்வழிகளிடம் ஏமாறும் பொது மக்கள் www.cybercrime gov.in என்ற முகவரியிலும் புகார் செய்யலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முதியோர்கள் வங்கிக்கு சென்று சலான் நிரப்பி எடுப்பது சிரமம்.
    • புதுச்சேரியைச் சேர்ந்த 62 நபர்களின் வங்கி கணக்கில் இருந்து இந்த கருவி மூலம் பணம் திருடி உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் முதியோர் உதவித்தொகை, விதவை, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு உதவித்தொகைகள் வங்கிகள் மூலம் வழங்கப் படுகிறது.

    வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முதியோர்கள் வங்கிக்கு சென்று சலான் நிரப்பி எடுப்பது சிரமம்.

    இதனால் வங்கிகளில் ஆதார் செயல்படுத்தப்பட்ட பணம் எடுக்கும் முறை உள்ளது. இந்த முறையில் பணம் எடுக்க ஏ.டி. எம்., கார்டு, வங்கி புத்தகம், ஆதார் எண், ஓ.டி.பி. தேவையில்லை. சிறிய ரேடியோ போன்ற வடிவில் கருவி இருக்கும்.

    இந்த கருவியில் கைரேகையை பதிவு செய்தால், அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து கொள்ளலாம்.

    கிராமப்புறங்களில் இன்றும் இந்த முறையில் முதியோர், விதவை உள்ளிட்டோருக்கு வங்கியில் இருந்து பணம் எடுத்து தரப்படுகிறது.

    தற்போது இணைய வழி மோசடி கும்பல் கடந்த 4 நாட்களில், புதுச்சேரியைச் சேர்ந்த 62 நபர்களின் வங்கி கணக்கில் இருந்து இந்த கருவி மூலம் பணம் திருடி உள்ளனர்.

    பொதுமக்கள் சிம்கார்டு வாங்கும் போது ஆதார் கார்டை புதுப்பிக்கும் போது, சொத்து வாங்க, விற்கும்போது பத்திர பதிவு அலுவலகத்தில் கைரேகை பதிவுகளை பயன்படுத்துவர். அந்த கைரேகை பதிவுகளை, அதே போன்ற கைரேகையை சிலிக்கான் பதிவு மூலம் பிரதி எடுத்து, ஒ.டி.பி., இன்றி வங்கி கணக்கில் இருந்து மோசடி கும்பல் பணத்தை எடுக்கின்றனர்.

    இந்த முறையில் பணம் எடுக்கும் மோசடியை தடுக்கும் முறையை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

    • ரூ.50 லட்சம் முதல் 1 கோடி வரை லோன் பெற்று தருவதாகவும் அதற்கு முன்பணமாக ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை தர வேண்டும் என கூறியுள்ளார்.
    • மேலும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் தெரிவிக்கலாம் எனவும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    திருப்பூர்:

    திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியை சேர்ந்தவர் சின்னையா (வயது 46). இவர் திருப்பூர் பெருமாநல்லூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் கிரேஸ் ஹெல்ப் சென்டர் என்ற நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தின் மூலம் வங்கி லோன் மற்றும் கறவை மாடுகள் வாங்க கடன் பெற்று தருவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    இதையடுத்து பெருமாநல்லூர், அவிநாசி, திருப்பூர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள்,பொது மக்கள் கடன் பெற்று தரும்படி சின்னையாவிடம் கேட்டுக்கொண்டனர். அப்போது அவர் ரூ.50 லட்சம் முதல் 1 கோடி வரை லோன் பெற்று தருவதாகவும் அதற்கு முன்பணமாக ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை தர வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பி பொதுமக்கள் சிலர் பணம் கொடுத்துள்ளனர்.

    இதேபோல் வங்கியில் வேலை , மத்திய மாநில அரசு அலுவலக வேலை , ஆசிரியை வேலை வாங்கி தருவதாக கூறியும் ஏராளமானோரிடம் பணம் பெற்று ள்ளார்.ஆனால் பணத்தை பெற்று கொண்ட சின்னையா யாருக்கும் லோன் மற்றும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணம் கொடுத்தவர்கள் சென்று கேட்டபோது அவர் முறையான பதில் கூறாமல் திடீரென தலை மறைவாகி விட்டார்.

    இந்நிலையில் லோன் மற்றும் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.14 லட்சத்து 50ஆயிரத்தை வாங்கி கொண்டு மோசடி செய்த சின்னையா மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட 6 பேர் திருப்பூர் பெருமாநல்லூர் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த சின்னையாவை கைது செய்தனர்.

    விசாரணையில் இவர் இதேபோல் ஏராளமானவரிடம் மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. மேலும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் தெரிவிக்கலாம் எனவும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • ஆர்.கே.சுரேஷ் நேற்று முன்தினம் துபாயில் இருந்து சென்னை திரும்பினார்.
    • மோசடி விவகாரம் தொடர்பாக சரமாரி கேள்விகளை கேட்டு போலீசார் ஆர்.கே.சுரேசை துளைத்தெடுத்தனர்.

    சென்னை:

    சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ஆருத்ரா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி ஏமாற்றி பண வசூலில் ஈடுபட்டது. 1 லட்சம் பேரிடம் ரூ.2,400 கோடி அளவுக்கு ஆருத்ரா நிறுவனம் மோசடியில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இந்த வழக்கில் சிக்கிய ஒருவரிடம் நடிகர் ஆர்.கே.சுரேஷ் பணம் பெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இதை தொடர்ந்து ஆர்.கே.சுரேசிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பினார்கள்.

    ஆனால் ஆர்.கே.சுரேஷ் துபாயில் தலைமறைவானார். இதையடுத்து அவருக்கு எதிராக அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீசை பிறப்பித்தனர்.

    இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டில் நடைபெற்றபோது, ஆர்.கே.சுரேஷ் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் ஆர்.கே.சுரேசை கைது செய்யும் சூழல் உள்ளது. ஆனால் அவர் விரைவில் சென்னை திரும்பி போலீஸ் விசாரணைக்கு ஆஜராக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதன்படி ஆர்.கே.சுரேஷ் நேற்று முன்தினம் துபாயில் இருந்து சென்னை திரும்பினார். இந்த நிலையில் அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் அவர் ஆஜரானார். ஆர்.கே.சுரேசிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    மோசடி விவகாரம் தொடர்பாக சரமாரி கேள்விகளை கேட்டு போலீசார் ஆர்.கே.சுரேசை துளைத்தெடுத்தனர். அப்போது அவர் தெரிவித்த தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர்.

    இதன் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.கே. சுரேஷ், பெரிய மீசை தாடியுடன் காணப்படுவார். பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜராக வந்த அவர் மொட்டையடித்து லேசாக முடி வளர்த்த நிலையில் காணப்பட்டார்.

    • டாக்டர் சுப்பிரமணி இதுகுறித்து வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
    • அசர் பாட்ஷாவை கைது செய்து வேலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45). இவர் பிலிக்கல்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார். மேலும் பரமத்திவேலூர் அருகே பொத்தனூரில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.

    இந்த மருத்துவமனைக்கு சி.டி.ஸ்கேன் எந்திரம் வாங்குவதற்காக சுப்பிரமணி பெங்களூரு ஜெய் நகரைச் சேர்ந்த அசர் பாட்சா (32) என்பவரிடம் கடந்த 2 ஆண்டுகளாக தவணை முறையில் ரூ.30 லட்சம் வரை கொடுத்ததாக தெரிகிறது.

    ஆனால் அசர் பாட்சா சி.டி.ஸ்கேன் எந்திரத்தை வாங்கி தராமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தான் ஏமாற்றப்படுவதை அறிந்த டாக்டர் சுப்பிரமணி இதுகுறித்து வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் இந்திராணி உத்தரவின்பேரில் வேலூர் போலீசார் பெங்களூருவுக்கு சென்று அங்கிருந்த அசர் பாட்ஷாவை கைது செய்து வேலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இயக்குனர்கள் மதன், கார்த்திகா ஆகிய இருவரும் தலைமறைவாக இருந்தனர்.
    • மதுரையில் உள்ள முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மதன் சரணடைந்தார்.

    திருச்சி:

    திருச்சி கரூர் பைபாஸ் ரோடு பகுதியில் பிரணவ் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடை இயங்கி வந்தது. இதன் கிளை நிறுவனங்கள் திருச்சி மலைக்கோட்டை, மதுரை, கும்பகோணம் உள்பட 8 இடங்களில் செயல்பட்டு வந்தன.

    இந்த நிறுவனம் சில கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டது. இதனை நம்பி ஏராளமானவர்கள் கோடிக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் மேற்கண்ட நிறுவனங்களில் முதலீடு செய்தனர். பின்னர் கடந்த மாதம் அதன் இயக்குனர்கள் மற்றும் நிர்வாகிகள் திடீரென முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுப்பதை நிறுத்தினர். அதைத்தொடர்ந்து திருச்சி உட்பட அனைத்து கிளைகளிலும் வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    பின்னர் பல்வேறு இடங்களில் வாடிக்கையாளர்கள் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பிரணவ் ஜூவல்லர்ஸ் இயக்குனர்கள் மதன் அவருடைய மனைவி கார்த்திகா மேலாளர் நாராயணன் உள்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த நகைக்கடை கிளைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி 80 கிலோ வெள்ளி, சுமார் 110 பவுன் தங்க நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அதன் மேலாளர் நாராயணனை கைது செய்தனர். இயக்குனர்கள் மதன், கார்த்திகா ஆகிய இருவரும் தலைமறைவாக இருந்தனர். போலீசார் அவர்களை வலைவீசி தேடி வந்தனர். மேலும் இருவரும் வெளிநாடு தப்பிச்செல்லாமல் தடுக்க லுக் அவுட் நோட்டீஸும் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மதுரையில் உள்ள முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மதன் சரணடைந்தார். அதைத் தொடர்ந்து அவரை வருகிற 21ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ஜோதி உத்தரவிட்டார். பின்னர் மதன் மதுரை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். மதன் மீது 1500க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர்.

    மேலும் தற்போது வரையிலும் தினமும் 10 பேர், 20 பேர் தொடர்ச்சியாக புகார் அளித்து வருகின்றனர்.

    ஆகவே மோசடி தொகை மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் சரணடைந்த மதனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பரண்டு லில்லி கிரேசி மதுரை விரைந்துள்ளார்.

    இன்று மதுரை முதலீட்டாளர் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்கிறார்.

    அவரை காவலில் எடுத்து விசாரிக்கும்போது மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே பொதுமக்களிடம் மோசடி செய்த பணத்தில் மதன் திருச்சி கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிலம் வாங்கி குவித்துள்ளார்.

    அந்த சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் கார்த்திகாவை போலீசார் தேடி வருகின்றனர்.

    • வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பாமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றி மோசடி செய்துள்ளார்.
    • ரூ.2 கோடி வரை மோசடி செய்து ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஹை-ஸ்கூல் தெருவைச் சேர்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கம் (வயது 38).

    தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் வைத்திருந்த வெளிநாட்டு வேலைக்கான விளம்பரத்தை பார்த்து நியூசிலாந்திற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்று கருதி அதில் உள்ள தொலைபேசி எண்ணை அழைத்துள்ளார்.

    அதில் பேசிய சிவகங்கை மாவட்டம் டி.புதூர் ஆக்ஸ்போர்டு நகரைச் சேர்ந்த ரகுபதிராஜன் (48) என்பவர், வெளிநாட்டில் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் ரூ.4 லட்சம் ஆகும் என்று கூறி உள்ளார்.

    இதை நம்பிய பசும்பொன் முத்துராமலிங்கம் கடந்த ஆண்டு ஜனவரி 22-ந் தேதி முதல் இந்த ஆண்டு மே மாதம் 19-ந் தேதி வரை மொத்தம் ரூ.4 லட்சம் பணத்தை அவருக்கு அனுப்பி உள்ளார்.

    அதனை ரகுபதி ராஜன் பெற்றுக்கொண்டு பசும்பொன் முத்துராமலிங்கத்தை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பாமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றி மோசடி செய்துள்ளார்.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பசும்பொன் முத்துராமலிங்கம் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. (பொறுப்பு) சிவசுப்பு மேற்பார்வையில் மாவட்ட குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், ராஜ்குமார், மோகன்ஜோதி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    இதில் ரகுபதிராஜன் இதே போன்று பலரையும் வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி ரூ.2 கோடி வரை மோசடி செய்து ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைத்தனர். 

    • தினேஷ்குமார் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் புகார் தெரிவித்தார்.
    • சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த ஜூஜூவாடி பாலாஜி நகரைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் தினேஷ்குமார்.

    தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போனில் வாட்ஸ்-அப்பில் ஒரு மெசேஜ் வந்தது. அதில் ஆன்லைன் மூலம் பகுதிநேரம் வேலை இருப்பதாகவும், இதற்காக குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று இருந்தது.

    இதனை நம்பிய தினேஷ்குமார் அந்த மெசேஜில் வந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, அதில் மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.12 லட்சத்து 21ஆயிரத்தை செலுத்தியுள்ளார்.

    அதன்பின்பு அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது மர்ம நபரின் போன் சுவிட்ச் ஆப் செய்து இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டது தினேஷ்குமாருக்கு தெரியவந்தது.

    இதுகுறித்து தினேஷ்குமார் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் புகார் தெரிவித்தார்.

    இதேபோல் கிருஷ்ணகிரி பவர்ஹவுஸ் காலனியை சேர்ந்தவர் அஜீன்குமார் (வயது27). இவரது செல்போனில் வந்த எஸ்.எம்.எஸில் வந்த குறுஞ்செய்தியில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று வந்தது. அந்த லிங்க்கை கிளிக் செய்தபோது வந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, அதில் பேசிய மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் அஜீன்குமார் ரூ.7லட்சத்து 35ஆயிரத்தை செலுத்தினார். பின்னர் அந்த மர்ம நபரின் செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அஜீன்குமார் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் புகார் தெரிவித்தார். இதேபோன்று ஓசூர் கே.சி.சி. நகரைச் சேர்ந்த ஷமீர் என்பவரின் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியை நம்பி அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைப்பட்டு மர்ம நபரின் வங்கி கணக்கில் ரூ.17 லட்சத்து 48 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். அதன்பின்னர் அவரை மர்ம நபர் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். மாவட்டத்தில் 3 பேரிடம் ஆன்லைன் மூலம் ரூ.38 லட்சம் பணம் பறித்த சம்பவம் குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தந்த பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி ஏராளமானோரிடம் கோடிக்கணக்கில் வசூலித்த நிதி நிறுவன உரிமையாளர்கள் தலைமறைவாகி விட்டனர்.
    • மோசடியில் தொடர்புடைய ஆரூத்ரா அதிபர் ராஜசேகர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றிருந்தார்.

    சென்னை:

    சென்னை அமைந்தகரையை மையமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆரூத்ரா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி ஏராளமானோரிடம் கோடிக்கணக்கில் வசூலித்த நிதி நிறுவன உரிமையாளர்கள் தலைமறைவாகி விட்டனர். இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியின் பின்னணி குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இந்த மோசடியில் தொடர்புடைய ஆரூத்ரா அதிபர் ராஜசேகர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருந்தார்.

    துபாயில் பதுங்கி இருக்கும் அவரை பிடிக்க போலீஸ் வியூகம் வகுத்திருந்தது. கடந்த 3 வருடமாக தேடப்பட்டு வந்த நிலையில் முக்கிய குற்றவாளியான ராஜசேகர் துபாயில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

    • தலைமறைவாக உள்ள உரிமையாளர் ராபர்ட் என்கின்ற ராஜனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
    • சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் போச்சம்பள்ளி போலீஸ் நிலையம் முன்பு குவிக்கப்பட்டனர்.

    மத்தூர்:

    போச்சம்பள்ளியில் தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் நடத்தி பொருட்கள் கொடுக்காமல் ஏமற்றியதாக தனியார் பைனான்ஸின் மேலாளரை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வாக்கடை கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் ராபர்ட் என்கின்ற ராஜன் மற்றும் அவரது சகோதரி வனிதா ஆகியோர் தனியார் பைனான்ஸ், தனியார் சிட்பண்ட்ஸ், தனியார் டிராவல்ஸ், தனியார் சிறு சேமிப்பு திட்டம், தனியார் தீபாவளி சிறுசேமிப்பு திட்டம், தனியார் சூப்பர் மார்கெட் என பல்வேறு நிறுவனங்களை போச்சம்பள்ளி தலைமையிடமாக கொண்டு நடத்தி வந்தனர்.

    தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் கடந்த ஆண்டு சீட்டு நடத்தினார். அதில் நம்ப முடியாத வாக்குறுதிகளை அளித்து விளம்பரப்படுத்தினார். மாதம் ரூ.300 என ஒரு வருடத்திற்கு ரூ.3600 கட்டினால் சுமார் ரூ.9000 மதிப்புள்ள வீட்டு மளிகை பொருட்கள் வழங்கப்படும் என விளம்பரப்படுத்தியிருந்தார். இதனை நம்பிய பொது மக்கள், இந்த ஆண்டு மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவடங்களில் இருந்தும் மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து இந்த திட்டத்தில் பொது மக்கள் சேர்ந்தனர். பலர் ஏஜென்டுகளாக மாறி தங்களது கிராமத்தில் உள்ள நண்பர்கள், உறவினர்கள் என அனைவரையும் இந்த திட்டத்தில் இணைத்தனர்.

    இதனால் நிறுவனத்திற்கு சுமார் ரூ.9 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டிய நிலையில், தற்போது தீபாவளி வந்தும் பொருட்களை கொடுக்காமல் ஏமாற்றி வந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக பொதுமக்களுக்கு பதில் அளித்து வந்தனர்.

    தினமும் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் 100-க்கும் மேற்பட்டோர் பைனான்ஸ் நிறுவனம் முன்பு காத்திருந்து சென்ற நிலையில், பணத்தை ஏதாவது ஒரு வகையில் திருப்பி கொடுப்பார்கள் என எதிர்பாத்திருந்த பொது மக்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொது மக்கள் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

    அதன்பேரில் இன்று தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் மேலாளர் வனிதாவை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள உரிமையாளர் ராபர்ட் என்கின்ற ராஜனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் வனிதா கைது செய்யப்பட்ட சம்பவம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெரிய வரவே, போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.

    அதிகளவில் திரண்ட பொதுமக்களை கட்டுப் படுத்த பர்கூர் சரகத்திற்கு உட்பட்ட பாரூர், நாகரசம்பட்டி, பர்கூர், பர்கூர் மகளிர், போச்சம் பள்ளி ஆகிய போலீஸ் நிலையங்களில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் போச்சம்பள்ளி போலீஸ் நிலையம் முன்பு குவிக்கப்பட்டனர்.

    பின்னர் கைது செய்யப்பட்ட வனிதாவை போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் ஒப்படைக்க அழைத்து செல்ல முயன்றபோது போலீஸ் வாகனத்தை தடுத்தனர். வாகனம் சென்ற பின்னர் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட பொது மக்கள் போலீஸ் நிலையம் முன்பு போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பணத்தை பெற்றுத்தர போலீஸ் நடவடிக்கை எடுக்காமல், மேலாளர் வனிதாவுக்கு பாதுகாப்பு அளித்து வருவதாக குற்றம் சாட்டினர். அப்போது அங்கிருந்த பர்கூர் டி.எஸ்.பி. மனோகரன், அவர்களிடம் சமாதான பேச்சுவாரத்தை நடத்தி, பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவராக மனுக்களை அளிக்க கேட்டார். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டு, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து வனிதாவை போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மகளிர் சிறையில் அடைத்தனர்.

    இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×