என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நீட்"
- விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல கேள்விகளை எழுப்பியது.
- தற்கொலை தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நவ்தீப் சிங் என்ற மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 25 வயதான நவ்தீப் சிங் மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்டி படிப்பில் பயின்று வந்தார்.
இந்த நிலையில், பார்சி அஞ்சுமன் கெஸ்ட் ஹவுஸ்-இல் தங்கி படித்து வந்த நவ்தீப் சிங் விடுதியில் உள்ள தனது அறையில் சடலமாக மீட்கப்பட்டார். கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் மருத்துவ தேர்வில் நாட்டிலேயே முதல் மதிப்பெண் பெற்று அசத்தினார் நவ்தீப் சிங். எனினும், மருத்துவ படிப்பை முடிக்கும் முன் அவர் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
சம்பவத்தன்று நவ்தீப் சிங்கின் தந்தையும், பள்ளி முதல்வருமான கோபால் சிங் தன் மகனுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து வந்துள்ளார். எனினும், மகன் அழைப்பை ஏற்காததை அடுத்து நவ்தீப் நண்பர்களை தொடர்பு கொண்டுள்ளார். இதையடுத்து நவ்தீப் அறைக்கு சென்ற அவரது நண்பர்கள், அவரின் அறை கதவு உள்பக்கம் தாளிடப்பட்டு இருந்ததை கண்டனர்.
எவ்வளவு தட்டியும் உள்ளிருந்து எந்த பதிலும் கிடைக்காததை அடுத்து, நண்பர்கள் சேர்ந்து நவ்தீப் சிங்கின் அறை கதவை உடைத்து உள்ளே சென்றனர். உள்ளே சென்ற நண்பர்களுக்கு அறையில் நவ்தீப் சிங் உயிரிழந்த நிலையில், சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நவ்தீப் சிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், தற்கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தமிழகத்தில் மருத்துவ படிப்பு கலந்தாய்வு விவரங்கள் வெளியாகி உள்ளன.
- மருத்துவ கலந்தாய்வுக்கான மெரிட் லிஸ்ட் நேற்று வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் 2024-25 ஆம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பங்கள் கடந்த மாத இறுதியில் துவங்கி இம்மாதம் 8 ஆம் தேதி மாலை 5 மணி என்று வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தன.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 15 சதவீதம் போக மீதமுள்ள 85 சதவீத இடங்களுக்கு மருத்துவ கலந்தாய்வு நாளை காலை துவங்குகிறது. தமிழ்நாடு மருத்துவ தேர்வு குழு மூலமாக நடத்தப்படும் கலந்தாய்விற்கான மெரிட் லிஸ்ட் நேற்று வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி பொதுப்பிரிவினர் நாளை காலை 10 மணி முதல் ஆகஸ்ட் 27 ஆம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம்.
முதற்கட்ட கலந்தாய்வில் ஒதுக்கீடு பெறும் மாணவர்கள் செப்டம்பர் 5 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என்று மாணவர் சேர்க்கை செயலாளர் அறிவித்துள்ளார்.
- 2022ல் 1,123 மாணவர்கள் தேர்வில் தேல்வி அடைந்ததால் தற்கொலை
- 2022ல் 1,445 இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தற்கொலை
மாணவர்களிடையே அதிகரித்து வரும் தற்கொலை சம்பவங்கள் குறித்தும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மௌசம் நூர் பாராளுமன்றத்தில் இன்று பேசினார்.
பாராளுமன்றத்தில் பேசிய அவர், "தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டவர்களில் 8% பேர் மாணவர்கள் என்றும் இது ஒரு வருடத்தில் 30,000 க்கும் மேற்பட்ட உயிர்களை இழந்ததற்கு சமம். இந்த விவாகரத்திற்கு நாம் உடனடி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தற்கொலை செய்து கொள்பவர்களின் 35% பேர் 18-30 வயதுக்குட்பட்டவர்களாய் இருக்கிறார்கள். இது மாணவர் சேர்க்கை மற்றும் தேர்வு முறையின் அப்பட்டமான தோல்வியாகும்.
2022 ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட 1,123 மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர். அதே சமயம் 1,445 இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தற்கொலை செய்து உயிரை இழந்துள்ளனர்.
இந்தாண்டு 1.8 லட்சம் மருத்துவ இடங்களுக்காக இளங்கலை நீட் தேர்வை 23 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர்.
அதேபோல் வெறும் 39,767 பொறியியல் இடங்களுக்காக JEE மெயின்ஸ் தேர்வை 12.3 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.
இந்த ஏற்றத்தாழ்வு தான் மாணவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. மாணவர்களின் மதிப்பு தேர்வு முடிவுகளுடன் தவறாக இணைத்து பார்க்கப்படுகிறது.
மிகைப்படுத்தப்பட்ட ஊடக விளம்பரம், சமூக ரீதியிலான அவமானம், கல்வி ஆலோசனை வழங்கப்படுவதில் உள்ள போதாமை மற்றும் வாலைவாய்ப்பின்மை ஆகியவை மாணவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளன.
இந்த ஆண்டு நடைபெற்ற இளங்கலை நீட், முதுகலை நீட், யுஜிசி நெட், சிஎஸ்ஐஆர் நெட் தேர்வுக்கு தயாராகி வந்த லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கவலைக்கிடமாக உள்ளது.
நமது நாட்டின் கல்வி நிலை ஒரு மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மாணவர்களின் தற்கொலையும் தேசியளவிலான சோகமாகும். இளைஞர்களை அரசு ஆதரிக்க தவறியதை இது அப்பட்டமாக பிரதிபலிக்கிறது.
எனவே, நாட்டின் மாணவர் சேர்க்கை மற்றும் தேர்வு முறையை சீர்திருத்த உறுதியான நடவடிக்கைகளை அரசாங்கம் அவசரமாக மேற்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
- காங்கிரஸ் கட்சி அரசை நம்பவில்லை. தற்போது உச்சநீதிமன்றத்தையும் அது நம்பவில்லை.
- நீட் மீதான உச்சநீதிமன்றத்தின் முடிவு மாணவர்கள் மீதான தோல்வி கிடையாது.
நீட் பேப்பர் லீக்ஸ் தொடர்பாக மத்திய அரசு மீதும், தேசிய தேர்வு முகமை மீதும் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. நீட் தேர்வு நடத்தி வரும் அமைப்பு மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீட் பேப்பர் லீக்ஸ் தொடர்பாக அமளியில் ஈடுபட்டது. இந்த நிலையில்தான் உச்சநீதிமன்றம் நீட் தேர்வை மீண்டும் நடத்த தேவையில்லை. தேர்வுக்கான புனிதம் மீறலுக்கான எந்தவொரு காரணமும் இல்லை. என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில் மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ளார்.
"பேப்பர் லீக்ஸ், ஊழலின் தந்தை காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி அரசை நம்பவில்லை. தற்போது உச்சநீதிமன்றத்தையும் அது நம்பவில்லை. நீட் மீதான உச்சநீதிமன்றத்தின் முடிவு மாணவர்கள் மீதான தோல்வி கிடையாது. காங்கிரசின் முறையற்ற அணுகுமுறை, அற்ப அரசியலின் முடிவு" என தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சிஸ்டமேட்டிக் மீறல் அல்லது தேர்வுக்கான புனிதம் மீறலுக்கான எந்தவொரு காரணமும் இல்லை. இரண்டு இடங்களில் கேள்வித்தால் லீக் ஆகி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 23.33 லட்சம் மாணவர்களை மீண்டும் தேர்வு எழுத உத்தரவிட்டால் அவர்களுடைய சொந்த ஊரில் இருந்து தேர்வு நடத்தப்படும் மையத்திற்கு பல கிலோ மீட்டர் கடந்து வர வேண்டியிருக்கும். இது மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும் என உச்சநீதிமன்றம் நீட் தேர்வை மீண்டும் நடத்த உத்தரவிட வேண்டும் என தேர்வு எழுதியவர்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
- நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது.
- தமிழகம், மேற்கு வங்காளத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் ஒருமுறை தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேசிய அளவில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் என டெல்லி, ஹிமாச்சல், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தெலுங்கானா, மேற்கு வங்கம் ஆகிய 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் கடிதம் எழுதியிருந்தார்.
இதனையடுத்து, தமிழ்நாட்டைத் தொடர்ந்து நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி, நேற்று மேற்குவங்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை மருத்துவக் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரண் பிரகாஷ் பாட்டீல் தாக்கல் செய்தார்.
பொது நுழைவுத் தேர்வு (CET) என்ற மாற்றுத்தேர்வு முறையின் அடிப்படையில் கர்நாடகாவில் மருத்துவ சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று அந்த தீர்மானத்தில் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
- அணு தொடர்பான 29-வது கேள்விக்கு இரண்டு பதிலுக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டது.
- தவறான பதிலுக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டதால் தனது தரவரிசை பாதிக்கப்படுவதாக ஒருவர் மனு.
நீட் தேர்வு மற்றும் முடிவு தொடர்பான முறைகேடு தொடர்பாக தேர்வு எழுதிய பலர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில் ஒருவர் அணு தொடர்பான 29-வது கேள்விக்கு ஆப்சன் 4 மற்றும் ஆப்சன் 2 ஆகிய இரண்டையும் தேர்வு செய்தவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதனால் குழப்பம் காரணமாக தான் இந்த கேள்விக்கு பதில் அளிக்கவில்லை.
என்சிஇஆர்டி-யின் (NCERT) புதிய புத்தகத்தை பின்பற்றவும் என தேசிய தேர்வு முகமை குறிப்பிட்டிருந்தது. அதன்படி ஆப்சன் 4 சரியான விடை. பழைய புத்தகத்தின்படி ஆப்சன் 2 சரியான விடையாகும். ஆனால் இரண்டிற்கும் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. ஆப்சன் 2 என பதில் அளித்தவர்களுக்கு 4.2 லட்சம் பேர் கருணை மதிப்பெண் பெற்றுள்ளனர். அதில் 44 பேர் முழு மதிப்பெண் பெற்றவர்கள் என அந்த மனுவில் தெரிவித்திருந்தார். மனு தாக்கல் செய்திருந்தவர் 711 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
உச்சநீதிமன்றம் ஒரு கேள்விக்கு இரண்டு பதில் சரியாகாது. சரியான பதில் எது என்பதை தெரிவிக்க டெல்லி ஐஐடி இயக்குனருக்கு உச்சநீதிமன்றம் வேண்டுகோள் விடுத்தது. 3 பேர் கொண்ட குழு உச்சநீதிமன்றம் ஆப்சன் 4-தான் சரியான பதில் என அறிக்கை தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து இன்று உச்சநீதிமன்றம் ஆப்சன் 4-தான் 29-வது கேள்விக்கு சரியான பதில் என உத்தரவிட்டுள்ளது.
இதனால் ஆப்சன் 2-ஐ தேர்வு செய்த 4 மதிப்பெண் பெற்ற 4.2 லட்சம் பேர் அந்த மதிப்பெண்களை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.
- தேர்வுக்கான புனிதம் மீறப்பட்டதாக முடிவுக்கு வர முடியாது.
- 23.33 லட்சம் மாணவர்களை மீண்டும் தேர்வு எழுத உத்தரவிட்டால் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும்.
நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாக லீக்கானதாக குற்றம்சாட்டப்பட்டது. அத்துடன் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதால் 60-க்கும் மேற்பட்டோர் முழு மதிப்பெண் பெற்றனர் எனவும் மாணவர்கள் குற்றம்சாட்டினர்.
நீட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
மேலும் நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்வை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் பலர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஒய். சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்தி வருகிறது.
இன்றைய விசாரணையின்போது நீட் மறுதேர்வு கிடையாது. தேர்வுக்கான புனிதம் மீறப்பட்டதாக முடிவுக்கு வர முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிஸ்டமேட்டிக் மீறல் அல்லது தேர்வுக்கான புனிதம் மீறலுக்கான எந்தவொரு காரணமும் இல்லை. இரண்டு இடங்களில் கேள்வித்தால் லீக் ஆகி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
23.33 லட்சம் மாணவர்களை மீண்டும் தேர்வு எழுத உத்தரவிட்டால் அவர்களுடைய சொந்த ஊரில் இருந்து தேர்வு நடத்தப்படும் மையத்திற்கு பல கிலோ மீட்டர் கடந்து வர வேண்டியிருக்கும். இது மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், ஒட்டுமொத்த சிஸ்டமும் மீறப்பட்டுள்ளது அல்லது தேர்வின் புனிதம் மீறப்பட்டுள்ளது என்ற முடிவுக்கு தற்போதைய நிலையில் வருவது மிகவும் கடினமானது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது.
அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் ஒருமுறை தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு, "தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்திட வேண்டும்" என்று வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தார்.
அதேபோல், தேசிய அளவில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் என டெல்லி, ஹிமாச்சல், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தெலுங்கானா, மேற்கு வங்கம் ஆகிய 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டைத் தொடர்ந்து நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி, சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வருகிறது கர்நாடக அரசு.
முதல்வர் சித்தராமையா தலைமையிலான மாநில அமைச்சரவையில் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
நீட் விலக்கு கோரி மேற்கு வங்க சட்டமன்றத்திலும் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- நீட் தேர்வில் ஒரு கேள்விக்கு இரண்டு பதில்கள் சரி என என்டிஏ மதிப்பெண் வழங்கியுள்ளது.
- ஏதாவது ஒன்று தவறு என்றால் மதிப்பெண் இழக்கும் அபாயம் இருந்ததால் எதையும் தேர்வு செய்யவில்லை- மாணவி.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. 60 பேர் முழு மதிப்பெண் பெற்றது, 1500-க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண் வழங்கியது தேர்வு எழுதியவர்களுக்கு சந்தேகத்தை எழுப்பியது.
இதனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது கருணை மதிப்பெண்ணை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் நீட் தேர்வை ரத்து செய்ய மறுத்து விட்டது.
கடந்த வார விசாரணையின்போது, தேசிய தேர்வு முகமை தேர்வுகள் நடைபெற்ற நகரங்கள் மற்றும் மையங்கள் வாரியாக முடிவை வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி என்டிஏ (National Testing Agency) முடிவுகளை வெளியிட்டது. அப்போது ஏற்கனவே அரியானா மாநிலத்தில் உள்ள ஒரு மையத்தில் ஆறு பேர் முழு மதிப்பெண் பெற்றிருந்த நிலையில், இந்த நிலையத்தில் 682-தான் அதிகபட்ச மதிப்பெண் எனத் தெரியவந்தது.
இந்த நிலையில் மாணவி ஒருவர் 29-வது கேள்விக்கு குழப்பமான பதில் கொடுக்கப்பட்டிருந்தது. அணு தொடர்பான கேள்விக்கு ஆப்சன் 2 மற்றும் ஆப்சன் 4 ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்தவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. நான் ஏதாவது ஒன்றை தேர்வு செய்தால் ஒரு மதிப்பெண் குறைந்து விடும் என்பதால் பதில் அளிக்க தவிர்த்துவிட்டேன்.
இதனால் நான் 720-க்கு 711 மதிப்பெண் பெற்றுள்ளேன். எனக்கு மதிப்பெண் அளித்திருந்தால் 4 மதிப்பெண் பெற்று தரவரிசையில் முன்னேறியிருப்பேன். 311-வது தரவரிசை பெற்றுள்ள அந்த மாணவி ஒரு கேள்விக்கு இரண்டு பதில் எப்படி சரியானதாக இருக்க முடியும் என உச்சநீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஆப்சன் 2-ஐ தேர்வு செய்துள்ளதால் 44 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டு 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஐஐடி டெல்லி மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து நாளைக்கு சரியான விடையை தெரிவிக்குமாறு ஐஐடி டெல்லி இயக்குனருக்கு நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த விசாரணையின்போது நீதிமன்றம் "இரண்டு ஆப்சனுக்கும் மதிப்பெண் கொடுக்கும் முடிவுக்கு என்டிஏ ஏன் வந்தது?" எனக் கேட்டது.
அதற்கு என்டிஏ சார்பில் ஆஜரான சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா "ஏனென்றால் இரண்டுமே சாத்தியமான பதில்கள்" என்றார்.
உடனே மனு தாக்கல் செய்தவர் "அதற்கு வாய்ப்பே இல்லை. ஆப்சன் 2 "atoms of each elements are stable and emit their characteristic spectrum" எனச் சொல்கிறது. பழைய புத்தகத்தில் "atoms of each element" என உள்ளது. ஆனால் புதிய புத்தகத்தில் "atoms of most elements" என உள்ளது. இது ஆப்சன் 4-ல் கேட்கப்பட்டுள்ளது. இரண்டும் சரியாக இருக்க முடியாது" என்றார்.
என்டிஏ "மாணவர்கள் புதிய புத்தகத்தை பயன்படுத்தியிருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் 4 சரியான பதிலாக கொடுக்கப்பட்டது. 4.2 லட்சம் மாணவர்கள் ஆப்சனை 2-ஐ தேர்வு செய்து 4 மதிப்பெண்கள் கூடுதலாக பெற்றுள்ளனர்" எனத் தெரிவித்தது.
"இரண்டையும் சரியான பதில்களாக நீங்கள் கருதியிருக்க முடியாது. நீங்கள் எந்த விருப்பத்தையும் தேர்வு செய்ய வேண்டும். இரண்டும் ஒன்றாக இருக்க முடியாது" என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
"மேலும், எங்களை கவலையடையச் செய்வது என்னவென்றால், நீங்கள் செய்ததன் பலனை நான்கு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பெற்றுள்ளனர்" என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இத்துடன் இன்றைய விசாரணையை முடித்து நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.
- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, ‘நீட்’ தேர்வு முடிவுகள், மையங்கள் வாரியாக நேற்று வெளியானது.
- தமிழ்நாட்டில் எழுதியவர்களின் புள்ளிவிவரங்களில் குளறுபடி ஏற்பட்டிருப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
எம் பி பி எஸ், பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அந்த தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை என்று அழைக்கப்படும் என்.டி.ஏ. நடத்துகிறது. அதன்படி, 2024, 25-ம் கல்வியாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ம் தேதி நாடு முழுவதும் நடந்தது.
நாடு முழுவதும் 571 நகரங்களில் 4 ஆயிரத்து 750 தேர்வு மையங்களில் மொத்தம் 23 லட்சத்து 33 ஆயிரத்து 297 பேர் இந்த தேர்வை எழுதினார்கள். இவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த மாதம் (ஜூன்) 4-ம் தேதி வெளியானது.
தேர்வு எழுதிய 23 லட்சத்து 33 ஆயிரத்து 297 பேரில், 5 லட்சத்து 47 ஆயிரத்து 36 மாணவர்கள், 7 லட்சத்து 69 ஆயிரத்து 222 மாணவிகள், 10 திருநங்கைகள் என 13 லட்சத்து 16 ஆயிரத்து 268 பேர் தேர்ச்சி பெற்று தகுதி அடைந்திருந்தனர்.
மேலும் இந்த தேர்வில் இதுவரை இல்லாத வகையில் 67 பேர் முழு மதிப்பெண் பெற்றிருந்தனர். அதுமட்டுமல்லாமல், 1,563 மாணவ-மாணவிகளுக்கு கருணை மதிப்பெண்ணும் வழங்கப்பட்டது. இதுதவிர வினாத்தாள் விற்பனை, ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து இந்த தேர்வு முடிவை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் 36 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. அதோடு பல்வேறு ஐகோர்ட்டுகளிலும் இதுதொடர்பான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், மறுதேர்வுக்கு உத்தரவிட முடியாது என்று தெரிவித்தனர். மேலும், 'நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையங்கள் வாரியாகவும், நகரங்கள் வாரியாகவும் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிட வேண்டும். அப்படி வெளியிடும்போது, மாணவர்களின் பெயரை மறைத்து 'டம்மி' வரிசை எண்ணை பயன்படுத்தி வெளியிட வேண்டும்' என உத்தரவிட்டனர்.
ஒரு மாணவர் தன்னுடைய மதிப்பெண் மட்டுமல்லாது, மற்றவர்களும் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள்? என்பதை தெரிந்து கொள்ளும் வகையிலும், ஒரு நகரத்தில் அல்லது தேர்வு மையங்களில் அதிகமானோர் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனரா? என்பதை அறிந்து கொள்ளும் வகையிலும் தேர்வு முடிவுகளை அப்படி வெளியிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி நகரங்கள், தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நேற்று பிற்பகலில் மீண்டும் வெளியிட்டது.
அதன்படி, 30 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள 571 நகரங்களில் 4 ஆயிரத்து 750 தேர்வு மையங்களில் தேர்வை எழுதிய தேர்வர்கள் அனைவருடைய மதிப்பெண்களையும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில், கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிட்டப்போது, தமிழ்நாட்டில் இருந்து ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 449 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து, அவர்களில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 920 பேர் தேர்வை எழுதியதாகவும், அவர்களில் 89 ஆயிரத்து 426 பேர் தகுதி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நகரங்கள், தேர்வு மையங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட தேர்வு முடிவில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 920 பேரின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொடுக்கப்பட்டிருந்த புள்ளி விவரங்களின்படி, ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 664 பேரின் மதிப்பெண் பட்டியல் இடம்பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சேலம், வேலூர், திருவாரூர் உள்ளிட்ட சில நகரங்களில் தேர்வு எழுதியவர்கள் 700-க்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தனர். 31 நகரங்களில் தேர்வு எழுதியவர்களில் பரவலாக 500 மற்றும் 600-க்கும் மேல் மதிப்பெண் பெற்றிருந்ததை பார்க்க முடிந்தது. அதிலும் குறிப்பாக, இந்த தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண் இருப்பதால், சில மாணவர்கள் "மைனஸ்'' மதிப்பெண்ணையும் எடுத்திருந்தனர். உதாரணமாக ஒரு மாணவர், -28 மதிப்பெண் எடுத்திருந்ததும் நேற்று வெளியான மதிப்பெண் பட்டியலில் தெரியவந்தது.
கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி நீட் முடிவு வெளியான அறிவிப்பில், ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 920 பேர் தமிழ்நாட்டில் தேர்வு எழுதியதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று நகரங்கள், மையங்கள் வாரியாக வெளியான மதிப்பெண் பட்டியலில் 744 பேர் கூடுதலாக எழுதி இருப்பதாக இருந்த தகவல் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வித்தியாசம் குறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தியிடம் கேட்டபோது, 'சில வெளிமாநில தேர்வர்கள் தமிழ்நாட்டில் தேர்வு மையங்களில் எழுதியிருக்கலாம். அப்படி எழுதியிருக்கும் பட்சத்தில் 50 அல்லது 100 எண்ணிக்கையில் தான் வித்தியாசம் வரும். ஆனால் 700-க்கு மேல் வருவது குளறுபடியை தான் காட்டுகிறது. கல்வியில் வெளிப்படைத்தன்மை அவசியம். சுப்ரீம் கோர்ட்டு இந்த விஷயத்தில் நல்ல தீர்வை கொடுக்க வேண்டும்' என்றார்.
இதுமட்டுமல்லாமல், அரியானா மாநிலத்தில் ஒரே தேர்வு மையத்தில் எழுதியவர்களில் பலர் அதிக மதிப்பெண் பெற்றிருப்பதாகவும், அதிக மதிப்பெண் பெற்ற அந்தமான் நிக்கோபர் தீவைச் சேர்ந்த மாணவர் ராஜஸ்தான் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியிருப்பதாகவும் கல்வியாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.
மேலும் தென் மாநிலங்களை காட்டிலும், வடமாநிலங்களில்தான் நீட் தேர்வு முறைகேடுகள் அதிகம் நடந்திருப்பதாகவும், கண்டிப்பாக இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டு, தேசிய தேர்வு முகமையிடம் கேள்வி எழுப்பும் என்று நம்புவதாகவும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- ஆள்மாறாட்ட வழக்கு விசாரணைக்கு தேவையான தகவல்களை வழங்காததால், குற்றவாளிகளுக்கு உடந்தையாக தேர்வு முகமை செயல்படுகிறதா?
- குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்த ஏன் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினார்.
மதுரை:
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, சென்னையை சேர்ந்த சில மாணவர்கள் தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தது தெரியவந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மோசடி குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தனர். இந்த சம்பவத்தில் சில மாணவர்கள், அவர்களின் பெற்றோர் என ஏராளமானவர்கள் கைதானார்கள். ஆள்மாறாட்டத்துக்கு உதவியதாக இடைத்தரகர்கள் சிலரையும் போலீசார் பிடித்தனர்.
ஆள்மாறாட்ட விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்யும்படி சென்னையை சேர்ந்த தருண்மோகன், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, கடந்த 5 ஆண்டுகளாக நீட் ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் கிடப்பில் போட்டது ஏன் என கேள்வி எழுப்பி இருந்தது.
மேலும், தமிழக மாணவர்களுக்காக வடமாநிலங்களில் ஆள்மாறாட்டம் செய்து, தேர்வு எழுதியவர்களின் விவரங்களை தேசிய தேர்வு முகமை தெரிவிக்காமல் இழுத்தடிப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் புகார் குறித்தும் தேசிய தேர்வு முகமை பதில் அளிக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது கூடுதல் அரசு குற்றவியல் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி, நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி வழக்கு விவரங்களை தேசிய தேர்வு முகமை வழங்கவில்லை. இதனால் இந்த வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.
பின்னர் தேசிய தேர்வு முகமை சார்பில் துணை சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்தன் ஆஜராகி, இந்த விவகாரத்தில் பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என கோரினார்.
இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி, 2019-ம் ஆண்டில் நீட் தேர்வு நடந்தபோது வெளிநாட்டில் இருந்த மாணவனுக்காக இங்கு 3 மாநில மையங்களில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி மோசடி நடந்து இருக்கிறது. ஆனால் தமிழக நீட் தேர்வு மையங்களில் தேர்வு எழுத வருபவர்களின் தாலியைக்கூட கழற்றுமாறு கட்டாயப்படுத்துகிறார்கள்.
ஆள்மாறாட்ட வழக்கு விசாரணைக்கு தேவையான தகவல்களை வழங்காததால், குற்றவாளிகளுக்கு உடந்தையாக தேர்வு முகமை செயல்படுகிறதா? அப்படி என்றால் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்த ஏன் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினார்.
பின்னர், இதுகுறித்து தேசிய தேர்வு முகமை பதில் அளிக்க அவகாசம் வழங்கி, அடுத்த கட்ட விசாரணையை வருகிற 15-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
- நீட் தேர்வில் 500 மதிப்பெண்கள் எடுத்தாலும் கூட பணம் இல்லாத மாணவர்களால் தனியார் பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை கட்டணம் செலுத்தி சேர முடியாது.
- மதிப்பெண் குறைவாக எடுத்திருந்தாலும் பணம் இருந்தால் மருத்துவப் படிப்பில் சேர முடியும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அட்டவணை இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், தமிழ்நாட்டில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை இடங்களை ஏலத்தில் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளன. மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நடப்பாண்டில் நடத்தப்பட்ட நீட் தேர்வு செல்லுமா? என்பதே இன்னும் தீர்மானிக்கப்படாத நிலையில், அதனடிப்படையில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு மாணவர்களை சேர்ப்பது உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாகும்.
நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, சட்டவிரோதமாக கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவை தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், பெரிய அளவில் முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்படும் பட்சத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளது. அதன் காரணமாகவே மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வுகளை மத்திய, மாநில அரசுகள் நிறுத்தி வைத்துள்ளன. இத்தகைய சூழலில் செல்லுமா, செல்லாதா? என்றே தெரியாத ஒரு தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுவது எந்த வகையில் நியாயம்?
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தனியார் பல்கலைக்கழகங்களின் சார்பில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலே பொதுமானது, மதிப்பெண்களைப் பற்றி கவலைப்படாமல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இடம் ஒதுக்கப்படும், மாணவர்கள் அவர்களின் விவரங்களை மட்டும் வழங்கினால் போதுமானது, பல்கலைக்கழக நிர்வாகமே கலந்தாய்வுக்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, மத்திய அரசால் நடத்தப்படும் கலந்தாய்வின் மூலம் கண்டிப்பாக இடம் கிடைப்பது உறுதி செய்யப்படும், முன்கூட்டியே பதிவு செய்து முன் தொகை செலுத்துவோருக்கு ரூ.5 லட்சம் வரை கட்டண சலுகை வழங்கப்படும் என்றெல்லாம் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தனியார் பல்கலைக்கழகங்களின் இத்தகைய செயல்பாடுகள் புதிதல்ல. நீட் தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல் நடைபெற்று வருபவை தான். தகுதி மற்றும் தரவரிசையைப் பற்றிக் கவலைப்படாமல் அணுகும் மாணவர்கள் அனைவருக்கும் மருத்துவ இடங்களை ஒதுக்குவது எவ்வாறு சாத்தியம்?
நீட் தேர்வில் 500 மதிப்பெண்கள் எடுத்தாலும் கூட பணம் இல்லாத மாணவர்களால் தனியார் பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை கட்டணம் செலுத்தி சேர முடியாது. அதே நேரத்தில் மதிப்பெண் குறைவாக எடுத்திருந்தாலும் பணம் இருந்தால் மருத்துவப் படிப்பில் சேர முடியும். இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் தான் தனியார் கல்லூரிகளை அணுகும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் இடம் ஒதுக்குகின்றன. இது சமூக அநீதி ஆகும்.
தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் விலை வைத்து விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதும், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதும் தான் அதன் நோக்கங்கள் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால், நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல் ஓராண்டில் கூட இந்த நோக்கங்கள் நிறைவேற்றப்படவில்லை. மருத்துவக் கல்வி வணிகமயமாக்குவதை ஊக்குவிக்கும் நீட் தேர்வு இனியும் தொடரக்கூடாது. எனவே, நீட் தேர்வை மத்திய அரசு நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்