என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paramedical courses"

    • நீட் தேர்வை, தமிழ்நாடு தொடர்ந்து உறுதியாக எதிர்த்து வருகிறது.
    • துணை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை மாநில அரசின் அதிகார வரம்பிற்குள்ளேயே நீடிக்கவேண்டும்

    துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி அறிவித்துள்ளதை உடனடியாக கைவிட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்

    அக்கடிதத்தில், "தேசிய துணை மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் ஆணையம் (NCAHP), வரவிருக்கும் கல்வியாண்டு முதல் இளங்கலை பிசியோதெரபி (B.PT) மற்றும் இளங்கலை ஆக்குபேஷனல் தெரபி (B.OT) ஆகிய இரண்டு பட்டப்படிப்புகளில் சேருவதற்கு, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET) பங்கேற்பதைக் கட்டாயமாக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த அவசரமான மற்றும் தன்னிச்சையான முடிவினால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் அதனை உடனடியாகத் திரும்பப்பெறப்பட வேண்டுமென்று தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இளநிலை மருத்துவப் படிப்பு (MBBS) சேர்க்கைக்கான நீட் தேர்வை, தமிழ்நாடு தொடர்ந்து உறுதியாக எதிர்த்து வருகிறதென்றும், மற்ற துணை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் தொடர்ச்சியாக எச்சரித்து வருகிறதென்றும் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் துரதிர்ஷ்டவசமாக, தமிழ்நாட்டின் அச்சங்கள் இன்று உண்மையாகிவிட்டன என்றும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் அனைத்து துணை மருத்துவப் படிப்புகளுக்கும் (Allied Health Care Courses-AHCs) நீட் தேர்வைக் கட்டாயமாக்கும் ஒரு பெரிய திட்டத்தின் முதல்படியாக, இரண்டு படிப்புகளுக்கு நீட் தேர்வு பரிந்துரைக்கப்படுவதாக ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய தகவல்களிலிருந்து தெளிவாகத் தெரிகிறதென்று தெரிவித்துள்ளார். அரசமைப்புச் சட்டப்படி சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய இரு துறைகளுக்கும் பொறுப்பான மாநில அரசுகளுடன் முறையான கலந்தாலோசனைகளை செய்யாமல் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி மாநில அரசால் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தமது கடிதத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெளிவுபடக் குறிப்பிட்டுள்ளார்.

    நாங்கள் ஏற்கெனவே சுட்டிக்காட்டியிருந்தது போல, நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதால், 12,000 எம்.பி.பி.எஸ் இடங்களுக்குப் போட்டியிட 1.40 இலட்சம் மாணவர்கள், பயிற்சி வகுப்புகளுக்கு அதிக கட்டணம் செலுத்தி நீட் தேர்வை எழுத வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதுடன் அவர்களது குடும்பத்தினருக்குத் தேவையற்ற செலவு, மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பள்ளித் தேர்வுகளில் காட்டும் செயல்திறனைப் பயனற்றதாக்கிவிட்டதாகவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் சாடியுள்ளார். இந்தத் தவறான நடைமுறையை துணை மருத்துவப் படிப்புகளுக்கும் விரிவுபடுத்துவது என்பது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று எச்சரித்துள்ள அவர், தமிழ்நாட்டில் துணை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கும் அதிகமாகும் என்றும், இந்த இடங்களுக்குச் சேர விரும்பும் இலட்சக்கணக்கான மாணவர்கள், எம்.பி.பி.எஸ் படிக்க விரும்பும் மாணவர்களை விட மிகவும் பின்தங்கிய சமூகப் பொருளாதாரப் பின்னணியைக் கொண்டவர்கள் என்றும், இது ஏழைக் குடும்பங்களை நீட் பயிற்சிக்குச் செலவழிக்கக் கட்டாயப்படுத்தும் ஒரு பெரும் அநீதியாகும் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    நீட் தேர்வில் பங்கேற்றிருக்க வேண்டுமென்பதை ஒரு தகுதியாக நிர்ணயித்திருப்பது என்பது நடைமுறைக்கு ஒவ்வாதது என்று சுட்டிக்காட்டியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், உலகளவில், ஒரு தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலமோ அல்லது அதில் அதிக மதிப்பெண் பெறுவதன் மூலமோ கல்வித்தகுதி வரையறுக்கப்படுகிறது என்றும், ஒரு நுழைவுத் தேர்வில் பங்கேற்றிருக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்துவது சரியானதல்ல என்றும், இது நீட் தேர்வை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டதாகத் தெரிகிறது என்றும் தெரிவித்துள்ளார். இதனால் லட்சக்கணக்கானோர் நீட் பயிற்சியை நாடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு, இறுதியில் ஏழைக் குடும்பங்களின் செலவில் நீட் பயிற்சி மையங்கள் நன்றாக இலாபம் பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார். எம்.பி.பி.எஸ் சேர்க்கைக்கான தகுதியாக நீட் (NEET) மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், தகுதி மதிப்பெண்கள் (cut-offs) படிப்படியாகக் குறைக்கப்பட்டு, கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திற்கு இணையாகக் கொண்டு வரப்பட்டுள்ளதால், இது மாணவர்களின் தரம் குறித்த வாதத்தை முற்றிலும் அர்த்தமற்றதாக்குகிறது என்பதைச் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

    இந்தச் சூழலில், துணை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை நடைமுறைகள் மாநில அரசின் அதிகார வரம்பிற்குள்ளேயே நீடிக்கவேண்டும் என்பதும், இந்தச் சேர்க்கைக்கு நீட் தேர்வினை விலக்கி வைக்கப்படவேண்டும் என்பதும் மிகவும் அவசியமாகும். எனவே, இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும், இந்த நடவடிக்கையை உடனடியாகக் கைவிடுமாறும் தேசிய துணை மருத்துவ ஆணையத்திற்கு (NCAHP) அறிவுறுத்தவேண்டும் என்றும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த விஷயத்தின் அவசரத் தன்மையைக் கருத்தில்கொண்டு, மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களின் விரைவான தலையீட்டை தாம் எதிர்பார்ப்பதாகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்" என்று தெரிவித்தார். 

    • பி.எஸ்.சி.,(நர்சிங்) படிக்க 17 வயது நிறைவடைந்தவர்களும், 30 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.
    • எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி பிரிவினர் வயது வரம்பு 35 வரை இருக்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட நீட் தேர்வு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- டாக்டர் கனவு வாய்க்குமா, வாய்க்காதா என்ற குழப்பத்தோடு இருக்கும் மாணவர்களுக்கு குறிப்பிடத்தகுந்த வாய்ப்பை துணை மருத்துவ படிப்புகள் வழங்குகிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., கிடைக்கவில்லை என்றாலும் துணை மருத்துவப் படிப்புகள் மாணவர்களுக்கு வாய்ப்பாக அமைய காத்திருக்கிறது.அரசு மருத்துவ கல்லூரிகள், சுயநிதிமருத்துவக் கல்வி நிறுவனங்களில் பல்வேறுதுணை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான அறிவிப்பை மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

    அதில் பி.பார்ம்., (4 ஆண்டு), பி.எஸ்.சி., (நர்சிங்) (3ஆண்டுகள்), பி.பி.டி., (பிஸியோதெரபி) (4 ஆண்டுகள் - 8 செமஸ்டர்) மற்றும் 6 மாத உறைவிட இன்டர்ன்ஷிப், பி.ஏ.எஸ்.எல்.பி., (4ஆண்டுகள்), பி.எஸ்.சி., ரேடியாலஜி அண்ட் இமேஜிங் டெக்னாலஜி (3 ஆண்டுகள்), பி.எஸ்.சி., ரேடியோதெரபி (3 ஆண்டுகள்), பி.எஸ்.சி., கார்டியோ (3 ஆண்டுகள்), பி.ஓ.டி., அக்குபேஷனல் தெரபி (4 ஆண்டுகள்) உள்ளிட்ட படிப்புகள் உள்ளது. பி.எஸ்.சி., (நர்சிங்) படிக்க 2021 டிசம்பர் நிலவரப்படி 17 வயது நிறைவடைந்தவர்களும், 30 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி பிரிவினர் வயது வரம்பு 35 வரை இருக்கலாம். மற்ற படிப்புகளுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 31, 2021 நிலவரப்படி 17 வயது நிரம்பியிருக்க வேண்டும்.பிளஸ் 2-வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது ஏதேனும் ஒரு பாடத்துடன் கணிதம் உள்ள பிரிவை எடுத்து படித்து 40 சதவீதம் மதிப்பெண் பெற்று ஒரே தடவையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பி.பார்ம்., பி.ஏ.எஸ்.எல்.பி., படிப்புகளுக்கு பிளஸ் 2- வில் குறிப்பிட்ட பாடங்களின் கூட்டு சராசரியாக குறைந்தது 40 சதவீதமும், எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி மாணவர்கள் பிளஸ் 2-வில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். பிற படிப்புகளுக்கு பிளஸ் 2 -வில் மேற்குறிப்பிட்ட பிரிவுகளை எடுத்து படித்து தேர்ச்சி பெற்றிருப்பதே தகுதி.மாணவர்கள் விண்ணப்பங்களை www.tnhealth.org, www.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு "The Secretary, Selection Committee, Kilpauk, Chennai 104 என்ற பெயரில் எடுக்கப்பட்ட 400 ரூபாய்க்கான வரைவோலையையும் இணைத்து நேரில் அல்லது தபாலில் அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×