search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளர்கள்"

    • சிலர் கேரளாவிலும் குடியுரிமை பெற்று அந்த மாநில நலத்திட்டங்களிலும் பயன் அடைந்து வருகின்றனர்.
    • தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் கேரள எல்லை அருகே அமைந்துள்ளது. இங்கிருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய், தேயிலை தோட்டத்துக்கு ஏராளமான தமிழக தொழிலாளர்கள் சென்று வருகின்றனர்.

    சின்னமனூர், கம்பம், அய்யம்பட்டி, தர்மத்துப்பட்டி, பல்லவராயன்பட்டி, பண்ணைப்புரம், தேவாரம், போடி, குரங்கணி, கொட்டக்குடி, முந்தல் பகுதியில் இருந்து ஜீப் மூலம் ஏலக்காய் தோட்டத்துக்கு தினசரி தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். மேலும் நிரந்தர தொழிலாளர்கள் கேரளாவில் வீடு எடுத்து தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

    அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள நிரந்தர முகவரியை வைத்து ரேசன் பொருட்கள் மற்றும் கல்வி, வருவாய்த்துறை திட்டங்களில் பயன் அடைந்து வருகின்றனர். சிலர் கேரளாவிலும் குடியுரிமை பெற்று அந்த மாநில நலத்திட்டங்களிலும் பயன் அடைந்து வருகின்றனர்.

    எனவே இருமாவட்ட நிர்வாகமும் இரட்டை குடியுரிமையை ரத்து செய்து ஏதாவது ஒரு இடத்தில் வாக்களிக்க முகாம்கள் நடத்தி வருகின்றனர். தற்போது தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    2 கட்டமாக பல்வேறு இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது. எனவே கேரள தோட்ட தொழிலாளர்கள் விடுப்பு எடுத்து தமிழகம் வருகின்றனர். அவர்கள் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பத்தை பெற்று ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

    மேலும் திருப்பூர், கோவை, ஈரோடு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தேனிக்கு வருகின்றனர். இந்த திட்டம் கீழ்தட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் சொந்த ஊர்திரும்பி முகாம்களில் விண்ணப்பித்து வருகின்றனர். அதிகாரிகள் இதில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
    • சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும்.

    திருவாரூர்:  

    திருவாரூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் குமார் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில்,காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். கிடங்குகளில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும். புதிய சுமை பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும்.

    கணினி மற்றும் துப்புரவு பணியாளர்களை உடன் பணி நிரந்தரம் செய்திட வேண்டும். நிரந்தர பணிகளில் அவுட்சோர்சிங் முறையில் நியமனம் செய்வதை கைவிட வேண்டும்.

    இவைகள் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் புவனேஸ்வரன், மாநில பொருளாளர் ஏழுமலை, மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கொள்முதல் விலையிலிருந்து ரூ 40 முதல் 45 வரைதான் உற்பத்தி செய்த நூலை விற்க முடிகிறது.
    • சுமார் 10,000 கதிர்கள் கொண்ட ஆலை ஒன்றில் 2500 கிலோ நூல் தயாரிக்கப்பட்டால், நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது.

    மங்கலம்:

    திருப்பூர், கோவை உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள நூற்பாலைகள் சந்தித்து வரும் தொடர் நஷ்டத்தினை தவிர்க்க தென் இந்திய நூற்பாலைகளின் கூட்டமைப்பு சார்பில் கடந்த 15-ந் தேதி முதல் சிறு குறு மற்றும் நடுத்தர நூற்பாலைகள் காலவரையற்ற உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தத்தை தொடங்கியுள்ளன. இவர்கள் கடந்த மே மாதம் முதல் 50 சதவீதம் உற்பத்தி நிறுத்தம் செய்திருந்த நிலையில் 15-ந்தேதி முதல் முழு உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்தியாவில் தேவையைவிட உற்பத்தி அதிகமாக இருப்பதும், அதனால் கொள்முதல் மற்றும் உற்பத்தி செலவைவிட விற்பனை விலை மிகக்குறைவாக உள்ளதுமே நூற்பாலைகள் நஷ்டத்தில் இயங்குவதற்கான காரணம் என தென்னிந்திய நூற்பாலைகள் கூட்டமைப்பின் கெளரவ செயலாளர் எஸ். ஜெகதீஷ் சந்திரன் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு கிலோ பருத்தியின் கொள்முதல் விலை ரூ.152 முதல் ரூ.194 ஆக உள்ளது. இந்த பருத்தியின் மூலம் உற்பத்தி செய்யப்படும் 40ம் நம்பர் (40's Count) தரத்திலான நூல் விலை கிலோ ரூ 235க்கு விற்கப்படுகிறது. கொள்முதல் விலையிலிருந்து ரூ 40 முதல் 45 வரைதான் உற்பத்தி செய்த நூலை விற்க முடிகிறது. ஆனால் அந்த நூலை உற்பத்தி செய்வதற்கான ஆள் கூலி, மின் கட்டணம், வரி உள்ளிட்ட செலவினங்களை சேர்த்து ரூ.80 வரை செலவாகிறது. இதனால் ஒரு கிலோவிற்கு ரூ.40க்கும் மேல் நஷ்டம் ஏற்படுகிறது.

    சுமார் 10,000 கதிர்கள் கொண்ட ஆலை ஒன்றில் 2500 கிலோ நூல் தயாரிக்கப்பட்டால், நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் நாம் அதிகம் உற்பத்தி செய்து வருகிறோம். ஆனால் மக்கள் மத்தியில் தேவையில்லாததால் நூல்களுக்கான விலை கிடைப்பதில்லை.

    இந்தியாவில் தேவையை விட இருப்பு அதிகம் இருப்பதற்கான இன்னுமொரு முக்கியக்காரணம், நாம் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வது சுமார் 28 சதவீதம் குறைந்துள்ளது.

    இதற்கு காரணம், இந்தியாவில் உற்பத்தி செய்யும் நூல்களின் விலை, ஏற்றுமதி செய்வதற்காக மற்ற நாடுகளுடன் போட்டியிடும் அளவிற்கு இல்லை. ஏற்கனவே உள்ள உற்பத்திச்செலவைத்தாண்டி 11 சதவீதம் ஏற்றுமதி வரி விதிக்கப்படுவதால், ஏற்றுமதி செய்வதற்கும் உகந்த சூழல் இல்லை என்கிறார் ஜெகதீஷ்.

    தமிழ்நாட்டில் சுமார் 600 நூற்பாலைகளில், 100க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளதாக கூறிய அவர் , எஞ்சியுள்ள நூற்பாலைகளும் மூடப்படும் சூழலுக்கு தள்ளப்படுவதாக தெரிவித்தார்.

    இந்த சூழல் எப்போது மாறும் என்று தெரியவில்லை. இரண்டு மாதங்களுக்குள் நிலைமை சீரானால், மூடப்பட்டுள்ள நூற்பாலைகள் மீண்டும் திறந்து தொழில் செய்ய முடியும், இரண்டு மாதங்களுக்கு மேலானால், அவர்கள் நிரந்தரமாக மூடுவதை தவிர வேறு வழியில்லை. தற்போது உற்பத்தியை நிறுத்தியிருக்கும் எங்களைப்போன்ற சிறு குறு மற்றும் நடுத்தர நூற்பாலைகளின் நிலையும் அதுதான் என்றார்.

    இந்நிலையில் சிறு குறு நடுத்தர நூற்பாலைகள் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்துவதற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே, கழிவுப் பஞ்சை மூலப் பொருளாகக்கொண்டு நூல் உற்பத்தி செய்யும் ஓபன் எண்ட்(ஓஇ) ஆலைகள் உற்பத்தியை நிறுத்திவிட்டனர்.

    தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள சுமார் 600 ஓபன் எண்ட் நூற்பாலைகளில் 300 ஆலைகள் கலர் நூல் தயாரிப்பிலும், 300 ஆலைகள் கிரே நூல் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். சிறு குறு நடுத்தர நூற்பாலைகளைப்போலவே, ஓபன் எண்ட் ஆலைகளும் நஷ்டத்தில் இயக்க முடியாமல் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர். இது குறித்து மறுசுழற்சி ஜவுளித்தொழில் கூட்டமைப்பின் தலைவர் ஜெயபால் கூறுகையில், மின்சாரத்திற்கான தேவை அதிகம் இருக்கும் நேரங்களில் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் அதிக மின் கட்டணம் என்பது சிறு குறு நடுத்தர நூற்பாலைகள் மட்டுமின்றி, ஓபன் எண்ட் ஆலைகளையும் கடுமையாக பாதித்துள்ளது. பெரிய நிறுவனங்களால் சொந்தமாக காற்றாலை அமைத்து அதன் மூலமாகவோ, அல்லது சூரிய ஆற்றல் மூலமாகவோ மின்சாரம் சேமித்து பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், சிறு குறு நிறுவனங்கள் முழுக்க முழுக்க அரசின் மின்சாரத்தையே நம்பியிருக்கிறோம். அதேவேளையில், நாங்கள் 24 மணிநேரமும் செயல்படும் ஆலைகளாக உள்ளோம். அதனால் சுதந்திர இந்தியாவில் நாங்கள் இதுவரை பார்த்திடாத அளவிற்கு மின் கட்டணம் உயர்ந்துள்ளது நஷ்டத்திற்கு இதுவும் ஒரு முக்கியக்காரணம்.

    இந்தியா ஒரே நாடாக இருந்தாலும், மாநிலத்திற்கு மாநிலம் ஜவுளிக்கொள்கைகள் வேறுபடுவதால், மாநிலங்களிடையே போட்டி நிலவுவதாகவும், அதில் தமிழ்நாடு அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் பருத்தி விளைச்சல் மிகவும் குறைவு. சில காலங்களில் பருத்தி விளைச்சலே இருக்காது. ஆனால், இங்குள்ள தொழில்முனைவோரின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தும் திறனால், மற்ற மாநிலங்களில் விளையும் பருத்தியைப் பெற்று, இங்கு ஜவுளி உற்பத்தியில் ஈடுபட்டோம். ஆனால் தற்போது எந்தெந்த மாநிலங்களில் பருத்தி விளைகிறதோ அங்கேயே ஜவுளி உற்பத்தி தொழில் துவங்க பல்வேறு மானியங்களை அந்தந்த மாநில அரசுகள் தருவதால் அந்த மாநிலத்தில் இருப்பவர்களால் லாபகரமாக இயங்க முடிகிறது.

    இந்தியாவைப் பொறுத்தவரையில் சந்தையில் எல்லாத் தொழில் நிறுவனங்களுக்கும் பருத்தி கொள்முதல் விலையும், நூல் உற்பத்தி செய்வதற்கான செலவும், நூல் விற்பனை விலையும் ஒன்றுதான். ஆனால், ஜவுளித்தொழிலுக்கு ஒவ்வொரு மாநிலமும் போட்டிப்போட்டுக் கொண்டு பல்வேறு வகையில் மானியங்கள் கொடுப்பதால், குஜராத், பஞ்சாப், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் உள்ளவர்களால் லாபகரமாக இயக்க முடிகிறது. அதாவது அவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை அவர்கள் பெறும் மானியத்தின் மூலம் ஈடு செய்து லாபம் ஈட்டுகிறார்கள்.இந்தியாவில் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கு பதிலாக சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்றார்.

    பருத்தி விளைச்சலில் இந்தியா முதலிடத்தில் இருந்தாலும், நாம் ஒரு ஹெக்டேருக்கு 350 கிலோ முதல் 450 கிலோ பருத்திதான் விளைவிக்கிறோம். ஆனால் இதே சர்வதேச அரங்கில் நம்முடன் போட்டியிடும் நாடுகளில், ஹெக்டருக்கு 750 கிலோ முதல் 1000 கிலோ வரை விளைவிக்கின்றனர். இதனால் அவர்களுக்கு பருத்தி விலை முதல் நூல் விலை வரை, அனைத்தும் குறைவானதாகவும் சர்வதேச சந்தையில் போட்டிபோடும் வகையிலும் உள்ளதாக நூற்பாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆலைகள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை தவிர்க்க உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்தியுள்ள நிலையில் செய்வதறியாது தவிக்கின்றனர் திருப்பூர், கோவை மாவட்ட நூற்பாலைகளில் பணியாற்றும் நூற்பாலைத் தொழிலாளர்கள்.

    கொரோனா காலத்தில் வாங்கிய கடன்களையே தற்போதுதான் திரும்பச் செலுத்தி வந்தோம். தற்போது, ஆலைகள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், அடுத்து வரும் நாட்களை நினைத்தாலே பயமாக இருக்கிறது என்கிறார்கள் தொழிலாளர்கள்.

    தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டத்தில் உள்ள நூற்பாலை தொழிலாளர்களுக்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ. 350 முதல் ரூ.500 வரை கூலியாக வழங்கப்படுகிறது. ஒருவர் 10 வருடத்திற்கு மேல் வேலை செய்திருந்தால்தான் ரூ .500 கூலி கொடுப்பார்கள். இல்லையென்றால் ரூ .350ல் முதல் ரூ. 400 வரைதான் கூலி கிடைக்கும். இந்த கூலி உற்பத்தி காலத்தில் வழங்கப்படுவது. தற்போது உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் சம்பளத்தை குறைத்து கொடுக்கிறார்களா அல்லது சம்பளமே இல்லை என சொல்லப்போகிறார்களா என்பது அவர்கள் மாதச்சம்பளம் கொடுக்கும்போதுதான் தெரியும் என்கின்றனர் தொழிலாளர்கள்.

    தொழிலாளர்களின் சம்பளம் குறித்து கேட்ட போது, தொழிலாளர்களின் நலனை தொழில் நிறுவனங்கள் பார்த்துக்கொள்ளும் . அதிக நஷ்டத்தில் இயக்கிய காலத்திலேயே, தொழிலாளர்களுக்கான சம்பளத்தை உரிய நேரத்தில் கொடுத்துள்ளோம். தற்போது உற்பத்தி நிறுத்தத்தால் அவ்வளவு நஷ்டம் இல்லை என்பதால் அவர்களுக்கு தேவையானதை நாங்கள் எப்போதும் பார்த்துக்கொள்வோம் என நூற்பாலை உரிமையாளர்கள் தெரிவித்தனர். எனவே நூற்பாலை பிரச்சினைக்கு மத்திய மாநில அரசுகள் விரைவில் தீர்வு காண வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    • வடமாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு வரும் ரெயில்களில் சுமார் 400 பேர் புதியதாக திருப்பூருக்கு வேலைக்காக வருகின்றனர்
    • திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களில் 50 சதவீதம் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பகுதியில் பின்னலாடை தொழில்கள் மற்றும் அதனை சார்ந்த தொழில்களான டையிங், நிட்டிங், காம்பேக்டிங், வாசிங், விசைத்தறி உள்ளிட்ட தொழில்களும் மற்றும் உடுமலை பகுதியில் விவசாயம், காங்கயம் பகுதியில் தேங்காய் களம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த தொழில்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் வெளி மாநிலங்களான அசாம், ஒடிசா, பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி பணியாற்றி வருகின்றனர்.

    தினசரி வடமாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு வரும் ரெயில்களில் சுமார் 400 பேர் புதியதாக திருப்பூருக்கு வேலைக்காக வருகின்றனர். இடைத்தரகர்கள் மூலம் ரெயில் நிலையத்திலேயே அவர்களுக்கான பணி இடத்தை தேர்வு செய்து பிரித்து அனுப்புகிறார்கள். மேலும் ரெயில் நிலையங்களில் தினசரி இறங்கும் வடமாநிலத்தவர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் மெட்டல் டிடெக்டர் உதவியோடு போலீசார் சோதனை நடத்துகின்றனர்.

    இந்நிலையில் திருப்பூரில் கொலை, கொள்ளை, வழிப்பறி, செயின் பறிப்பு ஆகிய சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவிநாசி பகுதியில் இரவு நேரங்களில் வாகனங்களில் குடும்பத்தோடு வருபவர்களை குறி வைத்து துப்பாக்கிகளை காட்டி மிரட்டி பணத்தை பறிக்கும் செயலில் ஈடுபட்டனர். அவர்கள் யார்? என போலீசார் தேடியபோது அந்த குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேருமே வட மாநிலத்தவர்கள் என தெரியவந்தது.

    மேலும் திருப்பூரில் மோசடி சம்பவங்களை பெரும்பாலும் வடமாநிலத்தவர்களே அரங்கேற்றம் செய்கின்றனர். இப்படி குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட பின் வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று விடுகின்றனர்.வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனங்களிலும் அவர்களிடம் முறையான ஆவணங்களை பெறுவதில்லை. இதனால் குற்றங்கள் நடைபெற்ற பின் வடமாநில தொழிலாளர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இதனால் திருப்பூரில் தங்கியுள்ள வடமாநிலத்தவர்களிடம் முறையான ஆவணங்களை பெற்றுக்கொண்டு அடையாள அட்டை வழங்க வேண்டுமென பொது மக்கள்-சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் திருப்பூரில் தங்கியுள்ள வட மாநிலத்தவர்களுக்கு முறையான அடையாள அட்டை வழங்க வேண்டுமென தேசிய மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி சட்டபணிகள் ஆணைக்குழு, திருப்பூர் மாவட்ட போலீஸ், தொழிலாளர் நலத்துறை, கல்வித்துறை சார்பில் வடமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க தகவல் சேகரிப்பு முகாம் ஜெய்வா பாய், நஞ்சப்பா., கே.எஸ். சி., பழனியம்மாள் ஆகிய பள்ளிகளில் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களில் 50 சதவீதம் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஏதேனும் ஒரு பிரச்சனை என்றாலும் வடமாநிலத்தவர்களின் பாதுகாப்பிலும் அடையாள அட்டை வழங்குவது அவசியமாகும். தற்போது நீதித்துறையின் முன் முயற்சியில் வடமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க தகவல் சேகரிப்பது பாராட்டுக்கு உரியது என்றனர்.

    • 70க்கும் அதிகமான தன்னார்வலர் உதவியுடன் சேவை அளிக்கப்படுகிறது.
    • மாதம் ஒருமுறை மருத்துவ சேவை, ஆண்டுக்கு நான்குமுறை புத்தாடைகள் வழங்கி வருகின்றனர்.

    திருப்பூர் :

    ஆதரவற்றவர்களுக்கும், மாற்றத்திறனாளிகளுக்கும் உணவளித்து சேவையாற்றும் அட்சயபாத்திரம் அமைப்பு 2019 நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. திருப்பூரில் 15 மண்டலங்களாக பிரித்து 70க்கும் அதிகமான தன்னார்வலர் உதவியுடன் சேவை அளிக்கப்படுகிறது. ஆதரவற்றவர், முதியோர், மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு தினமும் காலை உணவு வழங்கப்படுகிறது. மாதம் ஒருமுறை மருத்துவ சேவை, ஆண்டுக்கு நான்குமுறை புத்தாடைகள் வழங்குவது, பராமரிப்பது என சேவையாற்றி வருகின்றனர்.

    அட்சய பாத்திரம் அமைப்பின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து ஆலோசிக்க சிறப்பு கருத்தரங்கு மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. மங்கலம், ஆண்டிபாளையம் பாரடைஸ் அரங்கில் அன்னம் பகிர்ந்திடு, சாய்ந்திட தோள்கொடு என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடந்தது.

    உலக நல வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சிக்கு, அட்சயபாத்திரம் ஆலோசனை குழு தலைவர் மோகன்கார்த்திக் தலைமை வகித்தார். தலைவர் செந்தில்குமார், செயலாளர் நாகராஜன் ஆகியோர் சமூக பணிகளை விளக்கி பேசினர்.

    அறக்கட்டளையின் புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி வெளியே ஓட்டல்களில் உணவு ஆர்டர் செய்து ஏழைகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. இனி புதிய சமையல் கூடம் உருவாக்கி தரமான உணவு தயாரித்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தன்னார்வலர்கள் பங்களிப்புடன், இலவச இரவு நேர உணவு வழங்கவும் திட்டமிட்டுள்ளனர். அத்துடன் பொதுமக்கள், தொழிலாளர் பயன்பெறும் வகையில் குறைந்தவிலையில் மதிய உணவு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • குழந்தை தொழிலாளா் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழியை அனைவரும் வாசித்து ஏற்றனா்.
    • கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தாா்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதியேற்பு நிகழ்வு நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் குழந்தைத் தொழிலாளா் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழியை அனைத்து அரசு துறை அலுவலா்களும் வாசித்து ஏற்றனா்.

    பின்னா், சமூக பாதுகாப்புத் துறை சாா்பில் நடைபெற்ற உலக குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தாா்.

    இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்), ஸ்ரீகாந்த் (வளா்ச்சி), தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) தவவளவன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் குளோரி குணசீலி, குழந்தைகள் நலக் குழுத் தலைவா் உஷாநந்தினி விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    • இந்தியாவில் குழந்தை தொழிலாளர் தடை சட்டம் ஏற்கனவே அமலில் இருக்கிறது.
    • உடல் ரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்.

    கொத்தடிமைகளாக இருந்து மீண்டு தங்கள் உழைப்பால், சாதனையால் கெத்து காட்டும் தேவி-துர்கா சகோதரிகள்

    சுகத்தையும், சந்தோசத்தையும் மட்டுமே சுமக்க வேண்டிய பருவம் குழந்தை பருவம். அப்படிப்பட்ட பருவத்தை கஷ்டத்தை சுமக்க வைக்கும் பருவமாக மாற்றுவது வேதனையானது.

    தோளில் புத்தக பையும், முகத்தில் புன்னகையுமாக துள்ளித்திரிய வேண்டிய பருவத்தில் அவர்களை தொழிலாளர்களாக்கி கல், மண் சுமப்பது முதல் கடினமான பல வேலைகளை செய்யும் தொழிலாளர்களாக மாற்றுவதை ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் குழந்தை தொழிலாளர்கள் எண்ணக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.

    இந்தியாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் அதிகம் இருப்பதாக ஐ.நா. சபையின் யுனிசெப் நிறுவன தரவுகள் தெரிவிக்கின்றன.

    இந்தியாவில் குழந்தை தொழிலாளர் தடை சட்டம் ஏற்கனவே அமலில் இருக்கிறது. ஆனாலும் குடும்ப வறுமை காரணமாக குழந்தை தொழிலாளர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.

    2021-22 கால கட்டத்தில் தமிழ்நாட்டில் 2,586 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டார்கள். அதே நேரம் 28 சதவீதமாக இருந்த குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை கொரோனாவுக்கு பிறகு 79 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.

    இவர்களுக்கு கடினமான பணிகளை கொடுப்பதால் வளர் இளம் பருவம் முற்றிலுமாக சிதைந்து போகிறது. உடல் ரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்.

    மண்ணுக்கு மரம் பாரமா.... பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா...? என்று பெருமையுடன் கூறிக் கொண்டாலும் குடும்பத்தின் மொத்த பாரத்தையும் சுமக்கும் கட்டாயத்துக்கு குழந்தைகளை ஆக்கி விடுகிறார்கள்.

    எதுவும் புரியாத அந்த வயதில் வருமானத்துக்காக, வரும் துயரத்தை உணராமல் தொழிலாளர்களாக்கி விடுகிறார்கள்.

    உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அந்த குழந்தைகள் அனுபவிக்க வேண்டிய ஆசைகள், கனவுகள் அனைத்தும் சிதைக்கப்படுகின்றன.

    குழந்தை தொழிலாளர்கள் நடத்தப்படும் விதமும், அவர்கள் அனுபவிக்கும் வேதனைகளும் வலி நிறைந்தது. குறைந்த கூலி கொடுத்து நிறைய லாபம் சம்பாதிக்கலாம் என்ற உணர்வுடன்தான் தொழில் நடத்துபவர்கள் அவர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள்.

    இந்த மாதிரி வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களும் சரி, வேலைக்கு அமர்த்துபவர்களும் சரி அந்த குழந்தைகளின் விருப்பு வெறுப்பை பற்றி யோசிப்பது கிடையாது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமான இன்று இருளர் சமூகத்தைசேர்ந்த இளம் பெண்களான தேவி (23), துர்கா (25) என்ற சகோதரிகள் இருவரும் மீட்கப்படும் கொத்தடிமை தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இதற்கு காரணம் இவர்களும் கொத்தடிமைத் தொழிலாளர்களாக இருந்து மீண்டவர்கள். தாங்கள் அனுபவித்த வேதனைகளையும், கஷ்டங்களையும் மற்ற குழந்தைகளும் அனுபவிக்க கூடாது என்ற வைராக்கியத்துடன் பணியாற்றுகிறார்கள்.

    இருளர் சமூகத்தில் பிறந்து அடிமைத் தொழிலாளர்களாக இருள் சூழ்ந்த வாழ்க்கை வாழ்ந்ததையும் மலரும் நினைவுகளாக பகிர்ந்து கொண்டார்கள்.

    எங்கள் இருளர் சமூகத்தில் கல்வி அறிவு அவ்வளவாக கிடையாது. நாங்கள் பெற்றோருக்கு மொத்தம் உள்ள 5 சகோதரர்களில் நாங்கள்தான் கடைசி பிள்ளைகள். எங்கள் சமூகத்தில் அவ்வளவாக யாரையும் பள்ளிக்கு அனுப்பமாட்டார்கள்.

    அதே போல்தான் சிறு வயதிலேயே எங்களையும் திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் ரைஸ்மில் வேலையில் ஈடுபட வைத்தார்கள். அந்த மில்லில் வேலைக்கு கொத்தடிமை தொழிலாளர்களாக அமர்த்தப்பட்டிருந்தோம்.

    எங்கள் தாத்தா 20 ஆயிரம் ரூபாயை அந்த மில் உரிமையாளரிடம் முன் பணமாக வாங்கியிருக்கிறார். தனது மகன் மாரியின் திருமணத்துக்காக வாங்கிய அந்த பணத்தை அவரால் திருப்பி செலுத்த முடியாததால் வேலை செய்து கழித்து கொள்வதாக சொல்லி வேலையில் சேர்ந்தோம். திருமணம் முடிந்த மாரி மற்றும் அவரது மனைவி மல்லிகாவும் அதே மில்லில் வேலைக்கு சேர்ந்தார்கள்.

    அந்த மில்லில் இரவில் நெல் அவிப்பார்கள். பகலில் அதை உலர வைத்து அள்ளி மூட்டை கட்ட வேண்டும். அதிகாலை 3 மணிக்கெல்லாம் மில் உரிமையாளர் வந்து எங்களை எழுப்புவார். ஏற்கனவே இரவில் நீண்ட நேரம் வேலை பார்த்த களைப்பால் தூக்கம் தூக்கமாக வரும். தூங்கி வழிந்தாலும் அடிப்பார்கள். அந்த அடியை வாங்கிக் கொண்டு வலியோடு வேலை செய்ய ஓடுவோம்.

    பல ஆண்டுகள் அங்கேயே அடைத்து வைக்கப்பட்டு இருந்தோம். ஒரு தம்பதி அவர்களது சின்ன குழந்தை மற்றும் எங்களை நெல் ஊற வைத்த தொட்டியை கழுவ வைப்பார்கள். சரியாக கழுவவில்லை என்றாலும் முதலாளி அடிப்பார்.

    எத்தனையோ நாட்கள் வலி தாங்க முடியாமல் அழுதிருக்கிறேன். அந்த நெல் ஊற வைத்த தொட்டிக்குள் ஒருமுறை நான் தவறி விழுந்து காப்பாற்றப்பட்டதாகவும் என் அம்மா கூறியிருக்கிறார்.

    இரவு பகல் பாராமல் வேலை பார்ப்போம். சரியாக தூங்க முடியாது. தூங்குவதற்கு விரிப்பு கூட கிடையாது. தரையில்தான் படுத்து தூங்க வேண்டும். ஒருவேளை சாப்பாடு கூட வாய்க்கு ருசியாக கிடைக்காது. பெரும்பாலும் பழைய கஞ்சிதான் தருவார்கள்.

    திடீரென ஒருநாள் எனது தாத்தா இறந்து போனார். அவரது இறுதிச் சடங்குக்கு கூட எங்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.

    அந்த மில் அருகிலேயே உடலை அடக்கம் செய்தார்கள். அப்போதும் எங்களை தப்பி சென்று விடாமல் பார்த்து கொள்வதற்காக மில்லின் கணக்காளர் எங்களோடு நின்று கொண்டார்.

    அந்த மில்லில் இருந்து எப்படியாவது விடுதலையாக வேண்டும் என்று நினைத்தாலும் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்போது ஒரு நாள் எனது சகோதரர் ரகுபதியும், மாமாவும் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்து கொண்ருந்தார்கள்.

    அப்போது தண்ணீரில் மூழ்கி மாமா இறந்து போனார். அவரது உடலை ஊருக்கு கொண்டு செல்ல உரிமையாளருடன் பெரும் போராட்டமே நடத்தினோம். ஊருக்கு சென்ற பிறகு திரும்பி வேலைக்கு செல்ல மறுத்தேன். இதனால் எங்களை மட்டும் ஊரில் விட்டு விட்டு அம்மாவும், அப்பாவும் மீண்டும் வேலைக்கு சென்று விட்டார்கள்.

    தொடர்ந்து அங்கு நடந்த சித்ரவதைகளை தங்க முடியாத எனது பெற்றோர் ஒரு பொது தொலைபேசியில் இருந்து போன் மூலம் உதவி கேட்டுள்ளார். அந்த தகவல் அடிப்படையில் அரசு அதிகாரிகள் அந்த மில்லுக்கு வந்து அடிமைப்பட்டு கிடந்த அனைவரையும் மீட்டனர் என்று தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்தார்கள்.

    வெளியே வந்ததும் எல்லோரும் படிக்க ஆசைப்பட்டுள்ளார்கள். ஆனால் தேவியின் அண்ணன்கள் சின்னராசு, ரகுபதி அக்காள் நாகம்மாள் ஆகியோர் வயது அதிகமாகி விட்டதால் பள்ளியில் சேர்ந்து படிக்க முடியாமல் ஆகி விட்டது.

    அந்த நேரத்தில் தந்தையும் குடும்பத்தை விட்டு பிரிந்து விட்டதால் குடும்பத்திற்காக போராட வேண்டியிருந்துள்ளது. அந்த சூழ்நிலையிலும் கஷ்டப்பட்டு துர்கா 12-வது வகுப்பு வரை படித்துள்ளார்.

    அதன் பிறகு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து தனது தங்கை தேவியை நர்சிங் படிக்க வைத்துள்ளார். நர்சிங் படித்துள்ள தேவிக்கு அரசு ஆஸ்பத்திரியில் வேலைக்கு சேர்ந்து ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஆசை. அந்த ஆசை நிறைவேறுமா? என்ற கனவோடு காத்திருக்கிறார்.

    • கட்டுமான தொழிலாளிகளுக்கு பணியிடை விபத்து மரண உதவித்தொகை ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது.
    • வருகிற 13-ந்தேதி சிறப்பு முகாம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் மாவட்ட தொழிலாளர் நல வாரிய கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கி பேசியதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலா ளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாள ர்கள் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம், மகப்பேறு, கல்வி, இயற்கை மரணம், விபத்து மரணம், கண்கண்ணாடி, முடக்கு ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத கட்டுமான தொழிலாளிகளுக்கு பணியிடை விபத்து மரண உதவித் தொகை ரூ.5 லட்சம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கடந்த 5 மாதத்தில் மட்டும் தொழிலா ளர் நல வாரியம் சார்பில் தஞ்சை மாவட்டத்தில் ரூ.1 கோடியே 59 லட்சத்து 17 ஆயிரத்து 700-க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    வருகிற 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஆட்டோ டிரைவர்களுக்கு நலவாரியத்தில் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் 1 மணி அளவில் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    இதில் ஆட்டோ டிரைவர்கள் தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், புகைப்படம் 2 ஆகியவற்றுடன் நேரில் வந்து நலவாரிய அலுவலகத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் ஆதார் கார்டில் செல்நம்பர் இணைத்திருக்க வேண்டும். பெண் ஆட்டோ டிரைவர்களுக்கு புதிய ஆட்டோ வாங்குவதற்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படு த்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    மதுரை

    அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் டிரைவர் மற்றும் கண்டக்டர் களுக்கு வார விடுப்பு வழங்க வேண்டும், மண்ட லங்களுக்கு இடையே இடமாறுதல் செய்யும் அதிகாரம் அந்தந்த பொது மேலாளர்களுக்கே வழங்க வேண்டும், பழைய பேருந்து களை பராமரிப்பு செய்ய தேவையான தரமான உதிரி பாகங்கள் வழங்க வேண்டும், பணி நேரம் சட்ட விரோத மாக 12 மணி நேரமாக மாற்றப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை அரசு போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட போக்குவரத்து கழக பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட் டத்தின் போது போக்கு வரத்துதுறை மற்றும் தமிழக அரசை கண்டித்தும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினா். போக்குவரத்து பணியாளர்களின் போராட்டத்தை முன்னிட்டு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    • மாதத்தில் 15 நாட்கள் பணி வழங்காததால் சம்பள இழப்பு ஏற்படுகிறது.
    • போராட்டத்தில் ஈடுபட்டோர் பணி வழங்காததால் சம்பள இழப்பு ஏற்பட்டு பாதிக்கப்படுகிறோம்.

    சென்னை:

    அயனாவரம் பணிமனையில் 126 பஸ்கள் உள்ளன. இங்கிருந்து பெசன்ட் நகர், ரெட்ஹில்ஸ், ஆவடி, திருவான்மியூர், கோயம்பேடு உள்ளிட்ட சென்னையில் பல இடங்களுக்கு பஸ்கள் செல்கின்றன. 741 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்.

    இந்த தொழிலாளர்கள் பணிக்காக அதிகாலை 3 மணிக்கே வீட்டிலிருந்து புறப்பட்டு வருகின்றனர். அவ்வாறு பணிக்கு வரும் தொழிலாளர்கள் தினமும் காலை 10 பேர், மாலை 10 போ் பேருந்துகள் இல்லை, டிரைவர் இல்லை என திருப்பி அனுப்படுகின்றனர். இதில் பெரும்பாலும் கண்டக்டர்கள்தான் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர். மாதத்தில் 15 நாட்கள் பணி வழங்காததால் சம்பள இழப்பு ஏற்படுகிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை பணிமனை முன்பு பணி வழங்க கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து போக்குவரத்து தொழிலாளர்கள் கூறியதாவது:-

    போராட்டத்தில் ஈடுபட்டோர் பணி வழங்காததால் சம்பள இழப்பு ஏற்பட்டு பாதிக்கப்படுகிறோம். பஸ்கள் இல்லாமலும் டிரைவர் இல்லாமலும் பணிகள் வழங்காவிட்டால் முந்தைய ஆட்சி காலத்தில் பஸ் நிலையத்தில் பயணிகள் பிக் அப், பஸ் நிலையத்தில் உள்ள ஆட்டோ, மற்ற வாகனங்களை அப்புறப்படுத்தும் பணி, யோகா விடுப்புகள் அனுப்பினால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படாது.

    மேலும் பணி வழங்காமல் திருப்பி அனுப்பினால் பணிக்கு வந்ததற்கான வருகைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளோம் என்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை மண்டல அளவிலான வெளிமாநில தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
    • இழப்பீடு குறித்து மதுரை தொழிலாளர் இணை ஆணையரும் எடுத்துக்கூறினர்.

    மதுரை

    மதுரை மண்டல அளவிலான வெளிமாநில தொழிலாளர்கள் ஒருங்கிணைப்புகுழு கூட்டம் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அக்குழுவின் தலைவரும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையரு மான குமரன் தலைமை தாங்கினார். மதுரை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக கூடுதல் இயக்குநர் ராஜசேகரன், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன், பல்வேறு மாவட்ட அதிகாரிகள், அமைப்பு நிர்வாகிகள், வர்த்தக சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் வெளிமாநில தொழிலாளர்களின் சட்டப்படியான உரிமைகள் மற்றும் அரசின் திட்டங்களை எடுத்துரைத்தார். மதுரை மண்டலத்தில் 8 மாவட்டங்களில் உள்ள கடைகள், உணவு நிறுவனங்கள், மருத்துவமனைகள், சினிமா தியேட்டர்கள், அழகு நிலையங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தொழிலாளர் துறையிலும் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களை தொழிகை பாதுகாப்பு மற்றும் சுகாதாரதுறையின் வெப் போர்ட்டலிலும்

    (labour.in.gov.in/ism) பதிவேற்றம் செய்து அனைத்து வெளிமாநில தொழிலாளர்களையும் பதிவேற்றம் செய்ய கோரப்பட்டது.

    மேலும் அமைப்புசாரா தொழில்களில் வேலை செய்யும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை சேகரித்து அவற்றை தொழிவாளர் உதவி ஆணையர்கள் வெப் போர்ட்டலில் பதிவேற்றம் செய்ய கோரப்பட்டது. வெளிமாநில தொழிலா ளர்களுக்கு ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரச்சினை, பணியிட விபத்துகள் ஏதும் ஏற்படின் உடனுக்குடன் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதுடன். அரசின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்ல கோரப்பட்டது.

    அதனை தொடர்ந்து வெளிமாநில தொழிலாளர்கள் சட்ட உரிமைகள் குறித்து மதுரை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக கூடுதல் இயக்குநரும், விபத்து மரண இழப்பீடு குறித்து மதுரை தொழிலாளர் இணை ஆணையரும் எடுத்துக்கூறினர்.

    தொழிலாளர்களின் பணிநிலைமை, குறைந்தபட்ச ஊதியம், குழந்தைகளின் கல்வி மற்றும் விபத்து நேர்ந்தால் வழங்கப்படும் இழப்பீடு போன்ற விவரங்கள் குறித்து உறுப்பினர்கள் விவாதித்தனர். மேலும் பணியிடத்தில் சரியான பணி நிலைமை, குறைந்த பட்ச ஊதியம், 8 மணி நேர வேலை, குடும்பத்துடன் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதி போன்றவை வேலையளிப்பவரால் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்குமாறும், ஏதும் குறைபாடுகள் இருப்பின் சம்மந்தப்பட்ட துறையினருக்கு தெரிவித்து தீர்வுகாணுமாறு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    • ஆலை தொழிலாளர்களும், கரும்பு விவசாயிகள் பலமுறை போராட்டம் நடத்தியும், கடந்த ஆட்சியில் ஆலையை இயக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • தமிழக அரசு ஆலையை இயக்க 10 பேர் கொண்ட ஆய்வு குழு ஒன்றை அமைத்துள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறைஅருகே தலைஞாயிறு கிராமத்தில் என்.பி.கே.ஆர்.ஆர் அரசு கூட்டுறவு சக்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை அதிகாரிகளின் அலட்சியத்தினாலும், தவறான ஆலை விரிவாக்க த்தாலும் நஷ்டம் ஏற்பட்டு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது.

    இதனால் ஆயிரக்கணக்கான கரும்பு விவசாயி களும், ஆலை தொழிலாளர்களும் வேலை இன்றி பாதிக்கபட்டனர், ஆலை தொழிலாளர்களும், கரும்பு விவசாயிகள் பலமுறை போராட்டம் நடத்தியும், கடந்த ஆட்சியில் ஆலையை இயக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது தமிழக அரசு ஆலையை இயக்க 10 பேர் கொண்ட ஆய்வு குழு ஒன்றை அமைத்துள்ளது.இந்த குழுவில் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் சிவமலர் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் இந்த ஆலையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு பணிபுரிந்த போது ஆலை மூடுவதற்கு காரணமாக இருந்தவர் எனக் கூறியும்,

    இவரை தற்போது ஆய்வு குழுவில் இருப்பதால் இவர் ஆலைக்கு எதிராக தான் செயல்படுவார்.எனவே இந்தகுழுவில் இருந்து நீக்க வலியுறு த்தியும், மக்களால் தேர்ந்தெடு க்கபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராஜகுமார், ஆலை இயங்காது என மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்வதை கண்டித்தும் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், மாநில கரும்பு விவசாய சங்க செயலாளர் காசிநாதன் தலைமையில் கவனஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்பா ட்டத்தில்நூற்றுக்கு மேற்பட்ட கரும்பு விவசா யிகள் கலந்து கொண்டு, கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் சிவமலர் எதிரா கவும், எம்.எல்.ஏராஜ்குமாருக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.

    ×