search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அடையாள அட்டை வழங்குவதற்காக திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களின் விவரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்
    X

    அடையாள அட்டை வழங்குவதற்காக திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களின் விவரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்

    • வடமாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு வரும் ரெயில்களில் சுமார் 400 பேர் புதியதாக திருப்பூருக்கு வேலைக்காக வருகின்றனர்
    • திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களில் 50 சதவீதம் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பகுதியில் பின்னலாடை தொழில்கள் மற்றும் அதனை சார்ந்த தொழில்களான டையிங், நிட்டிங், காம்பேக்டிங், வாசிங், விசைத்தறி உள்ளிட்ட தொழில்களும் மற்றும் உடுமலை பகுதியில் விவசாயம், காங்கயம் பகுதியில் தேங்காய் களம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த தொழில்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் வெளி மாநிலங்களான அசாம், ஒடிசா, பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி பணியாற்றி வருகின்றனர்.

    தினசரி வடமாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு வரும் ரெயில்களில் சுமார் 400 பேர் புதியதாக திருப்பூருக்கு வேலைக்காக வருகின்றனர். இடைத்தரகர்கள் மூலம் ரெயில் நிலையத்திலேயே அவர்களுக்கான பணி இடத்தை தேர்வு செய்து பிரித்து அனுப்புகிறார்கள். மேலும் ரெயில் நிலையங்களில் தினசரி இறங்கும் வடமாநிலத்தவர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் மெட்டல் டிடெக்டர் உதவியோடு போலீசார் சோதனை நடத்துகின்றனர்.

    இந்நிலையில் திருப்பூரில் கொலை, கொள்ளை, வழிப்பறி, செயின் பறிப்பு ஆகிய சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவிநாசி பகுதியில் இரவு நேரங்களில் வாகனங்களில் குடும்பத்தோடு வருபவர்களை குறி வைத்து துப்பாக்கிகளை காட்டி மிரட்டி பணத்தை பறிக்கும் செயலில் ஈடுபட்டனர். அவர்கள் யார்? என போலீசார் தேடியபோது அந்த குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேருமே வட மாநிலத்தவர்கள் என தெரியவந்தது.

    மேலும் திருப்பூரில் மோசடி சம்பவங்களை பெரும்பாலும் வடமாநிலத்தவர்களே அரங்கேற்றம் செய்கின்றனர். இப்படி குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட பின் வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று விடுகின்றனர்.வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனங்களிலும் அவர்களிடம் முறையான ஆவணங்களை பெறுவதில்லை. இதனால் குற்றங்கள் நடைபெற்ற பின் வடமாநில தொழிலாளர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இதனால் திருப்பூரில் தங்கியுள்ள வடமாநிலத்தவர்களிடம் முறையான ஆவணங்களை பெற்றுக்கொண்டு அடையாள அட்டை வழங்க வேண்டுமென பொது மக்கள்-சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் திருப்பூரில் தங்கியுள்ள வட மாநிலத்தவர்களுக்கு முறையான அடையாள அட்டை வழங்க வேண்டுமென தேசிய மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி சட்டபணிகள் ஆணைக்குழு, திருப்பூர் மாவட்ட போலீஸ், தொழிலாளர் நலத்துறை, கல்வித்துறை சார்பில் வடமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க தகவல் சேகரிப்பு முகாம் ஜெய்வா பாய், நஞ்சப்பா., கே.எஸ். சி., பழனியம்மாள் ஆகிய பள்ளிகளில் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களில் 50 சதவீதம் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஏதேனும் ஒரு பிரச்சனை என்றாலும் வடமாநிலத்தவர்களின் பாதுகாப்பிலும் அடையாள அட்டை வழங்குவது அவசியமாகும். தற்போது நீதித்துறையின் முன் முயற்சியில் வடமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க தகவல் சேகரிப்பது பாராட்டுக்கு உரியது என்றனர்.

    Next Story
    ×