search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயலலிதா"

    • எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழகத்திற்கு நல்லாட்சி கொடுத்தவர் என்றால் அது அம்மா ஜெயலலிதா அவர்கள்தான்.
    • புதுச்சேரியில் இந்த முறைவாக்களிப்போம் தாமரைக்கே’ என்பன போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

    புதுச்சேரி:

    கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி வைத்து போட்டியிட்டது. தற்போது இதில் விரிசல் ஏற்பட்ட நிலையில் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜனதா தனித்தனியே கூட்டணி அமைத்து களம்காண உள்ளன.

    இந்த சூழலில் புதுவை பா.ஜனதா லாஸ்பேட்டை தொகுதி நிர்வாகிகள் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டு எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா படத்துடன் பல இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளத்திலும் வெளிவந்துள்ளது.

    அதில் பிரதமர் பேசிய பேச்சுகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக 'தரமான கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை எம்.ஜி.ஆர். கொடுத்துள்ளார். அதனால்தான் ஏழை மக்கள் அனைவரும் எம்.ஜி.ஆரை ஒப்பற்ற தலைவராக ஏற்றுக் கொண்டனர்' என்றும், 'எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழகத்திற்கு நல்லாட்சி கொடுத்தவர் என்றால் அது அம்மா ஜெயலலிதா அவர்கள்தான்.

    அவர் தன் வாழ்நாள் முழுவதையும் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்தார்'என்றும், 'புதுச்சேரியில் இந்த முறைவாக்களிப்போம் தாமரைக்கே' என்பன போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

    இந்த போஸ்டரில் பிரதமர் மோடி, முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, புதுவை பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, மாநில பா.ஜனதா தலைவர் செல்வகணபதி எம்.பி., உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் பா.ஜனதா தலைவர் சாமிநாதன் ஆகியோரது படங்களும் இடம்பெற்றுள்ளன. அ.தி.மு.க. வாக்குகளை தங்கள்வசம் இழுக்கவே இதுபோன்ற நடவடிக்கையில் புதுச்சேரி பா.ஜனதா கட்சியினர் ஈடுபட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

    கூட்டணி முறிந்துள்ள நிலையில் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆகியோரின் படங்களை போட்டு தாமரைக்கு வாக்கு கேட்கும் பா.ஜனதாவின் இந்த உத்தி, புதுவை அ.தி.மு.க.வினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடி தன்னை நம்பவில்லை. தன் செல்வாக்கை நம்பவில்லை.
    • அ.தி.மு.க. தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    தூத்துக்குடி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தார். குறிப்பாக பல்லடத்தில் பேசிய பேச்சில் கடந்த 10 ஆண்டுகளில் அவர் மக்களுக்கு செய்தது என்ன என்பது பற்றி பெரிதாக குறிப்பிடவில்லை.

    10 ஆண்டுகளில் இந்த நாடு என்ன முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்பதையும், என்ன வளர்ச்சி கண்டிருக்கிறது என்பது குறித்தும் அவர் குறிப்பிடவில்லை.

    குறிப்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை விமர்சிப்பது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்களை புகழ்ந்து பேசுவது என தனது உரையை அமைத்துக் கொண்டார்.

    தமிழ்நாட்டில் கொள்கைகளை பேசி தன்னுடைய கட்சிகளை வளர்க்க வேண்டும் என்று பா.ஜனதா, பிரதமர் மோடி, அமித்ஷா போன்றவர்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இங்கு ஆட்சியில் இருக்கக்கூடிய தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை விமர்சிப்பது, அத்துடன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்களின் புகழை பேசுவது போன்ற யுக்தியை அவர் கையில் எடுத்திருக்கிறார்.

    பிரதமர் மோடி தன்னை நம்பவில்லை. தன் செல்வாக்கை நம்பவில்லை. தன் மீது மக்கள் கொண்டிருக்கின்ற நன்மதிப்பை நம்பவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை நம்பித்தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலைக்கு மோடி வந்து விட்டார் என்பதுதான் அவரது பல்லடம் உரை நமக்கு உணர்த்துகிறது.

    எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் புகழ்ந்தால் அ.தி.மு.க.வின் வாக்கை பெற முடியும் என நினைக்கிறார்கள். இதன் மூலம் அ.தி.மு.க.வை பலவீனப்படுத்த வேண்டும், அதன் வாக்கு சதவீதத்தை சரிய செய்ய வேண்டும் என பா.ஜனதா கணக்கு போடுகிறது என்று உணர முடிகிறது. அ.தி.மு.க. தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளையும் எதிர்க்கிறோம் என்ற பெயரில் பா.ஜனதாவிற்கு வாக்களிக்க கூடிய நிலை வந்தால் தமிழ்நாட்டிற்கு பெரிய தீங்கு விளையும். இதை தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக அ.தி.மு.க. தொண்டர்கள் உணர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டி காட்டுகிறது. அ.தி.மு.க. தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    எத்தனை முறை பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்தாலும், சுற்றி சுழன்று வந்து பிரசாரம் மேற்கொண்டா லும் தமிழ்நாட்டு மக்கள் மோடி வித்தையை நம்ப மாட்டார்கள்.

    பா.ஜனதாவுக்கு பெரிய செல்வாக்கு உருவாகாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தி.மு.க. கூட்டணி 40-க்கு 40 வெற்றி பெறும். தொகுதி பங்கீடு குறித்து ஓரிரு நாட்களில் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • அப்படி சொல்பவர்களை செருப்பால அடிப்பேன் என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் பதில் அளித்துள்ளார்.
    • அதிமுகவை பாஜக கூட்டணிக்குள் இழுப்பதற்காகவும், அதிமுக வாக்குவங்கியை தன பக்கம் இழுப்பதற்கும் தான் பிரதமர் அவ்வாறு பேசி வருகிறார்

    திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் எம்.பி திருநாவுக்கரசர்.

    அப்போது, பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்தால் பிற கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் சேர்வார்கள் என்று பாஜகவினர் சொல்கிறார்கள் அதன் வரிசையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணையப்போவதாக உங்களது பெயரையும் சொல்கிறார்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "அப்படி சொல்பவர்களை செருப்பால அடிப்பேன். இனிமேல் சீமான் போல பேசலாம் என்று முடிவெடுத்து விட்டேன் என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் பதில் அளித்துள்ளார்.

    மேலும், தமிழ்நாட்டிற்கு பிரதமர் வரும் போது எல்லாம் மறைந்த தலைவர்களை பாராட்டி பேசி வருகிறார். குறிப்பாக ஜெயலலிதா எம்ஜிஆர் அவர்களை பாராட்டி பேசியது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், "அதிமுகவை பாஜக கூட்டணிக்குள் இழுப்பதற்காகவும், அதிமுக வாக்குவங்கியை தன்பக்கம் இழுப்பதற்கும் தான் பிரதமர் அவ்வாறு பேசி வருகிறார்" என அவர் பேசியுள்ளார். 

    • 1984ல் 2 எம்.பி.க்களை கொண்டிருந்த பா.ஜ.க. 2014ல் ஆட்சி அமைத்தது
    • ஜெயலலிதா 39 மக்களவை தொகுதிகளையும் வெல்வதற்கு வியூகம் அமைத்தார்

    2014 மக்களவை தேர்தல் தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் பல திருப்புமுனைகளை உருவாக்கியது.

    அந்த தேர்தலில் ஆட்சியை இழந்த தேசிய கட்சியான காங்கிரஸ், பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. ஆனால், 1984ல் 2 எம்.பி.க்கள் மட்டுமே பெற்றிருந்த பா.ஜ.க., பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

    2014ல் காங்கிரஸ் சார்பில் பிரதமரான மன்மோகன் சிங்கின் ஆட்சி, 2ஜி மற்றும் காமன்வெல்த் உள்ளிட்ட பல ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர் கொள்ள நேர்ந்தது.

    தி.மு.க., காங்கிரசுடன் கூட்டணி அமைத்திருந்தது.

    மன்மோகன் சிங் தேர்தலில் போட்டியிட விருப்பமின்றி விலகிய நிலையில், மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பா.ஜ.க., பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்னிறுத்தி நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டது.

    அந்த காலகட்டத்தில் தமிழகத்தில், ஜெயலலிதா 39 மக்களவை தொகுதிகளையும் வெல்வதற்கு வியூகம் அமைத்தார்.


    நாடெங்கிலும் "மோடி, மோடி" எனும் பா.ஜ.க. ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி வந்த நிலையில், தமிழகத்தில் மட்டும் "மோடியா, இந்த லேடியா?" என ஜெயலலிதா தமிழக வாக்காளர்களிடம் கேள்வி எழுப்பி வாக்கு சேகரித்து வந்தார்.

    பிற மாநில அரசியல் தலைவர்கள் காங்கிரஸ் கூட்டணி (ஐக்கிய முற்போக்கு கூட்டணி) அல்லது பா.ஜ.க. கூட்டணி (தேசிய ஜனநாயக கூட்டணி) எனும் நிலைப்பாட்டை எடுத்து வந்த நிலையில் ஜெயலலிதாவின் "மோடியா?, லேடியா?" முழக்கம், அரசியல் விமர்சகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.

    ஆச்சரியம் அளிக்கும் வகையில் அ.தி.மு.க. 37 இடங்களில் வென்றது.


    இந்நிலையில், 18-வது மக்களவைக்கான தேர்தல் வரும் மாதங்களில் நடைபெறவுள்ளது.

    இன்று, தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில், மாதப்பூரில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

    அவர் தனது உரையில், "ஜெயலலிதா ஆட்சிக்கு பிறகு நல்லாட்சி தமிழகத்தில் அமையவில்லை" என கூறியது அரசியல் விமர்சகர்களால் பெரிதும் விவாதிக்கப்படுகிறது.

    தன்னை எதிர்த்து "மோடியா? இந்த லேடியா?" என முழக்கமிட்டு வென்ற ஜெயலலிதாவை புகழ்வதன் மூலம் ஜெயலலிதாவின் ஆளுமைக்கு முன் தனது ஆளுமை தமிழகத்தில் வெற்றிக்கு வழிவகுக்காது என மோடி கருதுகிறாரா என விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

    பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள், கல்லூரி மாணவர்களுக்கும் மாணவியர்களுக்கும் மடிக்கணினி, தாலிக்கு தங்கம் திட்டம்,  பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறை என ஜெயலலிதாவின் பெரும்பாலான திட்டங்கள் அவருக்கு கணிசமாக பெண்கள் வாக்குவங்கியை உருவாக்கி இருந்தது.

    பெண்கள் வாக்குகள் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.விற்கு செல்லாமல் பா.ஜ.க.விற்கே கிடைக்க செய்யும் முயற்சியாகவும் இது இருக்கக் கூடும் என சில விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • ஏழைகளுக்கு கல்வி, மருத்துவ வசதி போன்றவற்றை செய்தவர் எம்.ஜிஆர்
    • எம்.ஜி.ஆரை அவமதிப்பது போல திமுக ஆட்சி நடைபெறுகிறது என்று மோடி பேசியுள்ளார்.

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா நடைபெற்று வருகிறது. அக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.

    அதில், "இன்று தமிழகம் வந்துள்ள நான் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை நினைத்து பார்க்கிறேன். ஏழைகளுக்கு கல்வி, மருத்துவ வசதி போன்றவற்றை செய்தவர் எம்.ஜிஆர். அதனால்தான் அவர் இன்னமும் மக்களால் நினைத்து பார்க்கப்படுகிறார். அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரை அவமதிப்பது போல திமுக ஆட்சி நடைபெறுகிறது" என்று மோடி பேசியுள்ளார்.

    மேலும், "எம்.ஜி.ஆரை போலவே ஜெயலலிதாவும் மக்கள் மனதில் நிலை பெற்றுள்ளார். ஜெயலலிதாவுடன் நட்புறவுடன் பழகியவன் என்ற முறையில் நான் கூறுகிறேன். ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களோடு எந்த வகை தொடர்பு கொண்டிருந்தார் என்பது எனக்கு தெரியும். தமிழகத்தில் கடைசி நல்லாட்சியை கொடுத்தவர் ஜெயலலிதாதான். அவருக்கு இந்த இடத்தில் நான் அஞ்சலி செலுத்துகிறேன்" என்று அவர் பேசியுள்ளார்.

    • ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சி.வி. சண்முகம் இன்று காலையில் வந்தார்.
    • நான் யாரையும் சந்திக்கவில்லை என்றும், ஊடகங்களில் வருகின்ற செய்திகள் தவறானது.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாசை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் மாநிலங்களைவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் நேற்று இரவு சந்தித்து பேசியதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வந்தது.

    இந்த நிலையில் திண்டிவனம் அடுத்த தீவனூரில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சி.வி. சண்முகம் இன்று காலையில் வந்தார். நிகழ்ச்சி முடித்து அங்கிருந்த கிளம்பிய சி.வி. சண்முகத்திடம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்தது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். நான் யாரையும் சந்திக்கவில்லை என்றும், ஊடகங்களில் வருகின்ற செய்திகள் தவறானது என்று கூறிய அவர், அங்கிருந்து உடனடியாக சென்றுவிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெயலலிதா இறந்து 6 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவருக்கான அவரது தொகையை யாருமே செலுத்த முன்வராததால் கோர்ட்டு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
    • ஜெயலலிதாவின் நகைகள் வருகிற மார்ச் 6 மற்றும் 7-ந் தேதிகளில் தமிழகம் கொண்டு வரப்பட்டு உள்துறை செயலாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விட்டு அவருக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராத தொகையை கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும் தலா ரூ.10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு இருந்தது.

    இதனை எதிர்த்து ஜெயலலிதா உட்பட 4 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் 4 பேரையும் நிரபராதிகள் என விடுவித்து தீர்ப்பளித்தது.

    அதைத்தொடர்ந்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதன் மீதான விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி ஜெயலலிதா உயிரிழந்தார். சுப்ரீம் கோர்ட்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது.

    அதே நேரத்தில் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டுகளை கைவிடுவதாக கூறி விட்டு செலுத்த வேண்டிய அபராத தொகையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்தது.

    இந்த நிலையில் ஜெயலலிதா இறந்து 6 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவருக்கான அவரது தொகையை யாருமே செலுத்த முன்வராததால் கோர்ட்டு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    அதன்படி ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவரது சொத்துக்களை விற்று அபராதம் கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    ஜெயலலிதா வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட 28 கிலோ நகைகள், 800 கிலோ வெள்ளி நகைகள், வைர நகைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் அப்போது கைப்பற்றியிருந்தனர். இவைகள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன.

    அந்த நகைகளை ஏலம் விட்டு அவரது தொகையில் ஒரு பகுதியை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன்படி ஜெயலலிதாவின் நகைகள் வருகிற மார்ச் 6 மற்றும் 7-ந் தேதிகளில் தமிழகம் கொண்டு வரப்பட்டு உள்துறை செயலாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    அதனை அரசு கருவூலத்தில் சேர்த்து பின்னர் நகையின் மதிப்பு கணக்கிடப்பட்டு தற்போதைய மதிப்பின்படி ஏலத்தில் விட்டு பணம் திரட்டப்படும் இந்த நகைகள் மட்டும் 40 கோடி ரூபாய் வரை ஏலம் போகும்.

    அதனை வைத்து அபராத தொகையை செலுத்திவிட்டு மீதமுள்ள ரூ.60 கோடிக்கு அசையா சொத்துக்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    இதை தவிர வழக்கு கட்டணமாக 5 கோடி ரூபாயை கர்நாடக அரசுக்கும் வழங்க வேண்டியுள்ளது. இதற்கும் ஜெயலலிதாவின் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டு அதன் மூலமாகவே முழுமையாக கட்டப்படும் என்று தெரிகிறது.

    • விழாவில் மாலை 4 மணி அளவில் வெற்றி நமதே என்ற கலைநிகழ்ச்சி நடக்கிறது.
    • கலைப்பிரிவு செயலாளர் ரவிச்சந்திரன், எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் சேசரன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    சேலம்:

    சேலம் மாநகர் மாவட்டம், கொண்டலாம்பட்டி பகுதி, சேலம் தெற்கு சட்டசபை தொகுதி சார்பில் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாள் விழா, அ.தி.மு.க. பொதுக்கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சேலம் தாதகாப்பட்டி கேட்டில் மாலை 5 மணிக்கு நடக்கிறது. கொண்டலாம்பட்டி பகுதி-2 செயலாளர் கே.பி.பாண்டியன் தலைமை தாங்குகிறார்.

    மாவட்ட பொருளாளர் பங்க் எஸ்.வெங்கடாசலம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சரவணன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முத்து, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கனகராஜ், மாவட்ட விவசாய அணி செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலசுப்பிரமணியம் எம்.எல்.ஏ., கொண்டலாம்பட்டி பகுதி-1 செயலாளர் சண்முகம் ஆகியோர் வரவேற்று பேசுகின்றனர்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். அப்போது 5 ஆயிரத்து 176 பேருக்கு நல உதவிகள் வழங்குகிறார்.

    விழாவில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம், மாவட்ட அவைத்தலைவர் பன்னீர்செல்வம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.கே.செல்வராஜூ, மாநகர் மாவட்ட துணை செயலாளர் எஸ்.சவுண்டப்பன், மாணவர் அணி செயலாளர் சக்திவேல், கலைப்பிரிவு செயலாளர் ரவிச்சந்திரன், எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் சேசரன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    விழாவில் மாலை 4 மணி அளவில் வெற்றி நமதே என்ற கலைநிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக பொதுக்கூட்டத்துக்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு சேலம் மாநகர் மாவட்டம், கொண்டலாம்பட்டி பகுதி அ.தி.மு.க., சேலம் தெற்கு சட்டசபை தொகுதி சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • முக்கோணம் பகுதிக்கு வந்த போது, அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பேனர்கள் அகற்றப்பட்டிருந்தன.
    • ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக ஆனைமலையில் இருந்து அ.தி.மு.க.வினர் வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ அமுல்கந்தசாமி தலைமையில் ஊர்வலமாக வந்தனர்.

    வால்பாறை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் கோவை மாவட்டம் ஆனைமலையிலும் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு அ.தி.மு.க.வினர் தயாராகி வந்தனர்.

    இதற்காக ஆனைமலை முக்கோணம் பகுதியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

    இந்த நிலையில், முக்கோணம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை போலீசார் சட்டவிரோதமாக வைத்ததாக கூறி அகற்றி, போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.

    இதற்கிடையே இன்று காலை ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக ஆனைமலையில் இருந்து அ.தி.மு.க.வினர் வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ அமுல்கந்தசாமி தலைமையில் ஊர்வலமாக வந்தனர்.

    அவர்கள் முக்கோணம் பகுதிக்கு வந்த போது, அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பேனர்கள் அகற்றப்பட்டிருந்தன. பேனர்களை போலீசார் அகற்றியது தெரியவந்ததும், அ.தி.மு.கவினர் வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி தலைமையில் ஆனைமலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டம் பற்றிய தகவல் அறிந்ததும் ஆனைமலை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநிதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.கவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அகற்றப்பட்ட பேனர்களை உடனே இங்கு வைக்க வேண்டும் என அ.தி.மு.கவினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அந்த பகுதியில் மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பேனர்கள் வைக்கப்பட்டன.

    இதையடுத்து அ.தி.மு.கவினர் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க.வினரின் போராட்டத்தால் இந்த பகுதியில் சிறது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • தமிழர் உரிமை மீட்போம், தமிழ்நாடு காப்போம் என்ற முதன்மை முழக்கத்தோடு அ.தி.மு.க. தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளது.
    • அ.தி.மு.க.வின் வெற்றிக்காக அயராது உழைத்து பார் போற்றும் வெற்றியை உறுதி செய்வோம்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் வகையில் "தமிழர் உரிமை மீட்போம், தமிழ்நாடு காப்போம்" என்கிற முழக்கத்துடன் கூடிய இலச்சினை மற்றும் ஏ.ஐ. தொழில் நுட்பத்துடன் ஜெயலலிதா பேசிய பிரசார ஆடியோ இன்று வெளியிடப்பட்டது.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி சாமி அதனை வெளியிட்டார்.

    பின்னர் அவர் பாராளுமன்ற தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழர் உரிமை மீட்போம், தமிழ்நாடு காப்போம் என்ற முதன்மை முழக்கத்தோடு அ.தி.மு.க. தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளது.

    தமிழக மக்களின் ஒருமித்த ஆதரவோடு வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களும், கூட்டணி கட்சி வேட்பாளர்களும், நிச்சயம் எங்களை வெற்றி பெற செய்வார்கள்.

    விரைவில் அ.தி.மு.க. தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும். அதனை விரைவில் அறிவிப்போம்.

    எங்களிடம் மத்திய அரசின் அதிகாரமோ, மாநில அரசின் அதிகாரமோ இல்லை. எங்கள் கட்சியின் இதய தெய்வங்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் நல்லாசி உள்ளது. 2 கோடியே 6 லட்சம் தொண்டர்கள் எங்களுக்கு பலமாக உள்ளனர். தமிழக மக்களும் எங்களை ஆதரிக்க தயாராகி விட்டனர்.

    இன்று தொடங்கி உள்ள பிரசாரத்தை அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் முன்னெடுத்து உள்ளனர். இரவு-பகல் பாராமல் அ.தி.மு.க.வின் வெற்றிக்காக அயராது உழைத்து பார் போற்றும் வெற்றியை உறுதி செய்வோம்.

    கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையிலும் அ.தி.மு.க. சார்பில் 37 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி சென்றார்கள். எங்களது குரல் பாராளுமன்றத்துக்குள் வலுவாக ஒலித்தது. தமிழக நலனுக்காக எங்களது எம்.பி.க்கள் குரல் கொடுத்தார்கள்.

    அப்போது 14,619 கேள்விகளை எங்கள் எம்.பி.க்கள் பாராளுமன்றத்துக்குள் எழுப்பி உள்ளனர். தற்போது தி.மு.க. சார்பில் உள்ள 38 எம்.பி.க்கள் 7 ஆயிரம் கேள்விகளை கேட்டு உள்ளனர். இதன் மூலம் எங்களது செயல்பாடும், அவர்களது செயல்பாடும் தெரியும்.

    காவிரி பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையத்தை நாங்கள் தான் அமைத்தோம். தற்போது மேகதாது விவகாரம் விசுவரூபம் எடுத்துக்கொண்டு இருக்கிறது. அதுபற்றி தி.மு.க. எம்.பி.க்கள் கவலைப்படவில்லை.

    காவிரி மேலாண்மை ஆணையத்திலும் அவர்களால் சிறப்பான வாதத்தை எடுத்து வைக்க தெரியவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ஒழிப்பேன் என்று வாக்குறுதி அளித்தனர். விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வை ஒழிக்கும் ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று சொன்னார். ஆனால் நீட் தேர்வை ஒழிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மத்திய அரசில் தி.மு.க. அங்கும் வகித்தபோதுதான் அவர்களது ஆட்சியில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. தற்போது அதனை ஒழிக்கப் போவதாக தி.மு.க. நாடகமாடி வருகிறது.

    பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறிய பிறகும் எங்களை பற்றி தி.மு.க. அவதூறு பரப்பி வருகிறது. நாங்கள் ரகசிய உடன்பாடு செய்து உள்ளதாக குற்றம் சாட்டி வருகிறது.

    ஆனால் பாரதிய ஜனதாவுடன் தி.மு.க.தான் ரகசிய உறவு வைத்துள்ளது. ஆட்சியில் இல்லாதபோது 'கோ பேக்' மோடி என்றார்கள். தற்போது 'வெல்கம் மோடி' என்கிறார்கள். இதன் மூலமே தெரியும் யார் ரகசிய உடன்பாடு வைத்துள்ளார்கள் என்பது.

    தி.மு.க.வை பொறுத்தவரை வாக்களித்த மக்களுக்காக நன்மை எதுவும் செய்ய மாட்டார்கள். மக்களை பற்றி அவர்கள் கவலைப்படுவது இல்லை. எங்களுக்கு தற்போதைய காலத்தில் எதிரிகளே இல்லை. தேர்தலில் எங்களை வெற்றி பெற செய்வதற்கு மக்கள் தயாராகி விட்டனர்.

    எத்தனை முனை போட்டி நிலவும் என்பதை பற்றி நான் இப்போது கூற முடியாது. இந்தியா கூட்டணியில் ஒவ்வொரு சக்கரமாக கழன்று கொண்டு இருக்கிறது. 4 சக்கரங்கள் ஒன்றாக இருந்தால்தான் காரை ஓட்ட முடியும். இந்தியா கூட்டணி தற்போது சக்கரம் இல்லாத கார் போல உள்ளது.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    • எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்வது போன்று ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் கூடிய ஆடியோ வெளியிடப்பட்டது.
    • தமிழகத்தில் உரிமையை மீட்டெடுத்து தமிழ்நாட்டை காப்பதற்காக சகோதரர் எடப்பாடி பழனிசாமி கரத்தை நீங்கள் வலுப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்வது போன்று ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் கூடிய ஆடியோ வெளியிடப்பட்டது. அதில் ஜெயலலிதா பேசுவது போன்ற இடம்பெற்றுள்ள வாசகங்கள் வருமாறு:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளான தாலிக்கு தங்கம், 7.5 சதவீத இட ஒதுக்கீடு ஆகிய சாதனைகளுக்காகவே தமிழக மக்கள் அ.தி.மு.க.வை ஆதரித்தார்கள். மத்தியில் ஆளும் அரசும் மாநிலத்தில் ஆளும் அரசும் தமிழக நலனுக்கு எதிராக உள்ளனர். எனவே தமிழகத்தில் உரிமையை மீட்டெடுத்து தமிழ்நாட்டை காப்பதற்காக சகோதரர் எடப்பாடி பழனிசாமி கரத்தை நீங்கள் வலுப்படுத்த வேண்டும். மக்களாலே நாம் மக்களுக்காகவே நாம்.

    இவ்வாறு ஜெயலலிதா பேசியது போன்று ஆடியோ வெளியிடப்பட்டது.

    • அதிமுக கட்சி அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • கட்சி கொடியை ஏற்றி, தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி இனிப்பு வழங்கினார்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழாவினை அ.தி.மு.க.வினர் இன்று தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடினார்கள்.

    இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழக அலுவலகம் விழாக்கோலம் பூண்டு இருந்தது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தலைமை கழகத்துக்கு வந்தார். அப்போது அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். வருங்கால முதல்வர் வாழ்க. எடப்பாடியார் வாழ்க என அவர்கள் கோஷமிட்டனர்.

    தலைமை கழக வளாகத்தில் உள்ள ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அவர் 76-வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 76 கிலோ எடையுள்ள கேக்கினை வெட்டி அதனை தொண்டர்களுக்கு வழங்கினார். லட்டும் கொடுக்கப்பட்டது.

    ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அங்கு ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    இந்த விழாவில் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி. தம்பித்துரை எம்.பி. மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலு மணி, செங்கோட்டையன், ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, தளவாய் சுந்தரம், வளர்மதி, நத்தம் விசுவநாதன்,கோகுல இந்திரா, பெஞ்சமின், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன், மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை வி.என்.ரவி, தி.நகர் சத்யா, ஆதிராஜாராம், ஆர்.எஸ்.ராஜேஷ், மாதவரம் மூர்த்தி, கே.பி.கந்தன், வெங்கடேஷ் பாபு, வக்கீல் பிரிவு மாநில செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இன்பதுரை, தி.நகர் பகுதி செயலாளர் ஆர்.எஸ். வேலு மணி, மாநில இளைஞர் அணி இணை செயலாளர் லட்சுமி நாராயணன், இலக்கிய அணி மாநில துணை செயலாளர் இ.சி. சேகர், முன்னாள் கவுன்சிலர் சின்னையன், பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், மாணவரணி வக்கீல் பரணி, ஏ.எம்.காமராஜ், எம்.ஜி.ஆர். நகர் குட்டிவேல் ஆதித்தன், வேளச்சேரி மூர்த்தி, வேல் ஆதித்தன் உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா உருவ படத்துக்கு அ.தி.மு.க.வினர் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    ×