search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2024 parliamentary elections"

    • 1984ல் 2 எம்.பி.க்களை கொண்டிருந்த பா.ஜ.க. 2014ல் ஆட்சி அமைத்தது
    • ஜெயலலிதா 39 மக்களவை தொகுதிகளையும் வெல்வதற்கு வியூகம் அமைத்தார்

    2014 மக்களவை தேர்தல் தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் பல திருப்புமுனைகளை உருவாக்கியது.

    அந்த தேர்தலில் ஆட்சியை இழந்த தேசிய கட்சியான காங்கிரஸ், பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. ஆனால், 1984ல் 2 எம்.பி.க்கள் மட்டுமே பெற்றிருந்த பா.ஜ.க., பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

    2014ல் காங்கிரஸ் சார்பில் பிரதமரான மன்மோகன் சிங்கின் ஆட்சி, 2ஜி மற்றும் காமன்வெல்த் உள்ளிட்ட பல ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர் கொள்ள நேர்ந்தது.

    தி.மு.க., காங்கிரசுடன் கூட்டணி அமைத்திருந்தது.

    மன்மோகன் சிங் தேர்தலில் போட்டியிட விருப்பமின்றி விலகிய நிலையில், மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பா.ஜ.க., பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்னிறுத்தி நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டது.

    அந்த காலகட்டத்தில் தமிழகத்தில், ஜெயலலிதா 39 மக்களவை தொகுதிகளையும் வெல்வதற்கு வியூகம் அமைத்தார்.


    நாடெங்கிலும் "மோடி, மோடி" எனும் பா.ஜ.க. ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி வந்த நிலையில், தமிழகத்தில் மட்டும் "மோடியா, இந்த லேடியா?" என ஜெயலலிதா தமிழக வாக்காளர்களிடம் கேள்வி எழுப்பி வாக்கு சேகரித்து வந்தார்.

    பிற மாநில அரசியல் தலைவர்கள் காங்கிரஸ் கூட்டணி (ஐக்கிய முற்போக்கு கூட்டணி) அல்லது பா.ஜ.க. கூட்டணி (தேசிய ஜனநாயக கூட்டணி) எனும் நிலைப்பாட்டை எடுத்து வந்த நிலையில் ஜெயலலிதாவின் "மோடியா?, லேடியா?" முழக்கம், அரசியல் விமர்சகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.

    ஆச்சரியம் அளிக்கும் வகையில் அ.தி.மு.க. 37 இடங்களில் வென்றது.


    இந்நிலையில், 18-வது மக்களவைக்கான தேர்தல் வரும் மாதங்களில் நடைபெறவுள்ளது.

    இன்று, தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில், மாதப்பூரில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

    அவர் தனது உரையில், "ஜெயலலிதா ஆட்சிக்கு பிறகு நல்லாட்சி தமிழகத்தில் அமையவில்லை" என கூறியது அரசியல் விமர்சகர்களால் பெரிதும் விவாதிக்கப்படுகிறது.

    தன்னை எதிர்த்து "மோடியா? இந்த லேடியா?" என முழக்கமிட்டு வென்ற ஜெயலலிதாவை புகழ்வதன் மூலம் ஜெயலலிதாவின் ஆளுமைக்கு முன் தனது ஆளுமை தமிழகத்தில் வெற்றிக்கு வழிவகுக்காது என மோடி கருதுகிறாரா என விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

    பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள், கல்லூரி மாணவர்களுக்கும் மாணவியர்களுக்கும் மடிக்கணினி, தாலிக்கு தங்கம் திட்டம்,  பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறை என ஜெயலலிதாவின் பெரும்பாலான திட்டங்கள் அவருக்கு கணிசமாக பெண்கள் வாக்குவங்கியை உருவாக்கி இருந்தது.

    பெண்கள் வாக்குகள் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.விற்கு செல்லாமல் பா.ஜ.க.விற்கே கிடைக்க செய்யும் முயற்சியாகவும் இது இருக்கக் கூடும் என சில விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    ×