search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க. தலைமையில் நல்ல கூட்டணி அமையும்: எடப்பாடி பழனிசாமி
    X

    அ.தி.மு.க. தலைமையில் நல்ல கூட்டணி அமையும்: எடப்பாடி பழனிசாமி

    • தமிழர் உரிமை மீட்போம், தமிழ்நாடு காப்போம் என்ற முதன்மை முழக்கத்தோடு அ.தி.மு.க. தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளது.
    • அ.தி.மு.க.வின் வெற்றிக்காக அயராது உழைத்து பார் போற்றும் வெற்றியை உறுதி செய்வோம்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் வகையில் "தமிழர் உரிமை மீட்போம், தமிழ்நாடு காப்போம்" என்கிற முழக்கத்துடன் கூடிய இலச்சினை மற்றும் ஏ.ஐ. தொழில் நுட்பத்துடன் ஜெயலலிதா பேசிய பிரசார ஆடியோ இன்று வெளியிடப்பட்டது.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி சாமி அதனை வெளியிட்டார்.

    பின்னர் அவர் பாராளுமன்ற தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழர் உரிமை மீட்போம், தமிழ்நாடு காப்போம் என்ற முதன்மை முழக்கத்தோடு அ.தி.மு.க. தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளது.

    தமிழக மக்களின் ஒருமித்த ஆதரவோடு வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களும், கூட்டணி கட்சி வேட்பாளர்களும், நிச்சயம் எங்களை வெற்றி பெற செய்வார்கள்.

    விரைவில் அ.தி.மு.க. தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும். அதனை விரைவில் அறிவிப்போம்.

    எங்களிடம் மத்திய அரசின் அதிகாரமோ, மாநில அரசின் அதிகாரமோ இல்லை. எங்கள் கட்சியின் இதய தெய்வங்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் நல்லாசி உள்ளது. 2 கோடியே 6 லட்சம் தொண்டர்கள் எங்களுக்கு பலமாக உள்ளனர். தமிழக மக்களும் எங்களை ஆதரிக்க தயாராகி விட்டனர்.

    இன்று தொடங்கி உள்ள பிரசாரத்தை அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் முன்னெடுத்து உள்ளனர். இரவு-பகல் பாராமல் அ.தி.மு.க.வின் வெற்றிக்காக அயராது உழைத்து பார் போற்றும் வெற்றியை உறுதி செய்வோம்.

    கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையிலும் அ.தி.மு.க. சார்பில் 37 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி சென்றார்கள். எங்களது குரல் பாராளுமன்றத்துக்குள் வலுவாக ஒலித்தது. தமிழக நலனுக்காக எங்களது எம்.பி.க்கள் குரல் கொடுத்தார்கள்.

    அப்போது 14,619 கேள்விகளை எங்கள் எம்.பி.க்கள் பாராளுமன்றத்துக்குள் எழுப்பி உள்ளனர். தற்போது தி.மு.க. சார்பில் உள்ள 38 எம்.பி.க்கள் 7 ஆயிரம் கேள்விகளை கேட்டு உள்ளனர். இதன் மூலம் எங்களது செயல்பாடும், அவர்களது செயல்பாடும் தெரியும்.

    காவிரி பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையத்தை நாங்கள் தான் அமைத்தோம். தற்போது மேகதாது விவகாரம் விசுவரூபம் எடுத்துக்கொண்டு இருக்கிறது. அதுபற்றி தி.மு.க. எம்.பி.க்கள் கவலைப்படவில்லை.

    காவிரி மேலாண்மை ஆணையத்திலும் அவர்களால் சிறப்பான வாதத்தை எடுத்து வைக்க தெரியவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ஒழிப்பேன் என்று வாக்குறுதி அளித்தனர். விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வை ஒழிக்கும் ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று சொன்னார். ஆனால் நீட் தேர்வை ஒழிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மத்திய அரசில் தி.மு.க. அங்கும் வகித்தபோதுதான் அவர்களது ஆட்சியில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. தற்போது அதனை ஒழிக்கப் போவதாக தி.மு.க. நாடகமாடி வருகிறது.

    பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறிய பிறகும் எங்களை பற்றி தி.மு.க. அவதூறு பரப்பி வருகிறது. நாங்கள் ரகசிய உடன்பாடு செய்து உள்ளதாக குற்றம் சாட்டி வருகிறது.

    ஆனால் பாரதிய ஜனதாவுடன் தி.மு.க.தான் ரகசிய உறவு வைத்துள்ளது. ஆட்சியில் இல்லாதபோது 'கோ பேக்' மோடி என்றார்கள். தற்போது 'வெல்கம் மோடி' என்கிறார்கள். இதன் மூலமே தெரியும் யார் ரகசிய உடன்பாடு வைத்துள்ளார்கள் என்பது.

    தி.மு.க.வை பொறுத்தவரை வாக்களித்த மக்களுக்காக நன்மை எதுவும் செய்ய மாட்டார்கள். மக்களை பற்றி அவர்கள் கவலைப்படுவது இல்லை. எங்களுக்கு தற்போதைய காலத்தில் எதிரிகளே இல்லை. தேர்தலில் எங்களை வெற்றி பெற செய்வதற்கு மக்கள் தயாராகி விட்டனர்.

    எத்தனை முனை போட்டி நிலவும் என்பதை பற்றி நான் இப்போது கூற முடியாது. இந்தியா கூட்டணியில் ஒவ்வொரு சக்கரமாக கழன்று கொண்டு இருக்கிறது. 4 சக்கரங்கள் ஒன்றாக இருந்தால்தான் காரை ஓட்ட முடியும். இந்தியா கூட்டணி தற்போது சக்கரம் இல்லாத கார் போல உள்ளது.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    Next Story
    ×