search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடத்தல்"

    • தனிப்படை போலீசார் சரவண வேலனை கடத்தி சென்ற மர்மநபர்கள் யார், எதற்காக கடத்தினார்கள் என்று விசாரணை நடத்தினர்.
    • கைதான சரவணபாண்டியனின் சொந்த ஊர் மதுரை திருப்பரங்குன்றம். கோவை தெலுங்குபாளையத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மெட்டராத்தி பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 44). திருமணமாகாத இவருக்கு அவரது உறவினர்கள் பெண் பார்த்து வந்தனர். இந்தநிலையில் சின்னச்சாமிக்கும், பல்லடத்தை சேர்ந்த சரவண வேலன்(37) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அப்போது சரவண வேலன், நான் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறேன். எனக்கு சொந்தக்கார பெண்கள் நிறைய பேர் உள்ளனர்.

    எனவே அவர்களில் யாரையாவது பார்த்து உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என தெரிவித்துள்ளார். இதை நம்பிய சின்னச்சாமி, சரவண வேலனுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளார்.

    நேற்று முன்தினம் சின்னச்சாமியை தொடர்பு கொண்ட சரவணவேலன் என்னிடம் திருமணத்திற்கான பெண்களின் புகைப்படங்கள் உள்ளது. அதனை நீங்கள் பார்த்து தேர்வு செய்து கொள்ளுங்கள். பிடித்தால் உடனே திருமணத்தை நடத்தி விடலாம் என தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து சின்னச்சாமி அவரது சொந்த ஊரான குடிமங்கலத்திற்கு வருமாறு சரவண வேலனை அழைக்கவே, அவர் அங்கு சென்றுள்ளார். அவருக்காக சின்னச்சாமி குடிமங்கலத்தில் உள்ள விடுதியில் அறையும் எடுத்து கொடுத்தார்.

    அங்கு வைத்து இருவரும் பெண்ணின் புகைப்படங்களை பார்த்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடுதி அறையில் தங்கியுள்ளனர்.

    பின்னர் நேற்று காலை சின்னச்சாமி பணத்தம்பட்டியில் உள்ள அவரது தோட்டத்திற்கு சரவண வேலனை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார்.

    சிறிது தூரம் செல்லும் போது திடீரென அங்கு காரில் வந்த 3பேர் கும்பல், மோட்டார் சைக்கிளை மறித்ததுடன் சரவண வேலனை அலாக்காக தூக்கி காரில் போட்டு கடத்தி சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சின்னச்சாமி, காரை பின்தொடர்ந்து துரத்தியுள்ளார். அப்போது 3பேரும் மோட்டார் சைக்கிளை இடித்து தள்ளி விட்டு காரில் தப்பிச்சென்றனர்.

    உடனே இது குறித்து சின்னச்சாமி குடிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அபிஷேக் குப்தா (பொறுப்பு) உத்தரவின் பேரில் உடுமலை டி.எஸ்.பி., சுகுமாறன் மேற்பார்வையில், குடிமங்கலம் இன்ஸ்பெக்டர் ரோஸ்லின், சப்-இன்ஸ்பெக்டர் பஞ்சலிங்கம் மற்றும் போலீஸ்காரர்கள் முத்துமாணிக்கம், லிங்கேஸ்வரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் சரவண வேலனை கடத்தி சென்ற மர்மநபர்கள் யார், எதற்காக கடத்தினார்கள் என்று விசாரணை நடத்தினர்.

    காரின் நம்பரை வைத்து விசாரணை நடத்தும் போது 3பேரும் கோவை தெலுங்கு பாளையத்தை சேர்ந்த சரவண பாண்டியன் (வயது 28), முத்துசெல்வம் (27), ரித்திக் (20) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து 3பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சரவண வேலனை கடத்தி சென்று கொலை செய்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது சரவண வேலன் கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்தது.

    கைதான சரவணபாண்டியனின் சொந்த ஊர் மதுரை திருப்பரங்குன்றம். கோவை தெலுங்குபாளையத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இந்தநிலையில் சரவணபாண்டியனுக்கும், சரவண வேலனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது சரவணவேலன் தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்றும், எனக்கு கேரளா செல்ல வாடகைக்கு கார் வேண்டும் என்று கேட்டுள்ளார். உடனே சரவண பாண்டியன் கார் ஒன்றை வாடகைக்கு கொடுத்துள்ளார். அதனை வாங்கி சென்ற சரவண வேலன், செல்லாத ரூ.2ஆயிரம் நோட்டுக்களை மாற்றுவதற்காக கேரளா சென்றுள்ளார். அப்போது முறைகேடுகளில் ஈடுபட்டதாக கேரள போலீசார் சரவண வேலனை கைது செய்ததுடன், காரையும் பறிமுதல் செய்தனர். அதன்பிறகே சரவண வேலன் போலீஸ் இன்ஸ்பெக்டர் என ஏமாற்றி காரை வாடகைக்கு எடுத்து சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து சரவண பாண்டியன் ரூ.3 லட்சம் வரை பணம் செலுத்தி கேரளாவில் இருந்து காரை மீட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த சரவண வேலனிடம் பணத்தை திருப்பி தருமாறு சரவண பாண்டியன் கேட்டு வந்துள்ளார். ஆனால் அவர் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். நேற்று குடிமங்கலத்தில் இருப்பதை அறிந்த சரவண பாண்டியன் தன்னிடம் டிரைவர்களாக பணியாற்றும் முத்து செல்வம் , ரித்திக் ஆகியோரை அழைத்து கொண்டு குடிமங்கலம் சென்றதுடன் அங்கு வைத்து சரவணவேலனை காரில் கடத்தி கோவைக்கு சென்றுள்ளார். அப்போது சரவணவேலன் சத்தம் போடவே அவரது வாயை பொத்தியுள்ளனர். இதில் அவர் மூச்சுதிணறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்த 3பேரும், கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளனர். அங்கு சரவண வேலன் மூச்சுத்திணறி இறந்துள்ளதாக டாக்டர்களிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் போலீசார் விசாரணையில் 3பேரும் சிக்கிக்கொண்டனர்.

    கொலை செய்யப்பட்ட சரவண வேலன் இது போல் பலரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் என ஏமாற்றி பணம் பறித்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக சரவணவேலனை அவரது மனைவி பிரிந்து சென்றதுடன் வேறு திருமணம் செய்துள்ளார். சின்னச்சாமியிடம் திருமணத்திற்கு பெண் பார்த்து தருவதாக கூறி ரூ.1.50 வரை பணம் பறித்துள்ளார். போலீஸ் இன்ஸ்பெக்டர் என ஏமாற்றி பணம் பறித்த நபர் காரில் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சம்பவம் குறித்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.
    • தலைமறைவான ஆசிரியர் வெங்கடேசன் ஏ.டி.எம்களில் பணம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுடன் உல்லாசமாக இருந்து வருவதாக தெரிகிறது.

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஆத்தூர் சாலை பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி தீபா (வயது 42) மாற்றுத்திறனாளியான இவர் பெரம்பலூர் வி. களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

    பெரம்பலூர் குரும்பலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (44). இவரும் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

    இவர்கள் 2 பேரையும் கடந்த 15-ந் தேதி முதல் காணவில்லை. மேலும் ஆசிரியை தீபா பயன்படுத்தி வந்த காரும் மாயமானது. அதைத்தொடர்ந்து மனைவியை காணவில்லை என தீபாவின் கணவர் பாலமுருகன் வி. களத்தூர் போலீஸ் நிலையத்திலும், கணவரை காணவில்லை என வெங்கடேசனின் மனைவி காயத்ரி பெரம்பலூர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி கோவை பி1 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய கடைவீதி பகுதியில் மாயமான ஆசிரியை தீபாவின் கார் 2 நாட்களாக கேட்பாரற்று நின்று கொண்டிருப்பதாக வி. களத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    பின்னர் போலீசார் விரைந்து சென்று காரைத்திறந்து சோதனையிட்டனர். அப்போது அதில் ரத்தக் கறை படிந்த சுத்தியல், தீபா அணிந்திருந்த தாலி, கொலுசு, அவரின் ஏ.டி.எம். கார்டு வெங்கடேசனின் 2 செல்போன்கள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.

    இதனிடையே ஆசிரியர் வெங்கடேசன் செல்போனில் இருந்து பாலியல் புரோக்கரான கோவை மதுக்கரை காந்தி நகரைச் சேர்ந்த மோகன் என்பவரை தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது.

    இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தீபா கதி என்ன என்பது குறித்து தனிப்படை கோவை, தேனி, நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. கேரளாவிற்கும் தனிப்படை விரைந்துள்ளது.

    தனிப்படை போலீசார் விசாரணையில் ஆசிரியர் வெங்கடேசன் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. தீபா என்ன ஆனார் என்பது தொடர்ந்து மர்மமாக உள்ளது. இதனிடையே கோவை, மதுரை, தேனி ஆகிய இடங்களில் ஏ.டி.எம்க.ளில் வெங்கடேசன் பணம் எடுத்த போது அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளில் ஆசிரியர் வெங்கடேசன் மட்டுமே இருப்பது பதிவாகியுள்ளது.

    வெங்கடேசன் தொடர்பு கொண்டு பேசுபவர்களின் செல்போன் எண்களை விசாரிக்கும் போது, அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் என்பது தெரிய வந்தது.

    தலைமறைவான ஆசிரியர் வெங்கடேசன் ஏ.டி.எம் களில் பணம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுடன் உல்லாசமாக இருந்து வருவதாக தெரிகிறது.

    மாயமான ஆசிரியர் வெங்கடேசன், தனது இருப்பிடத்தை போலீசர் அறிந்துவிடுவார்கள் என அவ்வப்போது சிம்கார்டுகளையும், தான் பதுங்கி இருக்கும் இடத்தையும் மாற்றி மாற்றி வருகிறார். இதனால் அவரை நெருங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதனால் தீபாவை வெங்கடேசன் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    வெங்கடேசன் சிக்கினால் மட்டுமே ஆசிரியை தீபா பற்றிய நிலை தெரியவரும் என்பதால் அவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    • கஞ்சா, போதைப் பொருட்கள் கடத்துவது, இங்கிருந்து மருந்துகள், மஞ்சள், பீடி இலை உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் கடத்துவது நடந்து வருகிறது.
    • மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள தீவு பகுதியிலும் போலீசார் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர்.

    தொண்டி:

    தமிழகத்தில் 180 கி.மீ. நீள கடற்கரை மாவட்டமாக ராமநாதபுரம் விளங்கி வருகிறது. இங்கு ராமநாதபுரம், ஏர்வாடி, கீழக்கரை, ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மீனவர்கள் வாரத்தில் 3 நாட்கள் கடலுக்கு சென்று வருகின்றனர்.

    அண்டை நாடான இலங்கை, ராமநாதபுரத்துக்கு கடல் வழியாக 20 மைல் தொலைவில் உள்ளது. இதன் காரணமாக கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இலங் கையில் இருந்து கஞ்சா, போதைப் பொருட்கள் கடத்துவது, இங்கிருந்து மருந்துகள், மஞ்சள், பீடி இலை உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் கடத்துவது நடந்து வருகிறது.

    இதனை தடுக்க கடலோர காவல்படையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் இலங்கையில் இருந்து அகதிகளாகவும் இங்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கண்காணிக்கவும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் எஸ்.பி.பட்டனம் முதல் சாயல்குடி ரோஸ்மா நகர் வரை கடற்கரை உள்ளது. பாக் நீரினை, மன்னார் வளைகுடா பகுதிகளை உள்ளடக்கிய இந்தப்பகுதியில் அன்னிய ஊடுருவல், கடத்தல்களை தடுக்க இன்று கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் "சஜாக்" என்ற ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. கூடுதல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கனகராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் யாசர் மவுலானா, அய்யனார், முகமது தாரிக், கண்ணன் மற்றும் 60-க்கும் மேற்பட்ட கடலோர போலீசார் 4 குழுக்களாக பிரிந்து அதிவேக படகுகளில் கடலில் ரோந்து சென்று கண்காணிப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

    அப்போது கடற்கரை பகுதிகளில் புதிய நபர்கள் நடமாட்டம் குறித்து மீனவர்கள் உடனடியாக கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கடற்கரையில் இருந்து 7 கடல் மைல் தொலைவில் "சஜாக்" பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. மேலும் மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள தீவு பகுதியிலும் போலீசார் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர்.

    • கைது செய்யப்பட்ட 6 பேரிடமிருந்து 20 லட்சம் ரூபாய்க்கு மேல் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
    • கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

    சேலம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 37). இவர் கண்ணு வலி கிழங்கு என சொல்லப்படும் செங்காந்தாள் விதை வியாபாரம் செய்து வருகிறார்.

    செங்காந்தாள் விதை கொள்முதல் செய்வதற்காக நண்பர்கள் அவினாசியை சேர்ந்த குமார், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த வாஞ்சியப்பன் (39) ஆகியோருடன் 50 லட்சம் ரூபாய் எடுத்துக்கொண்டு காரில் கடந்த செப்டம்பர் மாதம் 26-ந் தேதி காலை 4.30 மணிக்கு சேலம் இரும்பாலை அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது மற்றொரு காரில் வந்த மர்மகும்பல் போலீஸ் என கூறி வெங்கடேஷ், அவருடன் வந்த குமார், வாஞ்சியப்பன் ஆகியோரை பணத்துடன் காரில் கடத்தியது. பின்னர் தாரமங்கலம் அருகே மாரமங்கலத்துப்பட்டி பகுதியில் இறக்கி விட்டு விட்டு கடத்தல் கும்பல் தப்பி சென்றது.

    இது குறித்து வெங்கடேஷ் இரும்பாலை போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து இந்த கடத்தலில் தொடர்புடைய 6 பேரை செப்டம்பர் மாதம் இறுதியில் போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை பிடிக்க துணை கமிஷனர் மதிவாணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை விசாரித்து வந்த நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள முத்தியால் பள்ளியை சேர்ந்த நடராஜன் (53), அவரது மனைவி சுஜாதா (45) ஆகியோரை நேற்று கைது செய்தனர் . தொடர்ந்து அவர்கள் கொடுத்த தகவல் படி சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பூசாரி வட்டம் சீனிவாசன் (44) , கீரப்பாப்பம்பாடி மகாலிங்கம் (39), மாமாங்கம் ஜெகன்மோகன் (44), தர்மபுரி மாவட்டம் அரூர் பெரியார் நகர் கோபி (38) ஆகியோரை அவரவர் வீட்டில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 6 பேரிடமிருந்து 20 லட்சம் ரூபாய்க்கு மேல் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 6 பேரையும் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

    • வனத்துறையினர் நேற்று இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • யாருக்கு விற்பனை செய்ய அம்பர் கிரிசை கொண்டு வந்தார்கள்? என்பது குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    அம்பர் கிரிஸ் எனப்படும் திமிங்கல எச்சம் வாசனை திரவியங்கள் மற்றும் மருந்து பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கல எச்சத்தை சிலர் கடத்தி கொண்டு சென்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் நாகர்கோவில் பகுதியில் அம்பர் கிரிஸ் விற்பனை செய்யப்படுவதாகவும், சிலர் கடத்தி கொண்டு வருவதாகவும் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் நேற்று இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது காரில் வந்த ஒரு கும்பலை வனத்துறையினர் பிடித்தனர். அந்த காரில் 4 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனால் அவர்களது காரை வனத்துறையினர் சோதனை செய்தனர்.

    அப்போது அவர்களது காரில் அம்பர் கிரிஸ் கடத்தியது தெரியவந்தது. காரில் இருந்த 11 கிலோ அம்பர் கிரிசை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் இருந்த 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த நாராயணன்(வயது41), மேலப்பாளையத்தைச் சேர்ந்த அருணாச்சலம்(53), வேலாயுதம்(47), நாங்குநேரியைச் சேர்ந்த சுந்தர் (25) என்பது தெரியவந்தது.

    நெல்லையிலிருந்து நாகர்கோவிலுக்கு அம்பர் கிரிசை விற்பனைக்காக கடத்தி கொண்டு வந்திருக்கின்றனர். அது தொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாகர்கோவிலில் யாருக்கு விற்பனை செய்ய அம்பர் கிரிசை கொண்டு வந்தார்கள்? என்பது குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    இதில் தொடர்புடைய நாகர்கோவில் சேர்ந்த நபரையும் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட அம்பர் கிரிசின் மதிப்பு ரூ.10 கோடி என்று கூறப்படுகிறது. 

    • நள்ளிரவு நேரத்தில் மர்மநபர்கள் நுழைந்து கைவரிசை
    • வடக்கிப்பாளையம் போலீசார் விசாரணை

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆர்.பொன்னாபுரம் அருகே உள்ள சி.கோபாலபுரத்தை சேர்ந்தவர் தனபால கிருஷ்ணன் (வயது 56). அவர் பொள்ளாச்சி வடக்கு தி.மு.க. துணை செயலாளராக உள்ளார்.

    இவர் தனது தோட்டத்தில் 17 ஆண்டுகள் பழமையான சந்தன மரத்தை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு தனபாலகிருஷ்ணன் தூங்க செல்வதற்கு முன்பு சந்தன மரத்தை பார்த்து விட்டு சென்றார்.

    நள்ளிரவு தோட்டத்துக்குள் நுழைந்த மர்மநபர்கள் சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென்றனர். மறுநாள் காலையில் வெளியே வந்த தனபாலகிருஷ்ணன் சந்தனமரம் வெட்டி கடத்தப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இது குறித்து வடக்கிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இது குறித்து வடக்கிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தி.மு.க. பிரமுகரின் தோட்டத்தில் 17 ஆண்டுகள் பழமையான சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • மாலதியின் தாயார் புதுமண தம்பதிகள் தங்கியிருந்த வீட்டை கண்டுபிடித்து அங்கு சென்றுள்ளார்.
    • கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள தென்னிமலை கிராமத்தை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு. இவரது மகன் கண்ணன் (வயது 21). இவர் மூன்றடைப்பு அருகே உள்ள தனியார் நூற்பாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    களக்காட்டை அடுத்த திருக்குறுங்குடி அருகே உள்ள மலையடி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் மாலதி (20). இவரும் கண்ணன் வேலை பார்த்த அதே நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் இவர்கள் 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது. சில மாதங்களாக 2 பேரும் காதலித்து வந்த நிலையில் 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    இதற்காக சமீபத்தில் மாலதியின் பெற்றோரிடம் கண்ணன் பெண் கேட்டு சென்றுள்ளார். அப்போது அவரது பெற்றோர் கண்ணனுக்கு தனது மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டனர்.

    இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு கண்ணனும், மாலதியும் வீட்டை விட்டு வெளியேறி ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் நெல்லையில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று மாலதியின் தாயார் புதுமண தம்பதிகள் தங்கியிருந்த வீட்டை கண்டுபிடித்து அங்கு சென்றுள்ளார்.

    அங்கிருந்த மகள் மற்றும் மருமகனிடம் திருமணத்திற்கு அவர் சம்மதம் தெரிவித்தார். மேலும் வீட்டில் அனைவரையும் சம்மதிக்க வைத்து விட்டதாக கூறி சொந்த ஊருக்கு 2 பேரையும் அவர் அழைத்துள்ளார்.

    அதை நம்பிய கண்ணன் தனது மனைவியுடன் புறப்பட்டார். தொடர்ந்து 3 பேரும் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊருக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பொன்னாக்குடி விலக்கு பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் பஸ் நிறுத்தத்தில் அவர்கள் 3 பேரும் இறங்கி உள்ளனர்.

    அவர்களை பின் தொடர்ந்து காரில் வந்த ஒரு கும்பல் கண்ணனை தாக்கி விட்டு மாலதியை காரில் கடத்தி சென்றது. அப்போது மாலதியின் தாயாரும் அந்த காரில் புறப்பட்டு சென்று விட்டார்.

    உடனடியாக கண்ணன் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்திற்கு சென்று தனது மனைவியை கடத்தி சென்ற கும்பல் குறித்து புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    அதில் மாலதியின் குடும்பத்தினர் அவரை திட்டமிட்டு கடத்தியது தெரியவந்தது. இதற்காக மாலதியை நைசாக பேசி நம்ப வைத்து அவரது தாயாரை வைத்து அழைத்து வந்ததும், பஸ்சை பின் தொடர்ந்து காரில் மாலதியின் தாய்மாமன்கள் வந்து மாலதியை கடத்தி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

    தொடர்ந்து அந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

    • மணப்பாறையில் சிறுமியை கடத்த முயன்ற மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது
    • முகமூடி அணிந்திருந்த மர்ம நபர் திடீரென சிறுமியை பிடித்து கடத்த முயன்றதாக கூறப்படுகிறது

    மணப்பாறை,

    மணப்பாறை பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவள் நேற்று வீட்டின் அருகே இருந்தபோது அங்கு வந்த முகமூடி அணிந்திருந்த மர்ம நபர் திடீரென சிறுமியை பிடித்து கடத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி கூச்சலிடவே குடும்பத்தினர் மற்றும் அக்கம், பக்கத்தினர் திரண்டனர். இதையடுத்து மர்ம நபர் சிறுமியை விட்டு விட்டு தான் வந்த மொபட்டில் தப்பிச்சென்றார். இது பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார்? சிறுமியை எதற்காக கடத்த முயன்றார்? என்பது குறித்தும், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் ஏதேனும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என்பதை பார்வையிட்டும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடிமை பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • அரிசி கடத்தலில் ஈடுபட்ட ரவியை போலீசார் தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    திட்டக்குடி அருகே வைத்தியநாதபுரம் கிராமத்தில் ரவி என்பவர் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியை கோழி தீவனத்துக்கு கடத்த இருப்பதாக குடிமை பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அதிகாரிகள் இன்று சோதனை செய்தனர். அப்போது ரவிக்கு சொந்தமான இடத்தில் 25 மூட்டையில் 1 ½ டன் ரேஷன் அரிசி இருந்தது. பின்னர் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்த இருந்த வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ரவியை போலீசார் தேடி வருகின்றனர். இது போன்ற கிராமங்களில் அரிசி வாங்கி கோழி தீவனத்துக்காக கடத்தும் நபர்கள் பற்றியும் விசாரணை செய்து வருகின்றனர்.

    • திருவெண்ணைநல்லூர் அருகே மினி லாரியில் ஆற்று மணல் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • மினி லாரியை போலீசார் வழிமறித்து நிறுத்தி சோதனையிட்டனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் போலீசார் இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஆனத்தூரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மினி லாரி ஒன்று வேகமாக வந்தது. மினி லாரியை போலீசார் வழிமறித்து நிறுத்தி சோதனையிட்டனர்.

    அப்போது மினி லாரியில் தென்பெண்ணையாற்று மணல் கடத்தப்பட்டதை கண்டனர். இதையடுத்து மினிலாரியை ஓட்டிவந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். இதில் பண்ருட்டி வட்டம் உளுந்தாம்பட்டு கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன் (வயது 19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து மினி லாரியை பறிமுதல் செய்தனர்.

    • மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையில் 110 லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்தது.
    • கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    புதுச்சேரி மாநிலத்திலிருந்து நாகை வழியாக தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத் தொடர்ந்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டனர்.

    அதேபோல் மானாம்பேட்டை சோதனை சாவடியில் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது.

    அந்த மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின்பேரில் மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.

    சோதனையில் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையில் 110 லிட்டர் சாராயம் இருந்தது.

    இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் மானம்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பிரபாகரன் (வயது 49), திருச்செங்காட்டங்குடி தெற்கு தெருவை சேர்ந்த தியாகராஜன் (வயது 32) என்பதும் இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் திருவாரூர் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • கடந்த 26-ந் தேதி காலை கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.
    • கிருஷ்ணராஜ் (26)என்பவர் ஆசைவார்த்தை கூறி அனிதாவை கடத்தி சென்றதாக கூறியுள்ளார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேலிருப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் அருள். இவரது மகள் அனிதா (வயது 17). இவர் பண்ருட்டி தனியார் கல்லூரி ஒன்றில் பி.ஏ. தமிழ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர். வழக்கம்போல கடந்த 26-ந் தேதி காலை கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து காடாம்புலி யூர் போலீஸ் நிலையத்தில் அனிதாவின் தந்தை அருள் புகார் செய்தார்.

    அதில் பணிக்கன்குப் பத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. 3-ம் ஆண்டு படித்து வரும் குறிஞ்சிப்பாடி புலியூர் மெயின் ரோட்டில் வசித்து வரும் கிருஷ்ணராஜ் (26)என்பவர் ஆசைவார்த்தை கூறி அனிதாவை கடத்தி சென்றதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன், சப்- இன்ஸ்பெக்டர் பிரேம் குமார் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி கல்லூரி மாணவி அனிதாவை தேடி வருகின்றனர்.

    ×