search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் இன்ஸ்பெக்டர் என ஏமாற்றி பணம் பறித்த வாலிபர் காரில் கடத்தி கொலை: 3 பேர் கைது
    X

    போலீஸ் இன்ஸ்பெக்டர் என ஏமாற்றி பணம் பறித்த வாலிபர் காரில் கடத்தி கொலை: 3 பேர் கைது

    • தனிப்படை போலீசார் சரவண வேலனை கடத்தி சென்ற மர்மநபர்கள் யார், எதற்காக கடத்தினார்கள் என்று விசாரணை நடத்தினர்.
    • கைதான சரவணபாண்டியனின் சொந்த ஊர் மதுரை திருப்பரங்குன்றம். கோவை தெலுங்குபாளையத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மெட்டராத்தி பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 44). திருமணமாகாத இவருக்கு அவரது உறவினர்கள் பெண் பார்த்து வந்தனர். இந்தநிலையில் சின்னச்சாமிக்கும், பல்லடத்தை சேர்ந்த சரவண வேலன்(37) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அப்போது சரவண வேலன், நான் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறேன். எனக்கு சொந்தக்கார பெண்கள் நிறைய பேர் உள்ளனர்.

    எனவே அவர்களில் யாரையாவது பார்த்து உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என தெரிவித்துள்ளார். இதை நம்பிய சின்னச்சாமி, சரவண வேலனுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளார்.

    நேற்று முன்தினம் சின்னச்சாமியை தொடர்பு கொண்ட சரவணவேலன் என்னிடம் திருமணத்திற்கான பெண்களின் புகைப்படங்கள் உள்ளது. அதனை நீங்கள் பார்த்து தேர்வு செய்து கொள்ளுங்கள். பிடித்தால் உடனே திருமணத்தை நடத்தி விடலாம் என தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து சின்னச்சாமி அவரது சொந்த ஊரான குடிமங்கலத்திற்கு வருமாறு சரவண வேலனை அழைக்கவே, அவர் அங்கு சென்றுள்ளார். அவருக்காக சின்னச்சாமி குடிமங்கலத்தில் உள்ள விடுதியில் அறையும் எடுத்து கொடுத்தார்.

    அங்கு வைத்து இருவரும் பெண்ணின் புகைப்படங்களை பார்த்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடுதி அறையில் தங்கியுள்ளனர்.

    பின்னர் நேற்று காலை சின்னச்சாமி பணத்தம்பட்டியில் உள்ள அவரது தோட்டத்திற்கு சரவண வேலனை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார்.

    சிறிது தூரம் செல்லும் போது திடீரென அங்கு காரில் வந்த 3பேர் கும்பல், மோட்டார் சைக்கிளை மறித்ததுடன் சரவண வேலனை அலாக்காக தூக்கி காரில் போட்டு கடத்தி சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சின்னச்சாமி, காரை பின்தொடர்ந்து துரத்தியுள்ளார். அப்போது 3பேரும் மோட்டார் சைக்கிளை இடித்து தள்ளி விட்டு காரில் தப்பிச்சென்றனர்.

    உடனே இது குறித்து சின்னச்சாமி குடிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அபிஷேக் குப்தா (பொறுப்பு) உத்தரவின் பேரில் உடுமலை டி.எஸ்.பி., சுகுமாறன் மேற்பார்வையில், குடிமங்கலம் இன்ஸ்பெக்டர் ரோஸ்லின், சப்-இன்ஸ்பெக்டர் பஞ்சலிங்கம் மற்றும் போலீஸ்காரர்கள் முத்துமாணிக்கம், லிங்கேஸ்வரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் சரவண வேலனை கடத்தி சென்ற மர்மநபர்கள் யார், எதற்காக கடத்தினார்கள் என்று விசாரணை நடத்தினர்.

    காரின் நம்பரை வைத்து விசாரணை நடத்தும் போது 3பேரும் கோவை தெலுங்கு பாளையத்தை சேர்ந்த சரவண பாண்டியன் (வயது 28), முத்துசெல்வம் (27), ரித்திக் (20) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து 3பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சரவண வேலனை கடத்தி சென்று கொலை செய்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது சரவண வேலன் கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்தது.

    கைதான சரவணபாண்டியனின் சொந்த ஊர் மதுரை திருப்பரங்குன்றம். கோவை தெலுங்குபாளையத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இந்தநிலையில் சரவணபாண்டியனுக்கும், சரவண வேலனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது சரவணவேலன் தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்றும், எனக்கு கேரளா செல்ல வாடகைக்கு கார் வேண்டும் என்று கேட்டுள்ளார். உடனே சரவண பாண்டியன் கார் ஒன்றை வாடகைக்கு கொடுத்துள்ளார். அதனை வாங்கி சென்ற சரவண வேலன், செல்லாத ரூ.2ஆயிரம் நோட்டுக்களை மாற்றுவதற்காக கேரளா சென்றுள்ளார். அப்போது முறைகேடுகளில் ஈடுபட்டதாக கேரள போலீசார் சரவண வேலனை கைது செய்ததுடன், காரையும் பறிமுதல் செய்தனர். அதன்பிறகே சரவண வேலன் போலீஸ் இன்ஸ்பெக்டர் என ஏமாற்றி காரை வாடகைக்கு எடுத்து சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து சரவண பாண்டியன் ரூ.3 லட்சம் வரை பணம் செலுத்தி கேரளாவில் இருந்து காரை மீட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த சரவண வேலனிடம் பணத்தை திருப்பி தருமாறு சரவண பாண்டியன் கேட்டு வந்துள்ளார். ஆனால் அவர் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். நேற்று குடிமங்கலத்தில் இருப்பதை அறிந்த சரவண பாண்டியன் தன்னிடம் டிரைவர்களாக பணியாற்றும் முத்து செல்வம் , ரித்திக் ஆகியோரை அழைத்து கொண்டு குடிமங்கலம் சென்றதுடன் அங்கு வைத்து சரவணவேலனை காரில் கடத்தி கோவைக்கு சென்றுள்ளார். அப்போது சரவணவேலன் சத்தம் போடவே அவரது வாயை பொத்தியுள்ளனர். இதில் அவர் மூச்சுதிணறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்த 3பேரும், கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளனர். அங்கு சரவண வேலன் மூச்சுத்திணறி இறந்துள்ளதாக டாக்டர்களிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் போலீசார் விசாரணையில் 3பேரும் சிக்கிக்கொண்டனர்.

    கொலை செய்யப்பட்ட சரவண வேலன் இது போல் பலரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் என ஏமாற்றி பணம் பறித்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக சரவணவேலனை அவரது மனைவி பிரிந்து சென்றதுடன் வேறு திருமணம் செய்துள்ளார். சின்னச்சாமியிடம் திருமணத்திற்கு பெண் பார்த்து தருவதாக கூறி ரூ.1.50 வரை பணம் பறித்துள்ளார். போலீஸ் இன்ஸ்பெக்டர் என ஏமாற்றி பணம் பறித்த நபர் காரில் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×