search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடற்படை"

    • 300 பயணிகளை மீட்ட நிலையில் மீதி இருந்த 500 பயணிகளை மீட்பதற்குள் நீர்வரத்து அதிகமானது.
    • ரெயிலில் சிக்கியிருப்பவர்களில் அவசர மருத்துவ உதவி தேவைப்படுபவர்களை ஹெலிகாப்டரில் மீட்க முடிவு செய்துள்ளனர்.

    தூத்துக்குடி:

    ஸ்ரீவைகுண்டத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 3-வது நாளாக தவித்து கொண்டிருக்கும் 500 பயணிகளையும் மீட்பதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    திருச்செந்தூரில் இருந்து நேற்று முன்தினம் சென்னை நோக்கி புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஸ்ரீவைகுண்டத்தில் மழையில் சிக்கியது.

    300 பயணிகளை மீட்ட நிலையில் மீதி இருந்த 500 பயணிகளை மீட்பதற்குள் நீர்வரத்து அதிகமானது. எனவே அவர்களை மீட்க முடியவில்லை.

    ஒரு பக்கம் பெருக்கெடுத்து ஓடும் தாமிரபரணி ஆறு. மற்ற மூன்று பக்கமும் அளவுக்கு அதிகமான வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மீட்பு குழுவினரால் நெருங்க முடியவில்லை. இன்று 3-வது நாளாக ரெயிலிலேயே தவிக்கிறார்கள்.

    சூலூர், கொச்சி ஆகிய இடங்களில் இருந்து கடற்படை, விமானப்படையை சேர்ந்த 7 ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    ரெயிலில் சிக்கியிருப்பவர்களில் அவசர மருத்துவ உதவி தேவைப்படுபவர்களை ஹெலிகாப்டரில் மீட்க முடிவு செய்துள்ளனர்.

    அதன்படி ரெயிலில் இருந்த கர்ப்பிணி பெண் ஒருவரை இன்று ஹெலிகாப்டரில் மீட்டனர். அந்த பெண்ணுக்கு தேவையான மருத்துவ முதலுதவிகள் அளிக்கப்பட்டன. பின்னர் அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    வெள்ளத்தில் சிக்கி தவித்த கர்ப்பிணி பெண் உள்பட 55 பெண்கள், 19 சிறுவர்கள், 3 கைக்குழந்தைகளை ராணுவத்தினர் நேற்று மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர்.

    தேசிய பேரிடர் மீட்பு குழுவும், ரெயில்வே உயர் அதிகாரிகளும் ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு விரைந்துள்ளனர்.

    ரெயில் பெட்டிகளில் இருக்கும் பயணிகளுக்கு இன்று காலையில் உணவு மற்றும் குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.

    இன்று மாலைக்குள் அனைவரையும் மீட்பதற்கு முப்படைகளும் ஒருங்கிணைந்து வழிமுறைகளை ஆய்வு செய்து வருகிறார்கள். விரைவாக மீட்பு பணி தொடங்கும் என்று ரெயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஆந்திர மாநில கவர்னர் அப்துல் நசீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
    • பொதுமக்கள் கடற்கரையில் குவிந்து சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட்டு ஆரவாரம் செய்தனர்.

    திருப்பதி:

    கடற்படை தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

    கடற்படை தினத்தை முன்னிட்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் 4-ந் தேதி சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    மிச்சாங் புயல் காரணமாக 4-ந் தேதி நடைபெற இருந்த சாகச நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு நேற்று மாலை நடந்தது.

    இந்நிகழ்ச்சிக்கு ஆந்திர மாநில கவர்னர் அப்துல் நசீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    விமானப்படை பிரிவுகளை சேர்ந்த வீரர்கள் சாகசம் செய்தனர். விண்ணில் விமானத்தில் பறந்து தீப்பிழம்பை கக்கிய படியும், விமானங்கள் குறுக்கு நெடுக்காக சென்றும், வண்ணப் பொடிகளைத் தூவியும் சாகச நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தனர்.

    இதேபோல் கடற்படை வீரர்கள் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் சாகசங்களை செய்து காண்பித்தனர்.

    ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடற்கரையில் குவிந்து சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட்டு ஆரவாரம் செய்தனர். 

    • கஞ்சா, போதைப் பொருட்கள் கடத்துவது, இங்கிருந்து மருந்துகள், மஞ்சள், பீடி இலை உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் கடத்துவது நடந்து வருகிறது.
    • மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள தீவு பகுதியிலும் போலீசார் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர்.

    தொண்டி:

    தமிழகத்தில் 180 கி.மீ. நீள கடற்கரை மாவட்டமாக ராமநாதபுரம் விளங்கி வருகிறது. இங்கு ராமநாதபுரம், ஏர்வாடி, கீழக்கரை, ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மீனவர்கள் வாரத்தில் 3 நாட்கள் கடலுக்கு சென்று வருகின்றனர்.

    அண்டை நாடான இலங்கை, ராமநாதபுரத்துக்கு கடல் வழியாக 20 மைல் தொலைவில் உள்ளது. இதன் காரணமாக கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இலங் கையில் இருந்து கஞ்சா, போதைப் பொருட்கள் கடத்துவது, இங்கிருந்து மருந்துகள், மஞ்சள், பீடி இலை உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் கடத்துவது நடந்து வருகிறது.

    இதனை தடுக்க கடலோர காவல்படையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் இலங்கையில் இருந்து அகதிகளாகவும் இங்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கண்காணிக்கவும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் எஸ்.பி.பட்டனம் முதல் சாயல்குடி ரோஸ்மா நகர் வரை கடற்கரை உள்ளது. பாக் நீரினை, மன்னார் வளைகுடா பகுதிகளை உள்ளடக்கிய இந்தப்பகுதியில் அன்னிய ஊடுருவல், கடத்தல்களை தடுக்க இன்று கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் "சஜாக்" என்ற ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. கூடுதல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கனகராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் யாசர் மவுலானா, அய்யனார், முகமது தாரிக், கண்ணன் மற்றும் 60-க்கும் மேற்பட்ட கடலோர போலீசார் 4 குழுக்களாக பிரிந்து அதிவேக படகுகளில் கடலில் ரோந்து சென்று கண்காணிப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

    அப்போது கடற்கரை பகுதிகளில் புதிய நபர்கள் நடமாட்டம் குறித்து மீனவர்கள் உடனடியாக கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கடற்கரையில் இருந்து 7 கடல் மைல் தொலைவில் "சஜாக்" பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. மேலும் மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள தீவு பகுதியிலும் போலீசார் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர்.

    • கடற்படை தளபதி அட்மிரல் மைக் கில்டேயின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
    • முதல் பெண் என்ற பெருமையை லிசா பிரான்செட்டி பெறுவார்.

    அமெரிக்க கடற்படைக்கு முதல் முறையாக பெண் ஒருவர் தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடற்படை தளபதி அட்மிரல் மைக் கில்டேயின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் புதிய தளபதியாக லிசா பிரான்செட்டியை அதிபர் ஜோபைடன் அறிவித்துள்ளார். அவரது நியமனத்துக்கு சென்ட்சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். அது உறுதி செய்யப்பட்டால் அமெரிக்க ராணுவ தளபதியாக பதவி ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையை லிசா பிரான்செட்டி பெறுவார்.

    தற்போது கடற்படையின் துணை தலைவராக உள்ள லிசா, பணியாளர்களின் தலைமையில் முதல் பெண் உறுப்பினர் ஆவார். கடல் மற்றும் கரையோர அனுபவத்தின் அடிப்படையில் லிசா பிரான்செட்டியை கடற்படை தளபதியாக அதிபர் ஜோபைடன் தேர்ந்தெடுத்துள்ளார் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 22 மீனவர்களையும், 4 விசைப்படகுகளையும் சிறைபிடித்து சென்றனர்.
    • நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் ராமேசுவரம், பாம்பன் பகுதி மீனவர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவோம்.

    ராமநாதபுரம்:

    தமிழகத்தில் 60 நாட்கள் மீன்பிடி தடை காலம் முடிந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் ஆர்வத்துடன் மீன்பிடிக்க சென்றனர்.

    ஆனால் கடந்த வாரம் இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தல் காரணமாக ராமேசுவரம் மீனவர்கள் பாதியிலேயே கரை திரும்பும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 22-ந்தேதி புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் நெடுந் தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி ஜெகதாபட்டினம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த 22 மீனவர்களையும், 4 விசைப்படகுகளையும் சிறைபிடித்து சென்றனர். அவர்கள் இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இலங்கை அரசிடம் பேசி மீனவர்களை மீட்க மத்திய-மாநில அரசு கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அந்த கோரிக்கையை வலியுறுத்தி மண்டபம் பகுதியில் உள்ள கோவில்வாடி கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    இதன் காரணமாக மண்டபம் இறங்குபிடி தளத்தில் 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:-

    கடந்த 22-ந்தேதி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களில் மண்டபம் பகுதியை சேர்ந்தவர்களும் அடங்குவர். மண்டபம் பகுதி மீனவர்கள் உள்பட 22 பேரை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதனை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். இதன் பின்பும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் ராமேசுவரம், பாம்பன் பகுதி மீனவர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஐ.என்.எஸ். கிர்பான் ஏவுகணை கப்பலில் ஏராளமான சிறப்பு அம்சங்கள் உள்ளன.
    • கடந்த 1991-ம் ஆண்டு ஜனவரி 12-ந்தேதி இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    வியட்நாம் நாட்டின் பாதுகாப்பு துறை மந்திரி பான்வான் கேங்க் 2 நாள் பயணமாக கடந்த 18-ந்தேதி இந்தியா வந்தார்.

    அவர் நேற்று புதுடெல்லியில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த சந்திப்பின் போது இருநாட்டு உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர். அப்போது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகள் முன்னேற்றம் பற்றியும் பேசப்பட்டது.

    குறிப்பாக பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு, கடல் பாதுகாப்பு மற்றும் பன்னாட்டு ஒத்துழைப்பு ஆகியவை தொடர்பாக பேசப்பட்டது.

    அப்போது பேசிய மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், 'கடந்த ஆண்டு ஜூன் மாதம் நான் வியட்நாம் சென்ற போது இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு தளவாட ஆதரவு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் கூட்டு தொலை நோக்கு அறிக்கையும் வெளியிடப்பட்டது. இந்த கூட்டு தொலைநோக்கு அறிக்கை இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு விரிவான வழிகாட்டி ஆவணமாக உள்ளது.

    இந்த அறிக்கை நமது பாதுகாப்பு ஒத்துழைப்பின் நோக்கத்தையும், அளவையும் மேம்படுத்தி உள்ளது. இது எதிர்காலத்தின் பாதையை அமைக்கும் என நம்புகிறேன்' என்றார்.

    இதைத்தொடர்ந்து இந்த சந்திப்பின் போது இருதரப்பு ஒத்துழைப்பு திருப்தி அளிப்பதாக இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மேலும் வியட்நாமின் கடற்படை திறன்களை மேம்படுத்துவதற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கார்வெட் ஏவுகணையான ஐ.என்.எஸ். கிர்பான் ஏவுகணையை இந்தியா வியட்நாமுக்கு பரிசாக வழங்குவதாக ராஜ்நாத் சிங் அறிவித்தார்.

    இந்த ஐ.என்.எஸ். கிர்பான் ஏவுகணை கப்பலில் ஏராளமான சிறப்பு அம்சங்கள் உள்ளன. ஏவுகணையை ஏந்தி செல்லும் ரோந்து கப்பலான ஐ.என்.எஸ். கிர்பான் 1,350 டன் எடை உள்ள குக்ரி வகை ஏவுகணை கார்வெட் ஆகும்.

    இது கடந்த 1991-ம் ஆண்டு ஜனவரி 12-ந்தேதி இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இது 91 மீட்டர் நீளம், 11 மீட்டர் கற்றை மற்றும் வேக திறன் கொண்டது.

    கடலோர பாதுகாப்புக்கும், கடலில் ரோந்து செல்வதற்கும், கடல் கொள்ளை எதிர்ப்பு பணியிலும் இந்த கப்பல் மிகவும் உதவியாக இருக்கும்.

    • பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
    • எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் தடுப்பதற்காக பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    ஸ்ரீநகர்:

    உலகின் வளர்ந்த, வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது.

    இதையொட்டி பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜி20 கூட்டம் இன்று தொடங்கியது. சுற்றுலா தொடர்பான ஜி20 பணிக் குழுவின் 3-வது கூட்டம் ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் தொடங்கியது. 3 நாட்கள் இந்த மாநாடு நடைபெறும்.

    ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு நடைபெறும் முதல் சர்வதேச கூட்டமாகும். உலகின் பல்வேறு பகுதியில் இருந்து 60-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 20 பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கிறார்கள்.

    ஸ்ரீநகரில் நடைபெறும் இந்த கூட்டத்தின்போது எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் தடுப்பதற்காக பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. காவல்துறை, ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, தேசிய பாதுகாப்பு படை, கடற்படை, கமாண்டோக்கள் என பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    ஜபர்வன் மலைப்பகுதி முதல் எழில்மிக்கதால் ஏரி வரை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தால் ஏரியில் கடற்படை காமாண்டோக்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் பரவலாக சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஆசியாவின் சுவிட்சர்லாந்து என அறியப்படும் குல்மார்க் மற்றும் இதர சுற்றுலா தலங்களுக்கு சர்வதேச பிரதிநிதிகள் வருகை புரிவதால் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    சுற்றுலா தொடர்பான முதல் கூட்டம் குஜராத்தின் கட்ச் பகுதியிலும், 2-வது கூட்டம் மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரியிலும் நடைபெற்றது.

    • மீட்டு தரக்கோரி மனைவி போலீசில் புகார்
    • போலீசார் புகாரை பெற்று கொண்டு வழக்குப்பதிவு செய்து மாயமான பிர்லன்ஜோஸ் செல்போன் எண்ணை வைத்து விசாரித்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே சூசக்குடிவிளை, பூந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பெனிஷா (வயது 25). இவர் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது கணவர் பிர்லன்ஜோஸ் (28). இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய கடற்படையில் வேலைக்கு சேர்ந்தார். தற்போது விசாகபட்டினத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்தார்.

    அதன்பிறகு உடல் சரியான பிறகு கடந்த மாதம் மீண்டும் விசாகப்பட்டினம் கடற்படை தளத்திற்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன்பிறகு குடும்பத்தா ருக்கு போன் செய்யவில்லை.

    நேற்று விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் இருந்து எனக்கு போன் வந்தது. அதில் எனது கணவர் விடுமுறை முடிந்து மீண்டும் பணியில் வந்துசேரவில்லை என்ற தகவல் கிடைத்தது. இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். எனவே எனது கணவரை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    போலீசார் புகாரை பெற்று கொண்டு வழக்குப்பதிவு செய்து பிர்லன்ஜோஸ் செல்போன் எண்ணை வைத்து விசாரித்து வருகிறார்கள். பிர்லன்ஜோஸ் மாயமானதால் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

    • ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 9 நாகை மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறைப்படுத்தி உள்ளனர்.
    • இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் தொடராமல் மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    முக்குலத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதவது,

    கடந்த 10ம்தேதி ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 9 நாகை மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறைப்படுத்தி உள்ளனர்.

    இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. இலங்கையின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சியில் அவர்களுக்கு உதவியாக இந்தியா பல்வேறு நிதி உதவிகள், பெட்ரோலிய பொருட்கள், மருந்து பொருட்களை வழங்கி உதவிகரமாக உள்ளது.

    இப்படிப்பட்ட சூழலிலும் இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் தொடர்கிறது. இது தொடர்பாக எந்த அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவிக்காதது வருத்தமளிக்கிறது. தமிழக முதல்-அமைச்சர் இது சம்பந்தமாக மத்திய அரசை வலியுறுத்தி அந்த மீனவர்களையும், படகுகள், மீன்பிடி வலைகளையும் மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் தொடராமல் மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இலங்கையின் தற்போதைய சூழலை வைத்து கச்சத்தீவை மீண்டும் திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விமானப்படையில் 3 ஆயிரம் பணியிடங்களுக்கு 7.50 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
    • 3 ஆயிரம் கடற்படை பணிக்கு 9.55 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

    புதுடெல்லி:

    அக்னிபாத் திட்டத்தின் கீழ், பதினேழரை வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் 4 ஆண்டுகள் முப்படைகளில் சேர்ந்து பணியாற்றும் திட்டத்தை கடந்த ஜூன் மாதம் 14 மத்திய அரசு அறிவித்தது.

    வடமாநிலங்களில் போராட்டங்கள் நடந்தபோதிலும், இதை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இந்திய விமானப்படையில், சுமார் 3 ஆயிரம் பணியிடங்களுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    இதற்கிடையே, இந்திய கடற்படை பணிக்கு விண்ணப்பிக்கும் பணி ஜூலை 1-ந் தேதி தொடங்கியது. சமீபத்தில் முடிவடைந்தது.

    இந்நிலையில், கடற்படையில் 3 ஆயிரம் பணியிடங்களுக்கு சுமார் 9 லட்சத்து 55 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பித்தவர்களில் 82 ஆயிரத்து 200 பேர் பெண்கள் ஆவர் என கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவம், கடற்படையில் சேர இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் சேர சுமார் 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

    புதுடெல்லி:

    முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை தேர்வு செய்யும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. 17½ வயது முதல் 21 வரையிலான இளைஞர்கள் இந்த திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பின்னர் இந்த வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டது.

    இந்தத் திட்டத்துக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியபோதும், இந்தத் திட்டத்தை வாபஸ் பெறமுடியாது என மத்திய அரசு அறிவித்தது. அதேநேரம் இந்த திட்டத்தின் கீழ் ஆள் எடுக்கும் பணிகளை விமானப்படை கடந்த மாதமே தொடங்கியது.

    இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் சேர சுமார் 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்திய கடற்படையில் முதல் முறையாக வீராங்கனைகள் சேர்க்கப்பட உள்ளனர். இவர்கள் போர்க் கப்பல்களில் பணியாற்ற உள்ளனர்.

    மேற்கு பசுபிக் பெருங்கடலில் உள்ள ஹவாய் தீவுகளில் இந்தியா உள்பட 26 நாடுகள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட போர் பயிற்சி இன்று தொடங்க உள்ளது.
    ஹவாய்:

    மேற்கு பசுபிக் பெருங்கடலில் உள்ள ஹவாய் தீவு அமெரிக்காவின் ஒரு மாநிலமாக செயல்பட்டு வருகிறது. இந்த தீவில் உள்ள பியர்ல் துறைமுகம் வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட 26 நாடுகள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கடற்படை போர் பயிற்சி இங்கு இன்று தொடங்க உள்ளது.

    இதற்காக, இந்திய கடற்படையில் உள்ள நவீன போர் கப்பலான ஐஎன்எஸ் சஹ்யாத்ரி கேப்டன் சாந்தனு ஜா தலைமையில் பியர்ல் துறைமுகத்திற்கு நேற்று சென்றடைந்தது. கடல் பாதுகாப்பில் உள்ள அம்சங்களை புரிந்து கொள்ள இந்தியா தனது பங்களிப்பை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ×