search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐகோர்ட்"

    • டி.டி.வி. தினகரனிடம் அபராதத் தொகை ரூ.31 கோடியை வசூலிக்க நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்.
    • பொதுநல வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி. கங்கா புர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் எஸ். பார்த்திபன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்து உள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

    அ.ம.மு.க., தலைவர் டி.டி.வி.தினகரன் மீது அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக கூறி, அவருக்கு ரூ.31 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை இயக்குனர் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 6-ந்தேதி உத்தரவிட்டார். ஆனாலும், அவர் ரூ.31 கோடி அபராத தொகையை இதுவரை செலுத்தவில்லை.

    எனவே, டி.டி.வி. தினகரனிடம் அபராதத் தொகை ரூ.31 கோடியை வசூலிக்க நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த பொதுநல வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி. கங்கா புர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது டி.டி.வி.தினகரன் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.குமார், "டி.டி.வி. தினகரனிடம் இருந்து அபராதத்தை வசூலிக்க அமலாக்கத்துறை இயக்குனர் நடவடிக்கை எடுத்தார்.

    இதை எதிர்த்து டி.டி.வி.தினகரன் சிவில் வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதேபோல, டி.டி.வி.தினகரனை திவாலானவர் என்று அறிவிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது" என்று கூறினார்.

    இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், மூத்த வக்கீலின் விளக்கம் மனுதாரருக்கு பதிலாக கிடைத்துவிட்டதால், அதை பதிவு செய்து வழக்கை முடித்து வைக்கிறோம் என்று தீர்ப்பளித்தார்.

    • சட்டப்படி மாவட்டந்தோறும் அரசு முதியோர் இல்லங்கள் அமைப்பதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
    • எத்தனை மாவட்டங்களில் அரசு முதியோர் இல்லங்கள் இல்லை என மனுதாரருக்கு கேள்வி எழுப்பியது.

    சென்னை:

    தூத்துக்குடியைச் சேர்ந்த பாஸ்கல் சசில் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், "பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் பராமரிப்புச் சட்டப்படி, மாநில முழுவதும் மாவட்டத்துக்கு ஒரு அரசு முதியோர் இல்லத்தை அமைக்க வேண்டும் கூறி உள்ளது.

    இந்த சட்டப்படி, தமிழ்நாட்டில் அரசு முதியோர் இல்லங்கள் செயல்படுகின்றனவா என தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தேன். அதற்கு அரசு, முதியோர் இல்லங்களை அரசு நேரடியாக நடத்தவில்லை என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

    முதியோர் இல்லங்களுக்கு மானியம் மட்டும் வழங்கி வருவதாகவும் அரசு கூறியுள்ளதன் மூலம், சட்ட விதிகளை அமல்படுத்த அரசு தவறிவிட்டது என்று தெரிகிறது.

    சட்டப்படி மாவட்டந்தோறும் அரசு முதியோர் இல்லங்கள் அமைப்பதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கங்கா புர்வாலா மற்றும் ஆதிகேசவலு அமர்வு, எத்தனை மாவட்டங்களில் அரசு முதியோர் இல்லங்கள் இல்லை என மனுதாரருக்கு கேள்வி எழுப்பியது.

    அதற்கு, ஒரு மாவட்டத்தில் கூட அரசு முதியோர் இல்லம் இல்லை என மனுதாரர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து, ஒரு மாவட்டத்தில் கூட அரசு முதியோர் இல்லம் இல்லை என்ற மனுதாரர் தரப்பு வாதம் தவறு எனத் தெரிய வந்தால், மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்த நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீதிபதி, மனுதாரர்களின் உண்மையான குறையை தீர்க்குமாறு மாநில அரசு வக்கீலிடம் தெரிவித்தார்.
    • வழக்கு விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் ஜியா பாவல், ஜஹாத். திருநங்கைகளான இவர்கள் பள்ளி படிக்கும் போதிலிருந்தே நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்தநிலையில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    கடந்த 3 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்த இந்த திருநங்கை தம்பதிக்கு கடந்த பிப்ரவரி மாதம் குழந்தை பிறந்தது. ஆணாக இருந்துவந்த ஜகாத், தனது வயிற்றில் குழந்தையை சுமந்து பெற்றெடுத்தார். இதனை ஜியா பாவல் அறிவித்தார்.

    ஆனால் தங்களுக்கு என்ன குழந்தை பிறந்தது என்பதை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். இந்நிலையில் அவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு கோழிக்கோடு மாநகராட்சி மூலம் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது. அதில் குழந்தைக்கு ஜியா பாவலை தந்தை என்றும், ஜஹாத்தை தாய் என்றும் குறிப்பிட்டுள்ளது.

    இந்நிலையில் திருநங்கை தம்பதியான ஜியா பாவல் மற்றும் ஜஹாத் ஆகிய இருவரும் கேரள ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் தங்களது குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தாய்-தந்தை என்று இருப்பதற்கு பதிலாக பெற்றோர் என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க கோழிக்கோடு மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    அந்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. குழந்தையின் தாய் பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னை ஆணாக அடையாளப்படுத்தி, தற்போது சமுதாயத்தில் ஆணாக வாழ்ந்து வருவதால் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தை மற்றும் தாயின் பெயரை தவிர்க்குமாறு மனுதாரர்கள் கேட்டுக்கொண்டனர்.

    மேலும் தங்களை பெற்றோர் என்று மட்டும் குறிப்பிட வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை அதிகாரிகள் மறுத்ததாகவும் கோர்ட்டில் தம்பதியினர் தெரிவித்தனர். அதனைக்கேட்ட நீதிபதி, மனுதாரர்களின் உண்மையான குறையை தீர்க்குமாறு மாநில அரசு வக்கீலிடம் தெரிவித்தார்.

    ஆனால் மனுவில் சில தொழில் நுட்ட குறை பாடுகளை அரசு வக்கீல் சுட்டிக்காட்டினார். இதையடுத்து அந்த வழக்கு விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

    • பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரமும் தாக்கல் செய்தார்.
    • பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்டில் எஸ். வி.சேகர் மனு தாக்கல் செய்தார்.

    சென்னை:

    நடிகரும் பா.ஜ.க. நிர்வாகியுமான எஸ்.வி சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துக்களை கொண்ட பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

    இதுகுறித்து பத்திரிகையாளர் அளித்த புகார் அடிப்படையில் அவர் மீது பல சட்டப்பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்டில் எஸ். வி.சேகர் மனு தாக்கல் செய்தார்.

    அப்போது பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரமும் தாக்கல் செய்தார்.

    ஆனால் எஸ்.வி.சேகர் வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கை நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வந்தார். இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று அவர் பிறப்பித்தார். அதில் எஸ்.வி .சேகர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய முடியாது. அவர் மீதான வழக்கை எம். எல். ஏ., எம்.பி. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு ஆறு மாதங்களில் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

    அதேபோல முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து தவறான தகவலை தெரிவித்தும், தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டதாகவும் நடிகர் எஸ்.வி. சேகருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் கடந்த 2020-ம் ஆண்டு ராஜரத்தினம் என்பவர் புகார் செய்தார். இதன்படி பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்டில் எஸ். வி.சேகர் மனு தாக்கல் செய்தார்.

    அதில் எம்ஜிஆர் சிலைக்கு காவி சால்வை போர்த்திய செயலை களங்கம் என்று அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து கூறியதால், அதற்கு நான் சில கேள்விகளை கேட்டு வீடியோ வெளியிட்டேன். ஆனால் ஒரு போதும் தேசியக்கொடியை அவமதிக்கவில்லை. எனவே எம்.பி.எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோட்டில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். ஆனந்த், வெங்கடேஷ், எஸ்.வி.சேகர் மீதான இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

    • செல்வமோகன்தாஸ் பாண்டியன் 88,271 ஓட்டுகளும், பழனிநாடார் 87,706 ஓட்டுகளும் பெற்றனர்.
    • காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

    தென்காசி:

    தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது தென்காசி மாவட்டத்தில் தென்காசி தொகுதியில் தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரசும், அ.தி.மு.க.வும் மோதியது. இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பழனி நாடார், அ.தி.மு.க. வேட்பாளராக செல்வமோகன்தாஸ் பாண்டியன் உள்பட 18 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    ஐகோர்ட்டில் வழக்கு

    அதில் வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளில் அ.தி.மு.க. வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் 88,271 ஓட்டுகளும், காங்கிரஸ் வேட்பாளர் பழனிநாடார் 87,706 ஓட்டுகளும் பெற்றனர். ஆனால் தபால் ஓட்டு எண்ணிக்கையில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு 674 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது. காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடாருக்கு 1,609 ஓட்டுகள் கிடைத்தன. இதனால் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் 370 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

    இதுதொடர்பாக ஐகோர்ட்டில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. தபால் வாக்குகளையும், மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்குகளில் 28 முதல் 30 சுற்றுகள் வரை பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் என கூறி இருந்தார்.

    தபால் ஓட்டுகள் மீண்டும் எண்ணிக்கை

    இந்த வழக்கில் தபால் ஓட்டுக்களை மீண்டும் எண்ணிக்கை நடத்த வேண்டும். அதனை 10 நாட்களில் எண்ணி முடிவு அறிவிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அதனை எண்ணுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான துரை ரவிச்சந்திரன் மேற்கொண்டு வருகிறார்.

    அதன்படி தபால் ஓட்டுகள் நாளை (வியாழக்கிழமை) எண்ணப்பட உள்ளது. தென்காசி ரெயில்வே மேம்பாலம் அருகே உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கலெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் ஆர்.டி.ஓ. லாவண்யா ஆகியோரின் முன்னிலையில் நாளை தபால் ஓட்டுகள் மீண்டும் எண்ணப்பட உள்ளது. காலை 10.30 மணிக்கு தொடங்கி 1 மணிக்குள் வாக்கு எண்ணப்படுகிறது.

    வேட்பாளர்கள் 18 பேர் உள்ள நிலையில் வேட்பாளர்கள் அல்லது ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் என 18 முகவர்கள் வாக்கு எண்ணிக்கையின் போது பங்கேற்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது. எனவே, பங்கேற்க விரும்பும் முகவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்டம் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று வரை விண்ணப்பித்தவர்கள் மட்டுமே நாளை ஓட்டு எண்ணிக்கைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வாக்கு எண்ணிக்கை காலை 10 மணி அளவில் ஒரு மேஜைக்கு 7 பேர் கொண்ட குழு வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட உள்ளது. இதற்கு 1 கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் எண்ணப்பட்டுள்ள இறுதி வாக்கு எண்ணிக்கை முடிவு அறிக்கையாக தயார் செய்யப்பட்டு மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் வாயிலாக சென்னை ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதனையொட்டி போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் மேற்பார்வையில், தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • சென்னை ஐகோர்ட்டில் சதீஷ் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
    • குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த போலீஸ் கமிஷனர் உத்தரவில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன.

    சென்னை:

    சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் மாணிக்கம்(47). கால் டாக்சி ஓட்டுனர். இவரது மனைவி ராமலட்சுமி(43) ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராகப் பணிபுரிந்து வருகிறார்.

    இவர்களுக்கு சத்யா (வயது 20) என்ற மகள் இருந்தார். இவர் சென்னை தி.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் என்பவரது மகன் மகன் சதீஷ்(23), சென்னை விமான நிலையத்தில் கார்கோ பிரிவில் பணியாற்றி வந்தார். சதீசும், சத்யாவும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இதற்கு சத்யா பெற்றொர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், சதீசுடன் பேசுவதை சத்யா நிறுத்தினார்.

    இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், பரங்கிமலை ரெயில் நிலையம் நடைமேடையில் நின்றுக் கொண்டிருந்த சத்யாவிடம் பேச முயற்சித்தார். அவர் பேச மறுக்கவே, அங்கு வந்த மின்சார ரெயில் முன்பு சத்யாவை தள்ளிவிட்டார். இதில் ரெயில் சக்கரத்தில் சிக்கி சத்யா உடல் துண்டு துண்டானது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீசை கைது செய்தனர். பின்னர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தன்னை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் சதீஷ் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த போலீஸ் கமிஷனர் உத்தரவில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. கைது செய்த தேதியை தவறாக குறிப்பிட்டுள்ளனர். ஆங்கிலத்தில் உள்ள ஆவணங்களை, தமிழில் மொழி பெயர்த்து வழங்கவில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சதீசை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த போலீஸ் கமிஷனர் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
    • வழக்கு விசாரணை மே மாதம் 30-ந்தேதி முடிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக கடந்த 19-ந்தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகள் மூலம் மாற்றியும், டெபாசிட் செய்யப்பட்டும் வருகிறது. இதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ரஜ்னீஷ் பாஸ்கர் குப்தா என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதற்கு ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் இல்லை என்றும், இதுதொடர்பாக மத்திய அரசு தான் முடிவு எடுக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    1934 ரிசர்வ் வங்கி சட்டத்தின் 24(2) பிரிவின்படி மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சதிஷ் சந்திரா சர்மா மற்றும் நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த மனுவுக்கு பதில் அளித்த ரிசர்வ் வங்கி, 'இது பொருளாதார கொள்கை சார்ந்த விஷயம். புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே திரும்ப பெறுவதாக அறிவித்துள் ளோம் என்று தெரிவித்தது. இந்த வழக்கு விசாரணை மே மாதம் 30-ந்தேதி முடிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தீர்ப்பு வழங்கப்பட்டது. ரூ.2 ஆயிரம் நோட்டு திரும்ப பெறும் ரிசர்வ் வங்கியின் முடிவுக்கு எதிரான பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    • தமிழக அரசு மதுபான சில்லரை விற்பனை விதிகளை மீறி அமைக்கப்பட்டிருந்த கடைகளை மூடவில்லை.
    • கலெக்டரிடம் முறையிட சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது

    சென்னை:

    டாஸ்மாக் கடை மூடல் தொடர்பாக ராஜா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார். வழக்கு மனுவில், "தமிழக அரசு மதுபான சில்லரை விற்பனை விதிகளை மீறி அமைக்கப்பட்டிருந்த கடைகளை மூடவில்லை" என்று கூறி இருந்தார்.

    இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில், "விதிகளை மீறி அமைக்கப்படும் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கலெக்டரிடம் முறையிடலாம். கலெக்டரிடம் முறையிட சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது" என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விளக்கத்தை ஐகோர்ட்டு ஏற்றுக்கொண்டு வழக்கை முடித்து வைத்தது.

    • அரசாணையை எதிர்த்து வக்கீல் கே.பாலு சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
    • மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ள 4 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகை செய்யும் திருத்த அரசாணையில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனவும் பொது நலனுக்கு எதிரானதும் இல்லை என, தமிழ்நாடு அரசு சென்னை ஐகோர்ட்டில் பதில் அளித்துள்ளது.

    திருமண மண்டபங்கள், விருந்து மண்டபங்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்கள் பரிமாற வசதியாக தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளில் திருத்தம் செய்து, தமிழ்நாடு அரசு சிறப்பு உரிமத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

    பின்னர், பொது இடங்களான திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் மதுபானம் பரிமாற வகை செய்யும் விதிகள் ரத்து செய்யப்பட்டு, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

    இந்த அரசாணையை எதிர்த்து வக்கீல் கே.பாலு சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாறும் வகையில் உரிமம் வழங்குவது தொடர்பான அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

    இந்த வழக்கில் உள்துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை செயலாளர் சார்பில் மதுவிலக்கு துறை ஆணையர் ரத்னா பதில்மனு தாக்கல் செய்துள்ளார்.

    அதில், திருமணம் போன்ற நிகழ்வுகளில் மதுபானம் பரிமாற வகை செய்யும் பிரிவுகள் நீக்கப்பட்டு, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகை செய்யும் திருத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மதுபான விற்பனை விதிகளின்படியும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படியும் தான் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற ஒன்று அல்லது சில நாட்களுக்கு மட்டும் உரிமம் வழங்கப்படும்.

    கல்வி நிறுவனங்களுக்கு அருகில் நடக்கும் நிகழ்வுகளுக்கு இந்த உரிமம் வழங்கப்படாது என்று பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இந்த உரிமங்கள் வழங்கப்படும்.

    பொதுமக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், வருவாய் ஈட்டுவதையே நோக்கமாக கொண்டு இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்று மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு தவறானது. மேலும் மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ள 4 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதனால், அரசின் உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை, பொதுநலனுக்கு எதிரானதும் இல்லை என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அரசின் பதில்மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதை ஏற்றுக் கொண்டு வழக்கின் விசாரணையை ஜூலை 5-ந்தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அது வரை ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீட்டித்தும் உத்தரவிட்டனர்.

    • 54 துறைகளில் குரூப்-4 மூலம் பணியில் சேர்ந்த பலர் அதிக பலன் அடைந்து வந்தனர்.
    • அரசுத் துறையிலும் பணி மூப்பு அடிப்படையில் சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கும் பணி வேகப்படுத்தப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழக அரசு பணிகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

    இதில் ஒவ்வொரு ஜாதியினரும் வேலையில் சேர்ந்த பிறகு அவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தாலும் இட ஒதுக்கீடு அடிப்படையிலும் பதவி உயர் வழங்கப்பட்டது.

    இந்த நடைமுறை 1990-ல் இருந்து பின்பற்றப்பட்டு வந்தது.

    சுழற்சி அடிப்படையிலான பதவி உயர்வில் (ரோஸ்டர் சிஸ்டம்) காலியிடங்கள் பதவி மூப்பு அடிப்படையில் நிரப்பப்படாமல் ஜாதி அடிப்படையில் சில பதவிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.

    இதன் மூலம் வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்து துறை, கணக்கு கருவூலம், வணிக வரித்துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட 54 துறைகளில் குரூப்-4 மூலம் பணியில் சேர்ந்த பலர் அதிக பலன் அடைந்து வந்தனர்.

    இதன் பிறகு இந்த நடைமுறையை அதிக அளவில் செயல்படுத்தி வந்துள்ளனர். இதன் மூலம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 31 இடங்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 இடங்கள், தாழ்த்தப்பட்டோருக்கு 18 இடங்கள், பழங்குடியினருக்கு 1 இடம் மீதம் உள்ள இடங்களுக்கு பொது பிரிவு மூலம் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது.

    இந்த நடைமுறையால் பணி மூப்பு அடிப்படையில் சீனியாரிட்டி இருந்தும் பல பேருக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அரசு ஊழி யர்கள் அரசின் முடிவை எதிர்த்து 2004-ம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த ஐகோர்ட் ஜாதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது சட்ட விரோதம், தமிழ்நாடு அரசு தேர்வாணைய விதிகளின்படி தான் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று 2015-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது. சுப்ரீம் கோர்ட்டும் இதை உறுதி செய்தது.

    ஆனாலும் கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாமல் பழைய நடைமுறைப்படியே (ரோஸ்டர்சிஸ்டத் தில்) பதவி உயர்வுகள் நிரப்பப்பட்டு வந்தது.

    இதனால் சுப்ரீம் கோர்ட்டில் 2021-ம் ஆண்டு மீண்டும் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில் ஜாதி அடிப்படையில் பதவி உயர்வு நிரப்ப கூடாது என்றும் பணி மூப்பு அடிப்படையில் தமிழ்நாடு அரசு தேர்வாணைய விதிகளை பின்பற்றி அரசுப் பணிகளில் பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும், அனைத்து நிலைகளிலும் சினியாரிட்டி லிஸ்டை சரியாக பின்பற்ற வேண்டும் என்றும் கோர்ட்டு இப்போது தெளிவுபடுத்தியது.

    இதன் அடிப்படையில் ரோஸ்டர் சிஸ்டத்தில் பதவி உயர்வு பெற்றவர்கள் இப் போது பதவி இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

    அதிலும் குறிப்பாக வட்டார போக்குவரத்து துறை, ஊரக வளர்ச்சித் துறை, கணக்கு கருவூலத்துறை, வணிக வரித்துறை, காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை, வருவாய் உள்ளிட்ட 54 துறைகளில் பணியாற்றும் சுமார் 5 லட்சம் அரசு ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

    ஒவ்வொரு அரசுத் துறையிலும் பணி மூப்பு அடிப்படையில் சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கும் பணி வேகப்படுத்தப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் பாதிக்கப்படுபவர்கள் ஒருபுறம் இருக்க மறுபுறம் சீனியாரிட்டியில் பணி மூப்பு மூலம் பதவி உயர்வு கிடைக்கும் நம்பிக்கையில் பல அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.

    • ஸ்டேட் வங்கியும் தங்கள் கிளைகளில் அடையாள சான்று இல்லாமல் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றலாம் என்று கூறியுள்ளது.
    • மனுவை விசாரித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    புதுடெல்லி:

    ரிசர்வ் வங்கி சமீபத்தில் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றது. செப்டம்பர் 30-ந்தேதி வரை வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை எந்தவித அடையாள சான்றும் இல்லாமல் மாற்றிக்கொள்ளலாம். ஒரு நபர் தினமும் ரூ.20 ஆயிரம் வரை மாற்றிக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

    இதே போல் ஸ்டேட் வங்கியும் தங்கள் கிளைகளில் அடையாள சான்று இல்லாமல் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றலாம் என்று கூறியுள்ளது.

    எந்தவித அடையாள சான்றும் இல்லாமல் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் ரிசர்வ் வங்கி உள்ளிட்ட வங்கிகளின் அறிவிப்பை எதிர்த்து வக்கீல் அஸ்வினி குமார் உபாத்யாய் என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி சதீஷ்குமார் சர்மா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    • கடின உழைப்பை வெளிப்படுத்தினால் வெற்றிகரமான வக்கீல்களாக மாறலாம்.
    • ஒரு குற்றவாளியை போக்சோ வழக்கில் கைது செய்தால் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும்.

    புதுச்சேரி:

    புதுவை-கடலூர் சாலையில் ஒருங்கிணைந்த கோர்ட நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு 14-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் உள்ளன. போக்சோ குற்ற வழக்குகள் மீதான விசாரணை, புதுவை மாவட்ட முதன்மை அமர்வு நீ திமன்றத்தில் செயல்பட்டு வந்தது. போக்சோ வழக்கை தலைமை நீதிபதி விசாரித்து தீர்ப்பளித்து வந்தார்.

    இந்நிலையில் போக்சோ வழக்குகளை மட்டும் விசாரிக்க விரைவு நீதி மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கென தனி நீதிபதியும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த போக்சோ நீதிமன்ற திறப்பு விழா இன்று நடந்தது. ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா போக்சோ விரைவு நீதிமன்றத்தை திறந்து வைத்தார்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், நேரு எம்.எல்.ஏ , ஐகோர்ட்டு நீதிபதிகள் வைத்தியநாதன், இளந்திரையன், புதுவை தலைமை நீதிபதி செல்வநாதன், தலைமை செயலர் ராஜீவ் வர்மா, சட்டத்துறை செயலர் செந்தில்குமார், வக்கீல்கள் சங்க தலைவர் குமரன் மற்றும் புதுவை நீதிபதிகள், வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.

    வக்கீல்கள் அமரும் இருக்கையில் நீதிபதி ராஜா, முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் பிரமுகர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது போக்சோ நீதிமன்றத்தில் 5 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. போக்சோ நீதிமன்ற நீதிபதி சோபனாதேவி தலைமையில் விசாரணை நடந்தது. முதல் குற்றவாளியை அழைத்த போது மின்சாரம் தடைபட்டது.

    இதனால் வந்திருந்தவர்கள் அதிருப்தியடைந்தனர். அப்போது நீதிபதி ராஜா, சற்று கோபத்துடன் மின்சாரத்தை சரி செய்பவர்கள் இங்கு வரமாட்டார்களா? என கேட்டார். தொடர்ந்து ஊழியர்கள் மின் தடையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 10 நிமிடம் மின்சாரம் இல்லை. இருப்பினும் 5 குற்றவாளிகள் அழைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

    இதன்பின் அனைவரும் விழா மேடைக்கு வந்தனர். அங்கு போக்சோ விரைவு நீதிமன்ற பெயர் பலகையை நீதிபதி ராஜா திறந்து வைத்தார்.

    விழாவில் ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பேசியதாவது:-

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. இதனால் புதுவை மாநிலத்தில் 29 நீதிமன்றங்களாக செயல்பட உள்ளது. புதுவையில் மட்டும் போக்சோ நீதிமன்றத்தோடு 18 நீதிமன்றங்கள் செயல்பட உள்ளன. அதிசயம், அற்புதமான மிக கடுமையான சட்டங்கள் போக்சோ நீதிமன்றத்தில் உள்ளன.

    பல வழக்கில் கொலை, கொள்ளை அடித்தவர்களுக்கு மிகப்பெரும் தண்டனை தரப்படுகிறது. போக்சோவில் விசித்திரமான சட்டதிருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒரு குற்றவாளியை போக்சோ வழக்கில் கைது செய்தால் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும். 18 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கான சான்றிதழ், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதற்கு காயம், சாட்சிகள் இருந்தால் அவர் குற்றவாளி. குற்றத்தை செய்யவில்லை என அவரின் வக்கீல்கள்தான் நிரூபிக்க வேண்டும்.

    குழந்தைகளை பயமுறுத்துவதுபோல கேள்வி கேட்க முடியாது. போக்சோ குற்றத்தில் ஈடுபட்டால், இறுதி மூச்சு இருக்கும் வரை ஆயுள்தண்டனை விதிக்கப்படும். வக்கீல்கள் போக்சோ வழக்கை சாதாரணமாக நடத்தி விட முடியாது.

    இந்த வழக்கிற்கு இங்கு மட்டும்தான் ஜாமீன் பெற முடியும். ஒரு ஆண்டுக்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும். இந்த வழக்கை கையாள வக்கீல்கள் திறமை களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    குழந்தையின் விபரங்களை வெளியில் தெரிவிக்கக்கூடாது. பெற்றோர்களால் வழக்கை நடத்த முடியாவிட்டால், சட்டப்பணிகள் ஆணையம் மூலம் வக்கீல்களை பெறலாம்.

    பாதிக்கப்பட்ட குழந்தை என நீதிபதி முடிவு செய்துவிட்டால், வழக்கு நடைபெறும்போதே குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து நிவாரணம் வழங்க உத்தரவிட முடியும். கொடுமையான குற்றம் செய்திருந்தால் மரண தண்டனையும் விதிக்கப்படலாம்.

    காலங்கள் மாறி வருகிறது. காலதாமதமின்றி நீதி வழங்கப்படுகிறது. சட்டங்களை அறிந்து கொள்ளாமல் வக்கீல்கள் நீதிமன்றதுக்கு வர முடியாது. வெற்றிகரமான வக்கீல்களாக மாற கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டும். சட்டங்களை பற்றி முழுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும். வக்கீல்கள் எப்படி, எதை பேச வேண்டும் என அறிந்து பேச வேண்டும். இதனால் வக்கீலும், வக்கீல் தொழிலும், நீதிமன்றமும், நாடும் உயரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×