search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து தென்காசி தொகுதியில் பதிவான தபால் ஓட்டுகள் நாளை மீண்டும் எண்ணப்படுகிறது
    X

    ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து தென்காசி தொகுதியில் பதிவான தபால் ஓட்டுகள் நாளை மீண்டும் எண்ணப்படுகிறது

    • செல்வமோகன்தாஸ் பாண்டியன் 88,271 ஓட்டுகளும், பழனிநாடார் 87,706 ஓட்டுகளும் பெற்றனர்.
    • காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

    தென்காசி:

    தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது தென்காசி மாவட்டத்தில் தென்காசி தொகுதியில் தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரசும், அ.தி.மு.க.வும் மோதியது. இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பழனி நாடார், அ.தி.மு.க. வேட்பாளராக செல்வமோகன்தாஸ் பாண்டியன் உள்பட 18 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    ஐகோர்ட்டில் வழக்கு

    அதில் வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளில் அ.தி.மு.க. வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் 88,271 ஓட்டுகளும், காங்கிரஸ் வேட்பாளர் பழனிநாடார் 87,706 ஓட்டுகளும் பெற்றனர். ஆனால் தபால் ஓட்டு எண்ணிக்கையில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு 674 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது. காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடாருக்கு 1,609 ஓட்டுகள் கிடைத்தன. இதனால் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் 370 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

    இதுதொடர்பாக ஐகோர்ட்டில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. தபால் வாக்குகளையும், மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்குகளில் 28 முதல் 30 சுற்றுகள் வரை பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் என கூறி இருந்தார்.

    தபால் ஓட்டுகள் மீண்டும் எண்ணிக்கை

    இந்த வழக்கில் தபால் ஓட்டுக்களை மீண்டும் எண்ணிக்கை நடத்த வேண்டும். அதனை 10 நாட்களில் எண்ணி முடிவு அறிவிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அதனை எண்ணுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான துரை ரவிச்சந்திரன் மேற்கொண்டு வருகிறார்.

    அதன்படி தபால் ஓட்டுகள் நாளை (வியாழக்கிழமை) எண்ணப்பட உள்ளது. தென்காசி ரெயில்வே மேம்பாலம் அருகே உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கலெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் ஆர்.டி.ஓ. லாவண்யா ஆகியோரின் முன்னிலையில் நாளை தபால் ஓட்டுகள் மீண்டும் எண்ணப்பட உள்ளது. காலை 10.30 மணிக்கு தொடங்கி 1 மணிக்குள் வாக்கு எண்ணப்படுகிறது.

    வேட்பாளர்கள் 18 பேர் உள்ள நிலையில் வேட்பாளர்கள் அல்லது ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் என 18 முகவர்கள் வாக்கு எண்ணிக்கையின் போது பங்கேற்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது. எனவே, பங்கேற்க விரும்பும் முகவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்டம் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று வரை விண்ணப்பித்தவர்கள் மட்டுமே நாளை ஓட்டு எண்ணிக்கைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வாக்கு எண்ணிக்கை காலை 10 மணி அளவில் ஒரு மேஜைக்கு 7 பேர் கொண்ட குழு வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட உள்ளது. இதற்கு 1 கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் எண்ணப்பட்டுள்ள இறுதி வாக்கு எண்ணிக்கை முடிவு அறிக்கையாக தயார் செய்யப்பட்டு மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் வாயிலாக சென்னை ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதனையொட்டி போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் மேற்பார்வையில், தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×