search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "O Panneer Selvam"

    • அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
    • பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து அதிமுக உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

    அக்குழுவில் வைத்திலிங்கம், கிருஷ்ணன், பிரபாகர், மனோஜ் பாண்டியன், தர்மர், புகழேந்தி, மருது அழகுராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இதனிடையே, பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

    • வழக்கு விசாரணைக்கு தடைக்கோரி ஓ.பி.எஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
    • அறிக்கையின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர்க்கு எதிரான வழக்குகளில் இருந்து அனைவரையும் விடுவித்து 2012-ம் ஆண்டு சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

    புதுடெல்லி:

    தமிழகத்தில் கடந்த 2001 முதல் 2006 வரையிலான அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் முதலமைச்சராகவும், அமைச்சராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு மற்றும் சகோதரர் உள்ளிட்ட 7 பேர் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

    சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 2012-ம் ஆண்டு, லஞ்ச ஒழிப்பு தரப்பில், குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆவணங்கள் இல்லை என்பதால் மேற்கொண்டு வழக்கை நடத்தவில்லை எனவும் புகாரை திரும்ப பெற்றுக்கொள்வதாக அறிக்கை அளித்தது.

    இந்த அறிக்கையின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர்க்கு எதிரான வழக்குகளில் இருந்து அனைவரையும் விடுவித்து 2012-ம் ஆண்டு சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை ஐகோர்ட் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு தடைக்கோரி ஓ.பி.எஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஓ.பன்னீர் செல்வம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    வழக்கின் தன்மை, தகுதியின் அடிப்படையிலேயே தனி நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் இந்த வழக்குகளை விசாரிப்பதாகவும் எனவே இதில் தலையிட விரும்பவில்லை எனவும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் மீதான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது அவருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    • கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு தொகுதிகள் கேட்டு பெறவும் முடிவு செய்யப்படுகிறது.
    • தனி சின்னத்தில் நிற்பதா? பா.ஜனதா சின்னத்தில் நிற்பதா? அவற்றின் சாதக-பாதகம் குறித்து பேசுகிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை பா.ஜனதாவுடன் இணைந்து ஓ.பன்னீர்செல்வம் அணி சந்திக்கிறது. கூட்டணியில் 5 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் பணிகளை அ.தி.மு.க. தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் ஓ.பி.எஸ். அணி இதுவரையில் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. விருப்ப மனுக்களும் பெறப்படவில்லை.

    இந்த நிலையில் வருகிற 29-ந்தேதி ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எழும்பூரில் நடக்கும் கூட்டத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்குகிறார். இக்கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது.

    பா.ஜனதா கூட்டணியில் எத்தனை தொகுதியில் போட்டியிடுவது, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது, வேட்பாளர்களாக யார் யாரை நிறுத்துவது குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் எந்த தேதியில் இருந்து பெறுவது என முடிவு செய்யப்படுகிறது.

    கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு தொகுதிகள் கேட்டு பெறவும் முடிவு செய்யப்படுகிறது. தனி சின்னத்தில் நிற்பதா? பா.ஜனதா சின்னத்தில் நிற்பதா? அவற்றின் சாதக-பாதகம் குறித்து பேசுகிறார்கள்.

    பா.ஜனதா கூட்டணியில் புதிதாக இடம் பெறும் கட்சிகள் குறித்த முடிவு தாமதம் ஆவதால் தொகுதிகள் பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் குறைந்தது 5 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

    • ஆலோசனை கூட்டம் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறுகிறது.
    • வருகிற 29-ந்தேதி எழும்பூர் பைஸ் மகாலில் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் வருகிற 29-ந்தேதி எழும்பூர் பைஸ் மகாலில் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வாயு கசிவை கண்டறிந்ததும் 20 நிமிடங்களில் குழாயில் ஏற்பட்ட வாயு கசிவு முற்றிலும் நிறுத்தப்பட்டது.
    • தொழிற்சாலையை ஆய்வு செய்து உர உற்பத்தியை நிறுத்த உத்தரவிட்டனர்.

    சென்னை:

    எண்ணூரில் உள்ள தனியார் உரத் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது குறித்து வேல்முருகன், ஜெகன் மூர்த்தி, எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்கள்.

    இதற்கு சுற்றுச்சூழல் கால நிலை மாற்றத்துறை அமைச்சர் சி.வி.மெய்யநாதன் தாக்கல் செய்த விவர அறிக்கையில் கூறி இருந்ததாவது:-

    இந்த உரத்தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவினால் அங்கு குடியிருப்பு பகுதிகளில் வசித்த மக்களுக்கு கண் எரிச்சல், தோல் அரிப்பு, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற உபாதைகள் ஏற்பட்டன.

    வாயு கசிவை கண்டறிந்ததும் 20 நிமிடங்களில் குழாயில் ஏற்பட்ட வாயு கசிவு முற்றிலும் நிறுத்தப்பட்டது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொழிற்சாலையை ஆய்வு செய்து உர உற்பத்தியை நிறுத்த உத்தரவிட்டனர். அதன்படி உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    தற்போது விசாரணை குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கூடம் 1986 பிரிவு 5-ன் கீழ் சுற்றுச்சூழல் இழப்பீடாக 5 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரத்து 888 ரூபாயை அந்த உர நிறுவனத்திடம் இருந்து ஏன் வசூலிக்க கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குடவாசல் பகுதியில் தயாராக உள்ள இடத்தை கொடுக்க பகுதி மக்கள் தயாராக உள்ளனர்.
    • குடவாசல் தொகுதிக்கு அருகிலேயே கல்லூரி கட்டிடம் நிச்சயம் கட்டப்படும் எனவும் உறுதியளித்தார்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று நேரமில்லா நேரத்தில், குடவாசல் தொகுதியில் கல்லூரி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர். அவர் பேசுகையில், 'குடவாசல் தொகுதியில் 2017-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் கல்லூரி கட்ட நடவடிக்கை மேற் கொண்டதாகவும், ஆனால் நீதிமன்ற வழக்கால் கட்ட முடியாமல் போய்விட்டது.

    குடவாசல் பகுதியில் தயாராக உள்ள இடத்தை கொடுக்க பகுதி மக்கள் தயாராக உள்ளனர். குடவாசலிலேயே அரசு கலைக்கல்லூரி இயங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'என்றார்.

    இதற்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், குடவாசல் தொகுதிக்கு அருகிலேயே கல்லூரி கட்டிடம் கட்ட டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் பகுதியில் எந்த பாதிப்பும் இல்லை குடவாசலில் இடம் கிடைக்காததால் அருகில் இருக்கக்கூடிய இடத்தில் கட்டிடம் கட்ட டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    10 ஆண்டுகளாக என்ன செய்திருந்தீர்கள். குடவாசல் தொகுதிக்கு அருகிலேயே கல்லூரி கட்டிடம் நிச்சயம் கட்டப்படும் எனவும் உறுதியளித்தார்.

    • 1300 வருடங்களுக்கு முன்பாகவே பல்கலைக் கழகம் வைத்து தத்துவம் பரப்பிய மண் காஞ்சி.
    • போதி தர்மரின் சீன பயணத்தில் மருத்துவ அறிவால் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தினார்.

    சட்டசபையில் இன்று, வினாக்கள் விடைகள் நேரத்தில் பேசிய எழிலரசன் எம்.எல்.ஏ., பழைய நகரமாகவும் உலக தத்துவவாதிகள் இருக்க கூடிய மண்ணாக காஞ்சிபுரம் இருந்து கொண்டிருக்கிறது. 1300 வருடங்களுக்கு முன்பாகவே பல்கலைக் கழகம் வைத்து தத்துவம் பரப்பிய மண் காஞ்சி.

    இங்கு அரச குடும்பத்தில் பிறந்த போதி தர்மரின் சீன பயணத்தில் மருத்துவ அறிவால் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தினார். உலகமே அவரின் மருத்துவ அறிவு போதனைகளை பாராட்டி வருகிறது.

    மேலும், மதவாதம் மன நோயாக மாறி வரும் நிலையில் ஆன்மபலம் பெறுவதற்கு போதி தத்துவங்களையும் மருத்துவ அறிவையும் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் காஞ்சியில் அரங்கம் அமைக்க வேண்டும் என்றார்.

    அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன், முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து நிதி நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • மீனாட்சி சொக்கநாதர் மற்றும் ஞான தண்டாயுதபாணி கோவிலுக்கு 30 ஆண்டுகளுக்கு முன் குடமுழுக்கு நடத்தப்பட்டது.
    • ராஜகோபுரம் கட்டுவதற்கு மண் பரிசோதனை நிறைவு பெற்றுள்ளது.

    சட்டசபையில் இன்று வினாக்கள் விடைகள் நேரத்தில், மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம், மேட்டூர் நகராட்சி பகுதியில் உள்ள மீனாட்சி சொக்க நாதர் மற்றும் ஞானதண்டாயுத பாணி சுவாமி கோவிலுக்கு புதிய ராஜகோபுரம் கட்ட அரசு நடவடிக்கை மேற் கொள்ளுமா? என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:-

    மீனாட்சி சொக்கநாதர் மற்றும் ஞான தண்டாயுதபாணி கோவிலுக்கு 30 ஆண்டுகளுக்கு முன் குடமுழுக்கு நடத்தப்பட்டது. மூன்று கால விமானம், சன்னதி என ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் திட்டபணிகள் மேற்கொள்ள பாலாலயம் தொடங்கப்பட உள்ளது.

    ராஜகோபுரம் கட்டுவதற்கு மண் பரிசோதனை நிறைவு பெற்றுள்ளது. தொடர் நடவடிக்கையாக அடுத்தடுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் ராஜகோபுரம் கட்டப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சென்ற ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், பனை ஆராய்ச்சி நிலையம் அமைக்க 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • திட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டதா அல்லது கைவிடப்பட்டு விட்டதா என்பது பற்றி வேளாண் துறை அமைச்சர் தனது பதிலுரையில் தெரிவிக்க வேண்டும்.

    சென்னை :

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    முதனிலைத் தொழிலாக விளங்கும் வேளாண் தொழிலை வளர்ச்சி அடையச் செய்வதற்கும், உணவு தானிய உற்பத்தியை பெருக்குவதற்கும், உணவு தந்துதவும் உழவர்களின் வாழ்க்கைத் தரத்தினை முன்னேற்றுவதற்கும் தேவையான திட்டங்களை உள்ளடக்கியதாக வேளாண்மை நிதி நிலை அறிக்கை அமையும் என்று விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில், இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 2024-2025 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை விவசாயிகளிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வேளாண்மைக்கென்று தனி நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது என்ற பெருமையைத் தவிர, இந்த நிதிநிலை அறிக்கையால் பயனேதும் இல்லை என்று விவசாயப் பெருங்குடி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், வாழை, மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு, பருப்பு வகைகள் உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால், இது குறித்து எவ்விதமான அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள தென்னை விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தென்னை மரத்திலிருந்து 'நீரா' போன்ற பதநீர் இறக்கி விற்பனை செய்ய ஊக்குவிக்கப்படும் என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து ஏதும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது தென்னை விவசாயிகளிடையே பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இதேபோன்று, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாயாக உயர்த்தித் தரப்படும் என்றும், கரும்புக்கான ஆதார விலை டன் ஒன்றிற்கு 4,000 ரூபாயாக உயர்த்தித் தரப்படும் என்றும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என்று விவசாயிகள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்களுக்கு கிடைத்தது வெறும் ஏமாற்றமே.

    கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மண் வளமே அழியும் அளவுக்கு மணல் கொள்ளை நடந்து கொண்டிருக்கின்ற நிலையில், மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை தி.மு.க. அரசு அறிவித்து இருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.

    இயற்கை சீற்றங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பிலிருந்து அவர்கள் மீண்டு வரும் வகையில் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், 2024-2025 ஆம் ஆண்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்த 1,775 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே திட்டத்திற்காக, சென்ற ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் 2,337 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 562 கோடி ரூபாய் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதற்கான பதிலை வேளாண் துறை அமைச்சர் தனது பதிலுரையில் எடுத்துரைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு அரசு சார்பில் செய்யப்படாததால், அதற்கான இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே, இதற்கான இழப்பீட்டினை வழங்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    சென்ற ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், பனை ஆராய்ச்சி நிலையம் அமைக்க 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அதுபற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டதா அல்லது கைவிடப்பட்டு விட்டதா என்பது பற்றி வேளாண் துறை அமைச்சர் தனது பதிலுரையில் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இளைஞர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி தி.மு.க. அரசுக்கு அக்கறையில்லை என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.
    • இளைஞர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி தி.மு.க. அரசுக்கு அக்கறையில்லை என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது, "அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்" மற்றும் "புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்" என 2 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

    இந்த சூழ்நிலையில், கடந்த மூன்றாண்டுகளில் வெறும் 60,567 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு உள்ளதாக அரசு தெரிவித்திருப்பது, காலிப் பணியிடங்களை நிரப்புவதில் தி.மு.க. அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுகிறது என்பதும், இளைஞர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி தி.மு.க. அரசுக்கு அக்கறையில்லை என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் துறைகளிலும் கிட்டத்தட்ட 50 சதவீதம் காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், ஒவ்வொரு துறையிலும், பதவி வாரியாக எத்தனை காலிப் பணியிடங்கள் உள்ளன என்ற புள்ளி விவரத்தையும், அந்தப் பணியிடங்கள் அனைத்தும் எப்போது நிரப்பப்படும் என்பதற்கான அட்டவணையையும் உடனடியாக வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஜெயலலிதா இருந்தபோது அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க நிறைய கட்சிகள் ஆர்வம் காட்டின, அது ஒரு காலம்.
    • தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்பதால் மக்கள், தி.மு.க. மீது கோபத்தில் உள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ஏழுமலை தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:-

    1972-ம் ஆண்டில் 11 லட்சம் தொண்டர்களுடன் அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கி வழிநடத்தினார். அனைத்து தரப்பு மக்களாலும் சாதி, மத வித்தியாசம் இன்றி இந்த இயக்கம் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கம் சிறப்பாக செயல்பட பல்வேறு சட்டவிதிகளை எம்.ஜி.ஆர். வகுத்துச்சென்றார்.

    அவரது மறைவுக்குப் பிறகு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் கொடுத்த பல்வேறு இடையூறுகளை தாண்டி 1½ கோடி தொண்டர்களுடன் கட்சியின் பொதுச்செயலாளராக 30 ஆண்டுகள் பணியாற்றி இந்த இயக்கத்தை வழிநடத்தினார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.

    தற்போது எடப்பாடி பழனிசாமி, அடிப்படை தொண்டர்களின் உரிமையை காலில் போட்டு மிதித்து கபளீகரம் செய்துள்ளார்.

    இன்றைக்கு சாதாரண தொண்டர்கள், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட கூடிய சட்டவிதியை எடப்பாடி பழனிசாமி மாற்றியுள்ளார். அ.தி.மு.க.வின் அடிப்படை தொண்டருக்கும் உரிமையைப் பெற்றுத்தரும் நோக்கில், மாநிலம் முழுவதும் உரிமை மீட்பு பயணத்தை மேற்கொள்ள தொடங்கி, இதுவரை 24 மாவட்டங்களில் முடித்துள்ளேன்.

    எஞ்சிய மாவட்டங்களிலும் பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்க உள்ளேன்.

    தமிழக முதலமைச்சர் பொறுப்பை எடப்பாடி பழனிசாமி ஏற்ற பிறகு ஊரக உள்ளாட்சி தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், மக்களவை தேர்தல் என 8 தேர்தல்களை சந்தித்தார். அத்தனை தேர்தல்களிலும் தோல்வியைத்தான் கண்டார்.

    ஜெயலலிதா இருந்தபோது அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க நிறைய கட்சிகள் ஆர்வம் காட்டின, அது ஒரு காலம். ஆனால் இப்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க யாரும் விரும்பவில்லை.

    தற்போது கூட்டணிக்கு யாரேனும் வருவார்களா என கட்சித்தலைமை அலுவலகத்தில் கதவை திறந்து வைத்துக்கொண்டு தலைவர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கூட்டணிக்கு வாருங்கள் வாருங்கள் என அழைத்தாலும், அவர்களை நம்பி யாரும் வருவதில்லை. அ.தி.மு.க.வில் இந்த நிலை உருவாக யார் காரணம். மிகவும் பரிதாப நிலையில் கட்சி உள்ளது.

    தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்பதால் மக்கள், தி.மு.க. மீது கோபத்தில் உள்ளனர். இந்திய அரசியலில் தமிழ்நாடு அனைத்து மாநிலத்திற்கும் வழிகாட்டியாக இருந்த காலம் மாறி விட்டது. தி.மு.க.வில் கருணாநிதி இருந்தார்.

    இப்போது ஸ்டாலின் உள்ளார். பிறகு அவரது மகன் உதயநிதி ஸ்டாலினை தயார்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ்பாண்டியன், கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி, மாநில வக்கீல் அணி செயலாளரும் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினருமான செஞ்சி கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, விஜய் சிறந்த திரைப்பட நடிகர். புதிய கட்சியை தொடங்கி உள்ள அவருக்கு எங்களுடைய இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். அவர் எதிர்வரும் சவால்களை சமாளித்து தமிழக அரசியலில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

    அதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் உறுதியாக நாங்கள் கூட்டணி அமைக்க இருக்கிறோம். ஏற்கனவே நாங்கள் பா.ஜனதாவுடன் தான் கூட்டணியில் இருக்கிறோம். 10 ஆண்டுகள் பிரதமர் மோடி சிறப்பான ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார்.

    உலகத்தில் இருக்கும் 20 வளர்ந்த நாடுகள், நரேந்திர மோடியின் நிர்வாகத்தையும், அயல்நாட்டின் அணுகுமுறையையும் பாராட்டியிருக்கிறார்கள். எனவே 3-வது முறையாக மீண்டும் மோடி பிரதமராக வர வேண்டும் என்ற பொதுவான கருத்து இந்தியாவில் நிலவி வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் உறுதியாக பா.ஜனதா பெரும்பான்மை பெற்று மீண்டும் மோடி, பிரதமராக வலம் வருவார் என்றார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திரைமறைவில் நடந்துள்ள தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் விரைவில் நேரடியாக நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
    • தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை முடிப்பதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ளவும் பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளதையடுத்து தமிழகத்தில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றன.

    தி.மு.க.-காங்கிரஸ் ஒரு அணியாக களம் காண உள்ள நிலையில், இந்த கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க. பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்க காய் நகர்த்தி வருகிறது. இது தொடர்பாக பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளுடன் அந்த கட்சி ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

    அதே நேரத்தில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ள அ.தி.மு.க.வை தனிமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜனதா கட்சி கூட்டணி பேச்சுவார்த்தையை ரகசியமாக நடத்தி முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளது என்பது பற்றிய பரபரப்பான தகவலும் வெளியாகி இருக்கின்றன.

    பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க.வுக்கு ஸ்ரீபெரும்புதூர், ஆரணி, மயிலாடுதுறை, தர்மபுரி, விழுப்புரம், கடலூர், அரக்கோணம் ஆகிய 7 தொகுதிகள் ஒதுக்குவதற்கு முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த தொகுதிகள் பா.ம.க. வலுவாக உள்ள தொகுதிகளாகும்.

    இது தொடர்பாக இறுதி முடிவு விரைவில் எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசே மத்தியில் மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்று வெற்றி பெறும் பட்சத்தில் மத்திய மந்திரி பதவியையும் கேட்டு பெற்று விடலாம் என்று பா.ம.க. கணக்கு போட்டுள்ளது.

    இதன்காரணமாகவே பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெறலாம் என்று அந்த கட்சி முடிவு எடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க. சேருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போதைய சூழலில் பா.ம.க. கேட்கும் தொகுதிகள் தி.மு.க. கூட்டணியில் அந்த கட்சிக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.

    அதே நேரத்தில் இந்தியா கூட்டணியில் ஏற்பட்டு வரும் விரிசலும் பா.ம.க.வை யோசிக்க வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இது போன்ற காரணங்களாலேயே பா.ஜனதா கூட்டணியில் சேரும் முடிவை பா.ம.க. எடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது.


    இதே போன்று தே.மு.தி.க.வுடனும் தொகுதி பங்கீடு தொடர்பான ரகசிய பேச்சுவார்த்தையை பா.ஜனதா கட்சி நடத்தி முடித்திருப்பதாகவும், கூட்டணியில் 2 தொகுதிகளை தே.மு.தி.க.வுக்கு ஒதுக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தே.மு.தி.க.வுக்கு கள்ளக்குறிச்சி தொகுதியை ஒதுக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னொரு தொகுதி எது என்பது இன்னும் முடிவாகவில்லை. பாராளுமன்ற தேர்தலில் மேல்-சபை எம்.பி. பதவி ஒன்றை கேட்டு பெற வேண்டும் என்பதில் தே.மு.தி.க. நிர்வாகிகள் உறுதியாக உள்ளனர். இதுவும் ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தையில் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    விஜயகாந்தின் மறைவுக்கு பிறகு மத்திய அரசு சார்பில் அவருக்கு தொடர்ச்சியாக பல்வேறு மரியாதைகள் செய்யப்பட்டுள்ளன.

    பிரதமர் மோடி, விஜயகாந்தை தனது நெருங்கிய நண்பர் என்று புகழ்ந்து பேசி அறிக்கை வெளியிட்டிருந்தார். பத்ம விருதும் விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் மீதும், பிரதமர் மோடி மீதும் தே.மு.தி.க.வினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எம்.பி. தேர்தலில் வெற்றி பெற்று கட்சியை வளர்ப்பதற்கு அது உதவும் என்றும் தே.மு.தி.க.வினர் நம்புகிறார்கள்.

    இது போன்ற காரணங்களால் தே.மு.தி.க.வும், பா.ஜனதா கூட்டணியில் சேரும் முடிவை எடுத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

    டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.வும் பாரதிய ஜனதா கூட்டணியில் இடம் பெறுவது உறுதியாகி உள்ளது. திருச்சி, சிவகங்கை ஆகிய 2 தொகுதிகள் இந்த கட்சிக்கு ஒதுக்கப்பட உள்ளன.


    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர் செல்வத்துக்கு தேனி தொகுதி ஒதுக்கப்பட உள்ளது. இந்த தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுவார் என்று தெரிகிறது. டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். இருவருக்கும் எடப்பாடி பழனிசாமியே தற்போது பொது எதிரியாவார்.

    பாராளுமன்ற தேர்தலில் இணைந்து செயல்பட போவதாக இருவரும் ஏற்கனவே தெரிவித்துள்ளனர். எனவே பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வை தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்பதே இவர்களின் கணக்காக உள்ளது.

    இதற்கு பாரதிய ஜனதா கூட்டணியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் இருவருமே உறுதியாக உள்ளனர்.

    ஜி.கே.வாசனின் த.மா.கா., பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி ஆகியவற்றுக்கும் தலா ஒரு இடங்களை ஒதுக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாரிவேந்தருக்கு பெரம்பலூர் தொகுதியும், ஏ.சி. சண்முகத்துக்கு வேலூர் தொகுதியும், ஜி.கே.வாசனுக்கு தஞ்சை தொகுதியும் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    இப்படி பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு 16 தொகுதிகளை ஒதுக்கியது போக மீதமுள்ள 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு கடும் போட்டியை ஏற்படுத்துவதோடு அ.தி.மு.க. பக்கம் எந்த கட்சிகளும் சேரவிடாமல் செய்துவிடலாம் என்பதே பாரதிய ஜனதா கட்சி போடும் திட்டமாக உள்ளது.

    திரைமறைவில் நடந்துள்ள இந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் விரைவில் நேரடியாக நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அதுபோன்ற ஒருநிலை எட்டப்பட்டுவிட்டால் அடுத்த மாதம் பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்காக வரும் போது கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் ஏற்றி பிரமாண்ட பிரசாரத்தை தொடங்கவும் பாரதிய ஜனதா கட்சி வியூகம் வகுத்துள்ளது.

    அடுத்த மாதம் தொடக்கத்தில் பாரதிய ஜனதா தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய மந்திரி அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் தமிழகம் வருகிறார்கள். அப்போது தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை முடிப்பதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ளவும் பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு உள்ளது.

    இதன் மூலம் தமிழக தேர்தல் களத்தில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெற அதிரடியாக களம் இறங்கி இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.

    ×