search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொண்டர்களின் உரிமையை காலில் போட்டு மிதித்து கபளீகரம் செய்கிறார்- எடப்பாடி மீது ஓ.பன்னீர்செல்வம் தாக்கு
    X

    தொண்டர்களின் உரிமையை காலில் போட்டு மிதித்து கபளீகரம் செய்கிறார்- எடப்பாடி மீது ஓ.பன்னீர்செல்வம் தாக்கு

    • ஜெயலலிதா இருந்தபோது அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க நிறைய கட்சிகள் ஆர்வம் காட்டின, அது ஒரு காலம்.
    • தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்பதால் மக்கள், தி.மு.க. மீது கோபத்தில் உள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ஏழுமலை தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:-

    1972-ம் ஆண்டில் 11 லட்சம் தொண்டர்களுடன் அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கி வழிநடத்தினார். அனைத்து தரப்பு மக்களாலும் சாதி, மத வித்தியாசம் இன்றி இந்த இயக்கம் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கம் சிறப்பாக செயல்பட பல்வேறு சட்டவிதிகளை எம்.ஜி.ஆர். வகுத்துச்சென்றார்.

    அவரது மறைவுக்குப் பிறகு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் கொடுத்த பல்வேறு இடையூறுகளை தாண்டி 1½ கோடி தொண்டர்களுடன் கட்சியின் பொதுச்செயலாளராக 30 ஆண்டுகள் பணியாற்றி இந்த இயக்கத்தை வழிநடத்தினார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.

    தற்போது எடப்பாடி பழனிசாமி, அடிப்படை தொண்டர்களின் உரிமையை காலில் போட்டு மிதித்து கபளீகரம் செய்துள்ளார்.

    இன்றைக்கு சாதாரண தொண்டர்கள், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட கூடிய சட்டவிதியை எடப்பாடி பழனிசாமி மாற்றியுள்ளார். அ.தி.மு.க.வின் அடிப்படை தொண்டருக்கும் உரிமையைப் பெற்றுத்தரும் நோக்கில், மாநிலம் முழுவதும் உரிமை மீட்பு பயணத்தை மேற்கொள்ள தொடங்கி, இதுவரை 24 மாவட்டங்களில் முடித்துள்ளேன்.

    எஞ்சிய மாவட்டங்களிலும் பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்க உள்ளேன்.

    தமிழக முதலமைச்சர் பொறுப்பை எடப்பாடி பழனிசாமி ஏற்ற பிறகு ஊரக உள்ளாட்சி தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், மக்களவை தேர்தல் என 8 தேர்தல்களை சந்தித்தார். அத்தனை தேர்தல்களிலும் தோல்வியைத்தான் கண்டார்.

    ஜெயலலிதா இருந்தபோது அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க நிறைய கட்சிகள் ஆர்வம் காட்டின, அது ஒரு காலம். ஆனால் இப்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க யாரும் விரும்பவில்லை.

    தற்போது கூட்டணிக்கு யாரேனும் வருவார்களா என கட்சித்தலைமை அலுவலகத்தில் கதவை திறந்து வைத்துக்கொண்டு தலைவர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கூட்டணிக்கு வாருங்கள் வாருங்கள் என அழைத்தாலும், அவர்களை நம்பி யாரும் வருவதில்லை. அ.தி.மு.க.வில் இந்த நிலை உருவாக யார் காரணம். மிகவும் பரிதாப நிலையில் கட்சி உள்ளது.

    தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்பதால் மக்கள், தி.மு.க. மீது கோபத்தில் உள்ளனர். இந்திய அரசியலில் தமிழ்நாடு அனைத்து மாநிலத்திற்கும் வழிகாட்டியாக இருந்த காலம் மாறி விட்டது. தி.மு.க.வில் கருணாநிதி இருந்தார்.

    இப்போது ஸ்டாலின் உள்ளார். பிறகு அவரது மகன் உதயநிதி ஸ்டாலினை தயார்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ்பாண்டியன், கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி, மாநில வக்கீல் அணி செயலாளரும் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினருமான செஞ்சி கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, விஜய் சிறந்த திரைப்பட நடிகர். புதிய கட்சியை தொடங்கி உள்ள அவருக்கு எங்களுடைய இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். அவர் எதிர்வரும் சவால்களை சமாளித்து தமிழக அரசியலில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

    அதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் உறுதியாக நாங்கள் கூட்டணி அமைக்க இருக்கிறோம். ஏற்கனவே நாங்கள் பா.ஜனதாவுடன் தான் கூட்டணியில் இருக்கிறோம். 10 ஆண்டுகள் பிரதமர் மோடி சிறப்பான ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார்.

    உலகத்தில் இருக்கும் 20 வளர்ந்த நாடுகள், நரேந்திர மோடியின் நிர்வாகத்தையும், அயல்நாட்டின் அணுகுமுறையையும் பாராட்டியிருக்கிறார்கள். எனவே 3-வது முறையாக மீண்டும் மோடி பிரதமராக வர வேண்டும் என்ற பொதுவான கருத்து இந்தியாவில் நிலவி வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் உறுதியாக பா.ஜனதா பெரும்பான்மை பெற்று மீண்டும் மோடி, பிரதமராக வலம் வருவார் என்றார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×