search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Namakkal news"

    பரமத்திவேலூர் அருகே சரக்கு ஆட்டோவில் மணல் கடத்தலில் ஈடுப்பட்ட 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார்கள்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் தண்ணீர்பந்தல்மேடு அருகே வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது தண்ணீர்பந்தல் மேட்டிலிருந்து பரமத்தி நோக்கி அவ்வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை போலீசார் நிறுத்தி வாகன சோதனை செய்ய முயன்றனர். அப்போது சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் அதில் வந்த மற்றொருவரும் சரக்கு ஆட்டோவை நிறுத்தி சாவியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 

    இதனையடுத்து போலீசார் சரக்கு ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் 40 மணல் மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சட்டவிரோதமாக அனுமதியின்றி காவிரி ஆற்றில் இருந்து கடத்தி வந்த மணல், சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்து வேலூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். 

    பின்னர் வழக்குப்பதிவு செய்து, மணல் திருட்டில் ஈடுபட்டு தப்பி ஓடிய  2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
    குமாரபாளையம் அருகே கார் மோதி தந்தை- மகன் படுகாயமடைந்ததில் ஆத்தூரை சேர்ந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் ஓட்டமெத்தை பகுதியை  சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37). கட்டிட கூலித் தொழிலாளி. 

    இவர் நேற்று மாலை  மோட்டார்சைக்கிளில் தனது தந்தை லோகவசீகரன், (57), என்பவரை பின்னால்  உட்கார வைத்துக்கொண்டு சேலம்-கோவை புறவழிச்சாலையில் கோட்டைமேடு பிரிவு அருகே கே.பி.டி பெட்ரோல் பங்க் முன்பு வந்து கொண்டிருந்தார். 

    அப்போது இவருக்கு பின்னால் வேகமாக வந்த கார், மோட்டார்சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் செந்தில்குமார், லோகவசீகரன் ஆகிய, இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இது பற்றி தகவலறிந்த குமாரபாளையம் போலீசார் நேரில் சென்று இருவரையும் மீட்டு  குமாரபாளையம்  அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

    விசாரணையில் காரை ஓட்டி வந்தது சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த கூலித் தொழிலாளி பூபாலன்  (24), என்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபாலனை  கைது செய்தனர்.
    அரசு பி.எட். கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது.
    குமாரபாளையம்: 

    குமாரபாளையம் அரசு பி.எட். கல்லூரியில் விளையாட்டு  விழா முதல்வர் ஜான்  பீட்டர் தலைமையில் கொண்டாடப்பட்டது.  விளையாட்டு அறிக்கையை உடற்கல்வி இயக்குனர் ரவி வாசித்தார். 

    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரேணுகா, குமாரபாளையம் எஸ்.ஐ. நந்தகுமார் உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினார்கள்.  

    ஆடவர் மற்றும் மகளிருக்கான  சதுரங்கம், கேரம்  போன்ற உள்ளரங்க போட்டிகளும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வலைப்பந்து, கூடைப்பந்து, ஓட்டம், கபாடி, தடகளம்  உள்ளிட்ட பல போட்டிகளும்  நடைபெற்றன. 

    சிறப்பு அழைப்பாளராக தஞ்சை மாவட்ட டி.எஸ்.பி. சுபாஷ் சந்திரபோஸ் பங்கேற்று, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்.
    குமாரபாளையத்தில் மோட்டார்சைக்கிள் மோதி பெண் படுகாயம் அடைந்தார்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நாராயண நகரில் வசிப்பவர் நாகம்மா(வயது 55),கூலி தொழிலாளி. இவர் கே.ஓ.என் தியேட்டர் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையை  கடந்தார். 

    அப்போது வேகமாக வந்த மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் நாகம்மா பலத்த காயமடைந்தார். இதைய–டுத்து அவர் சிகிச்சைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், மோட்டார்சைக்கிளில் வந்த வட்டமலை பகுதியை சேர்ந்த ராஜா  என்பவரை கைது செய்தனர். 
    குமாரபாளையம் நகராட்சியில் இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நகராட்சியில் நகராட்சி நிர்வாக இயக்குனரக இணை இயக்குனர் பூங்கொடி அருமைக்கண் நேரில் ஆய்வு செய்தார்.  

    குமாரபாளையம் நகரில் நடந்து வரும் கட்டுமான பணிகள், மார்க்கெட் கட்டுமான பணிகள், தற்காலிக மார்க்கெட் அமைப்பு பணிகள், வரி வசூல் நிலை உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். 

    அப்போது நகராட்சி கமிஷனர் விஜயகுமார், பொறியாளர் ராஜேந்திரன், எஸ்.ஓ. ராமமூர்த்தி, மேலாளர் சண்முகம்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    கன்டெய்னர் லாரிக்குள் சிக்கிய காரை மீட்பு வாகனம் மூலம் வெளியே எடுத்தனர்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே சேலம்-கோவை புறவழிச்சாலையில் தியேட்டர் பின்புறம் டீச்சர்ஸ் காலனி பகுதியில் பவானி செல்லும் வாகனங்கள் வளைவில் திரும்பி செல்வது வழக்கம். நேற்று மாலை ஒரு கன்டெய்னர் லாரி  இந்த பகுதியில் வளைந்து பவானி செல்ல திரும்பியது. 

    அப்போது சேலம் பக்கமிருந்து வந்த கார்  லாரியின் கீழ் பகுதிக்குள் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் இல்லை. இதனால் அந்த பாதையில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் 45 நிமிடத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.  

    இது குறித்து குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்து நேரில் சென்றனர். மீட்பு வாகனம் மூலம் காரை வெளியில் எடுத்து, போக்குவரத்தை சீர் செய்தனர்.
    பரமத்தி அருகே பாம்பு கடித்து வட மாநிலத் தொழிலாளி உள்பட 2 பேர் பலியானார்கள்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கூத்தம்பூண்டியைச் சேர்ந்தவர் பொன்னர்.இவரது விவசாய தோட்டத்தில் சத்தீஸ்கர் மாநிலம்,கொண்டேகாவ் மாவட்டம், கிரோலா பகுதியை சேர்ந்த பஜாருகொர்ரம் என்பவரது மகன் சன்னத்ராம்(20)  கூலி வேலை பார்த்து வந்தார். 

    கடந்த 20-ந் தேதி இரவு சன்னத்ராமை பாம்பு கடித்தது. சேலம் அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி    உயிரிழந்தார். இது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    பரமத்தி வேலூரை அடுத்த ‌‌எஸ்.வாழவந்தி அருகே உள்ள கே.புதுப்பாளையத்தை சேர்ந்தவர் காளிமுத்து.‌இவரது மனைவி பாப்பாத்தி (70). இவரை கடந்த 22-ந் தேதி  பாம்பு கடித்தது.

    சேலம் அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பரமத்திவேலூர் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தி பெருமானுக்கு வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
     
    அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான், பரமேஸ்வரர், அரசாயி அம்மன், மாசாணி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். 

    பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவிலில் உள்ள ஈஸ்வரன், வடகரையாத்தூர் ஈஸ்வரன் கோவில், ஜேடர்பாளையம் ஈஸ்வரன் கோவில் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கு வைகாசி மாத  பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    இதில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல், பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த எல்லை யம்மன் ஆலயத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரருக்கு வைகாசி மாத பிரதோஷத்தினை முன்னிட்டு பல வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு உலக மக்கள் நலம் வேண்டி அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்திக்காக ஏகாம்பரநாதருக்கு தொடர்ச்சியாக நீரினால் அபிஷேகம் செய்யப்பட்டது.
     
    அதனுடன் சிறப்பு அலங்காரத்துடன், நந்திபெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.   இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    குமாரபாளையம் அருகே டிரைவரை பாட்டிலால் குத்திய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் கொத்துக்காரன்காடு பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது38). டிரைவர்.  அதே பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்(46),சுமை தூக்கும் தொழிலாளி. இருவரும் நண்பர்கள். 

    சம்பவத்தன்று  அவர்கள் தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள பாரின் வெளியில் மது குடித்தனர். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

    இதில் ஆத்திரமடைந்த மாதேஸ், தனசேகரன் தலையில் மது பாட்டிலால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 

    இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதேஷை கைது செய்தனர்.

    கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு திருச்சி வாழை ஆராய்ச்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலதுறை சார்பில் வருகிற 6,7,8 ஆகிய தேதிகளில்  திருச்சி வாழை ஆராய்ச்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

    மேலும் வேளாண்மை சார்ந்த இடங்களுக்கு கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை மூலம் அழைத்து செல்ல உள்ளனர். விருப்பம் உள்ள விவசாயிகள்   உதவி இயக்குனரை தொடர்பு கொள்ளலாம். இதில் இருக்கூர், பிலிக்கல்பாளையம், அ.குன்னத்தூர் ஊராட்சிப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    எனவே கபிலர்மலை வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை உதவி இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.
    அ.குன்னத்தூர் மகாமாரியம்மன் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் அ.குன்னத்தூரில் எட்டு பட்டி கிராமத்துக்கு சொந்தமான மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆனதால் மகா மாரியம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற   உள்ளது. 

    அதன் காரணமாக கோவில் திருப்பணிகள் நடைபெற உள்ளதால் சாமி சிலைகளுக்கு பாலாலயம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாலாலத்திற்காக கோவில் வளாகத்தில் அக்னி குண்டம் அமைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

     இதில் புரோகிதர்கள் கலந்துகொண்டு ஹோமம் செய்து யாகம் வளர்த்தனர். பின்னர் சிறப்பு பூஜையுடன் அம்மன் உட்பட சாமிகள் பாலாலயம் செய்யப்பட்டு சாமி சிலைகளையும் எடுத்து அருகாமையில் உள்ள ஒரு இடத்தில் வைக்கப்பட்டது. 

    இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் யாகம் மற்றும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பரமத்தி மற்றும் கபிலர்மலை வட்டார உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு மண் மாதிரி சேகரித்தல் பயிற்சி அளிக்கப்பட்டது.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பரமத்தி மற்றும் கபிலர்மலை வட்டார உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு கட்ட முறையில் மண் மாதிரி சேகரித்தல் பற்றிய பயிற்சி நடந்தது. பயிற்சியினை நாமக்கல் வேளாண்மை உதவி இயக்குனர்( தரக்கட்டுப்பாடு)செல்வி தொடங்கி வைத்தார். 

    பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி, நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் சவுந்தராஜன் ஆகியோர் மண்மாதிரிகள் சேகரிக்கும் முறைகள், கிராம வரைபடங்களில் கட்ட முறை அளவீடு செய்தல் ஆய்வு செய்தல் பற்றி எடுத்துக் கூறினர். 

    இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை பரமத்தி வட்டார வேளாண்மை அலுவலர் பாபு மற்றும் உதவி அலுவலர்கள் நாகராஜ், பூபதி, ரகுபதி, கவுசல்யா மற்றும் பிரபு ஆகியோர் செய்து இருந்தனர்.

    ×