search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mariyamman temple"

    • திருவிழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
    • 4 நாட்கள் நடந்த இந்த திருவிழாவிற்காக 20-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பொக்காபுரம் என்ற அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி இந்த கோவில் அமைந்துள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் இந்த கோவிலில் 5 நாள் தேர்த்திருவிழா நடைபெறும். ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கோவில் திருவிழாவில் நீலகிரி மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா உட்பட வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.

    பழங்குடியின மக்கள் மற்றும் படுகர் சமுதாய மக்களால் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

    அப்போது அமைச்சருக்கு பழங்குடியி னர் மக்களின் பாரம்பரிய இசையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 4 நாட்கள் நடந்த இந்த திருவிழாவிற்காக 20-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி இரவு 10.30 மணிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் மாரியம்மன் சிம்ம வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். நிகழ்ச்சியில் கலெக்டர் அருணா கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

    தேர் திருவிழாவில் மேள தாளங்கள் முழங்க, படுகர் இன மக்கள் அவர்களின் மொழிப் பாடல்களைப் பாடி நடனமாடி பங்கேற்றனர்.

    வடம் பிடிக்கப்பட்ட தேர், கோவிலை இரண்டு முறை சுற்றி வந்தது. அப்போது வழிநெடுகிலும் தேரில் பவனி வந்த மாரியம்மனுக்கு, பக்தர்கள் உப்பை இறைத்து வேண்டுதல்களை நிறைவேற்றி வழிபட்டனர்.

    • பள்ளிபாளையம் பேப்பர் மில் சாலையில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கண்ணனூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அமாவாசை நாட்களில் மட்டும் ஏராளமான மக்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
    • பள்ளிபாளையம் போலீசார் கோவிலுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவில் வளாகத்தில் பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளில் கொள்ளை யர்களின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என ஆராய்ந்து வருகின்றனர்.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேப்பர் மில் சாலையில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கண்ணனூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அமாவாசை நாட்களில் மட்டும் ஏராளமான மக்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

    மேலும் ஆடி 18 திருவிழா வெகு விமரிசையாக இந்த கோவிலில் நடைபெறும். ஆடி 18 திருவிழாவில் நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் கோவில் பூசாரி பூஜை முடித்துவிட்டு கோவில் கதவை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

    இன்று அதிகாலை 4 மணிக்கு பூசாரி வந்து பார்க்கும்போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி கோவில் உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. நள்ளிரவில் கொள்ளையர்கள் கோவிலுக்குள் புகுந்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் கோவிலுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவில் வளாகத்தில் பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளில் கொள்ளை யர்களின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என ஆராய்ந்து வருகின்றனர்.

    • விமான கோபுரங்கள் திருப்பணி தொடக்க விழா நடைபெற்றது.
    • மஹா கணபதி ஹோமம், வாஸ்து பூஜை நடைபெற்றது.

    பவானி:

    பவானி நகர மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் செல்லாண்டி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு விமான கோபுரங்கள் திருப்பணி தொடக்க விழா நடைபெற்றது.

    தொடர்ந்து சங்கமே ஸ்வரர் கோவில் சிவா சிவாச்சாரியார், உதயபிரகாஷ் சிவாச்சாரியார் குழுவினர் மூலம் விநாயகர் பூஜை, சங்கல்பம், மஹா கணபதி ஹோமம், வாஸ்து பூஜை நடைபெற்றது.

    இதை தொடர்ந்து 2-ம் கால பூஜை தொடங்கி பாலஸ்தாபன பூஜைகள், மஹா தீபாராதனை நடை பெற்று திருப்பணி தொடக்க விழா நடைபெற்றது.

    இவ்விழாவில் பவானி நகர தி.மு.க. செயலாளர் ப.சீ.நாகராசன், நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோ வன், நகர்மன்ற துணை தலைவர் மணி, அ.தி.மு.க. நகர செயலாளர் சீனிவாசன், முன்னாள் நகர செயலாளர் கிருஷ்ண ராஜ், பாட்டாளி மக்கள் கட்சி நகர செயலா ளர் தினேஷ்குமார் நாயகர்,

    செல்லியாண்டியம்மன் கோவில் திருப்பணி விழா குழுவினர் மகேந்திரன், சண்முகசுந்தரம், பி.என்.ஆர்.மனோகரன், செல்லியாண்டியம்மன் கோவில் சரவணன், தி.மு.க. தலைமை பேச்சாளர் கண்ணன், ஊர் கவுண்டர், ஊர் கொத்துகாரர், 37 சமூக கட்டளைதாரர்கள், பொதுமக்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    பவானி செல்லியாண்டி யம்மன், மாரியம்மன் கோவில் உள்பட நரின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் ஆண்டு தோறும் மாசி திருவிழா மிக விமர்ச்சியாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் கோவில் திருப்பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி பவானி செல்லியாண்டியம்மன், மாரியம்மன், பட்டத்தரசியம்மன், எல்லையம்மன், மேட்டு தெரு மாரியம்மன், வர்ணபுரம் மாரியம்மன் கோவில்களில் இந்த ஆண்டு மற்றும் திரப்பணிகள் முடியும் வரை மாசி திருவிழா நடை பெறாது என இந்து சமய அறநிலையத்துறை, விழா குழுவினர் மற்றும் 37 கட்டளைதாரர்கள் முன்னிலையில் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்க ப்பட்டது.

    • ஆறுமுகநேரியில் லட்சுமி மாநகரம் மாரியம்மன் கோவில் சித்திரை கொடை விழா நேற்று தொடங்கியது.
    • தொடர்ந்து வில்லிசையும், சுப்பிரமணியராக காட்சியளித்த அம்பாளுக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரியில் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட லட்சுமி மாநகரம் மாரியம்மன் கோவில் சித்திரை கொடை விழா நேற்று தொடங்கியது. அதிகாலையில் மகா கணபதி ஹோமம் மற்றும் யாகபூஜை நடந்தன.தொடர்ந்து சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் சோ.வெங்கடேஷ் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இரவு 508 திருவிளக்கு பூஜை நடந்தது. பின்னர் வில்லி சையும், சுப்பிர மணியராக காட்சியளித்த அம்பாளுக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது. 2-வது நாளான இன்று இரவு அம்பாள், ஸ்ரீ கிருஷ்ண ராக காட்சி அளித்தல், 3-வது நாள் மகாலட்சுமியாக காட்சி அருளுதல் நடக்கிறது. 4-வது நாளாள (திங்கள்கிழமை) மதியம் சுவாமிகள் மஞ்சள் நீராடி கடலுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருதலும், இரவில் சரஸ்வதியாக காட்சி அருளுதல், அம்பாளுக்கு சிறப்பு பூஜையும் நடக்கிறது. 5-வது நாள் (செவ்வாய் கிழமை) மதியம் மஞ்சள் நீராடி ஆற்றுக்கு செல்லு தலும், இரவில் சிறுவர், சிறுமியர் ஆயிரங்கண்பானை மற்றும் மாவிளக்கு பெட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கின்றன.பெண்கள் முளைப்பாரி எடுத்து கும்மி அடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    6-வது நாளான (புதன்கிழமை) மாலையில் சுவாமிகள் மஞ்சள் நீராடி கும்பம் எடுத்து வீதிஉலா நடைபெறுகிறது.நிறைவு நாளான வியாழக்கிழமை அன்று காலையில் அம்மனுக்கு தீர்த்தவாரி அபிஷேகமும், தொடர்ந்து அன்ன தானமும் நடக்கின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் தனசேகரன், ராதா கிருஷ்ணன், தங்க பாண்டியன் உள்பட பலர் செய்து வருகின்றனர்.

    • தேர்த்திருவிழா வருகிற 28-ந் தேதி, நோன்பு சாட்டுதலுடன் துவங்குகிறது.
    • திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 13ந் தேதி நடக்கிறது.

    உடுமலை :

    உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. நூற்றாண்டுகள் பழமையான இக்கோவில் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாட ப்பட்டு வருகிறது. நடப்பாண்டு தேர்த்திருவிழா வருகிற 28-ந் தேதி, நோன்பு சாட்டுதலுடன் துவங்குகிறது. அன்று மாலை, 4மணிக்கு அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சியும், மாலை, 6மணிக்கு நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.ஏப்ரல் 4-ந் தேதி மாலை 7 மணிக்கு கம்பம் போடுதல் நிகழ்ச்சியும், 6-ந் தேதி இரவு 12மணிக்கு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி நிகழ்ச்சி நடக்கிறது. 7-ந் தேதி மதியம் 1 மணிக்கு கொடியேற்றுதல், மதியம் 2மணிக்கு பக்தர்கள் பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி தொடங்கி 11-ந் தேதி இரவு 10மணிக்கு பூவோடு எடுத்தல் நிறைவு பெறுகிறது. 12ந் தேதி அதிகாலை 4மணிக்கு மாவிளக்கு, மாலை 3 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 13ந் தேதி நடக்கிறது. அன்று காலை 6:45 மணிக்கு அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 4மணிக்கு தேரோ ட்டமும் நடக்கிறது.14-ந் தேதி காலை 8 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், இரவு 8 மணிக்கு பரிவேட்டை, இரவு 11 மணிக்கு வான வேடிக்கை நிகழ்சிகள் நடக்கிறது.15ந்தேதி காலை 8:15 மணிக்கு கொடியிறக்கம், காலை 11மணிக்கு மகா அபிேஷகம், பகல் 12மணிக்கு மஞ்சள் நீராட்டம், மாலை 7மணிக்கு பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.

    திருவிழா காலங்களில் ஏப்ரல் 7-ந் தேதி முதல் தினமும் இரவு 7 மணிக்கு அம்பாள் புஷ்ப அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சிகளும், கோவில் வளாகம் மற்றும் குட்டை திடலில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    • செல்லாண்டியம்மன், மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா நடைபெற்றது.
    • தொடர்ந்து பக்தர்கள் பலர் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.

    பவானி:

    பவானி நகரின் காவல் தெய்வமாக விளங்கி வரும் செல்லாண்டி அம்மன். மாரியம்மன் கோவில்களில் ஆண்டு தோறும் மாசி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான மாசி திருவிழா கடந்த 14-ந் தேதி பழனிபுரம் பட்டத்து அரசி அம்மன் கோவில், செல்லி யாண்டி அம்மன் கோவில் அருகில் உள்ள மாரியம்மன் கோவில், மேற்கு தெரு மாரியம்மன் கோவில், வர்ணபுரம் சமயபுரம் மாரி யம்மன் கோவில் மற்றும் எல்லை அம்மன் கோவில்க ளில் பக்தர்கள் முன்னிலை யில் பூச்சாட்டப்பட்டு விழா தொடங்கியது.

    இதையொட்டி நேற்று இரவு இந்த கோவில்களில் கம்பம் நடும் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடை பெற்றது.

    இதில் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் பலர் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.

    திருவிழாவையொட்டி வரும் 1-ந் தேதி (புதன் கிழமை) முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் திருவிழா நடக்கிறது. 

    • பக்தர்கள் முன்னிலையில் பூச்சாட்டு விழா நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    பவானி:

    பவானி செல்லாண்டி யம்மன், மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதுபோல் இந்த ஆண்டு மாசி திருவிழா செல்லியாண்டி அம்மன் கோவில் மற்றும் மாரியம்மன் கோவில்களில் உள்ள மூலவருக்கு பால், தயிர், சந்தனம் இளநீர், பன்னீர் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் முன்னிலையில் பூச்சாட்டு விழா நடைபெற்றது.

    இதனையடுத்து வருகின்ற 21-ந் தேதி கம்பம் நடப்பட்டு பின்னர் மார்ச் மாதம் 1-ந் தேதி மாசி திருவிழா, பொங்கல் விழா நடைபெற உள்ளது.

    இதில் பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    • சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் தீ மிதி உற்சவம் நடைபெற்றது.
    • மாலை ஸ்ரீ்மாரியம்மன் தேரில் இருந்து இறங்கி கோவிலுக்கு சென்றார். தேர்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீமாரியம்மனை வழிபட்டனர்.

     சிதம்பரம்:

    சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீ மாரியம்மன்கோயில் ஆடி மாத உற்சவம் ஜூலை 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. தேர், கீழசன்னதி நிலையிலிருந்து புறப்பட்டு நான்கு வீதிகள் வழியாக மீண்டும் கீழசன்னதியை அடைந்தது. முன்னதாக நடராஜர் கோவிலிருந்து பொதுதீட்சிதர்கள் பிரசாதத்துடன் வந்து பட்டு சாத்தி, மகா தீபாராதனை செய்த பின்னர் தேர் புறப்பட்டது. பின்னர் மாலை ஸ்ரீ்மாரியம்மன் தேரில் இருந்து இறங்கி கோவிலுக்கு சென்றார். தேர்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீமாரியம்மனை வழிபட்டனர்.

    இன்று காலை 5 மணி முதல் அங்கபிரதட்சணம், அலகு போடுதல், பால்காவடி, பாடை பிரார்த்தனை ஆகியவையும், காலை 9 மணிக்கு தீ மிதிப்பவர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 9 மணிக்கு மேல் 10 மணிக்கும் சோதனை கரகம், அலகு தரிசனம் நிகழ்ச்சியும் நடந்தது. பகல் 1 மணிக்கும் மேல் 2 மணிக்குள் அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடைபெறுகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) விடையாற்றி உற்சவமும், 3-ந் தேதி மாலை மஞ்சள் நீர் விளையாட்டும், இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவுடைகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு பிரேமா வீராசாமி, கலியமூர்த்தி பிள்ளை ஆகியோர் செய்துள்ளனர். தீமிதி உற்சவத்தை முன்னிட்டு பேருந்துகள் பஸ்நிலையத்திற்கு செல்ல முடியாததால், தெற்குவீதி, கீழவீதி சந்திப்பில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து கடலூர் மற்றும் சீர்காழி மார்க்கமாக செல்லும் பஸ்கள்இயக்கப்படும் என போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார். சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் 250 -க்கும் மேற்பட்ட பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • செங்கோட்டையில் மாரியம்மன் கோவில் விமானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நடந்தது.
    • ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை மேலுார் கதிரவன் காலனியில் இந்துகாட்டுநாயக்கன் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில் விமானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு ஜூர்ணோத்தாரன அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நடந்தது.

    விழாவில் விக்னேஸ்வர பூஜை, பிம்பசுத்தி, நான்காம் யாகசாலை பூஜை, நாடிசந்தானம், கடம் புறப்பாடு, கோபுரம் மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகள் மஹாகும்பாபிஷேகம், மஹாஅபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

    பகல் 12மணிக்கு சிறப்பு அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினா் இந்து காட்டுநாயக்கன் சமுதாய பெரியவர்கள், இளைஞரணி நிர்வாகிகள் பக்தா்கள், பொதுமக்கள் செய்திருந்தனா்.

    நிகழச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

    அ.குன்னத்தூர் மகாமாரியம்மன் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் அ.குன்னத்தூரில் எட்டு பட்டி கிராமத்துக்கு சொந்தமான மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆனதால் மகா மாரியம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற   உள்ளது. 

    அதன் காரணமாக கோவில் திருப்பணிகள் நடைபெற உள்ளதால் சாமி சிலைகளுக்கு பாலாலயம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாலாலத்திற்காக கோவில் வளாகத்தில் அக்னி குண்டம் அமைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

     இதில் புரோகிதர்கள் கலந்துகொண்டு ஹோமம் செய்து யாகம் வளர்த்தனர். பின்னர் சிறப்பு பூஜையுடன் அம்மன் உட்பட சாமிகள் பாலாலயம் செய்யப்பட்டு சாமி சிலைகளையும் எடுத்து அருகாமையில் உள்ள ஒரு இடத்தில் வைக்கப்பட்டது. 

    இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் யாகம் மற்றும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மதம் பிடித்த யானை தனது கால்களால் பாகனை மிதித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
    திருச்சி:

    தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் முதன்மை பெற்றது திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலாகும்.

    இங்கு ஆண்டின் அனைத்து நாட்களிலும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். குறிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இங்கு கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமாக மசினி என்ற பெண் யானை உள்ளது. அந்த யானைக்கு 10 வயது ஆகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த யானை சமயபுரம் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது.

    தினமும் பூஜை மற்றும் உற்சவர் அம்மனுக்கு நடைபெறும் அபிஷேக காலங்களில் இந்த யானை கோவில் வளாகத்திற்குள் அழைத்து வரப்படும். மற்ற நேரங்களில் அங்குள்ள அறையில் சங்கிலியால் பிணைத்து கட்டி வைக்கப்பட்டிருக்கும்.

    இந்த நிலையில் இன்று காலை யானை மசினியை பாகன் கஜேந்திரன் கோவில் வளாகத்திற்குள் அழைத்து வந்தார். உற்சவர் அம்மனுக்கு எதிரே உள்ள இடத்தில் யானையை பாகன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

    அங்கு வந்த பக்தர்கள் யானைக்கு காணிக்கை மற்றும் பழங்களை அளித்து ஆசீர்வாதம் பெற்று சென்றனர். அப்போது வெளியூரை சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் யானைக்கு காணிக்கை அளித்தார். அந்த சமயம் யானை திடீரென அந்த பெண்ணை தனது தும்பிக்கையால் தள்ளியது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அங்கிருந்து பயத்துடன் விலகி சென்றார். அடுத்த ஒரு சில விநாடிகளில் யானையின் போக்கில் மாற்றம் காணப்பட்டது. பலத்த சத்தத்துடன் யானை பிளிறியது.

    உடனே பாகன் தான் கையில் வைத்திருந்த அங்குசத்தால் யானையை கட்டுப்படுத்த முயன்றார். மேலும் லேசாக அடித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த யானை மசினி மதம் பிடித்து அங்குமிங்கும் தலைதெறிக்க ஓடியது. இதனால் கோவில் வளாகத்தில் இருந்த பக்தர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். அவர்கள் கோவில் வளாகத்தை விட்டே வெளியேறினர்.

    இதற்கிடையே கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர போராடிய பாகன் தொடர்ந்து யானையை அங்குசத்தால் அடித்தார். ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற யானையின் செயல் அதிர்ச்சியடைய வைத்தது. திடீரென தன்னருகில் வந்த பாகனை தனது தும்பிக்கையால் சுருட்டி தூக்கிய யானை வீசியது. இதில் சுவற்றில் மோதிய பாகன் பலத்த காயம் அடைந்தார்.

    ஆனாலும் தொடர்ந்து யானையை தனது பிடிக்குள் கொண்டு வர முயற்சித்தார். அதற்காக யானையின் அருகில் சென்ற பாகன் அதன் காலில் பிணைக்கப்பட்டிருந்த சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார். அதற்கு கட்டுப்படாத யானை பாகனை தனது கால்களால் மிதித்தது. இதில் பாகன் கஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    அதன் பின்னரும் உக்கிரம் தணியாத யானை கோவில் வளாகத்தை சுற்றி வந்தது. தொடர்ந்து இறந்து கிடந்த பாகனின் அருகில் சென்று நின்றுகொண்டது. இந்த சம்பவத்தால் கோவிலுக்குள் இருந்த குருக்கள் உள்பட அனைவரும் பத்திரமாக வெளியேறினர்.

    முன்னதாக பக்தர்கள் சிதறி ஓடியதில் 8 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்த தகவல் அக்கம்பக்கத்தில் காட்டுத்தீ போல பரவியது. உடனடியாக அங்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அவர்கள் அச்சத்தில் அங்கிருந்த உயரமான கட்டிடத்தின் மீது ஏறி நின்றனர்.

    மேலும் கோவில் நடையும் உடனடியாக அடைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார், வனத்துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் கோவில் பின்புற நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்று யானையை அமைதிப்படுத்தி, சாந்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். நீளமான கயிறு மூலம் யானையின் கால்களை கட்டி அதனை அழைத்து வர முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    ஆனாலும் யானை கட்டுப்பட மறுத்து பாகன் அருகிலேயே இருந்தது. இதையடுத்து கோவில் யானையை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக ஜெயா என்ற மற்றொரு பெண் யானை கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. பின்னர் வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு யானையை கட்டுப்படுத்தினர். பாகனின் உடலை அதிகாரிகள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். #Tamilnews
    ×