என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாரியம்மன் கோவில்"

    • வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று இரவு அன்ன தானம் வழங்கப்படுகிறது.
    • பெருமாள் கோவிலில் இருந்து பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சீர் கொண்டு வரப்படுவது சிறப்பு.

    ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கருங்கல்பாளையத்தில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது போல் பெரிய மாரியம்மன் கோவிலுக்கும் பல சிறப்புகள் உள்ளன. இந்த கோவில் 300 வருடம் பழமையானது.

    கோவிலின் மூலவராக பெரிய மாரியம்மன் உள்ளார். கோவிலில் அரசமர விநாயகர், முருகர், துர்க்கை அம்மன், நவக்கிரகம் போன்ற சாமி சிலைகள் உள்ளன. கோவிலில் பெரிய பாம்பு புற்று ஒன்று உள்ளது. இந்த கோவிலில் வருடம் முழுவதும் பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டாலும் ஆடி மாதம் முழுவதும் வரும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று இரவு அன்ன தானம் வழங்கப்படுகிறது.

    ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமை அன்று பெருமாள் கோவிலில் இருந்து பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சீர் கொண்டு வரப்படுவது சிறப்பு. ஆடி 18 அன்று கன்னிமாருக்கு காலை முதல் இரவு வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். கோவிலின் முக்கிய வழிபாடாக புதுமண தம்பதிகள் குழந்தை பாக்கியம் வேண்டி அம்மனுக்கு எண்ணை வைத்து வழிபட்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    பல வருடங்களாக இந்த வழிபாட்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் ஆடி மாதம் கோவிலில் பாம்பு புற்றில் நாக பஞ்சமி விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடி மாதம் முழுவதும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஆடி மாதம் பெண்கள் அதிக அளவில் வந்து அம்மனை வழிபட்டு வேண்டுதலை நிறைவேற்ற பரிகாரங்கள் செய்வார்கள்.

    • விநாயகர், ஜடை மாரியம்மன் கோவில் மூலஸ்தான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது.
    • சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கயிறுகாரன் கொட்டாய் பகுதியில் செல்வ விநாயகர், ஜடை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    கணபதி ஹோமம், கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து முதல் கால யாக பூஜை, அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் ஆகியவை நடந்தது.

    நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, 2-ம் காலயாக பூஜை, மகா பூர்ணா ஹுதி ஆகியவை நடந்தது. தொடர்ந்து விநாயகர், ஜடை மாரியம்மன் கோவில் மூலஸ்தான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது.

    திருப்பூர் சுப்பிரமணிய சிவாச்சாரியார் தலைமையில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபி ஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து சுவாமி மற்றும் அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.

    விழாவில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இன்று (19-ந் தேதி) முதல் மண்டல பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவுல் தர்மகர்த்தாக்கள், நிர்வாகக் கமிட்டியினர் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.

    • ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில்.
    • தொட்டில் கட்டி குழந்தை வரம் வேண்டுவோருக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    ஆடி மாதம் என்றாலே 'அம்மன் மாதம்' என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு தமிழகம் முழுவதும் அம்மன் ஆலயங்களில் திருவிழா கோலாகலமாக நடைபெறும். ஆறு வகையான இறை வழிபாட்டில் சக்தியை கடவுளாக வழிபடும் நெறி 'சாக்தம்' என்பதாகும். சக்தி வழிபாட்டில் ஆதிசக்தியான அன்னை பராசக்தியே மூலக் கடவுளாக போற்றப்படுகிறாள். கிராம தேவதைகளான காவல் தெய்வங்களை வழிபடுவது கிராம மக்கள் தொன்றுதொட்டு கடைபிடித்து வரும் மரபுகளில் ஒன்று.

    பெரும்பாலான கிராமங்களில் மாரியம்மன் அல்லது காளியம்மன் பெயரிலே ஆலயம் அமையப்பெற்றிருக்கும். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ளது ஒழுகை மங்கலம் கிராமம். இங்கு மாரியம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரசித்தி பெற்ற ஒரு தலம் சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலாகும்.

    தல வரலாறு

    புராண காலத்தில், இந்த இடம் அடர்ந்த காடுகளாக இருந்தது. இந்த வனத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கமாக இருந்து வந்தது. அப்போது ஒரு நாள் மாடு மேய்ப்பவர், தனது பசு ஒரு இடத்தில் நின்று தானாகவே பால் சுரந்து பூமியில் வழிந்தோடுவதை கண்டார். இதை பார்த்ததும் அவர் மிகுந்த ஆச்சரியம் அடைந்தார். மறுநாளும் அதே இடத்தில் அந்த பசு பால் சொரிவதை கண்டார். இவ்வாறு தினமும் இந்த நிகழ்வு நடந்தது. இதையடுத்து அந்த இடத்தில் ஏதோ அற்புத சக்தி இருப்பதை உணர்ந்த அவர், அந்த இடத்தை தோண்டினார். அப்போது அங்கு மாரியம்மன் சிலை வெளிப்பட்டது. அன்னையே தான் இருக்கும் இடத்தை இந்த நிகழ்வின் மூலம் உணர்த்தியுள்ளதை மக்கள் அறிந்தனர். பின்பு சுயம்புவாக வெளிப்பட்ட அந்த அம்மனை அந்த பகுதி மக்கள் வழிபட தொடங்கினர். பசுவின் பால் (ஒழுகை) சொரிந்து, சிலை வெளிப்பட்டதால், அந்த இடம் ஒழுகை மங்கலம் என்று அழைக்கப்படுகிறது.

     

    கோவில் நுழைவு வாசல்

    கோவில் அமைப்பு

    இந்த கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில் ஆகும். இக்கோவில், நுழைவு வாசலுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. நுழைவு வாசலை கடந்ததும் துவஜ ஸ்தம்பம், பலிபீடம் காணப்படுகிறது. அதை கடந்ததும் கருவறையில் சுயம்புவாக அம்மன் காட்சி அளிக்கிறாள். அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம் உள்ளது. கோவில் வளாகத்தில் சீதளா பரமேஸ்வரி, விநாயகர், நாகர்கள் சன்னிதிகள் உள்ளன.

    கோவிலின் எதிரில் கருப்பண்ண சுவாமி, காத்தவராயன், பேச்சி அம்மன் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். இதன் அருகிலேயே கோவில் தீர்த்தம் உள்ளது. அதன் கரையில் கிழக்கு நோக்கி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் தென் மேற்கு மூலையில் தல விருட்சமாக வேப்பமரம் உள்ளது.

    பிரிந்த குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைவதற்கும், தம்பதிகளிடையே ஒற்றுமை பலப்படவும், செழுமையான வாழ்வு மற்றும் எதிர்கால சந்ததியினர் நலனுக்காகவும் பக்தர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். கோவில் குளத்தில் மிளகு, சர்க்கரை, உப்பு சேர்த்து கரைத்து சாப்பிட்டால் உடலில் ஏற்படும் கட்டிகள் போன்றவையும், மனதில் உள்ள கவலைகளும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    திருமண வரம் வேண்டி வரும் பக்தர்கள், கோவிலின் வேப்ப மரத்தில் மஞ்சள் நூல் கட்டி வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும். இங்கு தொட்டில் கட்டி குழந்தை வரம் வேண்டுவோருக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் பெருந்திரளாக பக்தர்கள் வருகை தந்து அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை செய்தும், சிலர் பொங்கல் வைத்தும் வாழிபாடு செய்கிறார்கள். முடி காணிக்கை செலுத்துதல், மண்ணால் ஆன உடல் உறுப்பு பொம்மைகளை செய்து அம்மனுக்கு வேண்டுதலாக நிறைவேற்றுகின்றனர்.

    திருவிழாக்கள்

    சித்திரை தமிழ் புத்தாண்டு தினம், பங்குனி பெருந்திருவிழா, புரட்டாசி நவராத்திரி மற்றும் தைப் பொங்கல் ஆகியவை இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. ஆடிப் பெருக்கு நாளில் தீர்த்தவாரி, மகிமலை ஆற்றின் கரையில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாக்களில் உள்ளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு அம்மனின் அருளை பெறுகின்றனர்.

    கோவில் தினமும் காலை 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்துக்காக நடை திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    சீர்காழி மற்றும் மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் செல்லும் வழியில், திருக்கடையூரில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஒழுகை மங்கலம் கிராமம். ஒழுகை மங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தெற்கு திசையில் சுமார் 250 மீட்டர் தொலைவில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

    • ஜமத்கனி எனும் முனிவரின் மனைவியாக திகழ்ந்தவள் ரேணுகா.
    • மாரியம்மன் எனும் பெயரில் ரேணுகை அருள்பாலித்து வருகின்றாள்

    ஜமத்கனி எனும் முனிவரின் மனைவியாக திகழ்ந்தவள் ரேணுகா. அவள் கற்பில் சிறந்த காரிகை. ஒருநாள் ரேணுகை அவ்வாறு நீரெடுக்கும்போது வான்வழிச் சென்ற கந்தவர் ஒருவரின் நிழல் நீரில் விழக்கண்டதனால் ஒரு நொடிப் பொழுது பிற ஆடவரின் நிழலைக் கண்டதால் கற்புநிலை தடுமாறிப் பசுமட்குடம் நீரில் கரைந்தது. பதறிய ரேணுகை உடனே தம் மனத்தை திண்மை செய்து மீண்டும் மட்குடம் வனைந்து நீர் எடுத்து வந்தாள்.


    ரேணுகை சற்று காலந்தாழ்த்தி வந்தமைக்கான காரணத்தை தம் அகக்கண்ணால் உணர்ந்த ஜமதக்னி முனிவர் வெகுண்டார். தன் மகன் பரசுராமனை அழைத்து "கற்பு நிலை வழுவிய நின் தாயை கொன்று விடு என்று கட்டளையிட்டார்.

    பரசுராமன் இருதலைக்கொள்ளி எறும்பானான். தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை என்பர். அத்தாயைக் கொல்வதா? தந்தை சொல்மிக்க மந்திரமுமில்லை என்பரே! அத்தந்தை சொல்லை மீறுவதா? என்ன செய்வது! என்று சற்றுத் திணறிய மைந்தன், இறுதியில் தந்தை சொல்லை முதலில் நிறைவேற்ற முடிவு செய்தான். பரசினை எடுத்துக் கொண்டு தாயை நோக்கி ஓடினான்.


    மகனிடமிருந்து தப்பிக்கத் தாயும் ஓடினாள். தமையன்மார் தடுத்தனர். தடுத்தவர் அனைவரையும் வெட்டி வீழ்த்தினான் பரசுராமன். இறுதியில் ரேணுகை ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணின் குடிசைக்குள் ஓடி ஒளிந்தாள்.

    இரக்கம் உடைய அந்த ஏழைப்பெண் அடைக்கலமாக வந்த அன்னையைக் காக்க எவ்வளவோ முயன்றாள். அவளையும் பரசுராமன் வெட்டி வீழ்த்துகிறான். கடைசியில் தன் அன்னையையும் வெட்டி முடித்து விடுகிறான்.


    கட்டளையை நிறைவேற்றிய பரசுராமன், தந்தையிடம் சென்று பணிகிறான். மகனின் கடமை உணர்வைப் பாராட்டிய தந்தை, மகனைப் பார்த்து "நீ வேண்டும் வரங்களைக் கேள்" என்கிறார்.

    புத்திசாலியான பரசுராமன், "தந்தையே என்னால் கொல்லப்பட்ட அனைவரும் பிழைத்தெழ வேண்டும்" என்று கேட்டுக்கொள்கிறான். மகனின் சாமர்த்தியத்தையும் நல்ல உள்ளத்தையும் பாராட்டிய தந்தை "அப்படியே ஆகட்டும்" என்றார்.

    பரசுராமன் தந்தையின் கட்டளைக்கு இணங்காமல் இருந்திருந்தால் அவனையும் முனிவர் சபித்திருப்பார். இதனை உணர்ந்தே பரசுராமன் தந்தையின் ஆசியையும் பெற்று, இறந்தவர்களையும் பிழைத்தெழுமாறு அனுமதியையும் பெற்றுவிடுகிறான்.

    வெட்டுண்ட உடல்களின் மீது நீரைத் தெளித்து இறந்தவர்களைப் பிழைக்கச் செய்கிறான். அப்போது ஒரு விபரீதம் நிகழ்ந்து விடுகின்றது. வெட்டுண்ட தன் தாயின் தலையையும் அவளைக் காப்பாற்ற முயன்று வெட்டுண்ட பெண்ணின் உடலையும் ஒன்று சேர்த்து விடுகிறான்.

    அதேபோல் அப்பெண்ணின் தலையையும் தாயின் உடலையும் ஒன்று சேர்த்து விடுகின்றான். இருவரும் உயிர் பெற்று எழுகின்றனர். ஆனால் தலைகள் மாறி உள்ளன. இவ்வாறு தலைகள் மாறியதால் ரேணுகையின் தலை பொருந்தியவளை "மாறி அம்மன்" என்று அழைக்கலாயினர் என்று அப்புராணம் கூறுகிறது.

    தலைகள் மாறியதால் ஏற்பட்ட பெயர் என்றால் "மாறி அம்மன்" என்று வல்லின "றி" அல்லவாபோட்டு எழுத வேண்டும். ஆனால் இடையின "ரி" போட்டு "மாரி அம்மன்" என்றுதானே எழுதுகிறோம்.

    ஆதலின் மேற்படி புராணக் கதை ரேணுகாதேவிக்கே உரியது. அதைத் தமிழ்நாட்டில் தொன்று தொட்டு மழைக்காக வழிபட்டு வரும் மாரி அம்மனுக்கு இடைக்காலத்தில் சிலர் இணைத்து விட்டுள்ளனர். எனவே ரேணுகை வேறு; மழை தரும் மாரிஅம்மன் வேறு.


    ரேணுகையின் வரலாறு இன்னொரு விதமாகவும் கூறப்படுகிறது. ஜமத்கனி முனிவரின் காமதேனுவைக் கவர முயன்ற கார்த்த வீரியார்ஜீனனின் பிள்ளைகள் ஜமத்கனி முனிவரைக் கொன்றனர். இக்காட்சியைக் கண்ட ரேணுகை, கணவனை இழந்த பின் உயிர் வாழ விரும்பாமல், தீ மூட்டி அதில் குதித்துவிட்டாள்.

    இந்திரன் வருணனை ஏவி, மழை பெய்வித்து ரேணுகையை எரியாமல் காத்தான். தீக்குண்டத்தில் இருந்து எழுந்த ரேணுகை, தன் உடம்பில் இருந்த ஆடை எரிந்து போய்விட்டதால், வேப்பிலையை ஒடித்து ஆடையாக அணிந்து கொண்டாள்.

    ஊர் மக்கள் அவள் பசியைத் தீர்க்கப் பச்சரிசி மாவு, வெல்லம், இளநீர், பானகம் ஆகியவற்றைத் தந்தனர். பின்னர் ரேணுகை தன் கணவன் உடலைக் கண்டு அழுது புலம்பினாள்.


    அப்போது சிவபெருமானும், வானோரும் அவளுக்குக் காட்சி தந்தனர். "ரேணுகையே! நீ பராசக்தியின் கலாம்சங்களில் ஓர் அம்சம். இதனை உலகோர் அறிவதற்காகவே இத்திருவிளையாடல். இனி நீ பூவுலகில் மாரியம்மன் எனும் பெயரில் மக்களின் துயர் தீர்த்து வருவாய்!

    உன் உடம்பிலுள்ள தீக்கொப்புளங்களே மக்களுக்கு அம்மைக்கொப்புளங்களாக உண்டாகும். அவற்றை நீ அணிந்திருக்கும் ஆடைகளாகிய வேப்பிலைகளால் தீர்த்து வைப்பாய் என்று சிவபெருமான் வரம் அருளினார். அதுமுதல் மாரியம்மன் எனும் பெயரில் ரேணுகை அருள்பாலித்து வருகின்றாள் என்றும் ஒரு வரலாறு வழங்கி வருகின்றது.

    பைதுரூபம், பிதுரூபம், மிருதி, மாரணம், முரசனி, நுகம், நமலி, கொடி எனும் எட்டு காரணப் பெயர்களால் ஜோதிட சாஸ்திரத்தில் புகழ்ந்து கொண்டாடப்படும் மகம் நட்சத்திரம் "மகா சக்தி மாரியம்மனின்" திருநட்சத்திரமாகும்.

    மாரியம்மனுக்காக ஆற்றும் விசேஷ நிகழ்வுகள், உற்சவங்கள், கால்கோள் விழாக்கள், பாலாலயம், கும்பாபிஷேகம் யாவும் மகம் நட்சத்திரத்திற்கே பொருத்தங்களும், தாராபலனும் பார்த்து நிர்ணயிக்கப்படுகிறது.

    • மூன்று கோவில்களையும் ஒரே இடத்தில் ராஜகோபுரம் கட்டுவதற்கு கோவில் திருப்பணி குழுவினர் முடிவு செய்தனர்.
    • திருப்பூர் மேயர் தினேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் செல்வ விநாயகர், மாரியம்மன் மற்றும் மாகாளியம்மன் கோவில்கள் உள்ளன. ஒரே வளாகத்தில் அமைந்துள்ள இந்த மூன்று கோவில்களும் இந்த பகுதி முழுக்க பிரசித்தி பெற்ற கோவில்கள் ஆகும்.

    இந்த நிலையில் இந்த மூன்று கோவில்களையும் ஒரே இடத்தில் ராஜகோபுரம் மற்றும் மூலவர் கோபுரங்களுடன் கற்கோவில்களாக கட்டுவதற்கு செல்வவினாயகர், மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் திருப்பணி குழுவினர் முடிவு செய்தனர்.

    அதன் அடிப்படையில் செல்வ விநாயகர், மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் கட்டுவதற்கான திருப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் திருப்பூர் மேயர் தினேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருப்பணிகளை தொடங்கி வைத்தார். திருப்பணிக்காக பாலைக்கால் போடப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு திருப்பணிக்குழு தலைவர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். திருப்பணி குழுவினர் உட்பட ஊர் பொதுமக்கள் திரளாக பங்கேற்றார்கள்.

    • அனைத்து வசதிகளும் கூடிய கோவிலாக இருக்கன்குடி மாரியம்மன் கோவில் திகழும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
    • ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட உள்ள பணிகளை சுற்றுலா, முதன்மைச் செயலர் சந்தரமோகன், கலெக்டர் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் பார்வையிட்டார்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட உள்ள பணிகளை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை முதன்மைச் செயலர் சந்தரமோகன், கலெக்டர் மேகநாதரெட்டி ஆகியோர்முன்னிலையில், அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த பெருந்திட்ட வரைவில் சேர்க்கப்பட வேண்டிய பொருட்களாக 3 இடங்களில் நுழை வாயில்களை ஏற்படுத்த இருக்கிறோம். முக்கிய பாதையில் இருந்து கோவிலுக்கு வருகின்ற பாதை 600 மீட்டர் அளவிற்கு புதிய பாதையை அமைக்க இருக்கின்றோம்.

    வரும் வழியில் இருக்கின்ற தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்கப்பட உள்ளது. இங்கு 98 விருந்து மண்டபங்கள், ஆடுகள் மற்றும் கோழிகளை நேர்த்திக்கடன் செலுத்த வருகிறவர்களுக்கு சுகா தாரமான முறையில் 2 ஸ்லேட்டர்கள் அமைக்க ப்பட்டிருக்கின்றது.

    ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் பொங்கலிடும் வகையில் பொங்கல் மண்டபமும், பக்தர்கள் தங்குவதற்கு 40 குளிர்சாதன அறைகளும், 40 குளிர்சாதனமற்ற அறைகளும் அமைக்கப்படுகிறது.

    இந்த கோவிலில் இருக்கின்ற கடைகளை ஒரு பகுதியாக அமைத்து தந்து, வியாபாரிகளுக்கு பாதிப்பு இல்லாத அளவில் குறைந்த வாடகையில், அதே நேரத்தில் பக்தர்களுக்கு அதிக விலையில் பொரு ட்களை விற்கின்றார் என்ற நிலை இல்லாமல் வியாபாரிகளுக்கும் பாதுகாப்பான சூழ்நிலை உருவாக்க திட்டமிட்டு இருக்கிேறாம்.

    ஏற்கனவே பெருந்திட்ட வரைவு திட்டத்தில் எடுத்து க்கொண்ட பணிகளில் இப்போது கோவில் உள்ளே இருக்கிற உற்சவர் மண்டபம் ரூ.40 லட்சத்திலும், முடிகாணிக்கை மண்டபம் ரூ.2.25 கோடியிலும், மற்றொரு மண்டபம் ரூ.3 கோடியிலும் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். பிரசித்தி பெற்ற நிலையில் உள்ள கோவில்களில் உள்ள அனைத்து வசதிகளும் கூடிய ஒரு கோவிலாக இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவிலை நிச்சயம் மாற்றிக் காட்டுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், மதுரை மண்டல இணை ஆணையர் செல்லதுரை, சாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் நிர்மலா கடற்கரை ராஜ், கோவில் பரம்பரை அறகாவலர் ராமமூர்த்தி, செயல் அலுவலர் கருணாகரன் மற்றும் பலர் இருந்தனர்.

    • பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டு சென்றனர்.
    • இதையடுத்து தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரசித்தி பெற்ற பெரிய, சின்ன மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டா–டப்படும்.

    அதன்படி நடப்பாண்டுக்கான விழா கடந்த மாதம் 29-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 26-ந் தேதி கோவில்களின் முன் கம்பம் நடப்பட்டு பூவோடு நிகழ்ச்சி நடந்தது.

    அதனைத் தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து கம்பங்களுக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.

    மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. குண்டம் விழாவுக்காக நேற்று இரவு குண்டம் பற்ற வைக்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் விழா இன்று காலை நடந்தது.

    கோவிலின் தலைமை பூசாரி குண்டம் இறங்கினார். அதைத்தொடர்ந்து காப்பு கட்டி விரதம் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டு சென்றனர்.

    விழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் அம்மனை வழிபட்டு சென்றனர். விழாவை–யொட்டி கருங்கல்பாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. நாளை கோவில் கரகம் எடுத்தலும், 13-ந் தேதி கோவில் முன் பொங்கல் வைத்தலும், மாவிளக்கு மாற்றுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    பின்னர் 14-ந் தேதி கம்பம் பிடுங்கும் விழாவும், 15-ந் தேதி மஞ்சள் நீராட்டு, அம்மன் வீதி உலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

    • பொங்கல் திருவிழா கடந்த மாதம் பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வந்தது.
    • சன்னதி முன் கம்பம் நடப்பட்டு பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டனர்.

    பவானி:

    பவானி அருகில் உள்ள காளிங்கராயன் பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் பொங்கல் திருவிழா கடந்த மாதம் பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வந்தது. பின்னர் அம்மன் சன்னதி முன் கம்பம் நடப்பட்டு பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அக்னி சட்டி எடுத்தல், உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நேற்று பவானி கூடுதுறையில் இருந்து தீர்த்த குட ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டு அம்மனுக்கு புனித நீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.

    முக்கிய நிகழ்வான பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை முதல் பவானி, லட்சுமி நகர், காளிங்கராயன்பாளையம், மேட்டுநாசுவம்பாளையம், எலவமலை உட்பட சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனை வழிபாடு செய்தனர்.

    • பக்தர்கள் முன்னிலையில் பூச்சாட்டு விழா நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    பவானி:

    பவானி செல்லாண்டி யம்மன், மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதுபோல் இந்த ஆண்டு மாசி திருவிழா செல்லியாண்டி அம்மன் கோவில் மற்றும் மாரியம்மன் கோவில்களில் உள்ள மூலவருக்கு பால், தயிர், சந்தனம் இளநீர், பன்னீர் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் முன்னிலையில் பூச்சாட்டு விழா நடைபெற்றது.

    இதனையடுத்து வருகின்ற 21-ந் தேதி கம்பம் நடப்பட்டு பின்னர் மார்ச் மாதம் 1-ந் தேதி மாசி திருவிழா, பொங்கல் விழா நடைபெற உள்ளது.

    இதில் பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    • ரூ. 53 லட்சத்து 85 ஆயிரம் செலவில் புதிய தேர் உருவாக்கப்பட்டுள்ளது.
    • கும்ப கலசத்தில் எழுந்தருளிய மாரியம்மன் சூலத்தேவர் மற்றும் தேருக்கு பூஜைகள் செய்யப்பட்டது.

     உடுமலை :

    உடுமலை மாரியம்மன் கோவிலில் இருந்த பழமையான தேருக்குப் பதிலாக எண்கோண வடிவில் மர சிற்ப வேலைப்பாடுகளுடன் 5 நிலைகளைக் கொண்டதாக ரூ. 53 லட்சத்து 85 ஆயிரம் செலவில் புதிய தேர் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த புதிய தேரின் வெள்ளோட்டம் நடைபெற்றது.அதன்படி காலை 9.45 மணிக்கு மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.காலை 10.30 மணிக்கு தேவதா ஹோமத்தை தொடர்ந்து புதிய தேர் பிரதிஷ்டா ஹோமங்கள் நடைபெற்றது. மதியம் 1 மணியளவில் புதிய தேர் கும்ப ப்ரோக்ஷனம்,ஸ்தாபனம்,பலிதானம்,மஹா தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட புதிய தேரில் கும்ப கலசத்தில் எழுந்தருளிய மாரியம்மன் சூலத்தேவர் மற்றும் தேருக்கு பூஜைகள் செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.

    தேரோட்டத்தை பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரம்,உடுமலை நகரமன்றத் தலைவர் மத்தீன்,உடுமலை ஆர்டிஓ. ஜஸ்வந்த் கண்ணன்,பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ் ஸ்ரீதர் உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். பக்தி கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.பக்தர்களுக்கு உதவியாக தேரை இழுக்க பொக்லைன் எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.பொள்ளாச்சி ரோடு,தளி ரோடு,சதாசிவம் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் மீண்டும் கோவில் நிலைக்கு கொண்டு வரப்பட்டது.வழி நெடுக ஏராளமான பக்தர்கள் புதிய தேரை பார்ப்பதிலும் படம் பிடிப்பதிலும் ஆர்வம் காட்டினர்.போலீஸ் சூப்பிரண்டு கோபால கிருஷ்ணன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • 31-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியும், ஏப்ரல் 1-ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியும் நடக்கிறது.
    • 6, 7-ந் தேதிகளில் தேர் இழுக்கப்பட்டு நிலை வந்தடைகிறது.

    அவினாசி :

    கருவலூர் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நாளை 21-ந் தேதி பூச்சாட்டு விழாவுடன் தொடங்குகிறது.

    31-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியும், ஏப்ரல் 1-ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. 4-ந் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 5-ந் தேதி காலை அதிர்வேட்டு முழங்க அம்மன் திருத்தேருக்கு எழுந்தருள்கிறார். இதையடுத்து பக்தர்கள் ரதத்தின் மீது வீற்றிருக்கும் சாமியை தரிசனம் செய்கின்றனர்.

    பின்னர் பிற்பகல் தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து 6, 7-ந் தேதிகளில் தேர் இழுக்கப்பட்டு நிலை வந்தடைகிறது. 8-ந் தேதி பரிவேட்டை மற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது. 9-ந் தேதி மஞ்சள் நீர் விழா நடைபெறுகிறது.

    • 30 நாட்கள் 30 உபயதாரர்கள் மூலம் நாள்தோறும் தேர் திருவிழா வானது நடைபெற உள்ளது.
    • பாரம்பரிய நடனங்களை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்

    ஊட்டி,

    ஊட்டியின் காக்கும் கடவுளாய் திகழும் மாரியம்மன், காளியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஆண்டு தோறும் ஊட்டி மாரியம்மன், காளியம்மன் சித்திரை தேர் திருவிழா மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறுவது வழக்கம்.

    இந்த விழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கியது. 30 நாட்கள் 30 உபயதாரர்கள் மூலம் நாள்தோறும் தேர் திருவிழா வானது நடைபெற உள்ளது.

    முதல் நாள் தொடக்கமாக நீலகிரி மாவட்ட ஒக்கலிகர் சங்கம் சார்பில் முதல் தேர்த் திருவிழா நடந்தது. இதில் பாரம்பரிய நடனங்கள் நடைபெற்றது. இதை திரளான பொது மக்கள் கண்டு ரசித்தனர்.

    தேர்த்திருவிழாவில் மாரியம்மன் புலி வாகனத்தில் பூ பல்லக்கில் ஆதிபராசக்தியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மாலையில் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

    ஒக்கலிகர் சங்க நிர்வாகிகள் சதிஷ்குமார்,சதிஷ்,ரவி,மோகன்,கிருஷ்ணன்,வினோத்,அசோக்,பிரகாஷ்,சுமந்த்,சந்தோஷ்,சைலிஷ்,சுரேஷ்,மோகன்,தீப்பு,குமார்,சத்தியநாராய ணன்,மோகன்ராஜ் ஆகியோர் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். சிறுவர்களுக்கான சிறப்பு நிகழ்சியை சுந்தர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்

    கலைநிகழ்சிக்கான ஏற்பாடுகளை லோகநாதன்,சம்பத்,சிவராஜ்,மோகன்,நாராயணன்,சங்கர்,சீனீ,மோகன்,செந்தில்குமார்,மஞ்சுநாத்,ரவி,சுமந்த்,சந்திப் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

    இதில் நீலகிரி மாவட் டத்தில் உள்ள அனைத்து ஒக்கலிகர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளும் உறுப்பினர்களும் திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.

    ×