என் மலர்
நீங்கள் தேடியது "Mariamman temple"
- இளம்பெண் வடிவில் வந்த அம்மன் சிரித்து மறைந்தாள்.
- கனவில் வளையல் போட்டுக் கொள்ள வந்தவள் சமயபுரம் அன்னையே என்பதை உணர்ந்து கொண்ட அவர், சக வியாபாரிகளிடமும் கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் பிரசித்தி பெற்ற ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆகாச மாரியம்மனுக்கு திருவுருவத் திருமேனி கிடையாது. ஜோதி வடிவில் அம்மனை பக்தர்கள் வழிபடுகின்றனர். சமயபுரம் மாரியம்மனே இந்த கோவிலில் அருவமாக இருந்து ஆட்சி செய்கிறார் என்கிறார்கள்.
தல வரலாறு
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு, திருநறையூரில் கவரைச் செட்டியார்கள் என்ற வணிக சமூகத்தார் பாரம்பரியமாக கண்ணாடி வளையல் வியாபாரம் செய்து வந்தனர். இவர்கள் குதிரையில் ஊர் ஊராக சென்று வியாபாரம் செய்யும் பழக்கத்தை உடையவர்கள். ஒருமுறை, சமயபுரம் கோவிலுக்கு பங்குனி பெருவிழாவின்போது வணிகம் செய்ய வந்தனர். இரவில் அங்கேயே தங்கி, உறங்கினர்.
அவர்களில் பெரியவர் ஒருவரின் கனவில் தோன்றியசமயபுரம் மாரியம்மன், இளம்பெண் வடிவம் எடுத்து கைகளுக்கு கண்ணாடி வளையல்களை அணிவிக்க கூறினார். அந்த பெரியவரும் அப்பெண்ணின் பொன்னிற கைகளில் வளையல் அணிவிக்க முயன்றார். ஆனால் அணியும்போது வளையல்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக உடைந்து கீழே விழுந்தது. இதனால் வியாபாரி குழப்பமடைந்து, என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார்.
தெய்வீக அம்சமாக தோற்றமளித்த அப்பெண்ணின் கைகளை வளையல்களால் அலங்கரிக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டவர், ''தாயே, வளையல்கள் அனைத்தும் உடைந்து விட்டன. உன் அழகிய கைகளை வளையல்களால் அலங்கரிக்க என்னிடம் இப்போது வளையல்கள் இல்லை. என் ஊருக்கு வந்தால் உன் இரு கைகளுக்கும் விதவிதமான வளையல்கள் அணிவித்து அலங்கரிப்பேன். உனக்கு முல்லை, மல்லிகை மலர்களைச் சூட்டுவேன்'' என்று அன்புடன் வேண்டினார்.
இதைக்கேட்டு இளம்பெண் வடிவில் வந்த அம்மன் சிரித்து மறைந்தாள். உடனே, வியாபாரி கனவு கலைந்து எழுந்தார். அவரின் அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வளையல்கள் அனைத்தும் உடைந்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். தவிர, அவருடன் வந்திருந்த மற்ற வியாபாரிகளுக்கு அம்மை போட்டிருப்பதையும் கண்டார். இதனால் அந்த பெரியவர் மிகவும் மனம் வருந்தினார். இது சமயபுரத்தாளின் சோதனை என்பதை அறிந்த அவர் கோவிலை நோக்கிக் கைகூப்பி வணங்கி நின்றார்.
விடிந்ததும் கோவில் அர்ச்சகர் அந்த வியாபாரியிடம், ''ஐயா, வெளியூரிலிருந்து வந்திருக்கும் வளையல் வியாபாரி தாங்கள் தானே? உடைந்த வளையல்களுக்கு பதிலாக இந்த பொற்காசுகளை வைத்துக் கொள்ளுங்கள். சமயபுரத்தாள் இதை உங்களிடம் கொடுக்கச் சொன்னார்'' என்றார். மேலும், அம்மை நோய் தாக்கியவர்களுக்கு மாரியம்மனின் அருட்பிரசாதமான திருநீற்றை வழங்கினார். அவர்கள் அதை நெற்றி மற்றும் உடல் முழுவதும் பூசியவுடன் அம்மை நோய் குணமடைந்து எழுந்தார்கள்.
கனவில் வளையல் போட்டுக் கொள்ள வந்தவள் சமயபுரம் அன்னையே என்பதை உணர்ந்து கொண்ட அவர், சக வியாபாரிகளிடமும் கூறினார். இதனால் மகிழ்ச்சி அடைந்த வியாபாரிகள், தங்கள் அனைவருக்கும் அன்னை காட்சி தரவேண்டும் என்று வேண்டினார்கள். அதை ஏற்று அன்னை ஆகாயத்தில் அன்ன வாகனத்தில் காட்சி தந்து அருளாசி வழங்கினாள். அன்னையை தரிசித்த வியாபாரிகள், ''தாயே, ஆகாச மாரி.. ஆகாச மாரி..'' என போற்றி புகழ்ந்து வணங்கினர். பின்பு, ''எங்கள் ஊருக்கு வந்து அருள வேண்டும்'' என்று ஆகாச மாரியம்மனை மனமுருக வேண்டினார்கள்.
இதைக் கேட்ட சமயபுரம் மாரியம்மன் அவர்களிடம், ''உங்கள் ஊர் எது?'' என்று கேட்க, ''நளிர்வாய் முல்லை முறுவலிக்கும் திருநறையூர்'' என்றனர். அவர்களது பக்தியை மெச்சிய அன்னை, ''முல்லைக்கும், மல்லிக்கும், கை வளையல்களுக்கும் ஆண்டுதோறும் வைகாசி மாத அமாவாசைக்கு அடுத்த வெள்ளிக்கிழமை சமயபுரத்திலிருந்து ஆகாச மார்க்கமாக திருநறையூருக்கு வந்து, பத்து நாட்கள் தங்கிவிட்டு மீண்டும் சமயபுரம் திரும்பி விடுவேன்'' என்று அருளினாள். சமயபுரத்தாள் சொன்னதுபோல் ஒவ்வொரு வருடமும் திருநறையூர் தலம் வந்து தங்கி அலங்காரத்துடன் காட்சி தந்து அருள்புரிகிறாள் என்பது ஐதீகம்.

வெள்ளிக்குடத்துடன் ஆகாச மாரியம்மன்
வைகாசி திருவிழா
இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், வைகாசி மாதம் அமாவாசையை அடுத்த வெள்ளிக்கிழமை தொடங்கி, பதிமூன்று நாட்களுக்கு திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. அப்போது சமயபுரம் மாரியம்மன் ஆகாய மார்க்கமாக இங்கு வந்து, திருவிழாவுக்கு என்று செய்யப்படும் விக்ரகத்தில் சேர்ந்து தரிசனம் கொடுப்பதாக ஐதீகம். இந்த ஊர் மக்கள் அளிக்கும் கண்ணாடி வளையல்கள், மல்லிகை, முல்லை பூக்களை ஏற்றுக் கொள்வதற்காகவே சமயபுரத்தாள் ஆகாய மார்க்கமாக இந்த ஊருக்கு வந்து திருவிழாவில் கலந்து கொள்கின்றாள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
திருவிழா நடைபெறும் அனைத்து நாட்களும் செப்புக் குடத்தில் கலசம் வைக்கப்பட்டு விழா எடுக்கப்படுகின்றது. கலச நீரும், அம்மனுக்குச் சாத்தப்படும் எலுமிச்சை மாலையில் உள்ள எலுமிச்சம் பழமும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. திருவிழாவில் தர்ப்பை புல்லால் அம்மன் உருவாக்கப்படுகிறார். ஒவ்வொரு நாளும் லட்சுமி, சரஸ்வதி, மதனகோபாலன் போன்ற பல்வேறு வடிவங்களில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு காட்சி தருகிறாள். கடைசி நாளில் ராஜராஜேஸ்வரி வடிவத்தில் உச்சம் பெறுகிறாள்.
பதிமூன்றாம் நாள் அம்மன் நின்ற கோலத்தில் தேரில் சமயபுரத்திற்கு எழுந்தருள்வதுடன் விழா நிறைவு பெறுகிறது. அச்சமயம் அம்மன் கையில் வெள்ளிக்குடம் சுமந்தவாறு வீதியுலா நடைபெறும். இதன்மூலம், அம்மன் சமயபுரம் செல்கிறாள் என்பது நம்பிக்கை. இக்கோவிலில், வைகாசி மாதம் நடைபெறும் திருவிழாவை தவிர மற்ற நாட்களில் அம்மன் உருவமற்றவராக அதாவது சூட்சும ரூபத்தில் இருக்கிறார்.

கோவில் தோற்றம்
திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள அம்மனை வேண்டிக்கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், அம்மனுக்கு மல்லிகைப் பூ, வளையல்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். மேலும், காவடிகள், அங்கப்பிரதட்சணம், மாவிளக்கு ஏற்றுதல் போன்ற பல்வேறு நேர்த்திக்கடனை செலுத்தி வழிபடுகிறார்கள்.
அமைவிடம்
கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் நாச்சியார்கோவிலில் (திருநறையூர்) அமைந்துள்ளது, ஆகாச மாரியம்மன் கோவில்.
- மாரியம்மனின் திருவிழாக்காலங்களில் அக்னிசட்டி ஏந்தி வருவதும் ஒரு சடங்காகும்.
- பூவோடு எடுப்பதால் சத்ருக்கள் பயம் நீங்குகிறது.
மாரியம்மனுக்கு பக்தர்கள் செலுத்தும் ஒவ்வொரு நேர்த்திக்கடனிலும் கடவுளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் ஒரு உன்னதம் மறைந்துள்ளது. அதன்படி இன்று வரை பக்தர்களால் கடைபிடிக்கப்படும் நேர்த்திக்கடன்கள் வருமாறு:-

மாவிளக்கு போடுதல்
ரேணுகாதேவி நெருப்பில் வீழ்ந்து எழுந்தவுடன் அவள் பசியைத் தணிக்க அவ்வூர் மக்கள் அவளுக்குக் துளிமாவு என்கிற வெல்லம் நெய் கலந்த பச்சரிசி மாவைக் கொடுத்தனர். அதன் ஞாபகார்த்தமாக மாரியம்மன் திருக்கோயில்களில் மாவிளக்கு ஏற்றி வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர் பக்தர்கள்.
மாவிளக்கு செய்முறை:
பச்சரிசியை ஊறவைத்து அரைத்து அத்துடன் வெல்ல சர்க்கரை சேர்த்து பிசைந்து உருண்டையாக உருட்ட வேண்டும். பின்னர் அதன் மத்தியில் குழிவாக செய்து, அக்குழியில் நெய்விட்டு பஞ்ச திரியிட்டு அதன் நான்கு புறமும் சந்தனம் குங்குமமிட்டு, மலர் மாலை சூட்டி அலங்கரிப்பர்.
இந்த விளக்குகளை 2,4,6 என்றபடி தயார்செய்து அன்னையின் சந்நதியில் ஓரிடத்தை சுத்தம் செய்து, கோலமிட்டு, வாழையிலை போட்டு தேவியை மனதில் தியானித்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டி தீபவிளக்குளை ஏற்றுவர்.
பழம், தேங்காய், வெற்றிலை பாக்கு நிவேதனப் பொருட்களை வைத்து திருவிளக்குகளுக்கு நிவேதனம் செய்வர். தீபம் மலையேறும் வரை அன்னையின் சந்நதியில் அமர்ந்து பக்திப் பாடல்களைப் பாடுவர்.
பின்னர் அன்னைக்கு கற்பூர ஆரத்தி செய்து தங்கள் பிரார்த்தனையை நிறைவு செய்வர். உடல் குறை உள்ளவர்கள் தங்கள் நோய் நீங்க வேண்டி, அன்னையின் திருச்சந்நதியில் படுத்துக் கொண்டு தங்களின் வயிற்றுப் பகுதியிலோ அல்லது மார்புப் பகுதியிலோ மாவிளக்கை ஏற்றி வழிபாடு செய்வதுமுண்டு.
சிலர் மாவிளக்குகளை ஏற்றி அழகான தட்டுகளில் வைத்து அலங்கரித்து தங்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக எடுத்து வந்து அன்னையின் சந்நதியில் வைப்பர். சிலர் விளக்குகளை அழகாக அலங்கரித்த சப்பரங்களில் வைத்து மேளதாளம் முழங்க எடுத்து வருவர்.
தீபம் மலையேறியதும் மாவிளக்குகளை ஒன்றாகச்சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக செய்து அங்குள்ள பக்தர்களுக்கு வழங்குவர். அன்னைக்கு மாவிளக்கேற்றி வழிபட உங்கள் குறைகள் நீங்கி வளமோடு வாழ அன்னை அருள்புரிவாள்.

பொங்கலிடுதல்
பொங்கலிடுதலை சில ஊர்களில் ஒரு திருவிழாவாகவே கொண்டாடுவர். பெரும்பாலும் அன்னையின் கோயிலருகிலேயே பொங்கல் செய்வர். சில கோயில்களில் இதற்கென்றே பெரிய இடம் இருக்கும்.
திருக்கோயிலின் வீதி முழுவதும் அடைத்து பொங்கலிடுவதும் உண்டு. சில கோயில்களில் பொங்கல் வைக்கும் இடத்திற்கு 1 முதல் எண்கள் கொடுத்து பொங்கலிடுபவர்களின் பெயர்களை குலுக்கிப் போட்டு அவர்களை அந்த வரிசையில் பொங்கலிட அழைப்பர்.
பொங்கலிடும் போது பெரும்பாலும் புதிய மண் பானையை வாங்கி சுத்தப்படுத்தி, மஞ்சள் சந்தனம் குங்குமமிட்டு வேப்பிலை கட்டி அடுப்பிலேற்றி பின் பொங்கல் வைப்பர்.
பெரும்பாலும் சர்க்கரை பொங்கலே பிதானமாக செய்யப்பட்டாலும், வெண் பொங்கலும் செய்து படையலிடுவர். பொங்கல் தாயாரானதும் அதனைப்பெரிய வாழை இலையில் வைத்து அதனுடன் பலவகைப்பழங்கள், பாக்கு, வெற்றிலை, தேங்காய் எல்லாம் வைத்து அம்மனுக்குப் படைத்து பின் கற்பூரம் ஏற்றி காண்பித்து படையலை நிறைவு செய்வர். பின்னர் அதனை எல்லோருக்கும் விநியோகம் செய்வர்.

பால்குடம்
பால்குடம் எடுத்து வந்து அம்பாளுக்கு அபிஷேகம் செய்கிறோம். நம்முடைய சிரசில் பால் குடத்தை வைத்தவுடன் நம் எண்ணங்கள் நம் கபாலம் வழியாக பால் குடத்தின் உள்ளே செல்லும். பின் அந்த பாலை தெய்வத்திற்கு அபிஷேகம் செய்தால் நம் எண்ணங்கள், வேண்டுதல்கள் பால் மூலம் தெய்வத்தை சென்றடையும்.
இதன் மூலம் தெய்வம் நம் நியாயமான கோரிக்கைகளை ஏற்று அதை நிறைவேற்றுகிறது. பால் குடம் எடுத்து நம் பக்தியை வெளிப்படுத்துவது மிகச் சிறந்த வழிபாடாகும்.

அக்னி சட்டி / பூவோடு
மாரியம்மனின் திருவிழாக்காலங்களில் அக்னிசட்டி ஏந்தி வருவதும் ஒரு சடங்காகும். மாரியம்மன் கோயில் திருவிழாவின் ஒரு பகுதியாக தீச்சட்டி எடுத்தல் பரவலாக எல்லா கோயில்களிலும் நடைபெறுகிறது. இதனையே தீசட்டி எடுத்தல் பூவோடு எடுத்தல் என்றும் அழைப்பர்.
தீச்சட்டி எடுப்பவர் விரதமிருந்து அம்மன் கோயிலிலோ அல்லது அருகில் உள்ள நீர்நிலைகளிலோ ஸ்நானம் செய்து, மஞ்சளாடை உடுத்தி, வேப்பிலையை இடுப்பில் சொருகிக் கொண்டு அம்மன் கோயிலுக்கு வந்து அங்கு தயாராக வைத்திருக்கும், தீச்சட்டியை கையில் வேப்பிலையை வைத்துக் கொண்டு அதற்கு மேல் வைப்பர்.
தீச்சட்டியானது பக்கவாட்டில் மூன்று துளைகளுடன் இருக்கும் அதன் அடியில் மணல் நிரப்பி, அதில் காய்ந்த மரக்குச்சிகளை இட்டு நெய் ஊற்றி கற்பூரம் ஏற்றி தீயை உண்டாக்குவர். பின்னர் அதனை சுற்றி வறட்டியை அடுக்கி தீயை வளர்ப்பர்.
தீச்சட்டி எடுப்பவர் கையில் தீச்சட்டியுடன் கோயிலிலிருந்து புறப்பட்டு மேளதாளத்துடன் வீதிவழியாக எல்லோர் வீடுகளுக்கும் செல்வர். அவரை அம்மனாகக் கருதி அவரது பாதங்களைக் கழுவி மஞ்சள் குங்குமம் இட்டு கற்பூரம் காட்டி வழிபடுவர்.
இறுதியில் மீண்டும் கோயிலுக்கு வந்து அம்மன் முன் தீச்சட்டியை வைத்துவிட்டு அம்மனை கற்பூரம் ஏற்றி வழிபட்டு வீடு திரும்புவர்.
இவ்வாறு தீச்சட்டி எடுப்பது விழா காலங்களில் மட்டுமல்லாமல் மற்ற நாட்களிலும் அம்மனுக்கு நேர்ந்துகொண்டு செய்வதுண்டு. பக்தனுக்கு நெருப்பு, அனலாகத் தெரிவதில்லை. பூவாக குளிர்கிறது. அதனாலேயே இதனை பூவோடு எடுத்தல் என்று கூறுகிறார்கள்.
இப்படி பூவோடு எடுப்பதால் சத்ருக்கள் பயம் நீங்குகிறது. விஷ ஜந்துக்களால் ஏற்படும் பயம், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் உபத்திரவங்கள் நீங்குகின்றன.
- மூன்று கோவில்களையும் ஒரே இடத்தில் ராஜகோபுரம் கட்டுவதற்கு கோவில் திருப்பணி குழுவினர் முடிவு செய்தனர்.
- திருப்பூர் மேயர் தினேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருப்பணிகளை தொடங்கி வைத்தார்.
திருப்பூர் :
திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் செல்வ விநாயகர், மாரியம்மன் மற்றும் மாகாளியம்மன் கோவில்கள் உள்ளன. ஒரே வளாகத்தில் அமைந்துள்ள இந்த மூன்று கோவில்களும் இந்த பகுதி முழுக்க பிரசித்தி பெற்ற கோவில்கள் ஆகும்.
இந்த நிலையில் இந்த மூன்று கோவில்களையும் ஒரே இடத்தில் ராஜகோபுரம் மற்றும் மூலவர் கோபுரங்களுடன் கற்கோவில்களாக கட்டுவதற்கு செல்வவினாயகர், மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் திருப்பணி குழுவினர் முடிவு செய்தனர்.
அதன் அடிப்படையில் செல்வ விநாயகர், மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் கட்டுவதற்கான திருப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் திருப்பூர் மேயர் தினேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருப்பணிகளை தொடங்கி வைத்தார். திருப்பணிக்காக பாலைக்கால் போடப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு திருப்பணிக்குழு தலைவர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். திருப்பணி குழுவினர் உட்பட ஊர் பொதுமக்கள் திரளாக பங்கேற்றார்கள்.
- அனைத்து வசதிகளும் கூடிய கோவிலாக இருக்கன்குடி மாரியம்மன் கோவில் திகழும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
- ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட உள்ள பணிகளை சுற்றுலா, முதன்மைச் செயலர் சந்தரமோகன், கலெக்டர் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் பார்வையிட்டார்.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட உள்ள பணிகளை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை முதன்மைச் செயலர் சந்தரமோகன், கலெக்டர் மேகநாதரெட்டி ஆகியோர்முன்னிலையில், அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த பெருந்திட்ட வரைவில் சேர்க்கப்பட வேண்டிய பொருட்களாக 3 இடங்களில் நுழை வாயில்களை ஏற்படுத்த இருக்கிறோம். முக்கிய பாதையில் இருந்து கோவிலுக்கு வருகின்ற பாதை 600 மீட்டர் அளவிற்கு புதிய பாதையை அமைக்க இருக்கின்றோம்.
வரும் வழியில் இருக்கின்ற தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்கப்பட உள்ளது. இங்கு 98 விருந்து மண்டபங்கள், ஆடுகள் மற்றும் கோழிகளை நேர்த்திக்கடன் செலுத்த வருகிறவர்களுக்கு சுகா தாரமான முறையில் 2 ஸ்லேட்டர்கள் அமைக்க ப்பட்டிருக்கின்றது.
ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் பொங்கலிடும் வகையில் பொங்கல் மண்டபமும், பக்தர்கள் தங்குவதற்கு 40 குளிர்சாதன அறைகளும், 40 குளிர்சாதனமற்ற அறைகளும் அமைக்கப்படுகிறது.
இந்த கோவிலில் இருக்கின்ற கடைகளை ஒரு பகுதியாக அமைத்து தந்து, வியாபாரிகளுக்கு பாதிப்பு இல்லாத அளவில் குறைந்த வாடகையில், அதே நேரத்தில் பக்தர்களுக்கு அதிக விலையில் பொரு ட்களை விற்கின்றார் என்ற நிலை இல்லாமல் வியாபாரிகளுக்கும் பாதுகாப்பான சூழ்நிலை உருவாக்க திட்டமிட்டு இருக்கிேறாம்.
ஏற்கனவே பெருந்திட்ட வரைவு திட்டத்தில் எடுத்து க்கொண்ட பணிகளில் இப்போது கோவில் உள்ளே இருக்கிற உற்சவர் மண்டபம் ரூ.40 லட்சத்திலும், முடிகாணிக்கை மண்டபம் ரூ.2.25 கோடியிலும், மற்றொரு மண்டபம் ரூ.3 கோடியிலும் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். பிரசித்தி பெற்ற நிலையில் உள்ள கோவில்களில் உள்ள அனைத்து வசதிகளும் கூடிய ஒரு கோவிலாக இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவிலை நிச்சயம் மாற்றிக் காட்டுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், மதுரை மண்டல இணை ஆணையர் செல்லதுரை, சாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் நிர்மலா கடற்கரை ராஜ், கோவில் பரம்பரை அறகாவலர் ராமமூர்த்தி, செயல் அலுவலர் கருணாகரன் மற்றும் பலர் இருந்தனர்.
- மர்ம நபர்கள் உள்ளே புகுந்து உண்டியலில் வைத்திருந்த ரூ.3500 யை திருடி சென்றனர்.
- பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பல்லடம்:
பல்லடம் அருகேயுள்ள செம்மிபாளையம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் கதவின் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க தாலியை மர்மநபர்கள் திருடி சென்றனர். அதே பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் மேற்கூரையை பிரித்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து உண்டியலில் வைத்திருந்த ரூ.3500 யை திருடி சென்றனர். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- எக்கட்டாம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 23-ந் தேதி பூச்சாட்டுகளுடன் பொங்கல் விழா தொடங்கியது
- திரளான பக்தர்கள் ஆடு, கோழிகள் பலியிட்டனர். பின்னர் இரவு கம்பம் பிடுங்கி நொய்யல் ஆற்றில் விடப்பட்டது
சென்னிமலை,
சென்னிமலை அருகே எக்கட்டாம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 23-ந் தேதி பூச்சாட்டுகளுடன் பொங்கல் விழா தொடங்கியது.
பின்னர் 30-ந் தேதி இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நடைபெற்றது.
இந்த பொங்கல் விழாவில் நொய்யல், அண்ணாமலைபாளையம், புதுவலசு, சாணார் பாளையம், தாமரைக்காட்டுவலசு மற்றும் கோவிலை சேர்ந்த ஏழு கிராமத்து பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
திரளான பக்தர்கள் ஆடு, கோழிகள் பலியிட்டனர். பின்னர் இரவு கம்பம் பிடுங்கி நொய்யல் ஆற்றில் விடப்பட்டது.
இதேபோல் சென்னிமலை அருகே கே.ஜிவலசு அடுத்துள்ள புதுவலசு மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து மாரியம்மனை வழிபட்டனர்.
- பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டு சென்றனர்.
- இதையடுத்து தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரசித்தி பெற்ற பெரிய, சின்ன மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டா–டப்படும்.
அதன்படி நடப்பாண்டுக்கான விழா கடந்த மாதம் 29-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 26-ந் தேதி கோவில்களின் முன் கம்பம் நடப்பட்டு பூவோடு நிகழ்ச்சி நடந்தது.
அதனைத் தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து கம்பங்களுக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.
மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. குண்டம் விழாவுக்காக நேற்று இரவு குண்டம் பற்ற வைக்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் விழா இன்று காலை நடந்தது.
கோவிலின் தலைமை பூசாரி குண்டம் இறங்கினார். அதைத்தொடர்ந்து காப்பு கட்டி விரதம் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டு சென்றனர்.
விழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் அம்மனை வழிபட்டு சென்றனர். விழாவை–யொட்டி கருங்கல்பாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. நாளை கோவில் கரகம் எடுத்தலும், 13-ந் தேதி கோவில் முன் பொங்கல் வைத்தலும், மாவிளக்கு மாற்றுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
பின்னர் 14-ந் தேதி கம்பம் பிடுங்கும் விழாவும், 15-ந் தேதி மஞ்சள் நீராட்டு, அம்மன் வீதி உலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.
- சென்னிமலை அருகே பசுவபட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா தொடங்கியது.
- பெண்கள் கலந்து கொண்ட சென்னி ஆண்டவர் குழுவினரின் கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னிமலை:
சென்னிமலை அருகே பசுவபட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 30-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா தொடங்கியது.
பின்னர் 7-ந் தேதி இரவு கோவிலில் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று முதல் தினமும் காலையில் பெண்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வந்தனர்.
13-ந் தேதி இரவு பெண்கள் கலந்து கொண்ட சென்னி ஆண்டவர் குழுவினரின் கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கோவிலுக்கு உட்பட்ட திரளான பக்தர்கள் ஆடு, கோழிகள் பலியிட்டு பொங்கல் வைத்து மாரியம்மனை வழிபட்டனர்.
இரவு கம்பம் பிடுங்கி கிணற்றில் விடப்பட்டது.
- பொங்கல் திருவிழா கடந்த மாதம் பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வந்தது.
- சன்னதி முன் கம்பம் நடப்பட்டு பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டனர்.
பவானி:
பவானி அருகில் உள்ள காளிங்கராயன் பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவில் பொங்கல் திருவிழா கடந்த மாதம் பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வந்தது. பின்னர் அம்மன் சன்னதி முன் கம்பம் நடப்பட்டு பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அக்னி சட்டி எடுத்தல், உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நேற்று பவானி கூடுதுறையில் இருந்து தீர்த்த குட ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டு அம்மனுக்கு புனித நீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.
முக்கிய நிகழ்வான பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை முதல் பவானி, லட்சுமி நகர், காளிங்கராயன்பாளையம், மேட்டுநாசுவம்பாளையம், எலவமலை உட்பட சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனை வழிபாடு செய்தனர்.
- பொள்ளாச்சி நகரின் மத்தியில் கோவில் உள்ளது.
- அன்னதானம் நடைபெறுகிறது.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி நகரின் மத்தியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 3 நாட்கள் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 17 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப் பட்டது. இதையடுத்து விமான பாலாலயம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. மேலும் திருப்பணிகள் தொடங்கி நடந்தது. பழமை வாய்ந்த விமான கோபுரத்துக்கும், சிற்பங்களுக்கும் வர்ணம் பூசி புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.
இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 12-ந்தேதி யாக சாலை அமைக்கும் பணிக்கு கால்கோள் போடப்பட்டது. நேற்று கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதையொட்டி விநாயகர் வழிபாடு, புண்யாகம், அனுக்ஞை, தன பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.
இன்று காலை 8.45 மணிக்கு விநாயகர் பூஜை, 10.30 மணிக்கு திரவியாகுதி, 11 மணிக்கு மூலவருக்கு பிரசன்னாபிஷேகம், நாளை (புதன்கிழமை) 9.30 மணிக்கு விநாயகர் வழிபாடு, இரவு 7 மணிக்கு யாக 5 சாலை பிரவேசம், முதற்கால 5 யாக பூஜை நடக்கிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 8.30 மணிக்கு 2-ம் கால யாக பூஜை, மாலை 5.30 மணிக்கு 3-ம் கால யாகபூஜை நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சியான கும் பாபிஷேகம் வருகிற 27-ந்தேதி காலை 9.45 மணிக்கு ராஜகோபுரம், மாரியம்மன் விமான கோபுர மகா கும்பாபிஷேகமும், காலை 9.55 மணிக்கு விநாயகர், முருகன், அங்காளம்மன் மற்றும் அன்னை மாரியம்மன் மூலாலய மகா கும்பாபிஷேகமும் நடைபெ றுகிறது.
இதைத்தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்கார வழிபாடு, அன்னதானம் நடைபெறுகிறது. மாலையில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடக்கிறது.
- செங்கோட்டை வினாயகர் தீப்பாச்சி மாரியம்மன் கோவில் கொடை விழா 8-ம் நாள் சிறப்பு வழிபாடு நடந்தது.
- நறுமண பொருட்களால் அம்பாளுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
செங்கோட்டை:
செங்கோட்டை வினாயகர் தீப்பாச்சி மாரியம்மன் கோவில் கொடை விழா தை மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை முடிவடைந்த நிலையில் 8-ம் நாள் சிறப்பு வழிபாடு நடந்தது. காலையில் ஹோமங்கள், நண்பகல் நேரத்தில் நறுமண பொருட்களால் அம்பாளுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு அம்பாளுக்கு பல்வேறு நறுமண பூக்களால் சிறப்பு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதில் செங்கோட்டை சுற்று வட்டார பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தில்லைதெரு ெபாடிக்கார வெள்ளாளர் மண்டகப்படி இன்று நடைபெற்றது.
- திருவிழாவை காண ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் நகரில் கேட்டவருக்கு கேட்ட வரம் தரும் சக்தியாக விளங்கும் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கடந்த மாதம் 3-ந்தேதி முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனைதொடர்ந்து கடந்த மாதம் 16-ந்தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் திருவிழா நடைபெற்றது. 17-ந்தேதிபூச்சொரிதல் எனப்படும் பூத்தேர் ஊர்வலமும், 21-ந்தேதி கொடியேற்றமும் நடைபெற்றது.
அதனைதொடர்ந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் எடுத்து வந்தும், தீச்சட்டி எடுத்து வந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தில்லைதெரு ெபாடிக்கார வெள்ளாளர் மண்டகப்படி இன்று நடைபெற்றது.
இதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து மெயின்ரோடு, கிழக்குரதவீதி வழியாக கோட்டைமாரியம்மன் கோவிலுக்கு வந்து பாலாபிேஷகம் செய்து வழிபட்டனர். இன்று இரவு அலங்கார மின்னொளி ரதத்தில் கோட்டை மாரியம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை காலை 6 மணிக்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதற்காக கோவில் முன்பு அமைக்கப்படும் பூக்குழியில் பக்தர்கள் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்த உள்ளனர். மேலும் நாளை இரவு 8 மணிக்கு திருத்தேர் உலா நடைபெறுகிறது. 4-ந்தேதி தசாவதாரம், 5-ந்தேதி மஞ்சள்நீராட்டுதல் நடைபெற்று கொடியிறக்கம் நடைபெறும். 6-ந்தேதி ஊஞ்சல் உற்சவமும், 7-ந்தேதி தெப்பஉற்சவமும் நடைபெறுகிறது. திருவிழாவை காண ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.






