என் மலர்
வழிபாடு

மாரியம்மனுக்கு பக்தர்கள் செலுத்தும் மெய்சிலிர்க்கும் நேர்த்திக்கடன்கள்
- மாரியம்மனின் திருவிழாக்காலங்களில் அக்னிசட்டி ஏந்தி வருவதும் ஒரு சடங்காகும்.
- பூவோடு எடுப்பதால் சத்ருக்கள் பயம் நீங்குகிறது.
மாரியம்மனுக்கு பக்தர்கள் செலுத்தும் ஒவ்வொரு நேர்த்திக்கடனிலும் கடவுளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் ஒரு உன்னதம் மறைந்துள்ளது. அதன்படி இன்று வரை பக்தர்களால் கடைபிடிக்கப்படும் நேர்த்திக்கடன்கள் வருமாறு:-
மாவிளக்கு போடுதல்
ரேணுகாதேவி நெருப்பில் வீழ்ந்து எழுந்தவுடன் அவள் பசியைத் தணிக்க அவ்வூர் மக்கள் அவளுக்குக் துளிமாவு என்கிற வெல்லம் நெய் கலந்த பச்சரிசி மாவைக் கொடுத்தனர். அதன் ஞாபகார்த்தமாக மாரியம்மன் திருக்கோயில்களில் மாவிளக்கு ஏற்றி வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர் பக்தர்கள்.
மாவிளக்கு செய்முறை:
பச்சரிசியை ஊறவைத்து அரைத்து அத்துடன் வெல்ல சர்க்கரை சேர்த்து பிசைந்து உருண்டையாக உருட்ட வேண்டும். பின்னர் அதன் மத்தியில் குழிவாக செய்து, அக்குழியில் நெய்விட்டு பஞ்ச திரியிட்டு அதன் நான்கு புறமும் சந்தனம் குங்குமமிட்டு, மலர் மாலை சூட்டி அலங்கரிப்பர்.
இந்த விளக்குகளை 2,4,6 என்றபடி தயார்செய்து அன்னையின் சந்நதியில் ஓரிடத்தை சுத்தம் செய்து, கோலமிட்டு, வாழையிலை போட்டு தேவியை மனதில் தியானித்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டி தீபவிளக்குளை ஏற்றுவர்.
பழம், தேங்காய், வெற்றிலை பாக்கு நிவேதனப் பொருட்களை வைத்து திருவிளக்குகளுக்கு நிவேதனம் செய்வர். தீபம் மலையேறும் வரை அன்னையின் சந்நதியில் அமர்ந்து பக்திப் பாடல்களைப் பாடுவர்.
பின்னர் அன்னைக்கு கற்பூர ஆரத்தி செய்து தங்கள் பிரார்த்தனையை நிறைவு செய்வர். உடல் குறை உள்ளவர்கள் தங்கள் நோய் நீங்க வேண்டி, அன்னையின் திருச்சந்நதியில் படுத்துக் கொண்டு தங்களின் வயிற்றுப் பகுதியிலோ அல்லது மார்புப் பகுதியிலோ மாவிளக்கை ஏற்றி வழிபாடு செய்வதுமுண்டு.
சிலர் மாவிளக்குகளை ஏற்றி அழகான தட்டுகளில் வைத்து அலங்கரித்து தங்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக எடுத்து வந்து அன்னையின் சந்நதியில் வைப்பர். சிலர் விளக்குகளை அழகாக அலங்கரித்த சப்பரங்களில் வைத்து மேளதாளம் முழங்க எடுத்து வருவர்.
தீபம் மலையேறியதும் மாவிளக்குகளை ஒன்றாகச்சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக செய்து அங்குள்ள பக்தர்களுக்கு வழங்குவர். அன்னைக்கு மாவிளக்கேற்றி வழிபட உங்கள் குறைகள் நீங்கி வளமோடு வாழ அன்னை அருள்புரிவாள்.
பொங்கலிடுதல்
பொங்கலிடுதலை சில ஊர்களில் ஒரு திருவிழாவாகவே கொண்டாடுவர். பெரும்பாலும் அன்னையின் கோயிலருகிலேயே பொங்கல் செய்வர். சில கோயில்களில் இதற்கென்றே பெரிய இடம் இருக்கும்.
திருக்கோயிலின் வீதி முழுவதும் அடைத்து பொங்கலிடுவதும் உண்டு. சில கோயில்களில் பொங்கல் வைக்கும் இடத்திற்கு 1 முதல் எண்கள் கொடுத்து பொங்கலிடுபவர்களின் பெயர்களை குலுக்கிப் போட்டு அவர்களை அந்த வரிசையில் பொங்கலிட அழைப்பர்.
பொங்கலிடும் போது பெரும்பாலும் புதிய மண் பானையை வாங்கி சுத்தப்படுத்தி, மஞ்சள் சந்தனம் குங்குமமிட்டு வேப்பிலை கட்டி அடுப்பிலேற்றி பின் பொங்கல் வைப்பர்.
பெரும்பாலும் சர்க்கரை பொங்கலே பிதானமாக செய்யப்பட்டாலும், வெண் பொங்கலும் செய்து படையலிடுவர். பொங்கல் தாயாரானதும் அதனைப்பெரிய வாழை இலையில் வைத்து அதனுடன் பலவகைப்பழங்கள், பாக்கு, வெற்றிலை, தேங்காய் எல்லாம் வைத்து அம்மனுக்குப் படைத்து பின் கற்பூரம் ஏற்றி காண்பித்து படையலை நிறைவு செய்வர். பின்னர் அதனை எல்லோருக்கும் விநியோகம் செய்வர்.
பால்குடம்
பால்குடம் எடுத்து வந்து அம்பாளுக்கு அபிஷேகம் செய்கிறோம். நம்முடைய சிரசில் பால் குடத்தை வைத்தவுடன் நம் எண்ணங்கள் நம் கபாலம் வழியாக பால் குடத்தின் உள்ளே செல்லும். பின் அந்த பாலை தெய்வத்திற்கு அபிஷேகம் செய்தால் நம் எண்ணங்கள், வேண்டுதல்கள் பால் மூலம் தெய்வத்தை சென்றடையும்.
இதன் மூலம் தெய்வம் நம் நியாயமான கோரிக்கைகளை ஏற்று அதை நிறைவேற்றுகிறது. பால் குடம் எடுத்து நம் பக்தியை வெளிப்படுத்துவது மிகச் சிறந்த வழிபாடாகும்.
அக்னி சட்டி / பூவோடு
மாரியம்மனின் திருவிழாக்காலங்களில் அக்னிசட்டி ஏந்தி வருவதும் ஒரு சடங்காகும். மாரியம்மன் கோயில் திருவிழாவின் ஒரு பகுதியாக தீச்சட்டி எடுத்தல் பரவலாக எல்லா கோயில்களிலும் நடைபெறுகிறது. இதனையே தீசட்டி எடுத்தல் பூவோடு எடுத்தல் என்றும் அழைப்பர்.
தீச்சட்டி எடுப்பவர் விரதமிருந்து அம்மன் கோயிலிலோ அல்லது அருகில் உள்ள நீர்நிலைகளிலோ ஸ்நானம் செய்து, மஞ்சளாடை உடுத்தி, வேப்பிலையை இடுப்பில் சொருகிக் கொண்டு அம்மன் கோயிலுக்கு வந்து அங்கு தயாராக வைத்திருக்கும், தீச்சட்டியை கையில் வேப்பிலையை வைத்துக் கொண்டு அதற்கு மேல் வைப்பர்.
தீச்சட்டியானது பக்கவாட்டில் மூன்று துளைகளுடன் இருக்கும் அதன் அடியில் மணல் நிரப்பி, அதில் காய்ந்த மரக்குச்சிகளை இட்டு நெய் ஊற்றி கற்பூரம் ஏற்றி தீயை உண்டாக்குவர். பின்னர் அதனை சுற்றி வறட்டியை அடுக்கி தீயை வளர்ப்பர்.
தீச்சட்டி எடுப்பவர் கையில் தீச்சட்டியுடன் கோயிலிலிருந்து புறப்பட்டு மேளதாளத்துடன் வீதிவழியாக எல்லோர் வீடுகளுக்கும் செல்வர். அவரை அம்மனாகக் கருதி அவரது பாதங்களைக் கழுவி மஞ்சள் குங்குமம் இட்டு கற்பூரம் காட்டி வழிபடுவர்.
இறுதியில் மீண்டும் கோயிலுக்கு வந்து அம்மன் முன் தீச்சட்டியை வைத்துவிட்டு அம்மனை கற்பூரம் ஏற்றி வழிபட்டு வீடு திரும்புவர்.
இவ்வாறு தீச்சட்டி எடுப்பது விழா காலங்களில் மட்டுமல்லாமல் மற்ற நாட்களிலும் அம்மனுக்கு நேர்ந்துகொண்டு செய்வதுண்டு. பக்தனுக்கு நெருப்பு, அனலாகத் தெரிவதில்லை. பூவாக குளிர்கிறது. அதனாலேயே இதனை பூவோடு எடுத்தல் என்று கூறுகிறார்கள்.
இப்படி பூவோடு எடுப்பதால் சத்ருக்கள் பயம் நீங்குகிறது. விஷ ஜந்துக்களால் ஏற்படும் பயம், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் உபத்திரவங்கள் நீங்குகின்றன.






