என் மலர்
நீங்கள் தேடியது "Mariamman Kovil"
- ஜமத்கனி எனும் முனிவரின் மனைவியாக திகழ்ந்தவள் ரேணுகா.
- மாரியம்மன் எனும் பெயரில் ரேணுகை அருள்பாலித்து வருகின்றாள்
ஜமத்கனி எனும் முனிவரின் மனைவியாக திகழ்ந்தவள் ரேணுகா. அவள் கற்பில் சிறந்த காரிகை. ஒருநாள் ரேணுகை அவ்வாறு நீரெடுக்கும்போது வான்வழிச் சென்ற கந்தவர் ஒருவரின் நிழல் நீரில் விழக்கண்டதனால் ஒரு நொடிப் பொழுது பிற ஆடவரின் நிழலைக் கண்டதால் கற்புநிலை தடுமாறிப் பசுமட்குடம் நீரில் கரைந்தது. பதறிய ரேணுகை உடனே தம் மனத்தை திண்மை செய்து மீண்டும் மட்குடம் வனைந்து நீர் எடுத்து வந்தாள்.

ரேணுகை சற்று காலந்தாழ்த்தி வந்தமைக்கான காரணத்தை தம் அகக்கண்ணால் உணர்ந்த ஜமதக்னி முனிவர் வெகுண்டார். தன் மகன் பரசுராமனை அழைத்து "கற்பு நிலை வழுவிய நின் தாயை கொன்று விடு என்று கட்டளையிட்டார்.
பரசுராமன் இருதலைக்கொள்ளி எறும்பானான். தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை என்பர். அத்தாயைக் கொல்வதா? தந்தை சொல்மிக்க மந்திரமுமில்லை என்பரே! அத்தந்தை சொல்லை மீறுவதா? என்ன செய்வது! என்று சற்றுத் திணறிய மைந்தன், இறுதியில் தந்தை சொல்லை முதலில் நிறைவேற்ற முடிவு செய்தான். பரசினை எடுத்துக் கொண்டு தாயை நோக்கி ஓடினான்.

மகனிடமிருந்து தப்பிக்கத் தாயும் ஓடினாள். தமையன்மார் தடுத்தனர். தடுத்தவர் அனைவரையும் வெட்டி வீழ்த்தினான் பரசுராமன். இறுதியில் ரேணுகை ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணின் குடிசைக்குள் ஓடி ஒளிந்தாள்.
இரக்கம் உடைய அந்த ஏழைப்பெண் அடைக்கலமாக வந்த அன்னையைக் காக்க எவ்வளவோ முயன்றாள். அவளையும் பரசுராமன் வெட்டி வீழ்த்துகிறான். கடைசியில் தன் அன்னையையும் வெட்டி முடித்து விடுகிறான்.

கட்டளையை நிறைவேற்றிய பரசுராமன், தந்தையிடம் சென்று பணிகிறான். மகனின் கடமை உணர்வைப் பாராட்டிய தந்தை, மகனைப் பார்த்து "நீ வேண்டும் வரங்களைக் கேள்" என்கிறார்.
புத்திசாலியான பரசுராமன், "தந்தையே என்னால் கொல்லப்பட்ட அனைவரும் பிழைத்தெழ வேண்டும்" என்று கேட்டுக்கொள்கிறான். மகனின் சாமர்த்தியத்தையும் நல்ல உள்ளத்தையும் பாராட்டிய தந்தை "அப்படியே ஆகட்டும்" என்றார்.
பரசுராமன் தந்தையின் கட்டளைக்கு இணங்காமல் இருந்திருந்தால் அவனையும் முனிவர் சபித்திருப்பார். இதனை உணர்ந்தே பரசுராமன் தந்தையின் ஆசியையும் பெற்று, இறந்தவர்களையும் பிழைத்தெழுமாறு அனுமதியையும் பெற்றுவிடுகிறான்.
வெட்டுண்ட உடல்களின் மீது நீரைத் தெளித்து இறந்தவர்களைப் பிழைக்கச் செய்கிறான். அப்போது ஒரு விபரீதம் நிகழ்ந்து விடுகின்றது. வெட்டுண்ட தன் தாயின் தலையையும் அவளைக் காப்பாற்ற முயன்று வெட்டுண்ட பெண்ணின் உடலையும் ஒன்று சேர்த்து விடுகிறான்.
அதேபோல் அப்பெண்ணின் தலையையும் தாயின் உடலையும் ஒன்று சேர்த்து விடுகின்றான். இருவரும் உயிர் பெற்று எழுகின்றனர். ஆனால் தலைகள் மாறி உள்ளன. இவ்வாறு தலைகள் மாறியதால் ரேணுகையின் தலை பொருந்தியவளை "மாறி அம்மன்" என்று அழைக்கலாயினர் என்று அப்புராணம் கூறுகிறது.
தலைகள் மாறியதால் ஏற்பட்ட பெயர் என்றால் "மாறி அம்மன்" என்று வல்லின "றி" அல்லவாபோட்டு எழுத வேண்டும். ஆனால் இடையின "ரி" போட்டு "மாரி அம்மன்" என்றுதானே எழுதுகிறோம்.
ஆதலின் மேற்படி புராணக் கதை ரேணுகாதேவிக்கே உரியது. அதைத் தமிழ்நாட்டில் தொன்று தொட்டு மழைக்காக வழிபட்டு வரும் மாரி அம்மனுக்கு இடைக்காலத்தில் சிலர் இணைத்து விட்டுள்ளனர். எனவே ரேணுகை வேறு; மழை தரும் மாரிஅம்மன் வேறு.

ரேணுகையின் வரலாறு இன்னொரு விதமாகவும் கூறப்படுகிறது. ஜமத்கனி முனிவரின் காமதேனுவைக் கவர முயன்ற கார்த்த வீரியார்ஜீனனின் பிள்ளைகள் ஜமத்கனி முனிவரைக் கொன்றனர். இக்காட்சியைக் கண்ட ரேணுகை, கணவனை இழந்த பின் உயிர் வாழ விரும்பாமல், தீ மூட்டி அதில் குதித்துவிட்டாள்.
இந்திரன் வருணனை ஏவி, மழை பெய்வித்து ரேணுகையை எரியாமல் காத்தான். தீக்குண்டத்தில் இருந்து எழுந்த ரேணுகை, தன் உடம்பில் இருந்த ஆடை எரிந்து போய்விட்டதால், வேப்பிலையை ஒடித்து ஆடையாக அணிந்து கொண்டாள்.
ஊர் மக்கள் அவள் பசியைத் தீர்க்கப் பச்சரிசி மாவு, வெல்லம், இளநீர், பானகம் ஆகியவற்றைத் தந்தனர். பின்னர் ரேணுகை தன் கணவன் உடலைக் கண்டு அழுது புலம்பினாள்.

அப்போது சிவபெருமானும், வானோரும் அவளுக்குக் காட்சி தந்தனர். "ரேணுகையே! நீ பராசக்தியின் கலாம்சங்களில் ஓர் அம்சம். இதனை உலகோர் அறிவதற்காகவே இத்திருவிளையாடல். இனி நீ பூவுலகில் மாரியம்மன் எனும் பெயரில் மக்களின் துயர் தீர்த்து வருவாய்!
உன் உடம்பிலுள்ள தீக்கொப்புளங்களே மக்களுக்கு அம்மைக்கொப்புளங்களாக உண்டாகும். அவற்றை நீ அணிந்திருக்கும் ஆடைகளாகிய வேப்பிலைகளால் தீர்த்து வைப்பாய் என்று சிவபெருமான் வரம் அருளினார். அதுமுதல் மாரியம்மன் எனும் பெயரில் ரேணுகை அருள்பாலித்து வருகின்றாள் என்றும் ஒரு வரலாறு வழங்கி வருகின்றது.
பைதுரூபம், பிதுரூபம், மிருதி, மாரணம், முரசனி, நுகம், நமலி, கொடி எனும் எட்டு காரணப் பெயர்களால் ஜோதிட சாஸ்திரத்தில் புகழ்ந்து கொண்டாடப்படும் மகம் நட்சத்திரம் "மகா சக்தி மாரியம்மனின்" திருநட்சத்திரமாகும்.
மாரியம்மனுக்காக ஆற்றும் விசேஷ நிகழ்வுகள், உற்சவங்கள், கால்கோள் விழாக்கள், பாலாலயம், கும்பாபிஷேகம் யாவும் மகம் நட்சத்திரத்திற்கே பொருத்தங்களும், தாராபலனும் பார்த்து நிர்ணயிக்கப்படுகிறது.
- தமிழகத்தின் மிகப்பெரிய தெப்பங்களில் இதுவும் ஒன்று.
- மதுரையின் எல்லைக்காவல் தெய்வமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.
மாரியம்மன் வெவ்வேறு பெயர்களில் தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் அருளாசி செய்து வருகிறார். பெயர் வெவ்வேறாக இருந்தாலும், அம்மா என்று அம்மனை வேண்டி அழைத்தால் தன்னுடைய குழந்தைக்கு தேவையான சேவையை செய்வதற்கு ஓடோடி வருபவராக விளங்குகிறார்.
அது போலத்தான் மதுரை வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள தெப்பக்குளத்தின் கரையில் குடிகொண்டு, மக்களின் காவல் தெய்வமாக சங்கடங்களைத் தீர்த்து அருள்பாலித்து வருகிறாள் மாரியம்மன்.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட் டில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் நிர்வாகத்துக்குட்பட்டது வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோயில்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மதுரை மாநகரை கூன்பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி புரிந்தார். அப்போது, மதுரையின் கிழக்கே தற்போது கோவில் அமைந்துள்ள பகுதி மகிழம் மரங்கள் நிறைந்த காடாக இருந்தது.
அதனை திருத்தி, அருகே வைகை ஆற்றில் கிடைத்த அம்மனை தெற்கு கரையில், தற்போது கோயில் அமைந்துள்ள பகுதியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக அறியப்படுகிறது.
மாரியம்மன், துர்கையும் என வெவ்வேறு வடிவமாக இருந்தபோதும், இருவரும் அம்பிகையின் அம்சமாகவே திகழ்கின்றனர். இதனை உணர்த்தும் வகையில், மாரியம்மன் கைகளில் பாசம், அங்குசம் ஏந்தி, இடது காலை தொங்கவிட்டு வலது காலை மடக்கி வைத்திருக்கிறார். துர்கை அம்மனின் இடது காலுக்கு கீழே எருமைத்தலை உள்ளது.
மதுரையை ஆட்சி செய்த மன்னர்கள் போருக்கு செல்லும் முன் வீர தீரத்துடன் செயல்படவும், போரில் வெற்றி பெறவும், அம்மனை வணங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
பிற்காலங்களில் இந்த அம்மனே மதுரையின் எல்லைக்காவல் தெய்வமாகவும், தெப்பக்குளம் மாரியம்மன் ஆகவும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.
மதுரை மன்னராக திருமலை நாயக்கர் இருந்த போது, தற்போது திருமலை நாயக்கர் மகால் என அழைக்கப்படும் அரண்மனையை கட்டுவதற்கான மணல் இங்கிருந்து தோண்டப்பட்டது. அப்படி மணலை தோண்டியதால் ஏற்பட்ட பள்ளத்தை, சதுர வடிவ தெப்பக்குளமாக மாற்றினார்.
தமிழகத்தின் மிகப்பெரிய தெப்பங்களில் இதுவும் ஒன்று. இதன் நடுவிலுள்ள நீராழி மண்டபத்தில் மரங்களுடன் கூடிய விநாயகர் கோயில் ஒன்றும் உள்ளது.

தெப்பக்குளத்துக்கு வைகை ஆற்றிலிருந்து தண்ணீர் வருவதற்கு சுரங்கக் குழாய்கள் மூலம் வழிகள் ஏற்படுத்தப்பட்டன.
இந்த தெப்பம் தோண்டும்போது கிடைத்த விநாயகர் சிலையே மீனாட்சி அம்மன் கோயிலில் முக்குறுணி விநாயகராக பிரதிஷ்டை செய்யப்பட்டது.

தைப்பூசத் தன்று மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேசுவரருக்கும் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. இத்தெப்பத் திருவிழாவைக் காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டு மதுரைக்கு வருவார்கள்.
இங்கு அம்மனே பிரதானம் என்பதால், வேறு பரிவாரத் தெய்வங்கள் இல்லை. அரசமரத்தின் அடியில் விநாயகர் மற்றும் பேச்சியம்மன் உள்ளனர்.
அம்மைநோய், தோல் நோய்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள், தீராத நாள்பட்ட நோய்கள், குடும்ப பிரச்சினைகள், தொழில் பிரச்சினைகள் தீர பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.
திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் வேண்டுதல் செய்து நேர்த்தி செய்கின்றனர். வேண்டிய காரியங்கள் நிறைவேறினால் அம்மனுக்கு அக்னிச்சட்டி, பால் குடம், மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடனை நிறை வேற்றுகின்றனர்.
அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தத்தை பருகினால் சகல நோய்களும் நீங்கும் என்பதால், பக்தர்கள் தீர்த்தம் வாங்கிச் செல்கின்றனர். மேலும், பக்தர்கள் எலுமிச்சை தீபமேற்றியும் வழிபடுகின்றனர். உள்ளம் உருகி வேண்டி நிற்கும் பக்தர்களின் சங்கடங்களை தீர்த்தருளும் மகாசக்தியாக விளங்குகிறார் தெப்பக்குளம் மாரியம்மன்.






