search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kamal hassan"

    நடிகர் கமல்ஹாசன் 16 வயதில் இருந்தே பெரியாரின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டவர் என அவரது சகோதரர் சாருஹாசன் தெரிவித்துள்ளார். #KamalHaasan #Charuhasan
    திருவனந்தபுரம்:

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன்.

    80 வயதுடைய சாருஹாசன் நடிகராகவும் உள்ளார். இவர், கேரள மாநிலம் கொச்சியில் நடந்த சர்வதேச புத்தக திருவிழாவில் கலந்து கொண்டார். அங்கு நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

    நிகழ்ச்சியில், அவர் கமல்ஹாசன் பற்றியும், கேரளாவின் முன்னணி நடிகர் பிரேம் நசீர் குறித்தும் தமிழக-கேரள மக்களின் சினிமா மோகம் பற்றியும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

    கேரள மக்கள் கல்வியில் சிறந்தவர்கள். பள்ளிகளில் சென்று படித்தவர்கள். கல்வியில் சிறந்து விளங்கியதால் மலையாளத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்த பிரேம் நசீர் கேரளாவின் முதல்-மந்திரியாக ஆக முடியவில்லை.

    கேரள மக்களுக்கு இருந்த கல்வி அறிவே இதற்கு காரணமாகும். கேரள மக்கள் பள்ளிகளுக்கு சென்றபோதும், பெரும்பாலான தமிழர்கள் சினிமா என்னும் பள்ளிக்குதான் சென்றார்கள். அரசியல் கலாச்சாரத்தில் தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் இடையேயான வித்தியாசத்திற்கு இதுவே காரணமாகும்.

    நான், சினிமா உலகில் நுழைந்தபோது இந்தியா முழுவதும் சுமார் 10 ஆயிரம் தியேட்டர்கள் இருந்தன. இதில் 3 ஆயிரம் தியேட்டர்கள் தமிழ்நாட்டில் இருந்தது. மொத்த இந்தியாவையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தென் மாநிலங்களில்தான் சினிமா தியேட்டர்கள் அதிகமாக இருந்தது.

    கர்நாடகாவில் 1,400 தியேட்டர்களும், கேரளாவில் 1,200 தியேட்டர்களும் இருந்தன. கேரளாவில் 1,200 தியேட்டர்கள் இருந்தாலும் இங்கு அதற்கேற்ப பள்ளிக் கூடங்களும் இருந்தது.

    கல்வி கற்பதன் மூலமே வேற்றுமைகளை களைய முடியும். இதுவே கேரளாவின் முன்னேற்றத்திற்கு காரணமாகும். தமிழ் நடிகர்களை காட்டிலும் மலையாளத்தில் மோகன்லாலும் மம்முட்டியும் முன்னணி நடிகர்களாக திகழ்கிறார்கள்.

    எனது சகோதரரும், நடிகருமான கமல்ஹாசன் ஒரு நாத்திகர். பெரியாரின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டவர். அவரது 16 வயதில் இருந்து பெரியாரின் ரசிகராக மாறியவர்.

    கடவுள் மிகப்பெரியவர் என்பதில் எனக்கு முழுமையான நம்பிக்கை இல்லை. அதே நேரம் என்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்த நான் விரும்புவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #Charuhasan
    திமுகவை அழுக்கு படிந்த கட்சி என்று விமர்சித்த கமல்ஹாசனுக்கு வாகை சந்திரசேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். #KamalHaasan #DMK

    சென்னை:

    தி.மு.க. எம்.எல்.ஏ. வாகை சந்திரசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வெற்றிடம் என நினைத்து கட்சி தொடங்கி டுவிட்டர் கனவுகளில் மிதந்தபடி, அரசியல் செய்ய நினைக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனக்கான விளம்பரம் தேடிக் கொள்வதற்காக தி.மு.க. நோக்கி விமர்சனம் செய்வது அவரது அரைவேக்காட்டுத் தனத்தையே காட்டுகிறது.

    அடிமைத்தனமும் அவலட்சண நிர்வாகமும் கொண்ட அ.தி.மு.க. ஆட்சியை விமர்சிக்கும் நேரத்திலும், அதற்கு சரிசமமாக தி.மு.க. மீதும் விமர்சனங்களைத் தொடுத்து, தன்னை ‘மய்ய’த்தில் நிற்கும் நடுநிலைவாதி போலக் காட்டிக் கொள்ளும் அரதப் பழசான டெக்னிக்கையே கமல் கையாள நினைக்கிறார்.

    தி.மு.க. அழுக்குப் பொதி ஊழல் கட்சி என கமல் விமர்சித்திருக்கிறார். ‘கலைஞரிடம் தமிழ் கற்றேன்’ என்று சொல்லும் கமல், அந்தக் கலைஞரின் தலைமையில்தான் அரை நூற்றாண்டு காலம் இந்தப் பேரியக்கம் நெருக்கடி நெருப்பாறுகளில் எதிர் நீச்சல் போட்டு நிலைத் திருக்கிறது என்பதை மறந்தது எப்படி? மறைப்பது ஏன்?

    திட்டமிட்டு புனையப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் சட்டரீதியாக எதிர்கொண்டு புடம் போட்ட தங்கமாக வெற்றி பெற்ற இயக்கம் தி.மு.க.

     


     

    திராவிடம் பற்றி விளக்க உரையாற்றும் கமல், திராவிடப் பேரியக்கமான தி.மு.க. மீது தீராவிடத்தைக் கக்குவதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? எவர் தூண்டி விடுகிறார்கள்?

    தேர்தல் நேரத்தில் அவருக்குத் தோன்றிய திடீர் ஆசைகள் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற பயமா? பதற்றமா? தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருப்பதை அறிந்ததும், காங்கிரஸ் கட்சிக்கு தூது விட்டு அது முடியாமல் போனதால், தன் ஆற்றாமையைக் கொட்டுவதற்கு தி.மு.க.வின் மீது புழுதி தூற்றுவது அவரது அரசியல் கத்துக்குட்டித் தனத்தையே காட்டுகிறது.

    தி.மு.க. மீது விமர்சனம் செய்யும் கமலுக்குத் தெரியாதா? ஊழலுக்காக உச்ச நீதிமன்றம் வரை தண்டிக்கப்பட்ட குற்றவாளி, தனது திரைப்படத்துக்கு கடும் நெருக்கடி தந்து, இந்த நாட்டை விட்டே வெளியேறும் மனநிலைக்குத் தள்ளிய ஜெயலலிதாதான் என்பது?

    ஜெயலலிதாவை குன்ஹா கோர்ட்டே தண்டித்த நிலையிலும், அவர் உயிருடன் இருந்தவரை அது பற்றி வாய் திறக்க வக்கில்லாமல், அவர் இறந்த பிறகு திடீர் ‘விஸ்வரூபம்‘ எடுத்து வீர வசனம் பேசிய போதே கமலின் மேக்கப் மக்கள் முன் கலைந்து விட்டது.

    கறுப்பா? காவியா?, கறுப்புக்குள் காவியா? என்று தன் நிலை என்னவென்ற குழப்பத்தில் இருக்கும் கமலுக்கு, கறுப்பு-சிவப்பு எனும் இரு வண்ணமும் தங்கள் உயிரிலும் உதிரத்திலும் கலந்திருக்கும் கோடானு கோடி தொண்டர்களைக் கொண்ட தி.மு.க. மீது பழி சுமத்த என்ன அருகதை உள்ளது.

    அரசியல் என்பது படத்துக்குப் படம் மாற்றிக் கொள்கிற இயக்குநர்கள் அல்ல. அடித்தட்டு மக்களின் துன்ப துயரங்களில் துணை நிற்பதாகும். ஊராட்சிகள் தோறும் கூட்டம் நடத்தி மக்களைச் சந்திக்கும் இயக்கத்துக்கும், ஊர் சுற்றிப் பார்க்கப் போவது போல டூர் அடிப்பதற்கும் வித்தியாசம் உண்டு.

    ‘இதுதான் எனக்கு கடைசி படம், நான் அரசியலுக்கு வந்து விட்டேன்’ என்று சொன்னவர், பிக்பாஸ்களிலும், திரைப்படங்களிலும் மீண்டும் நடிக்க வந்து விட்டு, மக்களுக்கு அளித்த முதல் வாக்குறுதியையே காப்பாற்றாத நிலையில் தி.மு.க.வைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?

    வெற்றிடம் என நம்பி வந்து வீணாய்ப் போனவர், விரக்தியின் உச்சத்தில் நிதானம் தவறிப் பேசுகிறார். கட்சி தொடங்கிய ஓராண்டுக்குள் கலைந்து போய்விட்ட தனது அரசியல் அரிதாரத்தை சரி செய்ய, அவதூறுச் சேற்றை கையில் அள்ளி முகத்தில் பூசி, புது மேக்கப் போடுகிறார் கமல். இனி அவர் போடும் வேடம் எதுவும் அரசியலில் எடுபடப் போவதில்லை.

    இவ்வாறு வாகை சந்திரசேகர் கூறி உள்ளார். #KamalHaasan #DMK

    நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்த்து கொள்ள தயாராக இருக்கிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #PMModi #Rajinikanth #kamalhassan
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

    அதில், தென்னிந்தியாவில் கால் பதிக்கும் வகையில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்கும் திட்டம் உள்ளதா? என்று கேட்கப்பட்டது.

    அதற்கு மோடி கூறியதாவது:-

    எங்கள் அடித்தளத்தை விரிவுபடுத்த தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். எங்களுடன் வர விரும்பும் ஒவ்வொருவரையும் அரவணைத்து சேர்த்து கொள்ள தயாராக இருக்கிறோம். இது, பிராந்திய உணர்வுகளை வலுப்படுத்தும் எங்கள் நோக்கத்துடன் தொடர்புடையது.



    2014-ம் ஆண்டில் இருந்தே நிறைய கட்சிகளை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்கும் முயற்சி நடந்து வருகிறது. அதன்படி, வடகிழக்கு மாநிலங்களில் சில கட்சிகள் சேர்ந்துள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி சேருமா என்றால், அதுபற்றி இங்கு விவாதிக்க முடியாது இவ்வாறு அவர் கூறினார்.

    பிரதமர் மோடி மேலும் கூறியதாவது:-

    2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், மக்களுக்கும், மெகா கூட்டணிக்கும் இடையிலான மோதலாக இருக்கும். கடந்த நான்கரை ஆண்டுகளாக எங்கள் அரசு செய்த பணிகளை எண்ணிப்பார்த்து பா.ஜனதா மீது மக்கள் நம்பிக்கை வைப்பார்கள் என்று கருதுகிறேன். அவர்களின் அறிவுக்கூர்மை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

    மோடி அலை ஓய்ந்து விட்டதாக சிலர் கூறுகிறார்கள். இதன்மூலம், மோடி அலை இருப்பதை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு நன்றி.

    பா.ஜனதாவுக்கு எதிராக சில கட்சிகள் மெகா கூட்டணி சேர்ந்துள்ளன. இவை, ஊழலை பரவலாக்கிய கட்சிகள். மத்தியிலும், மாநிலங்களிலும் கொள்ளை அடித்தன. இந்த ஊழல் சக்திகளை ஆதரிப்பதா? வேண்டாமா? என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.

    இந்த கட்சிகளிடம் ஒற்றுமையே கிடையாது. கடந்த 5 ஆண்டு கால செய்திகளை அலசி பார்த்தால், இக்கட்சிகள் ஒற்றுமையாக எதுவும் செய்தது இல்லை. வெவ்வேறு குரலில் பேசி வருகிறார்கள். தங்களை காப்பாற்றிக் கொள்ள ஒருவருக்கொருவர் ஆதரவு தேவைப்படுகிறது. அதற்காகவே அடுத்தவரின் கையை பற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இது ஒரு விளையாட்டு.

    இவர்களின் ஒரே செயல் திட்டம், மோடியை ஒழிப்பதுதான். நாட்டுக்கு செய்யப் போவது என்ன என்ற செயல் திட்டமே அவர்களிடம் இல்லை. இவர்களின் மெகா கூட்டணி முயற்சி, ஏற்கனவே தெலுங்கானா சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்து விட்டது.

    கே.சந்திரசேகர ராவ் 3-வது அணி அமைக்க முயற்சி செய்கிறாரா என்று எனக்கு தெரியாது. சிவசேனா கட்சியின் குற்றச்சாட்டை பொறுத்தவரை, சில எதிர்பார்ப்புகள் பூர்த்தி ஆகாதபோது, பா.ஜனதா மீது நிர்ப்பந்தம் செலுத்தி, அதை பெற முயற்சிப்பதே ஆகும். மாநில உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தே வருகிறோம். கூட்டணி கட்சிகளை பலி கொடுத்து நாங்கள் வளர வேண்டும் என்று நினைக்க மாட்டோம்.

    வருகிற மக்களவை தேர்தலில் பா.ஜனதாவுக்கு 180 தொகுதிகளுக்கு மேல் கிடைக்காது என்று சிலர் கூறுகிறார்கள். இதற்காக அறிவியல்ரீதியாக ஆய்வு நடத்தப்பட்டதா? கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் கூட பா.ஜனதாவுக்கு 180 தொகுதிக்கும் குறைவாகவே கிடைக்கும் என்று இதே நபர்கள் கூறினார்கள். அதே அணுகுமுறை தொடருகிறது. மக்களை கவருவதற்காக இப்படி சொல்கிறார்கள். மக்களின் அறிவுக்கூர்மை மீது நம்பிக்கை வைப்போம் என்பதுதான் எல்லா அரசியல் கணிப்பாளர்களுக்கும் நான் சொல்ல விரும்பும் விஷயம்.

    சட்டசபை தேர்தலில் தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்காது என்பது முன்பே தெரிந்ததுதான். சத்தீஷ்காரில் தெளிவான தீர்ப்பு தரப்பட்டுள்ளது. மத்தியபிரதேசம், ராஜஸ்தானில் தொங்கு சட்டசபை அமைந்துள்ளது.

    15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததால், அரசுக்கு எதிராக அதிருப்தி இருந்துள்ளது. இந்த பின்னடைவு குறித்து ஆலோசித்து வருகிறோம்.

    ஊழலில் சிக்கிய காங்கிரசார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுவது தவறு. அவர்கள் ஜாமீனில்தான் வெளியே இருக்கிறார்கள். நிதிமுறைகேட்டில் சிக்கிய காங்கிரசின் முதல் குடும்பமே (சோனியா) ஜாமீனில்தான் இருக்கிறது.

    ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் கோர்ட்டுகளில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இது சிறிய விஷயம் அல்ல. அரசியல் பழிவாங்குதலில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. கோர்ட்டு என்ன தீர்ப்பு அளித்தாலும் ஏற்றுக்கொள்வோம். ஆனால், தாமதம் கூடாது.

    காங்கிரஸ் இல்லா பாரதம் அமைப்பது பற்றி நான் விரிவாக பேசி இருக்கிறேன். சாதியம், குடும்ப அரசியல், ஜனநாயக விரோதம், ஊழல் ஆகியவைதான் காங்கிரசின் அரசியல் கலாசாரம். இந்த கலாசாரத்தில் இருந்து விடுபடுவதுதான், காங்கிரஸ் இல்லா பாரதம் அமைப்பதன் நோக்கம். ஜனநாயகத்தில் வலிமையான எதிர்க்கட்சி இருக்க வேண்டும். ஆனால், துரதிருஷ்டவசமாக, அதிலும் காங்கிரஸ் தோற்று விட்டது.

    அரசியல் வன்முறைகளை நான் கண்டிக்கிறேன். பா.ஜனதா தொண்டர்கள் பலர், கேரளா, மேற்கு வங்காளம், அசாம், காஷ்மீர், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொல்லப்பட்டுள்ளனர். இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. தொண்டர்கள் எப்படி நடக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் அறிவுறுத்த வேண்டும்.

    பணமதிப்பு நீக்க நடவடிக்கை திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல. அதுபற்றி ஓராண்டுக்கு முன்பிருந்தே எச்சரித்து வந்தோம். கருப்பு பணம் வைத்திருந்தால், அதை அரசிடம் கொடுத்து, அபராதம் செலுத்தி தப்பித்துக் கொள்ளுங்கள் என்று கூறினோம்.

    ஆனால், மோடியும் மற்றவர்களை போல்தான் இருப்பார் என்று நினைத்துக்கொண்டு, மிகச்சிலர் மட்டுமே கருப்பு பணத்தை ஒப்படைத்தனர். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால்தான், விஜய் மல்லையா, மெகுல் சோக்சி போன்றவர்கள் நாட்டை விட்டு தப்பி ஓடினர். அவர்கள் இன்றோ, நாளையோ இந்தியாவுக்கு கொண்டுவரப்படுவார்கள். இந்தியாவின் பணத்தை திருடியவர்கள், ஒவ்வொரு ரூபாய்க்கும் இழப்பீடு அளித்தே தீர வேண்டும்.

    ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி கூறுவது, என் மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டு அல்ல, என் அரசின் மீதானது. தனிப்பட்ட குற்றச்சாட்டு என்றால், நான் எங்கே, எப்போது, யாரிடம் பணம் வாங்கினேன் என்று தோண்டி பார்க்கட்டும்.

    இந்த குற்றச்சாட்டை சுப்ரீம் கோர்ட்டே நிராகரித்து விட்டது. இருந்தாலும், எந்த ஆதாரமும் இல்லாமல் பேசுகிறார்கள். அவர்களிடம் ஊடகங்கள் கேள்வி கேட்க வேண்டும்.

    எத்தனை அவதூறுகள் என் மீது வீசப்பட்டாலும், ராணுவத்துக்கு என்ன தேவையோ அதை வாங்கி தருவேன். எல்லாமே இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டும் என்று நினைத்ததுதான் நான் செய்த குற்றம்.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படியே, முத்தலாக் தடைக்கான அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. எண்ணற்ற இஸ்லாமிய நாடுகளில் கூட முத்தலாக் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, இது மத நம்பிக்கை சம்பந்தப்பட்டது அல்ல. ஆண்-பெண் சமத்துவம், சமூக நீதி சம்பந்தப்பட்டது.

    சபரிமலை பிரச்சினை என்பது பாரம்பரியம் தொடர்பானது. ஆண்கள் செல்லக்கூடாத கோவில்கள் கூட உள்ளன. அங்கு ஆண்கள் செல்வது இல்லை.

    சபரிமலை பற்றி தீர்ப்பு அளித்த சுப்ரீம் கோர்ட்டு அமர்வில் இடம்பெற்ற ஒரு பெண் நீதிபதி, சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என தனியாக தீர்ப்பு எழுதி உள்ளார். அவரது தீர்ப்பை கவனமாக படிக்க வேண்டும். அதுபற்றியும் விவாதம் நடத்த வேண்டும். இப்பிரச்சினையை எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்புபடுத்தக்கூடாது.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். #PMModi #Rajinikanth #kamalhassan
    மக்கள் நீதி மய்யம் கட்சியில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களாக 575 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மக்கள் நலனுக்காக செயலாற்ற வேண்டும் என்று அவர்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை வழங்கியுள்ளார். #kamalHassan
    சென்னை:

    கட்சியின் கட்டமைப்பினை வலுப்படுத்தும் வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஒப்புதலுடன் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 575 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மக்களுக்கான அரசியல், மக்களுக்கான கட்சி என்கின்ற தெளிவுரையுடன், தமிழகத்தின் வளர்ச்சிக்காவும், தமிழர்களின் ஏற்றத்திற்காகவும் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து பணியாற்றி வருகின்றது.

    புதிய மாற்றத்தினை முன்னிறுத்தி, தெளிவாகவும் நேர்மையாகவும், தொலைநோக்குப்பார்வையுடனும் ஒவ்வொரு நகர்விலும், தமிழர்களின் பெரும் நம்பிக்கையாக வலுப்பெற்று நாங்கள் வளர்ந்து கொண்டே இருக்கின்றோம். அந்தவகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனத்தினை அறிவித்திருக்கின்றோம்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியில் வழங்கப்படுவது பதவியல்ல. அது ஒவ்வொருவரின் பொறுப்பு என்பதை அனைவருக்கும் பலமுறை பல்வேறு தருணங்களில் நான் கூறியிருக்கின்றேன். அதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகின்றேன். எனவே அதை நினைவில் நிறுத்தி கட்சியின் விழியாகவும், செவியாகவும், குரலாகவும் கடமையுணர்வுடன் செயலாற்றவேண்டும்.

    சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்களுக்கு எனது வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கின்றேன். அதேவேளையில் இந்த பொறுப்பினை, உங்களது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு பயன்படுத்தாமல், மக்களின் தொண்டர்களாக, மக்கள் நலனை முன்னெடுப்பதற்கான அரிய வாய்ப்பாக பயன்படுத்தி செயலாற்றவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #kamalHassan
    5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கூறுகையில், புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது என தெரிவித்துள்ளார். #2018electionresults #Kamalhassan
    சென்னை:

    ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கானா, மிசோரமில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றிக்கு அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

    இந்நிலையில், ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது என பதிவிட்டுள்ளார். #2018electionresults #Kamalhassan
    எழும்பூரில் போராட்டம் நடத்திய விவசாயிகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். #ayyakannu #FarmerStruggle #KamalHassan

    சென்னை:

    தமிழக விவசாயிகளில் ஒரு பிரிவினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தென் இந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடந்த இந்த போராட்டத்தால் டெல்லி போலீசார் திணறிப் போனார்கள். பல நாட்களாக நீடித்த இந்த போராட்டம் பின்னர் முடிவுக்கு வந்தது.

    இந்தநிலையில் அய்யாக்கண்ணு தலைமையிலான போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த போராட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகளும் பங்கேற்றன.

    டெல்லியில் போராட்டத்தை முடித்துக் கொண்ட விவசாயிகள் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் இன்று காலை சென்னை திரும்பினார்கள். காலை 7.30 மணிக்கு சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வந்த அவர்கள் அங்கிருந்து எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு சென்றனர்.

    பின்னர் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் எழும்பூர் ரெயில் நிலையத்தில் 4-வது பிளாட் பாரத்தில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     


    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி இந்த போராட்டம் நடந்தது. ஆண்கள், பெண்கள் என சுமார் 200 பேர் இதில் பங்கேற்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் 2 பேர் மண்டை ஓடுகளை கழுத்தில் தொங்கவிட்டிருந்தனர். போராட்டம் நடத்தியவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். முதல்-அமைச்சரை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. எனவே போராட்டத்தை கைவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டனர். இருப்பினும் விவசாயிகள் அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.

     


    விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கமலை வரவேற்று போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றார். விவசாயிகளிடம் போராட்டம் குறித்து கமல் கேட்டறிந்தார்.

    பின்னர் விவசாயிக்ள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    நீங்கள் கேட்டிருக்கும் கோரிக்கைகள் நியாயமனது தான் அரசால் நிறைவேற்ற முடிந்ததுதான். நீங்கள் அனைவரும் இதேபோல் ஒற்றுமையோடு இருக்க வேண்டும். இந்த ஒற்றுமையால் தான் டெல்லியில் இவ்வளவு கூட்டத்தை கூட்ட முடிந்தது.

    உங்கள் மொழி விவசாயம். எங்களால் முடிந்தவரை உங்களோடு தோள் கொடுத்து உங்கள் கோரிக்கைகளுக்காக அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்.

    கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதை தவிர வழியே இல்லை. புயலும், வெள்ளமும் மட்டுமே தேசிய பேரிடர் அல்ல. பஞ்சமும் தேசிய பேரிடர்தான்.

     


    நாங்களும் உங்கள் குடும்பம்தான். உங்கள் தொழில் எங்களுக்கு தெரியாது. ஆனால் உங்கள் கையால் வாங்கி சாப்பிடுகிறோம். அதற்கு மரியாதை செலுத்தத்தான் இங்கு வந்தேன். அரசு விவசாயிகளின் நிலைமையை உணர்ந்து செயல்பட வேண்டும். இப்போது கெஞ்சி கேட்கிறோம். எப்போதும் இப்படியே நிலைமை இருக்காது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விவசாயிகள் நாடு தழுவிய அளவில் விவசாய கடன்களை ரத்து செய்வது, விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயிப்பது, உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அறவழி போராட்டத்தை நடத்துகிறார்கள். அவர்களுக்கு எங்கள் ஒத்துழைப்பு உண்டு.

    நேற்று வரை கஜா புயல் பாதித்த பகுதிகளில் தான் இருந்தேன். எங்கள் குரல் எதிர்க் கட்சிகளின் குரல் அல்ல. மக்களின் குரலாக பார்க்க வேண்டும். 15 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் பல கிராமங்களில் மின்சாரம் இல்லை. குடி தண்ணீர் வசதி இல்லை. மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

    இன்னும் ஒரு கிராம நிர்வாக அதிகாரிகள் கூட போய் பார்க்கவில்லை. நாங்கள் போன பல இடங்களில் மக்கள் ஆத்திரத்தில் கண்ணீர் அஞ்சலி என்று வைத்திருந்ததை பார்த்தோம்.

    நாங்கள் அரசை விமர்சிக்க வில்லை. பணிகளை துரிதப்படுத்த வேண்டியது எங்கள் கடமை. அதைத்தான் சொல்கிறோம். இதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். சேத விவரங்களை கூட இருந்த இடத்தில் இருந்தே சேகரித்ததாகத்தான் நான் கருதுகிறேன். மத்திய அரசு இடைக்காக நிவாரணம் வழங்கி இருப்பதற்கு நன்றி.

    விவசாயிகள் டெல்லியில் போராடிய விதம் தவறு என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறி இருப்பது சரியல்ல. விவசாயிகள் பசியோடு இருக்கிறார்கள். பசிக்காக போராடுபவர்களும் இப்படித்தான் போராட வேண்டும், அப்படித்தான் போராட வேண்டும் என்று சொல்ல முடியாது.

    கஜா புயல் பாதித்த பகுதிகளில் அவலங்களை நேரில் பார்த்து வந்தவன் நான். அங்குள்ள விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். பரிசீலனையில் இருப்பதாக கூறுகிறார்கள். அதற்கான கால அவகாசம் இல்லை. உடனே தள்ளுபடி செய்வதுதான் நல்லது.

    பாதிக்கப்பட்டுள்ள பகுதி முழுவதுமாக மீண்டு வருவதற்கு இன்னும் 7 ஆண்டுகள் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விவசாயிகள் எழும்பூரில் இருந்து இன்று மதியம் செல்லக்கூடிய வைகை எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களில் செல்வதற்கு முன்பதிவு செய்து இருந்தனர். ஆனால் விவசாயிகள் தொடர்ந்து சில மணிநேரம் எழும்பூர் ரெயில் நிலையத்திலேயே தங்கி இருக்க வேண்டி இருந்தது. அதுவரை போலீஸ் பாதுகாப்பு தேவைப்பட்டதால் ரெயில்வே உயர் அதிகாரிகளிடம் பேசி வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக ஒரு பெட்டி இணைத்து அனைத்து விவசாயிகளையும் ஒரே ரெயிலில் ஏற்றி அனுப்பி வைத்தனர். #ayyakannu #FarmerStruggle #KamalHassan

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது கட்சியினரோடு புயல் பாதித்த பகுதிகளில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் குறைகளை கேட்டறிந்தார். #KamalHassan #GajaCyclone

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது கட்சியினரோடு புயல் பாதித்த பகுதிகளில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் குறைகளை கேட்டு வருகிறார்.

    தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டை கிழக்காடு பகுதியில் டீக்கடையில் அமர்ந்து கட்சியினருடன் கமல் டீ குடித்தார். அவரை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அங்கிருந்தவர்களுக்கு கமல் டீ வாங்கி கொடுத்தார்.

    டீக்கடையில் கமல்ஹாசன் பேசிக் கொண்டிருந்தபோது பாட்டி ஒருவர் வாஞ்சையுடன் கன்னத்தை பிடித்து பேசினார். அவருடன் பாசமாக பேசிய கமல் குறைகளை கேட்டறிந்தார்.


    மீனவர் கிராமமான ஏரிப்புறக்கரை கிராமத்திற்கு சென்ற கமல்ஹாசன் கிராமம் முழுவதையும் சுற்றிப் பார்த்தார். கமலிடம் தங்கள் குறைகள் அனைத்தையும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இதுவரை யாரும் வரவில்லை என்றும், மக்கள் குமுறலை வெளியிட்டனர். இதுபற்றி கமல் கூறும்போது, அமைச்சர்கள் பேச்சை நிறுத்திவிட்டு வேகமான செயல்பாடுகளில் இறங்க வேண்டும் என்றார்.

    ஏரிப்புறக்கரை கிராமத்தைப் பொறுத்தவரை அங்குள்ள மீனவர்கள் தங்களது படகுகள் அனைத்தையும் இழந்துவிட்டனர்.

    வீடுகள் இடிந்துவிட்டன. மொத்த வாழ்வாதாரமும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. மீன்பிடி வலைகள் கூட மிஞ்சவில்லை. நாங்கள் மீண்டுவர பல வருடமாகும் என்று மக்கள் கமல்ஹாசனிடம் குமுறலை வெளிப்படுத்தினர். #KamalHassan #GajaCyclone

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களை இதுவரை சந்திக்காத அதிகாரிகள் குறித்து அரசிடம் புகார் தெரிவிக்க போவதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் முடிவு செய்துள்ளார். #KamalHassan #GajaCyclone
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள அக்கச்சிப்பட்டி, பந்துவக்கோட்டை கிராமங்களில் கஜா புயலால் பாதித்த பொதுமக்களை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார்.

    அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

    எங்களால் இயன்ற உதவிகளை வழங்கி வருகிறோம். பொதுமக்களின் பாதிப்புகள் குறித்து அரசிடம் தகவல் தெரிவிப்போம். சம்பந்தப்பட்ட துறைகளை சார்ந்த அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பொது மக்களை இதுவரை சந்திக்காமல் இருப்பது குறித்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

    தற்போது ஏற்பட்டுள்ள இழப்பை பாதிக்கப்பட்ட தனி ஒருவரால் ஈடு செய்ய முடியாது. அதற்கு கண்டிப்பாக பலர் உதவ வேண்டும். புயலின் போது வீடு இழந்த பொதுமக்களை, பள்ளியில் தங்கிக்கொள்ள அனுமதி அளித்த நிர்வாகிகளுக்கும், அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்கிய ஆசிரியர்களுக்கும் நன்றி.

    வகுப்புகளில் படித்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறினை ஏற்படுத்தி கூடாதென்பதற்காகத்தான் பள்ளி வளாகத்திற்குள் வராமல், வெளியே ரோட்டில் நின்று பேசி கொண்டிருக்கிறேன். எனவே பள்ளிக்குள் வராமல் இருந்ததை எவரும் தவறாக நினைத்து கொள்ள வேண்டாம். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

    நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக வருகை தர இருந்த கமலுக்காக, பந்துவாக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியின் முன்புறமிருந்த போர்டிக் கோவை கட்சியினர் தற்காலிக மேடையாக மாற்றியிருந்தனர்.

    அந்த பகுதிக்கு வந்த கமல், பள்ளிக்குள் அரசியல்வாதிகள் நுழைந்து மாணவர்களின் படிப்புக்கு இடையூறினை ஏற்படுத்தக்கூடாது என்று கூறி உள்ளே செல்ல மறுத்து விட்டார். பின்னர் சாலையோரத்தில் தனது காரை நிறுத்தி அதில் ஏறி நின்று பொதுமக்களிடம் பேசினார். #KamalHassan #GajaCyclone
    கஜா புயலால் பாதித்த மக்களுக்கு, அரசு அறிவித்திருக்கும் நிவாரணத்தொகை போதுமானதல்ல என்று மக்கள் நீதி மைய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். #KamalHassan #GajaCyclone #TNGovernment
    சென்னை:

    மக்கள் நீதி மைய்யம் கட்சி தலைவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது;

    தன்மானத்துடன் வாழ்ந்த டெல்டா பகுதி மக்கள், இன்று நட்ட  நடுத்தெருவில் செய்வதறியாது, திகைத்து நிற்கின்றனர். நமக்கு "நல்ல சோறு"  போட்டவர்கள் இன்று அரசு வழங்கும்   "புழுத்துப்போன அரிசியை" சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, அரசு அறிவித்திருக்கும் நிவாரணத்தொகை போதுமானதல்ல. ஆனால் அதைக் கூட 3 தவணையாக அறிவித்திருப்பது   மிகக்கொடுமையானது என்பதே எங்கள் குற்றச்சாட்டு. மக்களுக்கு முழு நிவாரணத்தொகையும் உடனடியாக, ஒரே தவணையில் வழங்கப்படவேண்டும்.

    அரசு இயந்திரம் மேலிருந்து கீழ் வரை கால் பாவி செயலாற்றிடவேண்டும்.  நாங்கள் சென்று பார்த்த பல கிராமங்களில் "கிராம நிர்வாக அதிகாரிகள்" கூட சென்று பார்க்கவில்லை. மக்களுக்கு அரசு வழங்கும் உதவிகள், ”வெறும்  அறிக்கையாக காகிதத்தில், மீளாத தூக்கத்தில் ஆழ்ந்து விடக் கூடாது.



    வீடுகளை இழந்ததாக அரசு கூறும் கணக்கும், முகாம்களில்  தங்கவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் கணக்கும் முற்றிலும் முரணாக இருக்கின்றது. முகாம்கள் என்று சொல்லப்படும் இடங்கள் மிகவும் மோசமான சூழலில் இருக்கின்றது. பல இடங்களில் அரசுப்பள்ளிகளில் தான் முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது.

    கடைமடைப் பகுதிகளுக்கு காவிரி வருவதற்கு வழியில்லாத நிலையில், இப்புயலுக்குப் பின்னர் விவசாயிகள் தாம் இழந்த வாழ்வாதாரத்திற்கு என்ன  செய்வார்கள்  என்பது  கேள்விக்கு  உரியதாக  இருக்கின்றது.

    இது  தமிழ்நாட்டிற்கு மட்டுமான சோகம் இல்லை, ஒட்டுமொத்த இந்தியாவிற்கான சோகம்.

    இப்பொழுது வரை நாம் அனைவரும் செய்திருப்பது “முதலுதவி” மட்டுமே. முழு சிகிச்சை அளித்து, அடுத்த 8  வருடங்களுக்கு, தொடர்ந்து தேவையான உதவிகளைச் செய்திட வேண்டும்.

    அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதத்துடன் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களின் துயரினைத் துடைத்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.#KamalHassan #GajaCyclone #TNGovernment
    கமல்ஹாசனின் அறிக்கைகளும், நடவடிக்கைகளை பார்க்கும் போது, அவர் இன்னும் அரசியல்வாதிக்கான அந்தஸ்தினை பெறவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். #Minister #KadamburRaju #KamalHassan
    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கம்மவார் சங்கம் சார்பில் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் வாழும் கம்மவார் மக்களை இணைக்கும் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.

    இதனைத் தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    விவசாயிகள் சங்கத் தலைவராக இருந்த நாராயணசாமி நாயுடுக்கு அவர் சொந்த ஊரான வையம்பாளையத்தில் நினைவு மண்டபம் அமைக்கும் பணி, முடியும் தருவாயில் இருக்கிறது. விரைவில் அதனை முதல்வர் திறந்து வைப்பார்.

    அவர் கோவில்பட்டியில் உயிர் நீத்ததால் அவருக்கு சிலை நிறுவப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு சிலை அமைக்கப்படும்.

    மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் மக்களுக்கு தவறான கருத்துக்களை, மக்களின் யதார்த்த நிலையை தெரியாமல் நடிகர் கமலஹாசன் பேசி வருகிறார். இன்னும் நடிகராக தான் இருக்கிறார். அரசியல்வாதியாக மாறியதாக தெரியவில்லை. அவருடைய அறிக்கைகளும், நடவடிக்கைகளை பார்க்கும் போது, இன்னும் அரசியல்வாதிக்கான அந்தஸ்தினை அவர் பெறவில்லை என்பது தெரிகிறது.

    கஜாபுயல் குறித்து அறிவிப்பு வந்ததும் அரசு நடவடிக்கை எடுத்த காரணத்தினால் உயிர் சேதம் அதிகளவில் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கையை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ பாராட்டியுள்ளனர். கஜா புயல் சேதம் குறித்து போர்கால நடவடிக்கையாக தமிழக முதல்வர் பார்வையிட்டு, பிரதமரிடம் எடுத்துரைத்து ரூ.15 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்டுள்ளார்.

    மத்திய குழு தற்போது ஆய்வு செய்து வருகிறது. மக்களின் இயல்பு நிலைக்கு கொண்டு வர அரசு அதிகாரிகள், ஊழியர்கள் அமைச்சர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இதனை அரசியலாக பார்ப்பது நல்லது கிடையாது. எதிர்கட்சிகள் பாராட்ட வேண்டும் என்பதற்காக அல்ல பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர அரசு அர்ப்பணிப்புடன் தனது கடமையை செய்து வருகிறது.

    மத்திய அரசு சார்பில் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில பா.ஜ.க தலைவர் தமிழிசை ஆகியோர் பாதித்த பகுதிகளை பார்த்து உள்ளனர். முதல்வர் பாதிப்பு குறித்து அறிக்கை அளித்துள்ளார். பிரதமருக்கு திட்டமிட்ட அலுவல் இருக்கும், கஜாபுயல் பாதித்த மாவட்டங்களை இயற்கை பேரிடர் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். இதில் மத்திய அரசு இணக்கமான முடிவு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Minister #KadamburRaju
    ஜாதிகளின் பெயரில் திரைப்படம் எடுக்கக்கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். #Thirumavalavan #Kamalhassan
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மாலை மலருக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கேள்வி:- அன்மையில் ஆந்திர முதல்-மந்திரி சந்திர பாபு நாயுடுவை திடீரென சந்தித்ததின் நோக்கம் என்ன?

    பதில்:- எங்கள் கட்சி சார்பில் டிசம்பர் 10-ந்தேதி திருச்சியில் ஜனாதன பயங்கரவாதத்தை எதிர்த்து தேசம் காப்போம் மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற சந்திரபாபு நாயுடுவை சந்தித்து அழைப்பு விடுத்தோம்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சீத்தாராம் யெச்சூரி, சுதாகர் ரெட்டி ஆகியோரையும் இந்த மாநாட்டில் பங்கேற்க அழைத்துள்ளோம். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழ்நாட்டை சேர்ந்த தோழமை கட்சிகளின் தலைவர்களையும் அழைத்துள்ளோம்.

    சந்திரபாபு நாயுடு ஒரு சில நாட்களில் தான் பங்கேற்பது தொடர்பாக தகவல் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

    கே:- வேறு ஏதேனும் அவருடன் அரசியல் தொடர்பாக பேசினீர்களா?

    ப:- தேசிய ஜனநாயக முன்னணியில் இருந்து சந்திரபாபு நாயுடு வெளியேறியதை வரவேற்றதோடு அன்மையில் ராகுல்காந்தியை சந்தித்ததையும் பாராட்டினோம். அகில இந்திய அளவில் மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைவது ஜனாதன சக்தியிடம் இருந்து தேசத்தை பாதுகாப்பதும் அவசியமானது என கூறினோம். ராகுல்காந்தியை சந்தித்த போது இந்த தேசத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று தாங்கள் கூறியது எங்கள் மாநாட்டின் நோக்கத்தை பிரதிபலிப்பதாக இருந்தது என்று கூறினோம்.

    தமிழ்நாட்டில் தி.மு.க. காங்கிரஸ், இடதுசாரிகள், ம.தி.மு.க. இஸ்லாமிய கட்சிகள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுகிறோம் என்பதையும் தெரிவித்தோம். அவர் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    கே:- தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தை இடம் பெறுவதில் சிக்கல் இருக்கிறதா?

    ப:- ஒரு சில ஊடகங்கள் அவ்வாறு வதந்திகளை பரப்பி வருகின்றன. தி.மு.க.வுடன் எங்களுக்கு நல்ல இணக்கமான உறவு உள்ளது. ஜனாதன சக்திகளை எதிர்த்து அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபடுவதால் எங்களுக்கு எதிராக சிலர் இப்படி திட்டமிட்டு வதந்தியை பரப்புகிறார்கள்.

    கே:- கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினீர்களா?

    ப:- நேற்று மாலை அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

    கே:- கமல்ஹாசன் தேவர் மகன்-2 படம் எடுக்கப் போவதாக கூறியுள்ளாரே?

    ப:- ஜாதிகளின் பெயரில் திரைப்படம் எடுப்பது நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. தேவர் மகன், சின்னக் கவுண்டர், கவுண்டர் பொண்ணா கொக்கா இது போன்ற படங்கள் ஏற்கனவே வெளி வந்துள்ளன. தலைப்புகளில் மட்டுமின்றி கதைகளிலும் ஜாதிகளை மையமாக வைத்து படங்கள் வெளி வந்திருக்கின்றன. இதனால் ஜாதி பிரச்சினைகள் அவ்வப்போது தலைதூக்கி உள்ளன. நடிகர்களும் ஜாதி அடிப்படையில் அடையாளப்படுத்தப்படுவது, ஜாதி அடிப்படையில் ரசிகர் மன்றங்களை அமைப்பது மேலோங்கி உள்ளன.



    இந்த நிலை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடையாது. ஜாதி பிரச்சினைகள், அதனால் உருவாகும் பாதிப்புகள் தொடர்பாக திரைப்படங்களில் மட்டுமின்றி இலக்கிய தளம் உள்ளிட்ட பிற தளங்களிலும் விவாதிக்கப்பட வேண்டும் என்பது வரவேற்க கூடியதாகும்.

    ஆனால் வியாபார நோக்கத்தோடும் அரசியல் ஆதாயத்தோடும் கலை இலக்கிய துறைகளில் செயல்படுவது, திரைப்படங்கள் தயாரிப்பது சமூக நல்லிணக்கத்திற்கு உகந்தது அல்ல.

    உழைக்கிற மக்கள் மோதிக்கொள்ளட்டும் தங்களுக்கு ஆதாயம் கிடைத்தால் போதும் என்று நினைப்பது சமூக விரோத போக்காகும். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது தெருக்களுக்கும், கடைகளுக்கும் கூட ஜாதி பெயரை சூட்டக்கூடாது என்று அரசாணை பிறப்பித்தார். அவர் வழியில் இன்று ஆட்சி நடத்தக்கூடியவர்கள் திரைப்படங்களுக்கு ஜாதி பெயர் சூட்டுவதை வேடிக்கை பார்க்ககூடாது.

    எம்.ஜி.ஆரின் அந்த அரசாணையை தற்போதைய அ.தி.மு.க. அரசு நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். இல்லையென்றால் இதை வைத்து ஜாதியவாதிகள் அப்பாவி மக்கள் இடையே மோதலை தூண்டி விடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirumavalavan #Kamalhassan
    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    இந்திய மாணவர் சங்கம் சார்பில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதாவது 74 சதவீத வருகை பதிவுக்கு குறைவாக இருப்பவர்களுக்கு உயர்த்தப்பட்ட அபராத கட்டண தொகையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். தமிழ் வழியில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். ஏழை மாணவர்கள் மீது சுமத்தப்பட்ட தேர்வு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதையடுத்து நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங் களை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று வேன்களில் நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு வந்தனர்.

    ஆனால் மாணவர்களின் இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். காலையில் 3 வேன்களில் வந்த மாணவ-மாணவிகளை போலீசார் அவ்வப்போது கைது செய்தனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    இதற்கிடையே மேலும் ஏராளமான மாணவர்கள் அங்கு வந்து குவிந்தனர். அவர்கள் பல்கலைக்கழக வளாகம் முன்பு முற்றுகையை கைவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் மாணவ-மாணவிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஏற்கனவே கைது செய்த மாணவ- மாணவிகளை விடுவித்தால் மட்டுமே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மண்டபத்தில் இருந்த மாணவ- மாணவிகள் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். அவர்களும் இந்த போராட்டத்தில் வந்து கலந்து கொண்டனர்.

    அந்த சமயத்தில் பேட்டை கல்லூரியில் இருந்து மாணவ- மாணவிகள் பல்கலைக்கழகம் நோக்கி புறப்பட்டனர். அவர்களும் போராட்ட களத்துக்கு வந்து குவிந்தனர்.

    பின்னர் அதிகாரிகள், மாணவ பிரதிநிதிகளை பல்கலைக்கழக துணைவேந்தரை சந்தித்து கோரிக்கை குறித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்தனர். இதையடுத்து மாணவ பிரதிநிதிகள் மட்டும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு துணை வேந்தர் பாஸ்கர், பதிவாளர் சந்தோஷ் பாபு ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து மாணவ பிரதிநிதிகள் வெளியே வந்தனர். அங்கு தங்களது கோரிக்கை ஏற்கப்படாதது குறித்து மாணவர்கள் மத்தியில் தெரிவித்தனர்.

    இதனால் மாணவ-மாணவிகள் ஆத்திரம் அடைந்தனர். பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்த முயற்சி செய்தனர். ஆனால் அவர்களை போலீசார் உள்ளே நுழைய விடாமல் தடுப்புகளை அமைத்து தடுத்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



    இதையடுத்து மாணவ- மாணவிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அப்போது போலீசாரிடம் எதிர்த்து பேசிய ஒரு சில மாணவ-மாணவிகள் தாக்கப்பட்டனர். மேலும் ஒரு சிலரை போலீசார் தாக்கியவாறு இழுத்து வேனில் ஏற்றிச் சென்றனர்.

    இந்த தடியடி சம்பவத்தால் பல்கலைக்கழக வளாகம் போர்க்களம் போல் காட்சி அளித்தது.

    இந்த சம்பவத்தால் பல்கலைக் கழக வளாகம் முன்பு உள்ள நெல்லை-தென்காசி ரோட்டில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்தநிலையில்,  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கும், மாணவர்களுக்குமான கருத்து வேறுபாட்டை, சுமூகமாகத் தீர்த்துவைக்கும் நடவடிக்கைகள் எடுக்காமல், காவலர்கள் வன்முறையால் கட்டுப்பாடு ஏற்படுத்த நினைத்தது கண்டிக்கத்தக்கது  என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். #ManonmaniamSundaranarUniversity #StudentsProtest #KamalHassan
    ×