search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் கூட்டணிக்கு ரஜினி, கமல் வந்தால் சேர்ப்போம் - மோடி
    X

    தேர்தல் கூட்டணிக்கு ரஜினி, கமல் வந்தால் சேர்ப்போம் - மோடி

    நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்த்து கொள்ள தயாராக இருக்கிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #PMModi #Rajinikanth #kamalhassan
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

    அதில், தென்னிந்தியாவில் கால் பதிக்கும் வகையில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்கும் திட்டம் உள்ளதா? என்று கேட்கப்பட்டது.

    அதற்கு மோடி கூறியதாவது:-

    எங்கள் அடித்தளத்தை விரிவுபடுத்த தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். எங்களுடன் வர விரும்பும் ஒவ்வொருவரையும் அரவணைத்து சேர்த்து கொள்ள தயாராக இருக்கிறோம். இது, பிராந்திய உணர்வுகளை வலுப்படுத்தும் எங்கள் நோக்கத்துடன் தொடர்புடையது.



    2014-ம் ஆண்டில் இருந்தே நிறைய கட்சிகளை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்கும் முயற்சி நடந்து வருகிறது. அதன்படி, வடகிழக்கு மாநிலங்களில் சில கட்சிகள் சேர்ந்துள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி சேருமா என்றால், அதுபற்றி இங்கு விவாதிக்க முடியாது இவ்வாறு அவர் கூறினார்.

    பிரதமர் மோடி மேலும் கூறியதாவது:-

    2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், மக்களுக்கும், மெகா கூட்டணிக்கும் இடையிலான மோதலாக இருக்கும். கடந்த நான்கரை ஆண்டுகளாக எங்கள் அரசு செய்த பணிகளை எண்ணிப்பார்த்து பா.ஜனதா மீது மக்கள் நம்பிக்கை வைப்பார்கள் என்று கருதுகிறேன். அவர்களின் அறிவுக்கூர்மை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

    மோடி அலை ஓய்ந்து விட்டதாக சிலர் கூறுகிறார்கள். இதன்மூலம், மோடி அலை இருப்பதை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு நன்றி.

    பா.ஜனதாவுக்கு எதிராக சில கட்சிகள் மெகா கூட்டணி சேர்ந்துள்ளன. இவை, ஊழலை பரவலாக்கிய கட்சிகள். மத்தியிலும், மாநிலங்களிலும் கொள்ளை அடித்தன. இந்த ஊழல் சக்திகளை ஆதரிப்பதா? வேண்டாமா? என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.

    இந்த கட்சிகளிடம் ஒற்றுமையே கிடையாது. கடந்த 5 ஆண்டு கால செய்திகளை அலசி பார்த்தால், இக்கட்சிகள் ஒற்றுமையாக எதுவும் செய்தது இல்லை. வெவ்வேறு குரலில் பேசி வருகிறார்கள். தங்களை காப்பாற்றிக் கொள்ள ஒருவருக்கொருவர் ஆதரவு தேவைப்படுகிறது. அதற்காகவே அடுத்தவரின் கையை பற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இது ஒரு விளையாட்டு.

    இவர்களின் ஒரே செயல் திட்டம், மோடியை ஒழிப்பதுதான். நாட்டுக்கு செய்யப் போவது என்ன என்ற செயல் திட்டமே அவர்களிடம் இல்லை. இவர்களின் மெகா கூட்டணி முயற்சி, ஏற்கனவே தெலுங்கானா சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்து விட்டது.

    கே.சந்திரசேகர ராவ் 3-வது அணி அமைக்க முயற்சி செய்கிறாரா என்று எனக்கு தெரியாது. சிவசேனா கட்சியின் குற்றச்சாட்டை பொறுத்தவரை, சில எதிர்பார்ப்புகள் பூர்த்தி ஆகாதபோது, பா.ஜனதா மீது நிர்ப்பந்தம் செலுத்தி, அதை பெற முயற்சிப்பதே ஆகும். மாநில உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தே வருகிறோம். கூட்டணி கட்சிகளை பலி கொடுத்து நாங்கள் வளர வேண்டும் என்று நினைக்க மாட்டோம்.

    வருகிற மக்களவை தேர்தலில் பா.ஜனதாவுக்கு 180 தொகுதிகளுக்கு மேல் கிடைக்காது என்று சிலர் கூறுகிறார்கள். இதற்காக அறிவியல்ரீதியாக ஆய்வு நடத்தப்பட்டதா? கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் கூட பா.ஜனதாவுக்கு 180 தொகுதிக்கும் குறைவாகவே கிடைக்கும் என்று இதே நபர்கள் கூறினார்கள். அதே அணுகுமுறை தொடருகிறது. மக்களை கவருவதற்காக இப்படி சொல்கிறார்கள். மக்களின் அறிவுக்கூர்மை மீது நம்பிக்கை வைப்போம் என்பதுதான் எல்லா அரசியல் கணிப்பாளர்களுக்கும் நான் சொல்ல விரும்பும் விஷயம்.

    சட்டசபை தேர்தலில் தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்காது என்பது முன்பே தெரிந்ததுதான். சத்தீஷ்காரில் தெளிவான தீர்ப்பு தரப்பட்டுள்ளது. மத்தியபிரதேசம், ராஜஸ்தானில் தொங்கு சட்டசபை அமைந்துள்ளது.

    15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததால், அரசுக்கு எதிராக அதிருப்தி இருந்துள்ளது. இந்த பின்னடைவு குறித்து ஆலோசித்து வருகிறோம்.

    ஊழலில் சிக்கிய காங்கிரசார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுவது தவறு. அவர்கள் ஜாமீனில்தான் வெளியே இருக்கிறார்கள். நிதிமுறைகேட்டில் சிக்கிய காங்கிரசின் முதல் குடும்பமே (சோனியா) ஜாமீனில்தான் இருக்கிறது.

    ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் கோர்ட்டுகளில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இது சிறிய விஷயம் அல்ல. அரசியல் பழிவாங்குதலில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. கோர்ட்டு என்ன தீர்ப்பு அளித்தாலும் ஏற்றுக்கொள்வோம். ஆனால், தாமதம் கூடாது.

    காங்கிரஸ் இல்லா பாரதம் அமைப்பது பற்றி நான் விரிவாக பேசி இருக்கிறேன். சாதியம், குடும்ப அரசியல், ஜனநாயக விரோதம், ஊழல் ஆகியவைதான் காங்கிரசின் அரசியல் கலாசாரம். இந்த கலாசாரத்தில் இருந்து விடுபடுவதுதான், காங்கிரஸ் இல்லா பாரதம் அமைப்பதன் நோக்கம். ஜனநாயகத்தில் வலிமையான எதிர்க்கட்சி இருக்க வேண்டும். ஆனால், துரதிருஷ்டவசமாக, அதிலும் காங்கிரஸ் தோற்று விட்டது.

    அரசியல் வன்முறைகளை நான் கண்டிக்கிறேன். பா.ஜனதா தொண்டர்கள் பலர், கேரளா, மேற்கு வங்காளம், அசாம், காஷ்மீர், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொல்லப்பட்டுள்ளனர். இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. தொண்டர்கள் எப்படி நடக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் அறிவுறுத்த வேண்டும்.

    பணமதிப்பு நீக்க நடவடிக்கை திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல. அதுபற்றி ஓராண்டுக்கு முன்பிருந்தே எச்சரித்து வந்தோம். கருப்பு பணம் வைத்திருந்தால், அதை அரசிடம் கொடுத்து, அபராதம் செலுத்தி தப்பித்துக் கொள்ளுங்கள் என்று கூறினோம்.

    ஆனால், மோடியும் மற்றவர்களை போல்தான் இருப்பார் என்று நினைத்துக்கொண்டு, மிகச்சிலர் மட்டுமே கருப்பு பணத்தை ஒப்படைத்தனர். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால்தான், விஜய் மல்லையா, மெகுல் சோக்சி போன்றவர்கள் நாட்டை விட்டு தப்பி ஓடினர். அவர்கள் இன்றோ, நாளையோ இந்தியாவுக்கு கொண்டுவரப்படுவார்கள். இந்தியாவின் பணத்தை திருடியவர்கள், ஒவ்வொரு ரூபாய்க்கும் இழப்பீடு அளித்தே தீர வேண்டும்.

    ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி கூறுவது, என் மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டு அல்ல, என் அரசின் மீதானது. தனிப்பட்ட குற்றச்சாட்டு என்றால், நான் எங்கே, எப்போது, யாரிடம் பணம் வாங்கினேன் என்று தோண்டி பார்க்கட்டும்.

    இந்த குற்றச்சாட்டை சுப்ரீம் கோர்ட்டே நிராகரித்து விட்டது. இருந்தாலும், எந்த ஆதாரமும் இல்லாமல் பேசுகிறார்கள். அவர்களிடம் ஊடகங்கள் கேள்வி கேட்க வேண்டும்.

    எத்தனை அவதூறுகள் என் மீது வீசப்பட்டாலும், ராணுவத்துக்கு என்ன தேவையோ அதை வாங்கி தருவேன். எல்லாமே இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டும் என்று நினைத்ததுதான் நான் செய்த குற்றம்.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படியே, முத்தலாக் தடைக்கான அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. எண்ணற்ற இஸ்லாமிய நாடுகளில் கூட முத்தலாக் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, இது மத நம்பிக்கை சம்பந்தப்பட்டது அல்ல. ஆண்-பெண் சமத்துவம், சமூக நீதி சம்பந்தப்பட்டது.

    சபரிமலை பிரச்சினை என்பது பாரம்பரியம் தொடர்பானது. ஆண்கள் செல்லக்கூடாத கோவில்கள் கூட உள்ளன. அங்கு ஆண்கள் செல்வது இல்லை.

    சபரிமலை பற்றி தீர்ப்பு அளித்த சுப்ரீம் கோர்ட்டு அமர்வில் இடம்பெற்ற ஒரு பெண் நீதிபதி, சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என தனியாக தீர்ப்பு எழுதி உள்ளார். அவரது தீர்ப்பை கவனமாக படிக்க வேண்டும். அதுபற்றியும் விவாதம் நடத்த வேண்டும். இப்பிரச்சினையை எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்புபடுத்தக்கூடாது.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். #PMModi #Rajinikanth #kamalhassan
    Next Story
    ×