search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Income Tax Department"

    • அமலாக்கத்துறை சார்பில் அசோக்குக்கு 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
    • வருகிற 27-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று மூன்றாவது சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் உள்ளிட்டோரின் வீடுகளில் முதலில் வருமான வரி சோதனையும், பின்னர் அமலாக்கத்துறை சோதனையும் நடைபெற்றது.

    இது தொடர்பாக அசோக் நேரில் ஆஜராகுமாறு இந்த 2 துறைகளின் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. கடந்த மாதம் 20ம் தேதிக்கு முந்தைய வாரமே அசோக்குக்கு சம்மன் அனுப்பப்பட்டு நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை அலுவலகங்களில் அசோக் கடந்த ஜூன் 20ம் தேதி ஆஜராகவில்லை. ஆனால், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக தேவையான ஆவணங்களை திரட்டவேண்டி இருப்பதால் வேறு ஒரு நாளில் ஆஜராகிறேன் என அசோக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

    அமலாக்கத்துறை சார்பில் அசோக்குக்கு 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால், மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையினர் முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் 3-வது முறையாக அசோக்குமாருக்கு வருமானவரிதுறை அதிகாரிகள் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். வருகிற 27-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • முதிர்வு காலம் முடிந்த பின்னரும் பல முதலீட்டுத்தாரர்கள் அதற்கான பணத்தை வாங்க வராமல் இருந்ததும் தெரியவந்தது.
    • முதலீட்டுதாரர்கள் பற்றிய பட்டியலை வருமான வரித்துறை அதிகாரிகள் திரட்டினர்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் வருமான வரி ஏய்ப்பை தடுக்க வருமான வரித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இது தொடர்பாக வருமான வரித்துறை நடத்திய ஆய்வில் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ள தேசிய சேமிப்பு பத்திரம் மற்றும் சிறுசேமிப்பு திட்டங்களில் ஏராளமானோர் பணம் முதலீடு செய்திருப்பதை கண்டு பிடித்தனர்.

    இவர்களின் முகவரிகளை ஆய்வு செய்த போது அவற்றில் பலவும் போலி என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வருமான வரித்துறை அதிகாரிகள், இந்த முதலீடுகள் குறித்த முழு விபரங்களையும் தபால் துறையிடம் கேட்டு வாங்கியது.

    தபால் துறை அளித்த தகவல்களின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தபால் துறையின் சிறுசேமிப்பு திட்டம் மற்றும் தேசிய சேமிப்பு பத்திரம் ஆகியவற்றில் முதலீடு செய்தவர்களில் பலரும் தங்கள் குழந்தைகள் பெயரிலும், வீட்டில் வேலை செய்வோர் உள்பட பினாமிகள் பேரிலும் முதலீடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் முதிர்வு காலம் முடிந்த பின்னரும் பல முதலீட்டுத்தாரர்கள் அதற்கான பணத்தை வாங்க வராமல் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த முதலீட்டுதாரர்கள் பற்றிய பட்டியலை வருமான வரித்துறை அதிகாரிகள் திரட்டினர்.

    இது தொடர்பாக வருமான வரித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, தேசிய சேமிப்பு பத்திரம் மற்றும் சிறுசேமிப்பு திட்டங்களில் பினாமி பெயர்களில் பலர் முதலீடு செய்துள்ளனர். குறிப்பாக ரூ. 50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பணம் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.

    இவர்களில் முதல் கட்டமாக 150 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தபால் நிலையங்களிலும் முதலீட்டாளர்கள் குறித்த விபரங்கள், அவர்களின் ஆவணங்களை உடனே சரிப்பார்க்கவும் உத்தரவிட்டுள்ளோம், என்றார்.

    இந்த நடவடிக்கைக்கு பிறகு மேலும் பலருக்கு வருமான வரித்துறை நோட்டீசு அனுப்பும் என்று தெரிகிறது.

    • வருமான வரி கணக்குகளைப் பெற்று அவற்றை சரிபார்க்கும் பணி விரைவாக்கப்பட்டுள்ளது.
    • இந்த ஆண்டில் மார்ச் 31-ந் தேதி 24 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான வருமான வரி கணக்குகள் தாக்கலாகின.

    புதுடெல்லி :

    வருமான வரித்துறை சார்பில் ஆன்லைனில் நடந்த 'சம்வாத்' அமர்வில், சி.பி.டி.டி. என்று அழைக்கப்படுகிற மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் வெளியிட்ட முக்கிய தகவல்கள்:-

    * வருமான வரி கணக்குகளைப் பெற்று அவற்றை சரிபார்க்கும் பணி விரைவாக்கப்பட்டுள்ளது.

    * வருமான வரி கூடுதலாக செலுத்தி இருந்தால் அவற்றை திரும்பச்செலுத்துவதற்கான (ரீபண்ட்) அவகாசம் கடந்த 2021-22-ம் ஆண்டில் 26 நாட்களாக இருந்தது. அது 2022-23-ம் ஆண்டில் 16 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

    * வருமான வரி கணக்கு தாக்கல் செய்த நாளிலேயே அது தொடர்பான செயல்முறைகளை செய்து முடிப்பது 100 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021-22-ம் ஆண்டில் இது 21 சதவீதமாக இருந்தது. 2022-23 நிதி ஆண்டில் இது 42 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது.

    * கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ந் தேதியன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 22 லட்சத்து 94 ஆயிரம் கணக்குகளின் செயல்முறைகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

    * இந்த ஆண்டில் மார்ச் 31-ந் தேதி 24 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான வருமான வரி கணக்குகள் தாக்கலாகின. ரூ.2,480 கோடி கூடுதல் வரியாக வசூலாகி உள்ளது.

    * கடந்த நிதி ஆண்டின் இறுதியில் (மார்ச் 31, 2023) 4 லட்சத்துக்கும் அதிகமான முகமற்ற மதிப்பீடுகள் (ஆன்லைன் வழியான மதிப்பீடுகள்) நிறைவு அடைந்துள்ளது.

    * 2021-22 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022-23 நிதி ஆண்டில், முகமற்ற மதிப்பீடுகள் தொடர்பான குறைபாடுகள் 60 சதவீதம் குறைந்துள்ளது.

    * முகமற்ற மதிப்பீடுகள் வழியாக 1 லட்சத்துக்கும் அதிகமான மேல்முறையீடுகளில் தீர்வு காணப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மருத்துவமனைக்குள் நுழைந்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
    • இந்த சோதனை இரவு வரை நீடித்தது.

    ஈரோடு, மே. 10-

    ஈரோடு பெருந்துறை ரோட்டில் பிரபல தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு நேற்று மதியம் 4 கார்களில் 20-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்வதற்காக வந்தனர்.

    மருத்துவமனைக்குள் நுழைந்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரம் மருத்துவ சிகிச்சைக்கு இடையூறு ஏற்படுத்தாமல் அதிகாரிகள் தங்களது சோதனைகளை நடத்தினர்.

    மருத்துவமனையில் தலைவர், நிர்வாக இயக்குனர் ஆகியோர் அறையிலும் நிர்வாக அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனையிட்டனர். அங்குள்ள கோப்புகளை பார்வையிட்ட அதிகாரிகள் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தனர்.

    இந்த சோதனை இரவு வரை நீடித்தது. அதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் சென்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தனியார் மருத்துவமனையில் வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கருமுட்டை விற்பனை வழக்கில் இந்த தனியார் மருத்துவமனையின் கருத்தரித்தல் மைய ஆய்வகத்துக்கு ஏற்கனவே சீல் வைக்கப்பட்டது.

    பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த சீல் அகற்றப்பட்டு ஆய்வகம் தற்போது மீண்டும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வருமான வரித்துறையினர் இந்த தனியார் மருத்துவமனையில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கடந்த 1990 முதல் 1996-ம் ஆண்டு வரை குமரி மாவட்ட அரசு ரப்பர் கழகத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றி வந்தார்.
    • வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துகளை முடக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்தவர் சிவனய்யா (வயது 62).

    இவர் கடந்த 1990 முதல் 1996-ம் ஆண்டு வரை குமரி மாவட்ட அரசு ரப்பர் கழகத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றி வந்தார். அப் போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சிவனய்யா மீது குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. பின்னர் கடந்த மாதம் இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு கூறினார்.

    இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிவனய்யாவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துகளை முடக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. இந்நிலையில் சிவனய்யாவின் சொத்துகளை போலீசார் முடக்கம் செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப் பிரண்டு ஹெக்டர் தர்மராஜ் கூறியதாவது:-

    அரசு ரப்பர் கழக அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்றவர் சிவனய்யா. இவர் பணியில் இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் குவித்துள்ளார். கடந்த 1990 முதல் 1996-ம் ஆண்டில் நாகர்கோவில், ராஜாக்கமங்கலம் ஆகிய பகுதிகளில் அன்றைய காலக்கட்டத்தில் ரூ.8 லட்சம் மதிப்பிலான நிலங்களை வாங்கி உள்ளார். இதற்கான கணக்கு சரியாக காண்பிக்கப்படவில்லை. தற்போது இந்த சொத்துகளின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி முதல் ரூ.4 கோடி வரை இருக்கும்.

    இந்த நிலங்கள் சுமார் 14 இடங்களில் உள்ளன. இவற்றை தற்போது கோர்ட்டு உத்தரவின் பேரில் முடக்கம் செய்துள்ளோம். இதுதொடர்பாக அந்தந்த பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு முடக்கப் பட்ட நிலங்களின் விவரம் குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அந்த சொத்துகள் அனைத் தையும் பயன்படுத்தவும், விற்கவும் முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

    • வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் உள்பட முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளோம்.
    • வருவாயை கணக்கிடுவதில் விதிமீறல் நடைபெற்றுள்ளது

    புதுடெல்லி:

    கடந்த 14-ந்தேதி டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் உள்ள பி.பி.சி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

    பி.பி.சி. அலுவலகங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது. இந்த நிலையில் பி.பி.சி அலுவலகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு தொடர்பாக வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.

    கணக்கில் காட்டிய வருவாயும், பிபிசி நிறுவனத்தின் செயல்பாடுகளும் முரணாக உள்ளதாக அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

    வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் உள்பட முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாகவும் வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

    டிவி, டிஜிட்டல், ரேடியோ என பிபிசி செய்திகள் மூலம் வரும் வருவாயை கணக்கிடுவதில் விதிமீறல் நடைபெற்றுள்ளது என்றும் ஆய்வின் போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.

    • 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
    • சென்னையில் மணலி, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் 60 இடங்களில் இன்று வருமான வரி சோதனை நடைபெற்றது.

    ஓட்டல் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் 4 நிறுவனங்களை குறிவைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை 7 மணியில் இருந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னையை தலைமையிடமாக கொண்ட அசோக் ரெசிடென்சி ஓட்டலுக்கு சொந்தமான இடங்களுக்கு இன்று காலையில் தனித்தனியாக பிரிந்து சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையை மேற்கொண்டனர். பூந்தமல்லி அருகே உள்ள அய்யப்பன் தாங்கலில் அசோக் ரெசிடென்சி ஓட்டலின் தலைமையகம் உள்ளது. இங்கும் அண்ணாநகரிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த ஓட்டலின் உரிமையாளராக அசோக் என்பவர் உள்ளார்.

    அண்ணா நகர் மேற்கு 6-வது அவென்யூவில் அசோக்கின் வீடு உள்ளது. இவரது வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 3 கார்களில் சென்ற அதிகாரிகள் சரியாக காலை 7 மணிக்கு தங்களது சோதனையை தொடங்கினார்கள். இந்த சோதனையின்போது வீட்டில் இருந்து யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. வெளியில் இருந்தும் யாரும் வீட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

    இதேபோன்று ஆதித்யராம், அம்பாலால் மற்றும் இன்னொரு நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த நிறுவனங்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் ஆகும். சென்னையில் இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 20 இடங்களில் அதிரடி சோதனை நடந்தது.

    வேலூரை தலைமையிடமாகக் கொண்டு அம்பாலால் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் வேலூர் பழைய பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது. குடியாத்தத்தை சேர்ந்த ஜவுரிலால் ஜெயின் இதனை நடத்தி வருகிறார்.

    இந்தநிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 30க்கும் மேற்பட்டோர் இன்று காலை அம்பாலால் கட்டுமான நிறுவன அலுவலகத்திற்கு வந்தனர். உள்ளே சென்றதும் கதவுகளை அடைத்துவிட்டு சோதனை நடத்தினர். அங்கிருந்த முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

    வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடந்தபோது உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை. அலுவலகத்தின் வாசலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதன் உரிமையாளர் குடியாத்தம் சந்தைப்பேட்டையில் வசித்து வருகிறார். அங்குள்ள அவரது வீட்டிலும் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் 10 பேர் அதிரடியாக நுழைந்தனர். அங்கிருந்த முக்கிய ஆவணங்களை அவர்கள் கைப்பற்றினார்.

    இது தொடர்பாக ஜவுரி லால் ஜெயின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

    சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆதித்ய ராம் குழுமத்துக்கு சொந்த மாக ரெசிடென்சி உள்ளிட்டவைகளும் உள்ளன. கிழக்கு கடற்கரை சாலை கேளம்பாக்கத்தில் உள்ள ரெசிடென்சி மற்றும் புதுப்பாக்கத்தில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது.

    அசோக் ரெசிடென்சி ஓட்டல், ஆதித்யராம் குழு மம், அம்பாலால் உள்ளிட்ட 4 நிறுவனங்களும் சொத்துக்களை வாங்கியதில் முறைகேடு செய்திருப்பதாகவும் வருமான வரி கணக்குகளை சரியாக காட்டவில்லை என்றும் வருமான வரி துறைக்கு புகார்கள் வந்துள்ளன.

    இதன் அடிப்படையிலேயே வருமான வரி துறை அதிகாரிகள் இன்று 60 இடங்களை குறிவைத்து ஒரே நேரத்தில் சோதனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையின்போது வரி ஏய்ப்பு தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரி ஏய்ப்பு செய்திருக்கும் நிறுவனங்கள் எத்தனை கோடியை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளன? என்பது பற்றிய விவரங்களை இன்று மாலையில் வருமான வரித்துறையினர் வெளியிட உள்ளனர். அப்போதுதான் வரி ஏய்ப்பு தொடர்பாக முழுமையான விவரங்கள் தெரிய வரும் என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    • கோலியஸ் மூலிகை கிழங்கில் இருந்து பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
    • சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக தெரிகிறது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் ஈஸ்வரமூர்த்தி பாளையத்தைச் சேர்ந்தவர் இ.கே.பெரியசாமி. இவர் நாமகிரிப்பேட்டை ஒன்றிய பா.ம.க. செயலாளராகவும், நாமகிரிப்பேட்டை ஒன்றிய குழு துணை தலைவராகவும் இருந்து வருகிறார்.

    இவர் திம்ம நாயக்கன்பட்டி அருகில் கோலியஸ் மூலிகை கிழங்கில் இருந்து பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு தயாரிக்கப்படும் கிழங்கு பவுடரை பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு அனுப்பி வைத்து வருகிறார். அந்த நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக இ.கே.பெரியசாமியின் தொழிற்சாலையில் கர்நாடகா மற்றும் சேலத்தை சேர்ந்த வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து நேற்றும் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக தெரிகிறது.

    • அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர்.
    • முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி. பாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு.

    நாமக்கல்

    நாமக்கல் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    கே.பி.பி.பாஸ்கர் பணி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ. 4.72 கோடி மதிப்பிலான சொத்துக்களை சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இவர் அவரது பெயரிலும் மனைவி பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாகவும், 31.5% சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றார்.

    ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சோதனை நடைபெறுவதாகவும் விளக்கம்.

    • வருமான வரி அதிகாரி பணியிடமானது முற்றிலும் பதவி உயர்வால் நிரப்பப்படுகிறது.
    • வருமான வரித்துறையில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளிக்கும் இடைத்தரகர்கள்.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான கூடுதல் வருமான வரி ஆணையர் வித்யாதர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    வருமான வரித்துறையில், வருமான வரி அதிகாரியின் பணியில் சேர்வதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளிட்டவைகளுடன் கூடிய கடிதம், தமிழகத்தில் சிலருக்கு வழங்குவதாக வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்படுவதாக தெரிகிறது.

    வருமான வரி அதிகாரி பணியிடமானது முற்றிலும் பதவி உயர்வால் நிரப்பப்படுகிறது. மேற்படி பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்பு இல்லை எனவும் இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. மேலும், வருமான வரித்துறையில் உள்ள பல்வேறு அரசிதழ் அல்லாத பணிகளுக்கான ஆட்சேர்ப்பு, மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் மேற்கொள்ளப்படுகிறது.

    வருமான வரித்துறையில் உள்ள 'குரூப் ஏ' பதவிகளுக்கான அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான செயல்முறை, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது என்றும் தெளிவுபடுத்தப்படுகிறது.

    ஆகவே, பொது மக்கள், பணியாளர் தேர்வாணையம், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களைப் பார்க்குமாறும், ஆட்சேர்ப்பு செயல்முறை குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், சம்பந்தப்பட்ட அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    வருமான வரித்துறையில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளிக்கும் இடைத்தரகர்கள், நிறுவனம் அல்லது அமைப்புகளின் வலையிலும் விழ வேண்டாம்.

    மேலும் மின் அஞ்சல் மூலமாகவோ அல்லது வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாகவோ பெறப்படும் தவறான விளம்பரங்கள், கடிதங்கள் மூலமாகத் தெரிவிக்கப்படும் இதுபோன்ற போலியான செய்திகளுக்கு பொதுமக்கள் இறையாகி விட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த அ.தி.மு.க. எம்.பி.யின் சூட்கேசில் கட்டுக்கட்டாக ரூ.25 லட்சம் இருந்தது. இது தொடர்பாக அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு நேற்று இரவு 8.15 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் ஆரணி தொகுதி அ.தி.மு.க. எம்.பி. ஏழுமலை வந்தார்.

    டெல்லி விமான நிலையத்தில் அவரது உடைமைகளை சோதனை செய்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரது சூட்கேசில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை கண்டுபிடித்தனர். உடனே சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்படி அந்த விமானம், சென்னையில் தரை இறங்கியதும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் ஏழுமலை எம்.பி.யை தடுத்து நிறுத்தி, அவரது சூட்கேசை சோதனை செய்தனர். அதில் ரூ.25 லட்சம் வரை இருந்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி சென்னை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் சென்னை விமான நிலையம் விரைந்து வந்து அ.தி.மு.க. எம்.பி.யிடம் விமான நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது ஏழுமலை எம்.பி. மகளின் படிப்பு செலவுக்காக இந்த பணத்தை கொண்டு வந்ததாக கூறி அதற்கான உரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் காண்பித்தனர்.

    பின்னர் ஒரு மணி நேர விசாரணைக்கு பின் வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை பணத்துடன் செல்ல அனுமதித்தனர்.

    இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வேலூர் எம்.பி. தொகுதி தேர்தல் இந்த மாதம் நடைபெற வாய்ப்பு இல்லை. ஓட்டு எண்ணிக்கை முடிந்து 2 மாதம் கழித்து தான் தேர்தல் நடைபெறும் என தெரிகிறது.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தேர்தலின் போது முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

    அப்போது அவருக்கு நெருங்கிய நண்பர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியதில் புத்தம் புதிய பணம் கட்டுக்கட்டாக, பெட்டி பெட்டியாக கோடிக்கணக்கில் கைப்பற்றப்பட்டது.

    இதைத் தொடர்ந்து வேலூர் தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர்கள், வருமான வரித்துறையினர் தனித்தனியாக தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பினர்.

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை பெற்று தேர்தல் ஆணையத்துக்கு விரிவான அறிக்கையை சமர்ப்பித்தார்.

    இதை ஆய்வு செய்த தேர்தல் கமி‌ஷன் வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்தது. மீண்டும் எப்போது தேர்தல் நடைபெறும் என்பதை அறிவிக்காமல் உள்ளது.

    இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பிடிபட்ட பணம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.



    இந்த பணம் எந்த வங்கியில் இருந்து யாருடைய கணக்கில் இருந்து பெறப்பட்டது? எதற்காக 200 ரூபாயாக கட்டு கட்டாக வாங்கினார்கள் போன்ற விபரங்களுக்காக பலரிடம் விசாரிக்க வேண்டி உள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இந்த விசாரணை முடிந்த பிறகு தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித்துறையினர் தகவல் தெரிவிப்பார்கள். அதை ஆய்வு செய்த பிறகு தான் வேலூர் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமி‌ஷன் மேற்கொள்ளும்.

    எனவே இந்த மாதத்தில் வேலூரில் தேர்தல் நடத்த முடியாது. தேர்தல் நடத்த குறைந்தது 2 மாதங்கள் ஆகலாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    ×