என் மலர்
நீங்கள் தேடியது "post office"
- நாடு முழுவதும் அரசு ஓய்வூதியர்களுக்கு ஆயுள் சான்று வழங்கும் பணியை தபால் துறை மேற்கொண்டுள்ளது.
- அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையரிடம் நேரடியாகச்சென்று இச்சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
உடுமலை :
கிராம கோவில் பூசாரிகளுக்கு, தபால் நிலையம் வாயிலாக ஆயுள் சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவில் பூசாரிகள் நலச்சங்கத்தின் மாநிலத்தலைவர் வாசு கூறியதாவது:-
நாடு முழுவதும் அரசு ஓய்வூதியர்களுக்கு ஆயுள் சான்று வழங்கும் பணியை தபால் துறை மேற்கொண்டுள்ளது. தபால் நிலைய ஊழியர்கள், வீடு தேடிச்சென்று ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தி, ஓய்வூதியர்களின் ஆயுள் சான்றுகளை டிஜிட்டல் முறையில் வழங்கி வருகின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ், கிராமப்புற கோவில்களில் பணியாற்றி, 60 வயது கடந்த ஓய்வு பெற்ற பூசாரிகள், வங்கிகள் வாயிலாக ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.அரசு ஓய்வூதியர்களை போன்று, ஆண்டுதோறும் இவர்களும் ஆயுள் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
அதன்படி, அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையரிடம் நேரடியாகச்சென்று இச்சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.கிராமப்புறங்களில் வசிக்கும் வயதான பூசாரிகள், தொலைவில் உள்ள உதவி ஆணையர் அலுவலகங்களுக்கு சென்று வருவது சிரமமானது.
இதுபோன்றவர்கள், ஆயுள் சான்று பெறுவது என்பது மிகுந்த சிரமமானது. எனவே அரசு ஓய்வூதியர்களை போன்றே கோவில் பூசாரிகளுக்கும் தபால் நிலையம் வாயிலாக, ஆயுள் சான்று கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
- வள்ளியூர் பஸ் நிலையத்தில் கிளை அஞ்சல் நிலையம் கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளது.
- தொடர்ந்து பஸ் நிலையத்தின் அருகில் கிளை அஞ்சல் நிலையம் செயல்படவேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி, வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர்.
வள்ளியூர்:
வள்ளியூர் பஸ் நிலையத்தில் கிளை அஞ்சல் நிலையம் கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளது. இந்த அஞ்சலகத்தில் தினமும் 100க்கும் மேற்பட்ட பதிவு தபால், மணிஆர்டர் சேவைகள் செய்யப்பட்டு வந்தது. இது தவிர இந்த கிளை அஞ்சல் அலுவலகத்தில் 500-க்கும் அதிகமான சிறுசேமிப்பு கணக்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் தினமும் அஞ்சல் தலை விற்பனை உள்ளிட்ட அஞ்சலக பணிகள் நடைபெற்று வந்தது. பஸ் நிலையத்திற்குள் அஞ்சலகம் செயல்பட்டு வந்ததால் வெளியூர் பயணிகள் மற்றும் வியாபாரிகளுக்கு அதிக பயனுள்ளதாக இருந்து வந்தது. இந்நிலையில் வள்ளியூர் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதனை அடுத்து பஸ் நிலையத்தில் செயல்பட்டு வந்த கடைகள், புறக்காவல் நிலையம், நூலகம், அஞ்சலகம் அனைத்தும் காலி செய்யப் பட்டு வெளியேற்றப் பட்டுள்ளது.
இதில் கடை வியாபாரிகளுக்கு பஸ் நிலையத்தின் வெளிப் பகுதியில் சாலையை யொட்டி தற்காலிகமாக கடைகள் அமைத்து கொடுக்கப் பட்டு அதில் வியாபாரங்கள் நடந்து வருகிறது. கிளை அஞ்சல கத்திற்கும் தற்காலிக அறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அஞ்சல் பணியாளர்கள் இந்த தற்காலிக இடத்தில் செயல்படமுடியாது என கூறி கிளை அஞ்சலகத்தை வள்ளியூர் தலைமை அஞ்சல கத்துடன் இணைத்துவிட முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு வள்ளியூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து பஸ் நிலையத்தின் அருகில் கிளை அஞ்சல் நிலையம் செயல்படவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராதாபுரம் வட்டார செயலாளர் சேது ராமலிங்கம் பாளையங்கோட்டை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
வள்ளியூர் பஸ் நிலையத்தில் கடந்த 50 ஆண்டுகளாக கிளை அஞ்சல் நிலையம் செயல்பட்டு வந்துள்ளது. தற்போது பஸ் நிலையம் விரி வாக்கம் பணியை யொட்டி கிளை அஞ்சல் நிலையம் மூடப்பட்டு செயல்பட வில்லை. இதனால் இப்பகுதி யைச் சேர்ந்த நூற்றுக்கும்மேற்பட்ட பொது மக்கள், வியாபாரிகள், வெளியூர் பயணிகள் பாதிக்க ப்பட்டுள்ளனர். எனவே வள்ளியூர் பஸ் நிலையம் அருகிலேயே மாற்று இடத்தில் கிளை அஞ்சல் நிலையம் அமைத்து செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கோவையில் தபால் அலுவலகங்கள் மூலம் ரெயில்களில் பொதுமக்கள் பார்சல் அனுப்பும் வசதி தொடங்கியது.
- ரெயில்களுக்கான பார்சல் கட்டணம் வசூலிக்கப்படும்.
கோவை:
ரெயில்களில் சரக்கு பார்சல் அனுப்பும் வசதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இந்தநிலையில் பொதுமக்கள் தங்களது பொருட்களை தபால் அலுவலகங்கள் மூலம் ரெயில்களில் அனுப்பும் வசதி நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி தங்கள் பகுதியில் உள்ள தபால் அலுவலகங்களில் பொருட்களை கொடுத்து பதிவு செய்யலாம். ரெயில்களுக்கான பார்சல் கட்டணம் வசூலிக்கப்படும். நேற்று கோவையில் இருந்து சென்னை செல்லும் சதாப்தி ரெயில் மூலம் பார்சல் அனுப்பும் திட்டம் தொடங்கியது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, "816 கிலோ எடையுள்ள பொருட்களுக்கு ரூ.477 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதன்படி ரெயில்களின் தூரம், ஊர் ஆகியவற்றை பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படும். எவ்வளவு பொருட்களை வேண்டுமானாலும் தபால் அலுவலகங்கள் மூலம் அனுப்பி வைக்கலாம். பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களின் நலனை கருத்தில் கொண்டு இது செயல்படுத்தப்படுகிறது" என்று தெரிவித்ததனர்.
இந்த நிகழ்ச்சியில் சேலம் ரெயில்வே கோட்ட வர்த்தக பிரிவு அதிகாரி பாண்டுரங்கன் மற்றும் தபால்துறை அதிகாரி அகில் நாயர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். தொழில்துறையினர் கூறும்போது, "இந்த திட்டம் சிறு, குறுந்தொழில்முனைவோர்களுக்கு மிகவும் உதவிகரமாக அமையும். எந்த இடத்தில் பொருட்களை உற்பத்தி செய்கிறோமோ அந்த பகுதியில் உள்ள தபால் அலுவலகங்கள் மூலம் அனுப்புவதன் மூலம் நேரம் மிச்சமாகிறது. இதற்காக தபால்துறை மற்றும் ரெயில்வே துறைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்" என்று தெரிவித்தனர்.
- பாவூர்சத்திரம் தபால் அலுவலகத்தில் செல்வ மகள் சிறு சேமிப்பு திட்டம் தொடங்குவதற்கான முகாம் நாளை மறுநாள் (10-ந் தேதி) நடைபெறுகிறது.
- ஒரு வீட்டில் 10 வயதுக்குட்பட்ட 2 பெண் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கலாம்.
தென்காசி:
பாவூர்சத்திரம் தபால் அலுவலகத்தில் செல்வ மகள் சிறு சேமிப்பு திட்டம் தொடங்குவதற்கான முகாம் நாளை மறுநாள் (10-ந் தேதி) நடைபெறுகிறது.
10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் உள்ள அனைவரும் இந்த கணக்கை தொடங்கி தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒளிமய மாக்கலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்
ஒரு வீட்டில் 10 வயதுக்குட்பட்ட 2 பெண் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கலாம். ஆண்டுக்கு 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் 15 ஆண்டுகள் பணம் செலுத்தி விட்டு 21 வருடம் முடிவில் கணக்கை முடித்துக் கொள்ளலாம். இத்திட்டத்தில் செலுத்தும் தொகை மற்றும் முதிர்வுக்கு தொகை வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
ஒரு நிதியாண்டில் ரூ.1 லட்சம் வரை இந்த திட்டத்தின் கீழ் பணம் செலுத்தலாம். இத் திட்டத்தில் இணைய விருப்பமுள்ளவர்கள் பாவூர்சத்திரம் தபால் அலுவலகத்தில் அணுகி விண்ணப்பிக்கலாம் எனவும் பாவூர்சத்திரம் தபால்நிலைய அலுவலர் தெரிவித்துள்ளார்.
- மதுரை தலைமை தபால் நிலையத்தில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.
- இந்த சம்பவம் குறித்து தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
மதுரை
மதுரை தலைமை தபால் நிலையத்தில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மற்றொரு ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
பசுமலை புது அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது59). இவர் மதுரை மீனாட்சி பஜார் தலைமை தபால் அலுவலகத்தில் எம்.டி.எஸ். பிரிவில் வேலை பார்த்து வருகிறார். இதே அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியரை பத்மநாபன் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்தார். பெண் ஊழியர் பலமுறை அவரை எச்சரித்தும் கேட்கவில்லை.
பத்மநாபன் தொடர்ந்து பெண் ஊழியரிடம் தொல்லை செய்து வந்துள்ளார். மனமுடைந்த பெண் ஊழியர் இந்த சம்பவம் குறித்து தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மற்றொரு ஊழியர் பத்மநாபனை போலீசார் கைது செய்தனர்.
- இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
- தபால்காரர்கள், கிராம அஞ்சல் ஊழியரை தொடர்பு கொண்டு வங்கிக்கணக்கு தொடங்கலாம்.
திருப்பூர் :
ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற வசதியாக அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியுடன் இணைந்து அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் 9 ஆயிரத்து 302 மாணவர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாமல் இருந்தது. கடந்த 10 நாட்களாக பள்ளிகளில் நடந்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலமாக 2 ஆயிரத்து 157 மாணவர்களுக்கு இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 7 ஆயிரத்து 145 மாணவர்களுக்கு வருகிற 25-ந் தேதிக்குள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்கப்பட வேண்டும்.
பள்ளிகளில் நடக்கும் சிறப்பு முகாம்கள் மட்டுமில்லாமல் அருகில் உள்ள தபால் நிலையங்கள், தபால்காரர்கள், கிராம அஞ்சல் ஊழியரை தொடர்பு கொண்டு வங்கிக்கணக்கு தொடங்கலாம். தபால்காரர்கள், கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலமாக மாணவர்களின் ஆதார் எண், செல்போன் எண்ணை பயன்படுத்தி விரல் ரேகை மூலம் வங்கிக்கணக்கு தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் மூடப்பட்ட தபால் அலுவலகத்தை மீண்டும் அதே இடத்தில் செயல்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தினர்
- செல்போன்களின் தாக்கத்தால் தபால் சேவை குறைந்துள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகரில் வடக்கு 2-ம் வீதியில் மச்சுவாடி கிளை தபால் நிலையம் நீண்ட காலமாக செயல்பட்டு வந்தது. இதனை மச்சுவாடி, காமராஜபுரம், வண்டிப்பேட்டை, ஜீவா நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வந்தனர்.இந்த நிலையில் மச்சுவாடி கிளை தபால் நிலையம் தற்போது மாவட்ட தலைமை தபால் நிலைய அலுவலகத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.இதனை புதுக்கோட்டை நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குழு கண்டித்து உள்ளது.
இது பற்றி அவர்கள் கூறும் போது, மச்சுவாடி கிளை தபால் நிலையத்தை போன்று புதுக்கோட்டை நகரில் பல கிளை தபால் நிலையங்கள் மாவட்ட தபால் நிலையத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. இது தபால் நிலையத்தை பயன்படுத்தும் மக்களை அப்புறப்படுத்த கூடிய செயலாகும். மச்சுவாடி கிளையில் பணிபுரிந்த ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். மீண்டும் மச்சுவாடி கிளை தபால் நிலையம் அதே இடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
ஏற்கனவே புதிய பேருந்து நிலையம், சின்னப்பா பூங்கா செல்லும் வழியில் இயங்கி வந்த தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. செல்போன்களின் தாக்கத்தால் தபால் சேவை குறைந்துள்ளது. ஆனால் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கும், அலுவல் ரீதியிலான தபால்கள் அனுப்புவதற்கும் தபால் அலுவலகங்களை மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கிளை தபால் அலுவலகங்கள் தொடர்ச்சியாக மூடப்பட்டு வருவது மக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.
- அஞ்சல் ஊழியர் சங்கம் ஆகியவற்றின் அங்கீ காரத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
- கலியமூர்த்தி, சுப்பிரமணியன், ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி:
தபால் ஊழியர்களின் அகில இந்திய அமைப்பான தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம் மற்றும் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆகியவற்றின் அங்கீ காரத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
இதை கண்டித்து புதுவை தலைமை தபால்நிலையம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன அழைப்பின்படி நடந்த போராட்டத்தில் புதுவை சங்க நிர்வாகிகள் சேகர், கலியமூர்த்தி, சுப்பிரமணியன், ராமகி ருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1000, அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
- ஜூன் 30ந் தேதி வரை இத்திட்டத்தில் இணைய அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர்:
பெண்கள், குழந்தைகள் பெயரில் முதலீடு செய்யும் வகையில் மகளிா் மேன்மை சேமிப்பு பத்திர திட்டம் அஞ்சல் அலுவலகங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்லடம் அஞ்சல் துறை சாா்பில் விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மகிளா சம்மன் சேவிங் எனப்படும் மகளிா் மேன்மை சேமிப்புப் பத்திரத் திட்டம் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பெயரில் சேமிப்புக் கணக்கை தொடங்கி முதலீடு செய்யலாம்.
இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1000, அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். காலாண்டுக்கு ஒரு முறை 7.5 சதவீதம் கூட்டு வட்டி வழங்கப்படுகிறது. சேமிப்புப் பணத்தில் 40 சதவீதத்தை ஓராண்டுக்குப் பின் எடுத்துக் கொள்ளலாம்.
இத்திட்டத்தின் முதிா்வு காலம் இரண்டு ஆண்டுகள். கணக்குதாரா் அல்லது பாதுகாவலா் இறந்தாலும், கணக்குதாரா் கடும் நோய்வாய்ப்பட்டாலும் ஆவணங்களை சமா்ப்பித்து முன்முதிா்வு செய்ய முடியும். ஜூன் 30ந் தேதி வரை இத்திட்டத்தில் இணைய அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து மேலும் விவரங்களை அறிந்து கொள்ள திருப்பூா் தலைமை அஞ்சல் அலுவலகத்தையோ அல்லது அந்தந்த பகுதி கிளை அஞ்சல் அலுவலகங்களையோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முதிர்வு காலம் முடிந்த பின்னரும் பல முதலீட்டுத்தாரர்கள் அதற்கான பணத்தை வாங்க வராமல் இருந்ததும் தெரியவந்தது.
- முதலீட்டுதாரர்கள் பற்றிய பட்டியலை வருமான வரித்துறை அதிகாரிகள் திரட்டினர்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் வருமான வரி ஏய்ப்பை தடுக்க வருமான வரித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இது தொடர்பாக வருமான வரித்துறை நடத்திய ஆய்வில் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ள தேசிய சேமிப்பு பத்திரம் மற்றும் சிறுசேமிப்பு திட்டங்களில் ஏராளமானோர் பணம் முதலீடு செய்திருப்பதை கண்டு பிடித்தனர்.
இவர்களின் முகவரிகளை ஆய்வு செய்த போது அவற்றில் பலவும் போலி என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வருமான வரித்துறை அதிகாரிகள், இந்த முதலீடுகள் குறித்த முழு விபரங்களையும் தபால் துறையிடம் கேட்டு வாங்கியது.
தபால் துறை அளித்த தகவல்களின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தபால் துறையின் சிறுசேமிப்பு திட்டம் மற்றும் தேசிய சேமிப்பு பத்திரம் ஆகியவற்றில் முதலீடு செய்தவர்களில் பலரும் தங்கள் குழந்தைகள் பெயரிலும், வீட்டில் வேலை செய்வோர் உள்பட பினாமிகள் பேரிலும் முதலீடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் முதிர்வு காலம் முடிந்த பின்னரும் பல முதலீட்டுத்தாரர்கள் அதற்கான பணத்தை வாங்க வராமல் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த முதலீட்டுதாரர்கள் பற்றிய பட்டியலை வருமான வரித்துறை அதிகாரிகள் திரட்டினர்.
இது தொடர்பாக வருமான வரித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, தேசிய சேமிப்பு பத்திரம் மற்றும் சிறுசேமிப்பு திட்டங்களில் பினாமி பெயர்களில் பலர் முதலீடு செய்துள்ளனர். குறிப்பாக ரூ. 50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பணம் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.
இவர்களில் முதல் கட்டமாக 150 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தபால் நிலையங்களிலும் முதலீட்டாளர்கள் குறித்த விபரங்கள், அவர்களின் ஆவணங்களை உடனே சரிப்பார்க்கவும் உத்தரவிட்டுள்ளோம், என்றார்.
இந்த நடவடிக்கைக்கு பிறகு மேலும் பலருக்கு வருமான வரித்துறை நோட்டீசு அனுப்பும் என்று தெரிகிறது.
- தபால் நிலையத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் முற்றிலும் இந்தி மொழியில் ஒரு அறிவிப்பு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
- போஸ்டரை தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒட்ட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளாத்திகுளம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மதுரை சாலையில் உள்ள தனியார் கட்டிடத்தில் முதல் தளத்தில் விளாத்திகுளம் கிளை தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பெரும்பாலானோர் பதிவு தபால், விரைவு தபால் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெறுவதற்கு இந்த தபால் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். தற்போது ஆதார் திருத்த பணிகளும் தபால் அலுவலகத்தில் நடை பெறுவதால் இங்கு தினமும் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் அந்த தபால் நிலையத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் முற்றிலும் இந்தி மொழியில் ஒரு அறிவிப்பு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதனை அங்கு வந்த கிராம மக்கள் பலரும் பார்த்து விட்டு குழப்பம் அடைந்து வருகின்றனர்.
அந்த அறிவிப்பு குறித்து தபால் அலுவலக ஊழியர்களிடம் கேட்ட போது, இணைய வழியில் மோசடி செய்பவர்களை புகார் செய்வதற்கான இணையதளம் பற்றிய தகவலும், அதற்கான இலவச தொலைபேசி எண்ணும் மற்றும் அதற்கான வழிமுறைகளும் குறித்து அதில் விளக்கபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
விளாத்திகுளம் தபால் அலுவலகத்தை பயன்படுத்தி வரும் அப்பகுதி கிராம மக்களுக்கு இந்தி தெரியாததால் தபால் அலுவலகம் முன்பு ஒட்டப்பட்டுள்ள இந்தி வழிகாட்டு முறை போஸ்டரால் எந்த பயனும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட தபால் துறையினர் இணைய வழி புகார், இணையதளம் மற்றும் தொலைபேசி எண், வழிகாட்டி முறைகள் அடங்கிய போஸ்டரை தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒட்ட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மகளிர் மேன்மை சேமிப்பு திட்டம் மகளிர் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.
- 2 வருடம் கழித்து 7.5 சதவீதம் வட்டியுடன் பணம் திரும்ப கிடைக்கும்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் தலைமை தபால் அலுவலகத்தில் மகளிர் மேன்மை சேமிப்பு பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை அஞ்சலக அதிகாரி முத்துமாரி தலைமை தாங்கினார். உதவி தலைமை அஞ்சலக அதிகாரிகள் மகேஸ்வரன், கோமதிசங்கர் முன்னிலை வகித்தனர். இதில் சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி கலந்து கொண்டு மகளிர் மேன்மை சேமிப்பு பத்திரங்களை வழங்கினார்.
இது குறித்து அஞ்சலக அதிகாரிகள் கூறுகையில், இந்த திட்டமானது மகளிர் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். இதில் 2 வருடங்களுக்கு ரூ. 1000 முதல் ரூ. 2 லட்சம் வரை டெபாசிட் செய்தால் 2 வருடம் கழித்து 7.5 சதவீதம் வட்டியுடன் பணம் திரும்ப கிடைக்கும். ஒருவர் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்கலாம். முதல் கணக்கு தொடங்கி 3 மாதம் ஆன பின்னர் தான் அடுத்த கணக்கு தொடங்க முடியும்.
இந்த சேமிப்பில் ஒரு வருடம் கழித்து 40 சதவீதம் பணத்தை எடுத்து கொள்ளலாம். கணக்கு தொடங்கப்பட்டு 6 மாத காலத்தில் கணக்கை முதிர்வு செய்தால் வட்டி குறைத்து 5.5 சதவிகிதம் வழங்கப்படும். கணக்கு வைத்து இருப்பவர்கள் இறந்தாலோ அல்லது அவர்களது பாதுகாவலர்கள் இறந்தாலோ கணக்கு வைத்திருப்பவர்கள் நோய்வாய்ப் பட்டாலோ உரிய ஆவணங்களை கொடுத்து 7.5 சதவீத வட்டியுடன் பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என தெரிவித்தனர். இதில் நகராட்சி கவுன்சிலர்கள் செல்வராஜ், மாரிசாமி, இளைஞரணி சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.