search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hyderabad"

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் தமிழ்நாடு அணி 2 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்துள்ளது. அபினவ் முகுந்த் சதமடித்து அசத்தினார். #RanjiTrophy #AbhinavMukund
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலியில் நடக்கும் ஆட்டத்தில் தமிழ்நாடு - ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.

    டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். 4-வது விக்கெட்டுக்கு அக்‌சாத் ரெட்டி உடன் பவனகா சந்தீப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் சதமடித்தனர்.

    சந்தீப் 130 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 246 ரன்கள் சேர்த்தது. அக்சாத் ரெட்டி அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்து 250 ரன்னில் அவுட்டானார். இறுதியில், ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 565 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    தமிழ்நாடு அணி சார்பில் எம்.மொகமது 3 விக்கெட்டும், விக்னேஷ், ரஹில் ஷா தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கவுசிக் காந்தி 24 ரன்னிலும், பாபா அபராஜித் 4 ரன்னிலும் அவுட்டாகினர். மறுபுறம், அபினவ் முகுந்த் நிதானமாக விளையாடி சதமடித்தார்.

    இறுதியில், மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 79 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்துள்ளது. அபினவ் முகுந்த் 101 ரன்களுடனும், பாபா இந்திரஜித் 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். #RanjiTrophy #AbhinavMukund
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணிக்கெதிராக ஐதராபாத் இரண்டாம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 523 ரன்கள் சேர்த்துள்ளது. கேப்டன் அக்சாத் ரெட்டி இரட்டை சதம் அடித்து அசத்தினார். #RanjiTrophy #AkshathReddy
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது சுற்று நேற்று தொடங்கியது. திருநெல்வேலியில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் தமிழ்நாடு - ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.

    டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது. டேன்மே அகர்வால், கேப்டன் அக்‌சாத் ரெட்டி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டேன்மே அகர்வால் 10 ரன்னிலும், ரோகித் ராயுடு 13 ரன்னிலும், ஹிமாலே அகர்வால் 29 ரன்னிலும் அவுட்டாகினர்.
     
    4-வது விக்கெட்டுக்கு அக்‌சாத் ரெட்டி உடன் பவனகா சந்தீப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அக்‌சாத் ரெட்டி சதம் அடிக்க சந்தீப் அரைசதம் அடித்தார். இருவரும் முதல்நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். அக்‌சாத் ரெட்டி 114 ரன்களுடனும், சந்தீப் 74 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சந்தீப் பொறுப்புடன் விளையாடி சதமடித்தார். அவர் 130 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 246 ரன்கள் சேர்த்தது. அக்சாத் ரெட்டி அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் உள்ளார். 

    இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஐதராபாத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 523 ரன்கள் எடுத்துள்ளது. அக்சாத் ரெட்டி 248 ரன்களுடனும், சாமா மிலிந்த் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    தமிழ்நாடு அணி சார்பில் விக்னேஷ், எம் முகமது, ரஹில் ஷா தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்கள். #RanjiTrophy #AkshathReddy
    தெலுங்கானாவில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஐதராபாத் பெயரை பாக்யா நகர் என்று மாற்றுவோம் என தேர்தல் பிரசாரத்தில் ராஜாசிங் தெரிவித்துள்ளார். #BJP #TelanganaElection2018
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 7-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    இதில், பாரதிய ஜனதா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. மாநில பா.ஜ.க. மூத்த தலைவரும், கலைக்கப்பட்ட சட்டசபையின் எம்.எல்.ஏ.வுமான ராஜாசிங் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    தெலுங்கானாவில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தின் வளர்ச்சி பணிக்கு முதல் முக்கியத்துவம் கொடுப்போம்.

    அடுத்து 2-வது முக்கியத்துவமாக மாநிலத்தின் பல்வேறு நகரங்களின் பெயர்களும் மாற்றப்படும்.

    ஐதராபாத் பெயரை பாக்யா நகர் என்று மாற்றுவோம். இந்த நகரத்துக்கு 16-ம் நூற்றாண்டுக்கு முன்பு பாக்யா நகர் என்றுதான் பெயர் இருந்தது.

    அப்போது இந்த பகுதியை கைப்பற்றி ஆட்சி நடத்திய குதிப் ‌ஷகாதீஸ், நகரத்தின் பெயரை ஐதராபாத் என்று மாற்றினார். எனவே, பழைய பெயரையே மீண்டும் சூட்டுவோம்.

    இதேபோல் செகந்திரா பாத், கரீம்நகர் மற்றும் பல்வேறு நகரங்களின் பெயர்களும் மாற்றப்பட்டு இந்த மாநிலத்துக்காகவும், நாட்டுக்காகவும் உழைத்த தலைவர்கள் பெயரை சூட்டுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #TelanganaElection2018
    விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட், ஐதராபாத் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. #VijayHazareTrophy
    பெங்களூரு:

    விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. 37 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் முடிவில் 8 அணிகள் கால்இறுதியை எட்டின.

    இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று நடந்த 3-வது கால்இறுதி ஆட்டத்தில் மராட்டியம்-ஜார்கண்ட் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த ஜார்கண்ட் அணி, மராட்டியத்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதன்படி முதலில் பேட் செய்த மராட்டிய அணி, ஜார்கண்ட் வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 42.2 ஓவர்களில் 181 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக ரோஹித் மோத்வானி 52 ரன்னும், கேப்டன் ராகுல் திரிபாதி 47 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஜார்கண்ட் அணி தரப்பில் அன்குல் ராய் 4 விக்கெட்டும், ராகுல் சுக்லா 3 விக்கெட்டும், வருண் ஆரோன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் இலக்கை நோக்கி ஜார்கண்ட் அணி பேட்டிங் செய்கையில் 2 முறை மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி ஜார்கண்ட் அணிக்கு 34 ஓவர்களில் 127 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஜார்கண்ட் அணி 32.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. ஆனந்த் சிங் 12 ரன்னிலும், கேப்டன் இஷான் கிஷன் 28 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஷஷீம் ரதோர் 53 ரன்னுடனும், சவுரப் திவாரி 29 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    பெங்களூருவில் நடந்த மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் ஐதராபாத்-ஆந்திரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சந்தீப் 96 ரன்கள் எடுத்தார். கேப்டன் அம்பத்தி ராயுடு 28 ரன்னில் ‘ரன்-அவுட்’ ஆனார். பின்னர் 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆந்திரா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 267 ரன்களே எடுத்தது. இதனால் ஐதராபாத் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. ஆந்திர அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹனுமா விஹாரி 95 ரன்னும், ரிக்கி புய் 52 ரன்னும் எடுத்தனர்.

    பெங்களூருவில் நாளை நடைபெறும் முதலாவது அரைஇறுதிப்போட்டியில் மும்பை-ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. நாளை மறுநாள் நடைபெறும் 2-வது அரைஇறுதியில் டெல்லி-ஜார்கண்ட் அணிகள் சந்திக்கின்றன. #VijayHazareTrophy
    ஐதராபாத் நகரில் உள்ள அட்டபூர் பகுதியில் வாலிபர் ஒருவரை, 2 பேர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Hyderabad #MurderAccused #Murder
    ஐதராபாத்:

    ஐதராபாத் நகரில் உள்ள அட்டபூர் பகுதியில் நேற்று பகல் 11.30 மணி அளவில் வாலிபர் ஒருவரை, 2 பேர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தனர். அப்போது அந்த இடத்தில் பணியில் ஈடுபட்டு இருந்த போக்குவரத்து போலீஸ்காரரும் மற்றும் பொதுமக்களும் அந்த நபரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் பலன் இல்லாமல் போய் விட்டது. கொலை செய்து விட்டு தப்பி ஓட முயன்ற இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    விசாரணையில் கொல்லப்பட்ட வாலிபரின் பெயர் ரமேஷ் (வயது 28) என்றும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மகேஷ் என்பவர் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழியாக இந்த படுகொலை சம்பவம் நடந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது. மகேஷ் கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்காக ரமேஷ் கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த போதுதான் இந்த கொடூர சம்பவம் நடந்தது.

    கொலை நடந்த போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த சிலர் இந்த காட்சியை தங்கள் செல்போனில் வீடியோ படம் எடுத்தனர். அந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.   #Hyderabad #MurderAccused #Murder
    தெலுங்கானா மாநில தலைநகரான ஐதராபாத்தில் நாய்களுக்கென பிரத்யேகமாக ஒரு கோடி ரூபாய் செலவில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
    ஐதராபாத்:

    பூங்கா போன்ற பொது இடங்களில் நடை பயிற்சி செய்பவர்கள் தங்களது செல்லப்பிராணிகளை உடன் அழைத்து செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இந்த குறைய போக்க ஐதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் முன்வந்தனர்.

    இதற்காக கொன்டாப்பூர் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கொட்டும் இடத்தை சீரமைத்து 1.3 ஏக்கர் அளவில் சுமார் ஓராண்டு கால உழைப்பில் அழகிய பூங்காவை உருவாக்கியுள்ளனர்.


    ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் நாய்களுக்கான நீச்சல் குளம், நடை பயிற்சிக்கான புல்வெளிகள், குளிப்பாட்டும் இடம், விளையாடும் இடம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. நாய்களுக்கான பயிற்சி மற்றும் உடற்பயிற்சி சாதனங்களும் உண்டு. கால்நடை டாக்டர்கள் மூலம் சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடும் வசதியும் இங்குண்டு.


    இந்த பூங்காவை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் இரண்டரை லட்சம் பேர் நாய்களை வளர்ப்பதால் இப்படி ஒரு அமைப்பை ஏற்படுத்தும் எண்ணம் தோன்றியதாக அந்த மண்டலத்தின் மாநகராட்சி கமிஷனர் ஹரிசந்தனா குறிப்பிட்டுள்ளார்.

    வெளிநாடுகளில் நாய்களுக்கு தனியாக பூங்கா இருப்பதுபோல் நம் ஊரிலும் இருந்தால் என்ன? என்ற சிந்தனையின் விளைவாக இருவான இந்த பூங்கா சர்வதேச தரத்தில் இருப்பதாக இந்திய நாய் வளர்ப்போர் சங்கம் சான்றிதழ் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் ஹெல்மெட் அணிந்தபடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வினோத போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். #Hyderabad
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் ஓஸ்மானியா என்ற மிகப்பழமையான மருத்துவமனை இயங்கிவருகிறது. இந்த மருத்துவமனை முறையாக பராமரிக்கப்படுவது இல்லை என்றும், அடிக்கடி மேற்கூரை பெயர்ந்து மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் மீதும் விழுந்து காயம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மேற்கூரை இடிந்து விழுந்து காயம் ஏற்படாமல் இருக்கும்வண்ணம் தலைகளில் ஹெல்மெட் அணிந்தபடி மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் வினோத போராட்டத்தை மேற்கொண்டனர்.



    ஐதராபாத்தில் ஆபத்தான நிலையில் உள்ள அரசு மருத்துவமனைக் கட்டிடத்தைப் புதுப்பிக்கக் கோரி மருத்துவர்கள் ஹெல்மெட் அணிந்தபடி சிகிச்சை அளித்து வினோதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    முன்னதாக வெளி நோயாளிகளை மரத்தடியில் வைத்து சிகிச்சை அளித்து மருத்துவர்கள், கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. #Hyderabad
    ஐதராபாத்தில் உள்ள தேசிய ஊட்டச்சத்து மையம் குழந்தைகள் சாப்பிடும் உணவில் இருக்கும் பூச்சி கொல்லி மருந்து அளவு குறித்து ஆய்வு மேற்கொண்டது. இதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
    ஐதராபாத்:

    அமெரிக்கா, ஐரோப்பியா நாட்டு குழந்தைகள் சாப்பிடும் உணவை விட ஐதராபாத் குழந்தைகள் சாப்பிடும் உணவில் 40 சதவீதம் அதிக பூச்சி கொல்லி மருந்து இருப்பது தெரியவந்தது.

    6 வயது முதல் 15 வயது வரை உள்ள 188 சிறுவர்கள், 188 சிறுமிகளின் சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டது. மேலும் குழந்தைகள் சாப்பிடும் 40 வகையான உணவு பொருட்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

    சிறுவர்களிடம் சேகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் சிறுநீரில் சராசரியாக 4.1 மைக்ரோமொல் வளர்ச்சிதை மாற்றத்துக்கான அளவு இருந்தது.

    இந்த அளவு அமெரிக்க குழந்தைகளுக்கு 0.101 அளவாக உள்ளது. சிறுவர்களை விட சிறுமிகளின் சிறுநீர் மாதிரிகளில்தான் அதிக அளவு பூச்சி கொல்லி மருந்து இருந்தது.

    ஏனென்றால் அந்த வயதில் சிறுமிகள் சிறுவர்களை விட அதிக பழங்கள் சாப்பிடுவது தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது பழங்களை பழுக்க வைக்க ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. அதிக விளைச்சலுக்காக ரசாயன பயிர்களை பூச்சிகளிடம் இருந்து காப்பாற்ற பூச்சிகொல்லி மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பழங்கள், காய் கறிகளில் ரசாயன தன்மை படிந்து விடுகிறது.
    ஐதராபாத்தில் பயணம் செய்த முன்னாள் பிரதமர் தேவே கவுடா அங்கு தெலங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவை சந்தித்து பேச்ச்சுவார்த்தை நடத்தினார். #CMChandrasekharRao #DeveGowda
    ஐதராபாத்:

    தேசிய அளவில் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பாணர்ஜியை கடந்த மாதம் சந்தித்த சந்திரசேகர் ராவ் இது தொடர்பாக தீவிரமாக விவாதித்தார். 

    இதைத்தொடர்ந்து, தி.மு.க., ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி உள்ளிட்ட பல மாநில கட்சிகளுக்கும் சந்திரசேகர் ராவ் அழைப்பு விடுத்திருந்தார். கடந்த மாதம் சென்னை வந்த சந்திரசேகர் ராவ், திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

    இந்நிலையில், ஐதராபாத்தில் பயணம் செய்த முன்னாள் பிரதமர் தேவே கவுடா அங்கு தெலங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவை சந்தித்து பேச்ச்சுவார்த்தை நடத்தினார்.

    இதுதொடர்பாக சந்திசேகர் ராவ் மகனும், தகவல் தொழில்நுட்ப துறை மந்திரியான கே டி ராமா ராவ் டுவிட்டரில் கூறுகையில், முன்னாள் பிரதமர் தேவே கவுடா முதல் மந்திரி சந்திரசேகர் ராவை சந்தித்து பேசினார். அப்போது தானும் உடனிருந்ததாக பதிவிட்டுள்ளார். #CMChandrasekharRao #DeveGowda
    முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லட்சுமணன், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோரை பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் சந்தித்து பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டினார். #NirmalaSitharaman #VVSLaxman #SaniaMirza
    ஐதராபாத்:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கடந்த மாதம் 26-ம் தேதியோடு 4 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்தது. இதையடுத்து, அடுத்த பாராளுமன்ற தேர்தல் வெற்றியை குறிவைத்து “ஆதரவுக்கான தொடர்பு” எனும் பிரச்சாரத்தை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது.

    இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாக, கட்சியின் 4 ஆயிரம் நிர்வாகிகள், சுமார் ஒரு லட்சம் பேரை தொடர்பு கொண்டு சந்தித்து மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கி கூறவேண்டும் என பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா திட்டமிட்டுள்ளார்.



    இந்நிலையில், ஐதராபாத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லட்சுமணன், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா
    மற்றும் முன்னாள் பேட்மிண்டன் வீரர் புல்லேலா கோபிசந்து ஆகியோரை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சந்தித்து பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டினார். மோடி தலைமையிலான மத்திய அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கும் புத்தகத்தை அவர்களிடம் அளித்தார். #NirmalaSitharaman #VVSLaxman #SaniaMirza
    முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். தலைமையக விழாவில் பங்கேற்றதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் காலம் முடிந்துவிட்டது என ஐதராபாத் எம்.பி ஓவைசி தெரிவித்துள்ளார். #AsaduddinOwaisi #PranabMukherjee #Congress
    ஐதராபாத்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம் நாக்பூர் நகரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் அந்த இயக்கத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கான உபச்சார விழா நேற்று நடந்தது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் அனுப்பப்பட்டபோதே சர்ச்சை வெடித்தது. அவர் இதில் பங்கேற்க கூடாது என காங்கிரஸ் தலைவர்கள் பலர் தங்களது அதிருப்தி தெரிவித்தனர்.

    பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே நாக்பூர் சென்ற முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்த குறிப்பேட்டில் “பாரத மாதாவின் சிறந்த மகனுக்கு அஞ்சலி செலுத்த இங்கே வந்துள்ளேன்” என எழுதி கையெழுத்திட்டார்.

    இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். தலைமையக விழாவில் பங்கேற்றதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் காலம் முடிந்துவிட்டது என ஐதராபாத் எம்.பி ஓவைசி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் காலம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டு காலம் இருந்தவரும், இந்திய ஜனாதிபதியாக இருந்தவருமான பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். தலைமையக விழாவுக்கு சென்றுள்ளார். இனி காங்கிரசிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? என குற்றம் சாட்டியுள்ளார். #AsaduddinOwaisi #PranabMukherjee #Congress
    ஐதராபாத்தில் ஆஸ்துமாவை குணமாக்கும் மீன் மருத்துவ மூலிகை சிகிச்சை முகாமில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இன்றும், நாளையும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. #Asthma
    நகரி:

    ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐதராபாத்தில் ஆண்டு தோறும் மீன் மருத்துவ மூலிகை சிகிச்சை அளிக்கப்படுகிறது. பத்தினா சகோதரர்கள் குடும்பத்தினர் கடந்த 175 ஆண்டுகளாக இந்த சிகிச்சையை அளித்து வருகிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை தெலுங்கானா மாநில அரசு செய்து கொடுத்து வருகிறது.

    இந்த ஆண்டுக்கான மீன் மருத்துவ மூலிகை சிகிச்சை இன்று ஐதராபாத்தில் உள்ள நாம் பள்ளி கண்காட்சி மைதானத்தில் தொடங்கியது. இதற்காக நேற்று இரவில் இருந்தே ஆயிரக்கணக்கானோர் கண்காட்சி மைதானத்தில் குவிந்தனர்.

    தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, மராட்டியம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆஸ்துமாவுக்கு சிகிச்சை பெற குவிந்துள்ளனர். இங்கு வருபவர்களுக்கு டோக்கன் வழங்குவதற்காக 40 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் 2 மொபைல் கவுண்டர்களும், 2 வி.ஐ.பி. கவுண்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன.

    இங்கு சிகிச்சை பெற வருபவர்களுக்கு சிறிய மீன் வாயில் மூலிகை மருந்து வைத்து ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட நோயாளியின் வாயில் போட்டு விழுங்க சொல்கிறார்கள். பின்னர் அவர்களுக்கு குடிக்க மோர் கொடுக்கிறார்கள். இந்த மருந்தை சாப்பிடுபவர்களுக்கு ஆஸ்துமா நோய் குணம் ஆகிறது.

    இன்றும், நாளையும் நடக்கும் இந்த முகாமில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக 1 லட்சத்து 32 ஆயிரம் சிறிய மீன்களை தெலுங்கானா அரசு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. 2 நாள் முகாமில் சிகிச்சை பெற முடியாதவர்கள் பத்தினா சகோதரர்களின் வீட்டுக்கு சென்று சிகிச்சை பெறலாம்.

    மீன் மருத்துவ முகாமையொட்டி ஐதராபாத் மகாத்மா காந்தி பஸ் நிலையம், ஜூப்ளி பஸ் நிலையம், நாம் பள்ளி, செகந்திராபாத், காட்சிகுடா ரெயில் நிலையங்கள், சம்சா பாத் விமான நிலையம் ஆகிய இடங்களில் இருந்து 133 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 1000 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். தாகம் தீர்க்க இலவசமாக தண்ணீர் பாக்கெட்டுகள், மோர் வழங்கப்படுகிறது. 5 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கப்படுகிறது. #Asthma
    ×