search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gummidipoondi"

    கும்மிடிப்பூண்டியில் சாலை தடுப்புச்சுவரில் மோதி சமையல் கியாஸ் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து, கியாஸ் கசிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
    கும்மிடிப்பூண்டி:

    எண்ணூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் இருந்து ஆந்திர மாநிலம் கடப்பா நோக்கி 18 டன் சமையல் கியாஸ் ஏற்றிக்கொண்டு ராட்சத டேங்கர் லாரி இன்று அதிகாலை புறப்பட்டது. லாரியை சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த அங்கமுத்து (35) ஓட்டினார்.

    அதிகாலை 3 மணியளவில் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் எதிரே உள்ள பைபாஸ் சாலையில் லாரி வந்து கொண்டு இருந்தது.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் டிரைவர் அங்கமுத்து லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    விபத்து பற்றி அறிந்ததும் கும்மிடிப்பூண்டி மற்றும் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் லாரி தீப்பற்றாமல் இருக்க உடனடியாக தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

    கவிழ்ந்த லாரியை கியாஸ் நிறுவன உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் சேதமடைந்த டேங்கரில் இருந்து சிறிய அளவில் கியாஸ் கசிவதை உறுதி செய்தனர்.

    இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் கும்மிடிப்பூண்டி பஜார் வழியாக திருப்பி விடப்பட்டது.

    எளிதில் தீப்பற்றும் அபாயம் இருப்பதால் லாரி கவிழ்ந்த இடத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் கும்மிடிப்பூண்டி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    டேங்கர் லாரியின் அருகே செல்போன் எடுத்து செல்லவும் தடை விதித்து உள்ளனர். இதனால் கும்மிடிப்பூண்டி பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

    கியாஸ் டேங்கர் லாரியை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். கவிழ்ந்த லாரியில் உள்ள கியாசை வேறு லாரியில் ஏற்றும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.

    விபத்து ஏற்பட்ட பகுதியை சுற்றிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    கும்மிடிப்பூண்டி அருகே வீட்டில் இருந்த பட்டாசு வெடித்ததில் படுகாயமடைந்த 2 பேரும் கவலைக்கிடமான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரை சேர்ந்தவர் அல்லாபகஷ் (வயது54). இவர் தனது வீட்டின் முன் பகுதியில் உள்ள அறையில் மாந்தீரிகம் செய்வது, தாயத்து கட்டுவது உட்பட பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்.

    இவரது வீட்டின் அருகே உள்ள தனி இடத்தில் உறவினரான குஜரத் அலி என்பவர் ‘அமீர் பயர் ஒர்க்ஸ்’ என்ற பெயரில் சிறிய அளவிலான பட்டாசு தொழிற்சாலையை அனுமதி பெற்று நடத்தி வருகிறார்.

    இதற்கு அல்லாபகஷ் உதவியாக இருந்தார். பட்டாசுகளை தனது அறையில் வைத்து விற்று வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டையொட்டி உள்ள தனியறையில் அல்லாபகஷ் மற்றும் ஆம்பூரில் இருந்து வந்த அவரது உறவினர் கலிக்அகமது (39) ஆகியோர் இருந்தனர். அந்த அறையில் நாட்டுவெடிகள் உள்பட பல்வேறு பட்டாசுகள் ஒரு பையில் இருந்தன.

    அப்போது வழிபாட்டுக்காக அல்லாபகஷ், ஊதுபத்தியை கொளுத்தினார். இதில் இருந்து விழுந்த நெருப்பு தவறுதலாக பட்டாசு மேல் விழுந்தது. இதையடுத்து அறையில் இருந்த நாட்டுவெடிகள், பட்டாசுகள் கண் இமைக்கும் நேரத்தில் நாலாபுறமும் வெடித்து சிதறின.

    இதில் அல்லாபகசும், கலிக்அகமதுவும் உடல் கருகினர். மேலும் அறை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கவலைக்கிடமான நிலையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் விசாரணை நடத்தினார். இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டாசுகளை அஜாக்கிரதையாக கையாண்டதாக பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளர் குஜரத் அலியை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    கும்மிடிப்பூண்டி அருகே பஸ் மோதி வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த அப்பாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது35). இவர் கும்மிடிப்பூண்டி பஜாரில் ஷோபா மற்றும் படுக்கை விரிப்புகளை சொந்தமாக தயாரித்து விற்பனை செய்து வந்தார்.

    இவரது மனைவி மவுனி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது மவுனி கர்ப்பமாக உள்ளார்.

    நேற்று இரவு சதீஷ் கடையை பூட்டி விட்டு எளாவூர் வழியாக வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    வீராசாமி நகர் அருகே மேம்பாலத்தின் கீழ் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த போது எளாவூரில் இருந்து கள்ளூர் நோக்கிச் சென்ற அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியதில் வியாபாரி சதீஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்தார். விபத்து குறித்து ஆரம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கும்மிடிப்பூண்டியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் நாராயண மூர்த்தி மற்றும் சிப்காட் போலீசார் புது கும்மிடிப்பூண்டியை அடுத்த பாலீஸ்வரன் ஏரிகரையோரம் திடீர் ஆய்வு நடத்தினர்.

    அப்போது அங்கு கஞ்சா விற்ற ஒரு பெண் உள்பட 3 பேர், போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். இதில் ஒருவரை மட்டும் மடக்கி பிடித்தனர்.

    அவர் புதுகும்மிடிப்பூண்டி பாலீஸ்வரன் கண்டிகையைச் சேர்ந்த வாலிபர் தங்கமணி, தப்பி ஓடியது அவரது தாய் சாந்தி, தம்பி நடராஜன் என்பது தெரிய வந்தது.

    இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குபதிவு செய்து தங்கமணியை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    கும்மிடிப்பூண்டி அருகே ஷேர் ஆட்டோவில் இருந்து விழுந்த மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள நேமலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் தமிழ்ச்செல்வி (வயது 10). இவர் ஆந்திர மாநிலம் சத்யவேட்டில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    நேற்று மாலை பள்ளி முடிந்ததும் சத்யவேட்டில் இருந்து ஷேர் ஆட்டோவில் தமிழ்ச்செல்வி மற்றும் 14 மாணவர்கள் பாதிரிவேடு நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். வேன் இல்லாததால் மாணவர்களின் போக்குவரத்திற்காக ஷேர் ஆட்டோவை பள்ளி நிர்வாகமே ஏற்பாடுசெய்து இருந்ததாக கூறப்படுகிறது.

    பாதிரிவேடு அடுத்த ரோசாநகர் அருகே வந்த போது ஷேர் ஆட்டோவில் இருந்த தமிழ்ச்செல்வி திடீரென தவறி கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு ஈகுவார் பாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். போகும் வழியிலேயே தமிழ்ச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    விபத்து நடந்ததும் ஷேர் ஆட்டோவின் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து பாதிரிவேடு சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #accident

    செங்கல்பட்டு, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடங்களுக்கு புறநகர் ரெயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. குறிப்பாக கடற்கரை-செங்கல்பட்டு இடையே ரெயில்களின் எண்ணிக்கை மிக அதிகளவு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    சென்னை:

    சென்னையில் புறநகர் பகுதிகளில் இருந்து நகருக்குள் வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது.

    சென்னை-செங்கல்பட்டு, சென்னை-அரக்கோணம், சென்னை-கும்மிடிப்பூண்டி ஆகிய 3 வழித்தடங்களில் இருந்து புறநகர் பகுதி மக்கள் ரெயில்கள் மூலம் சென்னை வந்து செல்கின்றனர்.

    சென்னை-செங்கல்பட்டு இடையே தினமும் 224 புறநகர் ரெயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இதில் சுமார் 5.5 லட்சம் பயணிகள் தினமும் பயணிக்கிறார்கள்.

    அதுபோல சென்னை- அரக்கோணம் இடையே தினமும் 151 புறநகர் ரெயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் சுமார் 4.5 லட்சம் பேர் வந்து செல்கிறார்கள்.

    சென்னை - கும்மிடிப்பூண்டி இடையே தினமும் 74 புறநகர் ரெயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் சுமார் 1.2 லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள். மொத்தத்தில் தினமும் செங்கல்பட்டு, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி ஆகிய புறநகர் பகுதிகளில் இருந்து சென்னைக்கு சுமார் 11 லட்சம் பேர் வந்து செல்கிறார்கள்.

    நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் புறநகர் ரெயில் சேவையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. புறநகருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்றும் பயணிகள் கூறி வருகிறார்கள்.

    இதையடுத்து கூடுதல் புறநகர் ரெயில் சேவைகளை அறிமுகம் செய்ய தென்னக ரெயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான ரெயில்வே கால அட்டவணை வருகிற 15-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.

    புதிய கால அட்டவணைப்படி செங்கல்பட்டு, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடங்களுக்கு புறநகர் ரெயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. குறிப்பாக கடற்கரை-செங்கல்பட்டு இடையே ரெயில்களின் எண்ணிக்கை மிக அதிகளவு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது சென்னை சென்ட்ரலில் ஆவடி, திருவள்ளூர் வரை பல்வேறு சேவைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த புறநகர் ரெயில்சேவையை அரக்கோணம் வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் பஸ் ஸ்டிரைக் நடந்தபோது புறநகர் ரெயில் சேவை அதிகரிக்கப்பட்டது. அப்போது தென்னக ரெயில்வேக்கு கணிசமான அளவுக்கு வருவாய் கிடைத்தது. எனவே புறநகர் ரெயில் சேவை எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.

    வருகிற 15-ந்தேதி புதிய கால அட்டவணை வெளியிடப்படும் போது எந்த அளவுக்கு ரெயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது என்ற முழு விவரம் தெரிய வரும்.
    கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்திய வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை அருகே புதுவாயலில் சென்னை- கொல்கத்தா நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது போலீசாரை கண்டதும் ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற கேரளா மாநில பதிவு எண் கொண்ட லோடு வேன் நிற்காமல் வேகமாக சென்றது. பின்னர் அங்கிருந்த பேரிகார்டு தடுப்பு கம்பியில் மோதியது.

    உடனே வேனில் இருந்த 3 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். போலீசார் வேனை சோதனை செய்த போது அதில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரிந்தது.

    இதையடுத்து வேனுடன் செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய கும்பல் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
    நிபந்தனை ஜாமினில் வெளிவந்து தலைமறைவான ரவுடி பினுவை கும்மிடிப்பூண்டியில் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். #Binu #RowdiBinu
    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வலம்வந்த பிரபல ரவுடி பினு கடந்த சில வருடங்களாக தலைமறைவாக இருந்துவந்தார். கடந்த பிப்ரவரி மாதம் பினுவின் பிறந்தநாளை கொண்டாட அவரது தம்பி மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் பகுதியில் மிகப்பெரிய கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
     
    இந்த கொண்டாட்டத்தில் நகரத்தின் முக்கிய ரவுடிகள் பலர் பங்கேற்றனர். தகவலறிந்த காவல்துறை அதிரடியாக அங்கு சென்று ரவுடிகளை கைது செய்தனர்.

    ஆனால் அங்கிருந்து பினு உள்ளிட்ட சிலர் மட்டும் தப்பிச் சென்றார். பின்னர் அவர் தாமாக வந்து சரணடைந்தார். பிப்ரவரி 23-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் ரவுடி பினுவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது. இதற்கிடையே, ஜாமினில் வெளியான நாளில் இருந்தே பினு மாங்காடு காவல் நிலையத்தில் கையெழுத்திடாமல் தலைமறைவாகி விட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், நிபந்தனை ஜாமினில் வெளிவந்து தலைமறைவான பிரபல ரவுடி பினு கும்மிடிப்பூண்டியில் கைது செய்யப்பட்டார் 

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமின் பெற்று தலைமறைவான ரவுடி பினு, திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர். #Binu #RowdiBinu
    கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் அருகே புதிய சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    கும்மிடிப்பூண்டி:

    தமிழகத்துடன் வடமாநிலங்களையும், ஆந்திராவையும் இணைக்கும் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கடத்தல், எடை மற்றும் வரி ஏய்ப்பு ஆகியவற்றை கண்டறியும் வகையில் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் அருகே தமிழக அரசின் அதிநவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி 1 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டு உள்ளது.

    இது ரூ.137.18 கோடி செலவில் நவீன முறையில் போக்குவரத்து துறை, மதுவிலக்கு, கால்நடை துறை, காவல் துறை, வனத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட 6 துறைகளை ஒருங்கிணைத்த சோதனைச்சாவடி ஆகும்.

    இந்தியாவிலேயே முதன் முறையாக முற்றிலும் கணிணி மயமாக்கப்பட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்த இந்த சோதனைச்சாவடி, தமிழகஆந்திரா மாநிலங்களுக்கான எல்லையில் அமைந்துள்ளது. இதற்கான முழு பணிகளும் முடிவடைந்து விரைவில் திறக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில், சோதனைச்சாவடியில் மது விலக்கு அமலாக்கப்பிரிவுக்கான கட்டிட அமைப்பு, அதனில் ஏற்படுத்தப்பட்டு உள்ள வசதிகள் ஆகியவற்றை மது விலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குனர் ராஜேஷ்தாஸ் இன்று காலை நேரில் ஆய்வு செய்தார்.

    அவருடன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டுகள் அமனாமான், ஷியமளா தேவி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தில்லை நடராசன், வட்டார போக்குவரத்து அலுவலர் சம்பத், வடக்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் பிரசன்னா ஆகியோர் உடன் இருந்தனர்.

    அப்போது மேற்கண்ட சோதனைச்சாவடியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரின் நடவடிக்கைகளை மேம்படுத்தும் பணிகள் குறித்து துறை சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு ராஜேஷ்தாஸ் ஆலோசனை வழங்கினார்.

    ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று காலை சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை மின்சார ரெயிலில் பயணம் செய்து பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
    பொன்னேரி:

    ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று காலை சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை மின்சார ரெயிலில் பயணம் செய்து பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    பொதுமக்களுடன் அவர் சாதாரணமாக அமர்ந்து பயணம் செய்தார். அப்போது அந்த பெட்டியில் இருந்த பயணிகளிடம் குறைகளை கேட்டார்.

    மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றதும் சைலேந்திரபாபு இறங்கினார். அவருடன் ரெயில்வே அதிகாரிகளும் வந்து இருந்தனர்.

    அவர்கள் ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடம் குறைகள் பற்றி கேட்டு அறிந்தார். சைலேந்திரபாபுவிடம் பொதுமக்கள் கூறும்போது, “மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் செயின் பறிப்பு, கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகம் நடக்கிறது. இதனை தடுக்க வேண்டும். ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும், ரெயில்வே போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும்” என்றனர்.

    இதையடுத்து சைலேந்திர பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ரெயில் பயணத்தின்போது பயணிகளுக்கு ஏற்படும் குறைகள் குறித்து கேட்டு வருகிறோம். அந்தந்த துறைக்கு குறைகள் பற்றி தெரிவித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகளின் பாதுகாப்பே முக்கியம்.

    மீஞ்சூரில் ரெயில்வே காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருநங்கைகள் தொல்லையை தடுக்க அவர்களது அமைப்பில் தெரிவித்து மாற்று தொழில் செய்ய அறிவுறுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து சைலேந்திரபாபுவும், அதிகாரிகளும் மீஞ்சூரில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற மின்சார ரெயிலில் மீண்டும் பயணம் செய்தனர்.

    கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்திலும் அவர்கள் பயணிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். #Tamilnews
    கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் யார்டில் இன்றும், நாளையும் பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் யார்டில் இன்றும், நாளையும் பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 4 ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒருசில ரெயில்கள் வழக்கமான நேரத்தை விட தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.

    ரெயில் (எண்.66051) மூர் மார்க்கெட்டில் இருந்து பகல் 2.05 மணிக்கு ஆவடிக்கு புறப்படும் மின்சார ரெயில், ஆவடியில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு பகல் 2.50 மணிக்கு புறப்படும் (எண்.66052) மின்சார ரெயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

    மூர் மார்க்கெட்டில் இருந்து நள்ளிரவு 12.15 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கு புறப்படும் மின்சார ரெயில் (எண். 42001) கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர்மார்க்கெட்டிற்கு அதிகாலை 2.45 மணிக்கு புறப்படும் எண்.42002 மின்சார ரெயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

    கும்மிடிப்பூண்டியில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் வரக்கூடிய மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி- பொன்னேரி இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொன்னேரியில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு இயக்கப்படும்.

    மூர்மார்க்கெட்டில் இருந்து இரவு 11.20 மணிக்கு புறப்படும் கும்மிடிப்பூண்டி செல்லக்கூடிய மின்சார ரெயில் பொன்னேரி -கும்மிடிப்பூண்டி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் மூர்மார்க்கெட் -பொன்னேரி இடையே இயக்கப்படும். இன்று ஒருநாள் மட்டும் இந்த 2 மின்சார ரெயில்கள் ஒரு பகுதி மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கும்மிடிப்பூண்டியில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரக்கூடிய மின்சார ரெயில் (எண்.42004) கும்மிடிப்பூண்டி- பொன்னேரி இடையே நாளை (7-ந்தேதி) ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் பொன்னேரி- சென்ட்ரல் மூர்மார்க்கெட் இடையே இயக்கப்படும்.

    சென்ட்ரலில் இருந்து மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு விஜயவாடா செல்லக் கூடிய பினாசினி எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கமான நேரத்தை விட ஒரு மணி நேரம் தாமதமாக பிற்பகல் 3.05 மணிக்கு புறப்படும். நெல்லூரில் இருந்து காலை 10 மணிக்கு சூலூர்பேட்டை புறப்படக் கூடிய மின்சார ரெயில் (66030) 1½ மணி நேரம் தாமதமாக காலை 11.30 மணிக்கு புறப்படும்.

    சூலூர்பேட்டையில் பகல் 12 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் வரக்கூடிய மின்சார ரெயில் (66026) 1½ மணி நேரம் தாமதமாக பகல் 1.30 மணிக்கு புறப்படும்.

    மேற்கண்ட 3 ரெயில்களும் இன்றும், நாளையும் மாற்றியமைக்கப்பட்ட நேரத்தில் புறப்பட்டு செல்லும்.

    விஜயவாடா- சென்னை பிளாகினி எக்ஸ்பிரஸ், தானாபூர்- கே.எஸ்.ஆர். பெங்களூர் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ், சாப்ரா- சென்ட்ரல் கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்றும், நாளையும் தாமதமாக வந்து செல்லும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. #ElectricTrain
    கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் உரிய மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டையில் உரிய மருத்துவம் படிக்காமல் போலி டாக்டர்கள் பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

    இதையடுத்து கவரப்பேட்டையில் திருவள்ளூர் மாவட்ட சுகாதார நலப்பணிகளுக்கான இணை இயக்குனர் தயாளன் தலைமையில் மருத்துவ அதிகாரிகள், பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது ராஜா தெருவில் ஆர்.கே.கிளினிக் என்ற பெயரில் இயங்கி வந்த ஆஸ்பத்திரியை கல்பாக்கம், பல்லவன் நகரைச் சேர்ந்த சேகர் என்கிற சேகர் ராவ் நடத்தி வந்ததும், லேப் டெக்கினீசியன் மட்டுமே படித்த அவர் டாக்டர் என்று நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து வந்தது தெரிந்தது.

    அவர் கடந்த 2½ ஆண்டுகளாக ஆஸ்பத்திரி நடத்தி சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதையடுத்து போலி டாக்டர் சேகர் பற்றி மாவட்ட சுகாதார பணிகளின் இணை இயக்குனர் தயாளன், கவரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்கு பதிவு செய்து போலி டாக்டர் சேகரை கைது செய்தார்.

    மேலும் அவரிடம் இருந்து ஆங்கில மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் குறிப்பாக கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இத்தகைய ஆய்வு நடவடிக்கை தொடரும்’ என்றார்.

    இந்த நிலையில் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள சில தனியார் மருத்துவமனைகள் நேற்றும், இன்றும் மூடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
    ×