search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயிலில் சென்று பயணிகளிடம் குறைகேட்ட சைலேந்திரபாபு
    X

    ரெயிலில் சென்று பயணிகளிடம் குறைகேட்ட சைலேந்திரபாபு

    ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று காலை சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை மின்சார ரெயிலில் பயணம் செய்து பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
    பொன்னேரி:

    ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று காலை சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை மின்சார ரெயிலில் பயணம் செய்து பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    பொதுமக்களுடன் அவர் சாதாரணமாக அமர்ந்து பயணம் செய்தார். அப்போது அந்த பெட்டியில் இருந்த பயணிகளிடம் குறைகளை கேட்டார்.

    மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றதும் சைலேந்திரபாபு இறங்கினார். அவருடன் ரெயில்வே அதிகாரிகளும் வந்து இருந்தனர்.

    அவர்கள் ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடம் குறைகள் பற்றி கேட்டு அறிந்தார். சைலேந்திரபாபுவிடம் பொதுமக்கள் கூறும்போது, “மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் செயின் பறிப்பு, கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகம் நடக்கிறது. இதனை தடுக்க வேண்டும். ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும், ரெயில்வே போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும்” என்றனர்.

    இதையடுத்து சைலேந்திர பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ரெயில் பயணத்தின்போது பயணிகளுக்கு ஏற்படும் குறைகள் குறித்து கேட்டு வருகிறோம். அந்தந்த துறைக்கு குறைகள் பற்றி தெரிவித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகளின் பாதுகாப்பே முக்கியம்.

    மீஞ்சூரில் ரெயில்வே காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருநங்கைகள் தொல்லையை தடுக்க அவர்களது அமைப்பில் தெரிவித்து மாற்று தொழில் செய்ய அறிவுறுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து சைலேந்திரபாபுவும், அதிகாரிகளும் மீஞ்சூரில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற மின்சார ரெயிலில் மீண்டும் பயணம் செய்தனர்.

    கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்திலும் அவர்கள் பயணிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். #Tamilnews
    Next Story
    ×