search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gummidipoondi"

    கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் இறப்பு பதிவு செய்ய தனியாக ஒரு மருத்துவரை நியமிக்கவேண்டும். சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை குறைக்க வேண்டும்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் ஷகிலா தலைமையில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. செயல் அலுவலர் யமுனா துணைத்தலைவர் கேசவன் முன்னிலை வகித்தனர்.

    பிறப்பு-இறப்பு, வரவுசெலவுத்திட்டம் கவுன்சிலர்களின் கோரிக்கை உட்பட 24 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டம் தொடங்கியதும் ஒட்டுமொத்த கவுன்சிலர்களும் பேரூராட்சியின் தூய்மை பணிகள் செய்துதரப்படவில்லை என்று கடுமையாக சாடினர். தொடர்ந்து புகார் தெரிவித்தும் தூய்மை பணிகளில் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதாக கூறினர். அதை தொடர்ந்து கவுன்சிலர்கள் சிலர் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

    மேலும் காந்திநகர் 11-வது வார்டில் நரிக்குறவர்கள் சுமார் 25 குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு சரியான குடிநீர் வசதி செய்து தர வேண்டும் தற்போது உள்ள குழாய்கள் பழமையானதும் சேதமடைந்தும் இருப்பதால் இதனை முறையாக மாற்றி தரவேண்டும்.

    இறப்பு பதிவு செய்வதற்கு மருத்துவர் சான்று பெறமுடியாமல் பலர் தவித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் இறப்பு பதிவு செய்ய தனியாக ஒரு மருத்துவரை நியமிக்கவேண்டும். சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை குறைக்க வேண்டும்.

    9-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது வனத்துறையினரிடம் தெரிவித்து அவற்றை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோட்டக்கரை அன்னா நகர் பகுதியில் ஆபத்தாக உள்ள மின் கம்பங்களை மாற்ற வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலர் யமுனா தெரிவித்தார்.

    கும்மிடிப்பூண்டி அருகே போலீசார் வாகன சோதனையில் ரூ. 56 கோடி மதிப்புள்ள 175 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. #Gold #LokSabhaElections2019

    கும்மிடிப்பூண்டி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை அரசியல் கட்சியினர் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பை தீவிரப் படுத்தி உள்ளனர்.

    அவர்கள் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் ரொக்கப்பணம், தங்கத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கும்மிடிப்பூண்டியை அடுத்த தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள ஆரம்பாக்கம் போலீஸ் சோதனைச்சாவடியில், நேற்று இரவு கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் முன்னும், பின்னும் சி.சி.டி.வி. கேமிரா பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் துப்பாக்கி ஏந்திய 2 தனியார் பாதுகாவலர்கள் உள்பட மொத்தம் 4 பேர் அதில் இருந்தனர்.

    மொத்தம் 7 பெட்டிகளில் தலா 1 கிலோ எடை கொண்ட 25 தங்க கட்டிகள் இருந்தது. இதன் மொத்த எடை 175 கிலோ. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 56 கோடி ஆகும்.


     

    விசாரணையில், இந்திய ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனம் ஒன்று, வெளிநாடுகளில் இருந்து தங்ககட்டிகளை இறக்குமதி செய்து அதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் உள்ள ஒரு குடோனில் இருப்பு வைத்து பின்னர் அங்கிருந்து அனைத்து அரசு துறைகளின் உரிய அனுமதியுடன் இந்தியா முழுவதும் தங்கத்தை சப்ளை செய்து வருவது தெரியவந்தது.

    175 கிலோ தங்க கட்டிகளும், சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மும்பை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு தனியார் வங்கி மூலம் அனுப்பி வைக்க இருந்ததாக வேனில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

    அதற்குரிய ஆவணங்கள் இருந்தாலும், அவற்றின் நம்பகத்தன்மை குறித்து கண்டறியவும், முறையான அனுமதியுடன் தான் இந்த தங்க கட்டிகள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு கொண்டு வரப்படுகிறதா? என்பதை அறியவும் வேனுடன் 175 கிலோ தங்க கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்வதி, கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ்பாபு ஆகியோர் தங்க கட்டிகளையும், அதற்கான ஆவணங்களையும் ஆய்வு செய்தனர்.

    பின்னர் இரவு நேரம் என்பதால் தங்க கட்டிகள் அனைத்தும் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள கருவூலத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.

    மேலும் நள்ளிரவில் சென்னையில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் தங்க கட்டிகளையும், ஆவணங்களையும் ஆய்வு செய்து வேனில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது எத்தகைய ஆவணங்கள் இருப்பினும் போதிய பாதுகாப்பை உறுதி செய்திடாமல் இது போன்று இரவு நேரத்தில் தங்கம் உள்பட விலை உயர்ந்த பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

    இருப்பினும் பிற துறை சார்ந்த உரிய ஆய்விற்கு பிறகே தங்க கட்டிகள் சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்று கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்வதி தெரிவித்தார். #Gold #LokSabhaElections2019

    கும்மிடிப்பூண்டியில் கடையை உடைத்து பொருட்கள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி மா.பொ.சி.நகரில் வசித்து வருபவர் மார்டீன் (வயது 52). கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் எலக்ட்ரிக்கல் மற்றும் மோட்டார் ரீவைண்டீங் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று நள்ளிரவு கடையின் இரும்பு ஷெட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமி அங்கு வைக்கப்பட்டிருந்த காப்பர் வயர் பண்டல்களை திருடிச் சென்றான். திருட்டு போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். சி.சிடி.வி. கேமிராவில், மர்ம ஆசாமி நள்ளிரவில் பூட்டை உடைத்து உள்ளே வருவதும், பொருட்களை திருடுவதும் பதிவாகி உள்ளது. இந்த திருட்டு சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கும்மிடிப்பூண்டி அருகே பறக்கும் படை வாகன சோதனையில் வேனில் கடத்திய ரூ. 5 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே புதுவாயலில் உள்ள சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் மணிகண்டன் தலைமையில் அதிகாரிகள் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சென்னையில் இருந்து வந்த மினி லோடு வேனை வழிமறித்து அவர்கள் சோதனை நடத்தினர். அந்த வாகனத்தில் தடைசெய்யப் பட்ட குட்கா மற்றும் பாக்கு பொருட்கள் 43 பண்டல்கள் இருப்பது தெரியவந்தது.

    சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து பெரியபாளையம் அடுத்த ஆரணிக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த குட்கா பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 5 லட்சம் ஆகும்.

    பிடிபட்ட மினி லோடு வேனுடன் கூடிய தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனாதத் மேற்பார்வையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த டிரைவர் கேசவன் (வயது45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை கும்மிடிப்பூண்டி ரெயில் மார்கத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் குலஷேத்ரா அதிகாரிகளுடன் தனி ரெயிலில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    பொன்னேரி:

    சென்னை கும்மிடிப்பூண்டி ரெயில் மார்கத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் குலஷேத்ரா அதிகாரிகளுடன் தனி ரெயிலில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது பொன்னேரி ரெயில் நிலையத்தில் கட்டப்பட்டிருந்த ரெயில்வே துறை அலுவலகங்கள், ரெயில்வே ஊழியர்கள் குடியிருப்பு ஆகியவற்றை திறந்து வைத்தார். பின்னர் ரெயில் நிலையத்தில் உள்ள பயணச்சீட்டு அலுவலகம், நிலைய மேலாளர் அலுவலகம் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது குலஷேத்ரா நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை கும்மிடிப்பூண்டி மார்க்கம் 4 வழிப் பாதையாக மாற்ற அனுமதியளிக்கப்படவில்லை. இது குறித்து ஆய்வு நடத்தப்படும். இந்த மார்க்கத்தில் செல்லும் விரைவு ரெயில்கள் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கை பரிசீலிக்கப்படும். ரெயில் நிலையங்களில் பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

    ரெயில் நிலையங்களில் உள்ள கழிப்பறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து ரெயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பயணச்சீட்டு அலுவலகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதால் சில பிரச்சினைகள் ஏற்படுகிறது. அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கும்மிடிப்பூண்டி அருகே கிணற்றில் மூழ்கி தலைமை ஆசிரியர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டையைச் சேர்ந்தவர் முரளிபாபு (வயது57). இவர் பாதிரிவேட்டில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை செய்து வந்தார்.

    நேற்று பள்ளிக்கு செல்லாத இவர், போந்தவாக்கம் கிராமத்தில் வயல்வெளியில் உள்ள தரை கிணறு ஒன்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தார். அப்போது தண்ணீரில் மூழ்கிய தலைமை ஆசிரியர் முரளிபாபு பரிதாபமாக இறந்தார்.

    கும்மிடிப்பூண்டி அருகே மனைவியை வீட்டில் சிறைவைத்து தாக்கிய கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப் பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள கணபதி நகரைச் சேர்ந்தவர் உமர் அலி பருக். துணி வியாபாரி. இவரது மனைவி ஷாகிரா பானு. இவர் ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கணவர் உமர் அலி பருக் மீது புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    கணவர் தினமும் குடித்து விட்டு வந்து என்னை கடந்த 4-ந் தேதி இரவு அசிங்கமாக பேசி கையால் எனது வாயின் மீது குத்தினார். இதனால் எனது வாயில் இருந்து 5 பற்களும் உடைந்து விட்டன. வலி தாங்க முடியாமல் துடிதுடித்தேன்.

    சத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன் என என்னை மிரட்டி சட்ட விரோதமாக வீட்டில் அடைத்து வைத்து அவர் கொடுமைப் படுத்தினார்.

    அவரது பிடியில் இருந்து தப்பிய நான், சென்னை ராயபுரத்தில் உள்ள எனது அண்ணன் வீட்டிற்கு சென்று விட்டேன். என்னை காயப்படுத்தி மிரட்டி கொடுமைப்படுத்திய கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சந்திர சேகர் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உமர் அலி பருக்கை கைது செய்தார். காயம் அடைந்த ஷாகிரா பானு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    கும்மிடிப்பூண்டியில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை கொன்றது ஏன்? என்பது குறித்து கைதான 6 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே உள்ள மா.பொ.சி.நகரை சேர்ந்தவர் ஆகாஷ் (17). பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்.

    இவர் கடந்த 19-ந் தேதி இரவு நண்பர்களான கும்மிடிப்பூண்டி திருக்குளம் தெருவைச்சேர்ந்த விமல்(21), சென்னை தண்டையார்பேட்டை திடீர் நகரைச்சேர்ந்த சதீஷ்(26) ஆகியோருடன் ரெயில் நிலையத்தில் இருந்து மா.பொ.சி. நகர் செல்லும் சாலையில் நின்று பேசிக் கொண்டு இருந்தார்.

    அப்போது மர்ம கும்பல் அவர்கள் 3 பேரையும் ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில் ஆகாஷ், விமல், சதீஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மா.பொ.சி. நகரில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சியின் அடிப்படையில் துப்பு துலக்கினர்.

    இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக புது கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி நடராஜ் மற்றும் பாஸ்கர், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த நாகராஜ், சித்தராஜகண்டிகை கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார், ஆத்துப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மாதவன், கோபி ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் 6 பேரையும் பாதிரிவேடு போலீஸ் நிலையத்தில் வைத்து தனித் தனியே இரவு முழுவதும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கைதான நடராஜ் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    கடந்த ஆண்டு மா.பொ.சி. நகரை சேர்ந்த ஷாஜகான் என்பவர் மின்சார ரெயிலில் பொருட்களை விற்பனை செய்யும் தகராறில் கொலை செய்யப்பட்டார். இதில் விமலும், சதீசும் குற்றவாளிகள் ஆவர். இந்த கொலைக்கு பழி வாங்க ஷாஜகானின் அண்ணன் நாகூர் மீரான் சரியான நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்.

    இதற்கிடையே சிறைக்கு சென்று வந்த விமலும், சதீசும் எங்களிடம் மாமூல் கேட்டு மிரட்டி வந்தனர். அவர்களுடன் கல்லூரி மாணவரான ஆகாசும் சேர்ந்து கொண்டார். இதனால் அவர் மீதும் எங்களுக்கு பகை ஏற்பட்டது. கடந்த 14-ந் தேதி அவர்கள் 3 பேருடன் எங்களுக்கு மோதல் ஏற்பட்டது.

    இதையடுத்து ஷாஜகானின் அண்ணன் நாகூர் மீரானுடன் கூட்டு சேர்ந்து ஆகாஷ், விமல், சதீஷ் ஆகிய 3 பேரையும் தீர்த்துக்கட்ட திட்டம் வகுத்தோம். அதன்படி 3 பேரையும் தீர்த்துக் கட்டினோம். பின்னர் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே பாலத்தின் கீழ் தயாராக நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்று விட்டோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளதாக போலீசார் கூறினர்.

    கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் ஆரம்பாக்கம் அருகே உள்ள புதரில் போலீசார் மீட்டனர்.

    இந்த கொலையில் 10-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிகிறது. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கும்மிடிப்பூண்டியில் பழிக்குப்பழி வாங்க 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே உள்ள மா.பொ.சி.நகரை சேர்ந்தவர் ரமேஷ். ஆட்டோ டிரைவர். இவரது மகன் ஆகாஷ் (வயது17). தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இவர், கடந்த சில மாதங்களாக கல்லூரிக்கு செல்வதை நிறுத்தி விட்டு வீட்டிலேயே இருந்து வந்ததாக தெரிகிறது.

    நேற்று இரவு அவர் ரெயில் நிலையத்தில் இருந்து ம.பொ.சி. நகர் செல்லும் சாலையில் நண்பர்களான கும்மிடிப்பூண்டி திருக்குளம் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் மகன் விமல் (21), சென்னை தண்டையார்பேட்டை திடீர் நகரைச்சேர்ந்த சேகர் மகன் சதிஷ் என்ற வாந்தி சதிஷ் (26) ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது 8 பேர் கும்பல் அவர்களை சுற்றிவழைத்து 3 பேரையும் ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில் ஆகாஷ், சதீஷ், விமல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    கொலையுண்ட 3 பேரின் உடல்கள், அப்பகுதியில் ரெயில் நிலையத்தை யொட்டியும், குடியிருப்புகளுக்கு மத்தியிலும் சுமார் 20 மீட்டர் தூரத்திற்கு தனித்தனியாக ரத்தவெள்ளத்தில் ரோட்டில் கிடந்தது.

    சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தையொட்டி ஆள்நடமாட்டம் உள்ள குடியிருப்பு பகுதியில் மர்ம கும்பல் 3 பேரை சர்வசாதாரணமாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சம்பவ இடத்தில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனாதத் ஆகியோர் விசாரணை நடத்தினர். 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    3 பேர் கொலையால் கும்மிடிப்பூண்டி பகுதி முழுவதும் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதத்தை தடுக்க 200-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல் உடல்கள் வைக்கப்பட்டுள்ள பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியிலும் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ந் தேதி கும்மிடிப்பூண்டி மா.பொ.சி. நகரைச் சேர்ந்த ஷாஜகான் (28) என்பவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருந்தார். மின்சார ரெயிலில் பொருட்கள் விற்பனை செய்யும் தகராறில் இந்த கொலை நடந்து இருந்தது.

    இந்த கொலை வழக்கில் தற்போது கொலையுண்ட விமல், சதீஷ் ஆகியோர் குற்றவாளிகள் ஆவர். எனவே இந்த கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக 3 பேர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த 3 கொலைகள் நடந்ததா? கஞ்சா பிரச்சனையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது.

    கொலையாளிகள் கூலிப்படையாக இருக்கலாம் என்று தெரிகிறது. அவர்களை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சீபுரம், திருவள்ளூர் சென்னையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    கும்மிடிப்பூண்டி அருகே மதுக்கடை முன்பு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த கெட்ணமல்லி கிராமத்தில் புதிதாக அரசு மதுபானகடை அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல முறை மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து திறக்கப்பட்ட மதுக்கடை ஒவ்வொரு முறையும் மூடப்பட்டது.

    மேலும் மதுக்கடைக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்த இரு தரப்பினரிடையேயான பேச்சுவார்த்தை கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் ஏற்கனவே நடந்து முடிந்தது. இதில் எவ்வித தீர்வும் காணப்படவில்லை. இதனையடுத்து மதுக்கடையும் தற்காலிகமாக மூடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் நேற்று மதியம் அந்த மதுக்கடை மீண்டும் திடீரென திறக்கப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி பெண்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் மதுக்கடையை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டாஸ்மாக் ஊழியர்கள், தாமாகவே முன்வந்து கடையை மூடி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதனையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    கும்மிடிப்பூண்டி அருகே எரிசாராயம் கடத்திய டிரைவர் மற்றும் கிளீனரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடியில் இன்று அதிகாலை 4 மணி அளவில் நாமக்கல் மாவட்ட மது விலக்கு பிரிவு கூடுதல் சூப்பிரண்டு செந்தில் மேற்பார்வையில் மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ரகசிய தகவலின் அடிப்படையில் ஆந்திராவில் இருந்து வந்த டேங்கர் லாரி ஒன்றை போலீசார் சோதனை செய்தனர். இந்த லாரியில் 25 லிட்டர் எரிசாராயம் ஐதராபாத்தில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு கடத்திச்செல்வது தெரியவந்தது.

    லாரியில் இருந்த டிரைவரை முதலில் பிடித்த போலீசார், தப்பி ஓட முயன்ற கிளீனரையும் மடக்கி பிடித்தனர். எரிசாராயம் கடத்தி வந்த டேங்கர் லாரியை நாமக்கல் மது விலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.

    டிரைவர், கிளீனர் ஆகியோரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி பகுதியில் மர்ம காய்ச்சல் பீதி நிலவுகிறது. மேலும் காய்ச்சல் அறிகுறி உள்ள சுமார் 10 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்தனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் உள்ள 14 மற்றும் 15-வது வார்டுகளுக்குட்பட்ட மா.பொ.சி. நகர் ஜெய்ஹிந்த் நகர் பகுதியில் வசிக்கும் சிலர் தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    அவர்கள் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் கும்மிடிப்பூண்டி பகுதியில் மர்ம காய்ச்சல் பீதி நிலவுகிறது.

    இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன், துப்புரவு மேற்பார்வையாளர் கோபி, வட்டார சுகாதார மேற் பார்வையாளர் முருகதாஸ் ஆகியோர் தலைமையில் கடந்த 2 நாட்களாக பேரூராட்சி பகுதியில் தீவிர துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது.

    மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் தலைமையில் நடமாடும் மருத்து வக்குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மேலும் காய்ச்சல் அறிகுறி உள்ள சுமார் 10 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்தனர்.

    தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மா.பொ.சி. நகரைச்சேர்ந்த சதிஷ் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது, ‘ சிலருக்கு ஏற்பட்ட காய்ச்சல் என்பது சாதாரண காய்ச்சல் தான். அது டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சல் என தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது‘ என்றார்.

    ×