search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gold seized"

    • பறக்கும் படை அதிகாரி அருண்குமார் தலைமையில் கொடைக்கானல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.
    • முறையான ஆவணங்கள் இல்லாததால் ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பறிமுதல் செய்து நிலக்கோட்டை சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    நிலக்கோட்டை:

    பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசு பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க நிலையான கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    வத்தலக்குண்டு அருகே பறக்கும் படை அதிகாரி அருண்குமார் தலைமையில் கொடைக்கானல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தேனியில் இருந்து மதுரைக்கு வந்த வேனை மறித்து பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அதில் 3 கிலோ 600 கிராம் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளி நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து டிரைவர் நடராஜன் (வயது 34), மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் கமலநாதன் (49) ஆகியோரிடம் விசாரித்த போது மதுரையில் உள்ள 3 நகை கடைகளுக்கு நகைகளை கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.

    ஆனால் அதற்கான முறையான ஆவணங்கள் இல்லாததால் ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பறிமுதல் செய்து நிலக்கோட்டை சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர். அப்போது நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    பறக்கும்படை சோதனையில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரூ.50,000-க்கு மேல் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்படும் ரொக்கம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
    • உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    ராசிபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. ரூ.50,000-க்கு மேல் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்படும் ரொக்கம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டரூ.6.2 கோடி மதிப்பிலான 29 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

    மல்லூர் பகுதியில் சேலத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    • போலீசார் காரில் வந்த 3 பேரையும் கைது செய்து தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
    • பிடிபட்டவர்களிடம் நகைகள் எங்கிருந்து எங்கு கொண்டு செல்லப்படுகிறது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இருந்து கம்மம் நோக்கி கார் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அப்போது ஐதராபாத் அடுத்த மரியால குடாவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    காரில் 13 கிலோ எடையுள்ள தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. காரில் இருந்தவர்களிடம் நகைக்கு உண்டான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை. இதையடுத்து போலீசார் காரில் வந்த 3 பேரையும் கைது செய்து தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ 5.75 கோடி என போலீசார் தெரிவித்தனர். பிடிபட்டவர்களிடம் நகைகள் எங்கிருந்து எங்கு கொண்டு செல்லப்படுகிறது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரை தனி அறைக்கு அழைத்து சென்றனர்.
    • சமீப காலமாக மதுரைக்கு வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் அரங்கேறி வருகிறது.

    மதுரை:

    மதுரை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாட்டு விமான சேவைகளும், சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவைகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் இலங்கை, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவது வாடிக்கையாகி விட்டது. இதனை தடுக்க விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில், துபாயில் இருந்து மதுரைக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாக்கா நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரை தனி அறைக்கு அழைத்து சென்றனர்.

    மேலும் அவர் கொண்டு வந்த உடமைகளை சல்லடை போட்டு சோதனை செய்தனர். அப்போது அந்த நபர் கொண்டு வந்த செல்போன்களுக்கான சார்ஜிங் பிளக்குகளில் தங்கம் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பிளக்குகளில் இருந்து ரூ.6 லட்சத்து 60 ஆயிரத்து 500 மதிப்பிலான 100 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் சட்ட விரோதமாக தங்கம் கடத்தி வந்த ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணத்தை சேர்ந்த விஜய் ஆனந்த் (வயது 40) என்பவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சமீப காலமாக மதுரைக்கு வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் அரங்கேறி வருகிறது.

    • ரகசிய தகவலின் பேரில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் வந்த பயணி ஒருவரை விமான புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர்.

    மதுரை:

    மதுரை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய், மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் நேரடியாக விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் வரி ஏய்ப்பு செய்து அதிக அளவில் தங்க நகைகளை சட்டவிரோதமாக கடத்தி வருவது அதிகரித்துள்ளது.

    அவ்வாறு தங்கம் கடத்தி வரும் பயணிகளை விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் துபாயில் இருந்து மதுரைக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அதன்படி துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் வந்த பயணி ஒருவரை விமான புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவர் உடமைகளில் மறைத்து கடத்தி வந்த ரூ.21 லட்சத்து 31 ஆயிரத்து 640 மதிப்பிலான 322 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    பசை வடிவிலும், பவுடராகவும் மாற்றி கடத்தி வரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை கடத்திய விமான பயணியிடம் அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சுங்கத்துறை அதிகாரிகள் அபுதாபியில் இருந்து வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
    • சர்வதேச விமானம் உள்நாட்டு விமானமாக செல்ல இருந்ததால் சுங்கத்துறை அதிகாரிகள் அந்த விமானத்திற்குள் ஏறி சோதனை செய்தனர்.

    ஆலந்தூர்:

    வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வருவது சமீப காலமாக அதிகரித்து உள்ளது. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் அபுதாபியில் இருந்து வரும் சென்னை விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அபுதாபியில் இருந்து வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். மேலும் அவர்களுடைய உடமைகளையும் சோதனை செய்தனர். ஆனால் அவர்கள் யாரிடமும் தங்கம் சிக்கவில்லை.

    மேலும் அந்த சர்வதேச விமானம் உள்நாட்டு விமானம் செல்ல இருந்ததால் சுங்கத்துறை அதிகாரிகள் அந்த விமானத்திற்குள் ஏறி சோதனை செய்தனர். அப்போது விமானத்தில் உள்ள கழிவறையில் வயர்கள் செல்லக்கூடிய பகுதியில் நம்பர் லாக்குடன் கருப்பு நிற டேப் சுற்றப்பட்டு சோப் வடிவில் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    மொத்தம் 4½ கிலோ தங்கம் இருந்தது. இதன் மதிப்பு ரூ.2 ½ கோடி ஆகும். கடத்தல் தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் தங்கம் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
    • சந்தேகத்திற்கு இடமான வகையில் பயணி ஒருவர் நடந்து கொண்டதை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர்.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது.

    இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் தடுக்க முடியாத நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பயணி ஒருவர் நடந்து கொண்டதை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் தனது உடலில் மறைத்து ரூ.66.68 லட்சம் மதிப்பிலான 1061 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது.

    இதனை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் திருச்சி விமான நிலைய பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
    • மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தும் குருவிகளாக வெளிநாடுகளுக்கு சென்று வருபவர்கள் தங்கம் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த விமானங்களில் தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தும் குருவிகளாக வெளிநாடுகளுக்கு சென்று வருபவர்கள் தங்கம் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த கடந்த சில தினங்களுக்கு முன்பு மலேசியாவில் இருந்து மலிந்தோ விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது.

    இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது மலேசியாவை சேர்ந்த பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது உடலில் மறைத்து பேஸ்ட் வடிவிலான 1025.12 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் இந்திய ரூபாயின் மதிப்பு 64.51 லட்சம் ஆகும்.

    இதனை தொடர்ந்து அந்த பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கீதா அணிந்திருந்த உடையில் பேஸ்ட் வடிவிலான தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
    • தங்கத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து பெண் பயணியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மதுரை:

    மதுரையில் இருந்து இலங்கை, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட உள்நாட்டு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து மதுரை வரும் பயணிகள் வரி ஏய்ப்புக்காக தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை கடத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் துபாயில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்த பயணிகளிடமும், அவர்களின் உடமைகளிலும் சுங்கா இலாகாவினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    அப்போது திருச்சி, பாலக்கரை பகுதியைச் சேர்ந்த மணிவேல் மனைவி கீதா (வயது 42) என்பவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சல்லடை போட்டு சோதித்தனர். இதில் கீதா அணிந்திருந்த உடையில் பேஸ்ட் வடிவிலான தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

    தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் ரூ.27 லட்சத்து 86 ஆயிரத்து 930 மதிப்பில் 458 கிராம் எடையுள்ள தங்கம் என தெரிய வந்தது. இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து அந்த பெண் பயணியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நெல்லூர் மாவட்டம் வெங்கடாசலம் டோல்கேட்டில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • ஐதராபாத்தில் இருந்து 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு தங்கம் கடத்தியது தெரியவந்தது.

    திருமலை:

    சென்னையில் இருந்து ஆந்திரா வழியாக தங்கம் கடத்தி வருகின்றனர். இதனை தடுக்க வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டம் வெங்கடாசலம் டோல்கேட்டில் நேற்று இரவு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகிக்கும் வகையில் வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அந்த கார் இருக்கையின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7.79 கிலோ வெளிநாட்டு தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதனை கடத்தி வந்த 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தி விசாரணையில், ஐதராபாத்தில் இருந்து 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு தங்கம் கடத்தியது தெரியவந்தது.

    மேலும் இவர்கள் கடத்திச் செல்ல வேறொரு இடத்தில் பதுக்கி வைத்திருந்த 2.471 கிலோ தங்கத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்த டி.ஆர்.ஐ. அதிகாரிகள், தங்கம் கடத்திய 2 பேர் மற்றும் அதனை வாங்க வந்த ஒருவர் என மொத்தம் 3 பேரை கைது செய்தனர்.

    சென்னையில் கடத்தல் தங்கம் எப்படி கிடைத்தது என விசாரித்து வருகின்றனர்.

    • சென்னையில் இருந்து நெல்லூருக்கு சென்று கொண்டிருந்த காரை மடக்கி சோதனை செய்தனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட 5 கிலோ தங்கமும், சென்னையிலிருந்து கடத்தி வரப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரெயில், பஸ், கார்கள் மூலம் தங்கம் கடத்தப்படுகிறது.

    இதனை தடுக்க ஆந்திர மாநில சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திர மாநிலம், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தள்ளம்பள்ளி என்ற இடத்தில் நாயுடு பேட்டை போலீசார் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது சென்னையில் இருந்து நெல்லூருக்கு சென்று கொண்டிருந்த காரை மடக்கி சோதனை செய்தனர்.

    காரில் 5 கிலோ எடையுள்ள தங்க பிஸ்கெட்டுகள் இருந்தன. தங்கத்தை அவர்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் காரில் இருந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் தங்கம் கடத்தி வந்த 4 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. காருடன் தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார் சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட 5 கிலோ தங்கமும், சென்னையிலிருந்து கடத்தி வரப்பட்டுள்ளது. யாருக்காக கடத்தி வரப்பட்டது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த மாதம் ஆந்திராவில் சென்னையில் இருந்து கடத்தப்பட்ட 14.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கடந்த ஏப்ரல் மாதம் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னைக்கு கடத்தி வந்த 7.3 கிலோ தங்க கட்டிகள் ஆந்திராவில் பிடிப்பட்டது.

    தொடர் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கொழும்பிலிருந்து சென்னை வந்த மூன்று பயணிகளிடம் சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
    சென்னை:

    பல்வேறு நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வரப்படுவதை தடுக்கும் நடவடிக்கையில் சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக திருச்சி மற்றும் சென்னை விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், கொழும்பிலிருந்து சென்னை விமான நிலையம் வந்து இறங்கிய மூன்று பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்

    அப்போது அவர்கள் உள்ளாடைகளில் தங்கக் கட்டி (24 காரட்) தங்கச் சங்கிலி (22 காரட் ), தங்க நகைகள் ( 24 காரட்) ஆகியவற்றைத்  மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

    இவற்றின் மொத்த எடை 1.6 கிலோகிராம் என்றும், அவற்றின் மதிப்பு ரூ.72.4 லட்சம் என்றும் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்து.

    தங்கம் கடத்தி வந்தது தொடர்பாக புளோரிடா பத்மஜோதி, நோனா பரினா ஆகிய இலங்கைப் பயணிகள் கைது செய்யப்பட்டனர்.
    ×