search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்மிடிப்பூண்டியில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை கொன்றது ஏன்? கைதான 6 பேர் வாக்குமூலம்
    X

    கும்மிடிப்பூண்டியில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை கொன்றது ஏன்? கைதான 6 பேர் வாக்குமூலம்

    கும்மிடிப்பூண்டியில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை கொன்றது ஏன்? என்பது குறித்து கைதான 6 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே உள்ள மா.பொ.சி.நகரை சேர்ந்தவர் ஆகாஷ் (17). பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்.

    இவர் கடந்த 19-ந் தேதி இரவு நண்பர்களான கும்மிடிப்பூண்டி திருக்குளம் தெருவைச்சேர்ந்த விமல்(21), சென்னை தண்டையார்பேட்டை திடீர் நகரைச்சேர்ந்த சதீஷ்(26) ஆகியோருடன் ரெயில் நிலையத்தில் இருந்து மா.பொ.சி. நகர் செல்லும் சாலையில் நின்று பேசிக் கொண்டு இருந்தார்.

    அப்போது மர்ம கும்பல் அவர்கள் 3 பேரையும் ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில் ஆகாஷ், விமல், சதீஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மா.பொ.சி. நகரில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சியின் அடிப்படையில் துப்பு துலக்கினர்.

    இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக புது கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி நடராஜ் மற்றும் பாஸ்கர், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த நாகராஜ், சித்தராஜகண்டிகை கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார், ஆத்துப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மாதவன், கோபி ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் 6 பேரையும் பாதிரிவேடு போலீஸ் நிலையத்தில் வைத்து தனித் தனியே இரவு முழுவதும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கைதான நடராஜ் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    கடந்த ஆண்டு மா.பொ.சி. நகரை சேர்ந்த ஷாஜகான் என்பவர் மின்சார ரெயிலில் பொருட்களை விற்பனை செய்யும் தகராறில் கொலை செய்யப்பட்டார். இதில் விமலும், சதீசும் குற்றவாளிகள் ஆவர். இந்த கொலைக்கு பழி வாங்க ஷாஜகானின் அண்ணன் நாகூர் மீரான் சரியான நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்.

    இதற்கிடையே சிறைக்கு சென்று வந்த விமலும், சதீசும் எங்களிடம் மாமூல் கேட்டு மிரட்டி வந்தனர். அவர்களுடன் கல்லூரி மாணவரான ஆகாசும் சேர்ந்து கொண்டார். இதனால் அவர் மீதும் எங்களுக்கு பகை ஏற்பட்டது. கடந்த 14-ந் தேதி அவர்கள் 3 பேருடன் எங்களுக்கு மோதல் ஏற்பட்டது.

    இதையடுத்து ஷாஜகானின் அண்ணன் நாகூர் மீரானுடன் கூட்டு சேர்ந்து ஆகாஷ், விமல், சதீஷ் ஆகிய 3 பேரையும் தீர்த்துக்கட்ட திட்டம் வகுத்தோம். அதன்படி 3 பேரையும் தீர்த்துக் கட்டினோம். பின்னர் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே பாலத்தின் கீழ் தயாராக நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்று விட்டோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளதாக போலீசார் கூறினர்.

    கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் ஆரம்பாக்கம் அருகே உள்ள புதரில் போலீசார் மீட்டனர்.

    இந்த கொலையில் 10-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிகிறது. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×